திங்கள், 25 ஜூன், 2018

1102. காந்தி - 32

26. பர்தோலி – ஆனந்த்
கல்கி 


'கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பகுதி 2) என்ற நூலில்   26-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன]
=== 
இந்தியாவின் சுதந்திர சரித்திரத்திலும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையிலும் "பர்தோலி" என்னும் பெயர் மிகவும் முக்கியமானது. பாரத நாட்டுக்குப் பர்தோலிதான் விடுதலை தேடித்தரப் போகிறது என்று 1921 - ஆம் ஆண்டின் இறுதியில் அனைவரும் நம்பியிருந்தார்கள். காந்திஜி இந்தியாவின் சுதந்திரத்துக்கான இறுதிப் போரைப் பர்தோலியிலேதான் ஆரம்பித்து நடத்துவது என்று தீர்மானித்திருந்தார். மகாத்மா எண்ணியபடி பர்தோலியில் இறுதிப் போர் நடைபெறவில்லை. ஆயினும் பர்தோலியின் மூலமாகக் காந்தி மகானுடைய சத்திய ஜோதி சுடர்விட்டு ஒளிர்ந்தது. இது எப்படி என்பதை இந்த அத்தியாயத்திலும் வரும் அத்தியாயங்களிலும் பார்க்கப் போகிறோம்.

செப்டம்பர் மாதக் கடைசியில் சேலத்துக் காங்கிரஸ் தொண்டர்களிடம் காந்திஜி "வருகிற மூன்று மாதமும் நான் குஜராத்திலேயே இருப்பேன்" என்று சொன்னார் அல்லவா? இதற்குக் காரணம் என்ன? - ஒத்துழையாமைத் திட்டம் மகாத்மா காந்தி எதிர்பார்த்தபடி பூரணமாக நிறைவேறவில்லை. வக்கீல்களில் நூற்றுக்கு ஒருவர் தான் தொழிலை நிறுத்தினார்கள். மாணவர்களிலும் நூற்றுக்கு ஒருவர் வீதந்தான் சர்க்கார் கல்வி நிலையங்களைப் பகிஷ்கரித்தார்கள். சட்டசபைகளிலோ, அதிகார வர்க்கத்தார் சொல்லுகிறபடி கையைத் தூக்கும் அங்கத்தினர்கள் நிறைந்திருந்தார்கள். ஸர். திவான்பகதூர், ராவ் பகதூர் பட்டதாரிகளில் மிக மிகச் சிலரே பட்டங்களைத் துறந்தார்கள். நாடெங்கும் மகாத்மா சென்ற இடங்களில் எல்லாம் அன்னியத் துணிக் குவியல்கள் எரிக்கப்பட்டன. ஆயினும் மகாத்மா காந்தி விரும்பிய அளவு இராட்டையும் கதர் இயக்கமும் பரவவில்லை.

இவ்விதம் மகாத்மா காந்தி கூறிய திட்டங்களைச் சரிவர நிறைவேற்றாமலிருந்த போதிலும், நாடெங்கும் பொதுமக்கள் போக்குக்கும் மகாராஷ்டிரத் தலைவர்களின் மனப் போக்குக்கும் இருந்த வேற்றுமை நன்கு வெளியாயிற்று. மகாத்மா தயாரித்திருந்த அறிக்கையை வரி வரியாகவும் வார்த்தை வார்த்தையாகவும் ஸ்ரீ வித்தல்பாய் படேல், ஸ்ரீ கேல்கர், ஸ்ரீ ஜயக்கர், டாக்டர் மூஞ்சே ஆகியவர்கள் ஆட்சேபித்தார்கள். காந்திஜியின் கட்சியைத் தாங்கி நின்று மேற்படி ஆட்சேபங்களுக் கெல்லாம் பளிச்சுப் பளிச்சென்று ராஜாஜி பதில் சொன்னார். லாலா லஜபதிராயும் பண்டித மோதிலால் நேருவும் ஒருவாறு சமரசப்படுத்த முயன்றார்கள். கடைசியாக, சிற்சில மாறுதல்களுடன் மகாத்மா காந்தி தயாரித்த அறிக்கை எல்லாத் தலைவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

பலம் பொருந்திய பிரிட்டிஷ் சர்க்காருடன் மகாத்மா ஒரு மகத்தான இறுதிப் போராட்டத்தைத் தொடங்க யத்தனித்துக் கொண்டிருந்தார். இரவு பகல் இருபத்துநாலு மணி நேரமும் அதே சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் மதிப்புக்குரிய தலைவர்கள் சிலர் சில்லறை ஆட்சேபங்களையெல்லாம் கிளப்பிக்கொண்டிருந்தது மகாத்மாவின் மனதை ஓரளவு புண்படுத்தியது. ஆயினும் இதைப் பற்றி அதிகமாக நினைப்பதற்குச் சாவகாசம் இருக்கவில்லை. ஏனெனில் அன்றைய தினமே, "காந்திஜியைக் கைது செய்யப்போகிறார்கள்" என்ற வதந்தி ஒன்று பரவியது. இது காந்திஜியின் காதுக்கும் எட்டியது. "அலி சகோதரர்கள் செய்த அதே குற்றத்தை நானும் செய்கிறேன்" என்று மகாத்மா காந்தி சொல்லிவிட்டுத் தமிழ் நாட்டில் அதே பேச்சைப் பேசியிருந்தார் அல்லவா? ஆகையால் தம்மைக் கைது செய்யலாம் என்ற வதந்தியைக் காந்திஜி நம்பவேண்டியதாக இருந்தது. ஆகவே, "என்னைக் கைது செய்தால்" என்னும் தலைப்புப் போட்டு அன்றிரவே "எங் இந்தியா" வுக்கு ஒரு கட்டுரை எழுதினார்.

ஆனால் கைது செய்யப்படுவதற்காகப் பம்பாயிலேயே காத்திருக்க மகாத்மா விரும்பவில்லை. அவர் போட்டிருந்த திட்டத்தின்படி மறுநாள் காலையில் ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். கொலாபா ஸ்டேஷனில் எண்ணற்ற ஜனங்கள் வந்திருந்து மகாத்மாவை வழி அனுப்பினார்கள். வந்திருந்தவர்கள் அவ்வளவு பேர் தலையிலும் வெள்ளைக் கதர்க் குல்லா (காந்தி குல்லா) விளங்கியது கண்டு மகாத்மா திருப்தியடைந்தார். ஆயினும் மக்களுடைய இந்த உற்சாக மெல்லாம் நல்ல முறையில் உபயோகப்பட்டு நல்ல பலனை அளிக்கவேண்டுமே?


பம்பாயிலிருந்து ஆமதாபாத் சென்று சில தினங்கள் சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமத்தில் மகாத்மா தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே குஜராத்தின் பற்பல பகுதிகளிலும் நடந்து வரும் வேலையைப் பற்றித் தெரிந்து கொள்ளலானார். ஆங்காங்கு வேலை செய்து கொண்டிருந்த தலைவர்களும் தொண்டர்களும் ஆசிரமத்துக்கு வந்து மகாத்மாவுக்கு நிலைமையை அறிவித்தார்கள். இப்படி வந்தவர்களில் இருவர் சூரத் நகரத்திலிருந்து வந்தவர்கள். ஒருவருடைய பெயர் கல்யாண்ஜி. இன்னொருவரின் பெயர் தயாள்ஜி. இந்த இரண்டு பேரும் மகாத்மாவின் பரம பக்தர்கள். தேசத்துக்காகப் பரிபூரணத் தியாகம் செய்தவர்கள். ஸ்ரீ தயாள்ஜி தம்முடைய சொத்து முழுவதையும் (ஒரு ரூபாய் கூடத் தமக்கென்று வைத்துக் கொள்ளாமல்) திலகர் சுயராஜ்ய நிதிக்குக் கொடுத்து விட்டவர். இவர் சூரத் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். ஸ்ரீ கல்யாண்ஜி மேற்படி கமிட்டியின் காரியதரிசி. இருவரும் சூரத்தில் இரண்டு "சுயராஜ்ய ஆசிரமங்கள்" நடத்தி வந்தார்கள். ஒவ்வொரு ஆசிரமத்திலும் பல இளைஞர்கள் தேசத் தொண்டுக்குப் பயிற்சி செய்விக்கப் பட்டார்கள். பயிற்சி முடிந்ததும் அத்தொண்டர்கள் ஜில்லாவின் பலபகுதிகளிலும் வேலை செய்வதற்கு அனுப்பப்பட்டு வந்தார்கள்.

இவ்வளவு அருமையான வேலை செய்து வந்த தயாள்ஜியும் கல்யாண்ஜியும் சபர்மதி ஆசிரமத்துக்கு மகாத்மா திரும்பி வந்த செய்தி அறிந்ததும் அவரைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்தார்கள். சூரத் ஜில்லாவில் நடந்திருக்கும் நிர்மாண வேலைகளைப் பற்றி மகாத்மாவிடம் சொன்னார்கள். முக்கியமாக, சூரத் ஜில்லாவைச் சேர்ந்த பர்தோலி தாலுகாவில் மகாத்மாவின் நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறி யிருக்கின்றன வென்றும், அங்கே பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால் கல்யாண்ஜி, தயாள்ஜி இவர்களுடன் தீவிரமாகப் போட்டியிட இன்னொரு மனிதர் முன்வந்தார். அவர் பெயர் அப்பாஸ் தயாப்ஜி. அவர் தொண்டு கிழவர். பரோடா சமஸ்தான ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்து விலகியவர். எல்லையற்ற தேசபக்தி வாய்ந்தவர்; காந்திஜியிடம் இணையில்லா அன்பு கொண்டவர்; இவர் கெயிரா ஜில்லாவில் ஆனந்த் என்னும் தாலுகாவில் பொது ஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை முதன் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். மகாத்மாவிடம் அன்பு நிறைந்த கோபத்துடன் அப்பாஸ் தயாப்ஜி பேசினார். அவர் கூறியதாவது:-

"நீங்கள் கூறிய நிபந்தனையெல்லாம் நிறைவேற்றி விட்டோம். இன்னும் ஏதாவது நிபந்தனை உண்டானால், சொல்லி விடுங்கள். எல்லாவற்றையும் இப்போதே ஒரேயடியாகச் சொல்லி விடுங்கள். புதிய புதிய நிபந்தனைகளை நினைத்து நினைத்துக் கொண்டு சொல்லாதீர்கள். நீங்கள் இதுவரையில் சொன்ன காரியம் எதை நாங்கள் நிறேவேற்ற வில்லை? திலகர் சுயராஜ்ய நிதிக்கு என்ன பணம் கேட்டீர்களோ, அதைக் கொடுத்து விட்டேன். என்னைப் பாருங்கள்! வயது எனக்கு எழுபத்தைந்துக்கு மேல் ஆகிறது. இந்த வயதில் நீங்கள் சொன்னதற்காக நானே இராட்டையில் நூல் நூற்கிறேன். முரட்டுக் கதர்த்துணி உடுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனந்த் தாலுகாவில் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் போனேன். அப்படிப் போனதினால் என் கிழ உடம்பிற்குள்ளேயிருக்கும் எலும்புகள் எல்லாம் இன்னும் வலிக்கின்றன. ஆயினும் நான் பொருட்படுத்தவில்லை. கிராமங்களில் ஜனங்கள் அவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள். நீங்கள் சொன்ன திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி யிருக்கிறார்கள். இன்னும் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறார்கள். நீங்களே நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள். சால்ஜாப்பு மட்டும் சொல்ல வேண்டாம். தள்ளிப் போட வேண்டாம். மூன்று வருஷத்துக்கு முன்னால் கெயிரா ஜில்லாவில் நீங்கள் வரிகொடா இயக்கம் ஒரு தடவை நடத்தினீர்கள். ஆகையால் கெயிரா ஜனங்கள் ஏற்கெனவே உங்கள் கொள்கைகளை அறிந்திருக்கிறார்கள். உங்கள் முறைகளில் பயிற்சி பெற்றிருக் கிறார்கள். ஆகையால் கெயிரா ஜில்லாவுக்குத்தான் இப்போது நீங்கள்ல் முதல் பெருமையைக் கொடுக்க வேண்டும். ஆனந்த் தாலுகாவில்தான் பொது ஜனச் சட்ட மறுப்பை முதலில் ஆரம்பிக்க வேண்டும்.”

அப்பாஸ் தயாப்ஜி இவ்விதம் பேசியபோது குஜராத் மாகாணத்தைச் சேர்ந்த பல தலைவர்களும் தொண்டர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களுடைய மனமெல்லாம் உருகி விட்டன. வாழ்க்கையில் எவ்வளவோ உயர்ந்த அந்தஸ்துடன் வாழ்ந்த இம்மனிதர், இவ்வளவு தள்ளாத வயதிலும், சிறைபுகவும் கஷ்டப்படவும் தயாராக முன் வந்திருப்பதை நினைத்து வியந்தார்கள்.

ஆனால் காரியத்திலேயே கண்ணாயிருந்த சூரத்காரர்கள் விட்டுக்கொடுத்து விடவில்லை. அவர்கள் பர்தோலியிலேதான் சட்ட மறுப்பு ஆரம்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஸ்ரீ கல்யாண்ஜி கூறியதாவது:-"ஆங்கிலேயர் முதன் முதலில் சூரத் வழியாகத்தான் இந்தியாவுக்குள் புகுந்தார்கள். சூரத்திலேதான் முதன் முதலில் அவர்கள் வியாபாரக் கிடங்குகள் ஏற்படுத்திக் கொண்டு கோட்டையும் கட்டிக் கொண்டார்கள். இங்கிருந்துதான் அவர்களுடைய வியாபாரம் பெருகிற்று; அரசியல் ஆதிக்கமும் பரவிற்று. ஆகையால் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை முடிவு செய்யும் கடைசி இயக்கத்தைச் சூரத் ஜில்லாவில் தொடங்குவதுதான் நியாயம். விஷம் எந்த வழியாக ஏறியதோ, அந்த வழியாகத்தான் இறங்க வேண்டும் இங்கிலீஷ்காரர்கள் எந்த வாசல் வழியாக முதலில் நுழைந்தார்களோ, அந்த வாசல் வழியாகவே அவர்களை வெளியேற்ற வேண்டும். சூரத் அப்போது செய்த பாவத்துக்கு இப்போது பிராயச் சித்தம் செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். பர்தோலியில் பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பியுங்கள். நீங்கள் கூறிய எல்லாவித நிபந்தனைகளையும் பர்தோலியில் நிறைவேற்றியிருக்கிறோம். நேரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்."

ஸ்ரீ கல்யாண்ஜியின் வாதமும் அவருடைய பிடிவாதமும் எல்லாருடைய மனதையும் கவர்ந்தன. கடைசியில் மகாத்மா காந்தி சொன்னதாவது:- "ஆகட்டும், நான் நேரில் வந்து பர்தோலி, ஆனந்த் இரண்டு தாலுகாக்களையும் பார்க்கிறேன். பார்த்த பிறகு, எந்தத் தாலுகா அதிகத் தகுதி பெற்றிருக்கிறதோ அங்கே இயக்கத்தை ஆரம்பிக்கலாம். இரண்டு தாலுகாக்களும் தயாராயிருந்தால் இரண்டிலும் ஆரம்பித்து விடுவோம்."

இவ்விதம் இரு தரப்பாரும் திருப்தி யடையும்படி மகாத்மா பதில் கூறியதுடன், தாம் வந்து பார்ப்பதற்குள்ளே இன்னும் தீவிரமாக வேலை செய்து வைக்கும்படியும் சொல்லி அனுப்பினார்.

 ( தொடரும்)

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக