சனி, 25 ஆகஸ்ட், 2018

1145. காந்தி - 41

35. பம்பாய் நாடகம்
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’( 2-ஆம் பாகம்) என்ற நூலில் வந்த 35-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

காந்தி மகாத்மாவைக் காங்கிரஸின் சர்வாதிகாரியாக நியமித்துவிட்டு ஆமதாபாத் காங்கிரஸ் கலைந்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பிரசித்திபெற்ற 1921 – ஆம் ஆண்டு முடிவுற்றது.

1927 - ஆம் வருஷம் ஜனவரி மாதத்தில் மகாத்மாவின் உள்ளம் மூன்றுவித காரணங்களால் அலைப்புற்றுத் தத்தளிக்கும்படி நேர்ந்தது. ஒரு பக்கம் சர்க்காரின் தீவிர அடக்குமுறை; இன்னொரு பக்கத்தில் மிதவாதிகளின் சரணாகதி முயற்சி. மூன்றாவது பக்கத்தில் பொதுமக்களின் வரம்பு மீறிய செயல்கள் -இந்த மூன்றுவித எதிர்ச் சக்திகளுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு காற்று மழைகளுக்குச் சலியாத மலையைப் போல் மகாத்மா நின்றார்.

ஆமதாபாத் காங்கிரஸுக்கு முன்னாலேயே பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அடக்கு முறையைக் கையாளத் தொடங்கி விட்டனர். ஏறக்குறைய இருபத்தையாயிரம் தேசபக்தர்கள் 1921 - ஆம் வருஷ முடிவுக்குள் சிறைபுகுந்து விட்டார்கள். ஆனால் 1922- ஆம் வருஷம் பிறந்த பிறகு அதிகார வர்க்கத்தார் கையாண்ட அடக்கு முறை விபரீதங்கள் அதற்கு முன் நடந்ததையெல்லாம் தூக்கியடித்து விட்டன. தேசத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் போலீஸாரின் அட்டூழியங்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் படிக்கப் படிக்கமகாத்மாவின் எல்லையற்ற பொறுமைகூட எல்லை கடந்துவிடும் போலாகிவிட்டது. "அடுத்தது துப்பாக்கிதான்!" என்ற தலைப்பில் மகாத்மா ஒரு கட்டுரை எழுதினார். இதன் கருத்து,"அடுத்தபடியாக சர்க்கார் செய்யக்கூடியது துப்பாக்கிப் பிரயோகந்தான்! ஆகையால் அதற்கு நாம் தயாராயிருக்க வேண்டும்" என்பது தான். அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையும் தீயைக் கக்கியது. தபோபலம் கொண்ட முனிவருடைய வார்த்தைகள் அக்கினி மயமாக வருவதுபோல் காந்தி மகாத்மாவின் பேனாவிலிருந்தும் வார்த்தைகள் வந்தன.

காசியில் சில தொண்டர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. தொண்டர்கள் அபராதம் கொடுக்க மறுத்தார்கள். அபராதத்தைப் பலாத்காரமாக வசூலிப்பதற்ககப் போலீஸார் வீடுகளில் புகுந்து சாமான்களைக் கைப்பற்றினார்கள். ஸ்திரீகள் அணிந்திருந்த ஆபரணங்களைப் பலவந்தமாகக் கவர்ந்து சென்றார்கள். இன்னும் சில இடங்களில் போலீஸார் வீடுகளில் ஜப்தி செய்யப் புகுந்தபோது தடுத்தவர்களை அடித்தார்கள். மேற்படி செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு மகாத்மா எழுதியதாவது: --

"அடுத்தபடியாக அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகத்தைக் கைக்கொள்வார்கள். திக்கற்ற பாமர ஜனங்கள்மீது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் வரையில் நாம் காத்திருக்கக் கூடாது. கவர்ன்மெண்ட அதிகாரிகள் ஜனங்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டு போவதை நம் மக்கள் பார்த்துக் கொண்டு வெகு காலம் பொறுமையாயிருப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் கூடாது. ஆகையால் அதிகாரிகளுடைய கோபத்தை யெல்லாம் நம்முடைய தலைமேல் நாமே இழுத்து வருவித்துக் கொள்ள வேண்டும். இதற்காக, அஹிம்சையை உறுதியாகக் கடைப்பிடித்துக் கொண்டு எவ்வளவு தீவிரமான சட்டமறுப்புச் செய்யலாமோ, அதை உடனே செய்தாக வேண்டும்.

"கவர்ன்மெண்டின் நோக்கம் என்ன? நாம் இயக்கத்தைக் கைவிட்டுச் சரணாகதி அடையவேண்டும் அல்லது பலாத்காரத்தைக் கொள்ளவேண்டும் என்பதுதான் சர்க்காருடைய நோக்கம். அவர்களுடைய வலையில் நாம் விழக்கூடாது. அதாவது, பணிந்துவிடவும் கூடாது; பலாத்காரத்தைக் கைக்கொள்ளவும் கூடாது. சாத்வீக சட்ட மறுப்பினால் நம்முடைய தலையில் துப்பாக்கிப் பிரயோகத்தை வருவித்துக் கொள்ளவேண்டும்.

"தொண்டர்களுடைய உறுதிமொழிப் பத்திரத்தில் 'சாவுக்கும் தயாராயிருப்போம்' என்ற ஒரு நிபந்தனை இருக்கிறது. இந்த நிபந்தனையைக் கடைப்பிடிக்கச் சமீபத்தில் அவசியம் எதுவும் நேராது என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் கடவுளுடைய விருப்பம் வேறுவிதமா யிருப்பதாகத் தெரிகிறது. நம்மை இப்போதே பூரணமாகப் பரிசோதித்துவிட இறைவன் விரும்புகிறார் போலும். கடவுளுடைய பெயரால் அந்த இறுதிப் போராட்டத்தை ஆரம்பிப்போம்."

மேலே கண்டவாறு மகாத்மா காந்தி எழுதினார்.இதிலிருந்து அச்சமயம் காந்திஜியின் மனப்போக்கை நாம் அறியலாம். அதாவது அதிகார வர்க்கத்தாரின் கொடூரமான அடக்குமுறைகளினால் ஜனங்கள் அத்துமீறிச் சாத்வீக வரம்பைக் கடந்து விடுவார்களோ என்ற பயம் காந்திஜிக்கு இருந்தது. அந்த பயத்தை உண்டாக்கும்படியான சில சம்பவங்களும் நாட்டில் அங்குமிங்கும் நிகழ்ந்து வந்தன. உதாரணமாக, வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு ஜனவரி மாதம் 13 உ விஜயம் செய்த போது பொது ஜனங்களில் ஒரு சாரார் வரம்புமீறிய காரியங்களைச் செய்து விட்டார்கள். அன்றைய தினம் மற்ற நகரங்களில் நடந்தது போலவே சென்னையிலும் ஹர்த்தால் நடந்தது. ஆனால் ஒரு சிலர் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவில்லை. வில்லிங்டன் சினிமாவின் சொந்தக்காரர் ஒரு பார்ஸி கனவான். அவர் சினிமாவை அன்று மூட மறுத்து விட்டார். தவிர, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வேல்ஸ் இளவரசரின் வரவேற்பில் கலந்து கொள்ளத் தீர்மானித்திருந்தனர். வில்லிங்டன் சினிமாவைப் பொது ஜனங்கள் தாக்க முயன்றபோது அந்தச் சினிமாவின் சொந்தக்காரர் ஜனங்கள்மீது துப்பாக்கியால் சுட்டார். ஜஸ்டிஸ் கட்சியின் அப்போதைய தலைவரான ஸர் பி.டி. தியாகராஜ செட்டியாரின் வீட்டை ஜனங்கள் முற்றுகையிட்டுத் தொல்லை விளைவித்தார்கள். இதையெல்லாம் அறிந்ததும் மகாத்மா மிகவும் மனம் வருந்தினார். அன்றைய தினம் சென்னையில் நடந்த அசம்பாவிதங்களைப்பலமாகக்கண்டித்து "எங் இந்தியா" வில் எழுதினார்.

இவ்விதம் ஒரு பக்கத்தில் சர்க்கார் அடக்கு முறைகளையும் மற்றொரு பக்கத்தில் பொது ஜனங்களின் பலாத்காரத்தையும் எதிர்த்து நின்ற காந்திமகான் மூன்றாவது பக்கத்தில் மிதவாதிகளின் சரணாகதி முயற்சிக்கும் பதில் சொல்ல வேண்டி நேர்ந்தது.

கல்கத்தாவிலும் ஆமதாபாத்திலும் தோல்வியுற்ற பண்டித மாளவியா அத்துடன் தம் முயற்சியை நிறுத்தவில்லை. பம்பாய்க்கு வந்து அங்கே தம் முயற்சியை மீண்டும் ஆரம்பித்தார். பம்பாயில் பண்டித மாளவியாவுக்கு அப்போது முக்கிய துணைவராயிருந்தவர் ஜனாப் ஜின்னா. பம்பாய் நகரத்தின் பொது வாழ்வில் அப்போது ஜனாப் ஜின்னா மிகவும் முக்கியமான ஸ்தானத்தை வகித்து வந்தார். காங்கிரஸ் ஸ்தாபனத்திலும் ஜனாப் ஜின்னாவுக்கு அதுவரையில் நல்ல மரியாதை இருந்தது. ஆனால் மகாத்மாவின் சட்ட மறுப்பு முறையை ஜனாப் ஜின்னா ஒத்துக் கொள்ளவில்லை. கிலாபத் இயக்கத்தில் அவருக்குச் சிறிதும் உற்சாகம் கிடையாது. அலி சகோதரர்களை அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காது.

மகாத்மா காங்கிரஸில் சேர்ந்த பிறகு காங்கிரஸின் போக்கே வேறு விதமாகப் போய்க் கொண்டிருந்ததைப் பலமிதவாதிகள் விரும்பாததுபோல் ஜனாப் ஜின்னாவும் விரும்பவில்லை. ஆகவே பண்டித மாளவியாவும் ஜனாப் ஜின்னாவும் சேர்ந்து ஜனவரி மாதம் 14 - ஆம் தேதி 15 - ஆம் தேதிகளில் பம்பாயில் சர்வ கட்சி அரசியல் மகாநாடு ஒன்று கூட்டினார்கள். இந்தியாவில் அரசியல் துறையில் பிரபலமாயிருந்தவர்களை யெல்லாம் இந்த மகாநாட்டுக்கு அழைத்தார்கள். மகாத்மாவையும் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களையும்கூட அழைத்தார்கள். ஆனால் அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பழுத்த மிதவாதிகள்; அல்லது பட்டம் பதவிகளில் ஆசை கொண்ட அரசியல் பிரமுகர்கள். தேசபக்தி, தேசீயக் கிளர்ச்சி,- இவையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பெரிய பதவிகளைப் பெறுவதற்காகவே என்று எண்ணங் கொண்டவர்கள்.

மகாத்மாவின் சகாக்களான காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலும் அப்போது சிறையில் இருந்தார்கள். தேசபந்துதாஸ், பண்டிதநேரு, லாலா லஜபதிராய், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் சிறைப்பட்டிருந்தார்கள். இந்த நிலைமையில் பம்பாயில் சர்வ கட்சி மகாநாடு கூடிற்று. மகாத்மாவும் மகாநாட்டுக்கு வந்தார்.

மேற்படி மகாநாட்டில் ஒத்துழையாமை வாதிகள் நேர்முகமாகக் கலந்து கொள்வதில் பயனில்லையென்று தீர்மானித்தார்கள். ஆனால் மகாநாட்டைப் பகிஷ்காரம் செய்யவேண்டியதுமில்லை. அழைக்கப்பட்டவர்கள் போகலாம். அப்படிப் போகிறவர்களில் மகாத்மாகாந்தி ஒருவர் மட்டும் காங்கிரஸின் சார்பாகப் பேசினால் போதுமானது. வேறு யாரும் பேச வேண்டியதில்லை.

லோகமானிய திலகருக்குப் பிறகு மகாராஷ்டிரத்தின் தலைவராக விளங்கிய ஸ்ரீ என்.சி.கேல்கர் இந்த யோசனையைச் சொன்னார். அதை மற்றவர்களும் ஆதரித்தார்கள். மகாத்மாவும் அதுவே சரி என்று ஒப்புக் கொண்டார்.

சர்வகட்சி மகாநாட்டுக்கு ஸர் சங்கரன் நாயர் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். ஸர் சங்கரன் நாயர் பழைய காலத்துக் காங்கிரஸ் வாதிகளில் ஒருவர். ஒரு வருஷம் காங்கிரஸுக்கு அக்கிராசனமும் வகித்திருக்கிறார். சர்க்கார் உத்தியோகத்துக்கு அப்போதெல்லாம் காங்கிரஸ் ஒரு ஏணியாக உபயோகப்பட்டு வந்தது. அந்த ஏணியில் ஏறி உச்சியை அடைந்தவர் ஸர் சங்கரன் நாயர். இந்திய சர்க்காரின் நிர்வாக சபையில் அங்கத்தினராக உத்தியோகம் பார்த்து 'ஸர்' பட்டமும் அடைந்தவர். இப்போது அவர் 'மாஜி தேச பக்தர்' என்ற நிலைமையில் இருந்தார். அதிகார வர்க்கத்தின் பரம பக்தராயிருந்தார். மகாத்மாவையும் அவருடைய ஒத்துழையாமை சட்ட மறுப்பு இயக்கங்களையும் தீவிரமாக விரோதித்தார். அத்தகைய மனிதரைச் சர்வ கட்சி மகாநாட்டுக்குச் சபாநாயகர் ஆக்குவதாகச் சொன்னார்கள். ஆயினும் அதை மகாத்மா காந்தி ஆட்சேபிக்கவில்லை.


முதல் நாள் மகாநாடு கூடியதும் பண்டித மாளவியா தமது முகவுரைப் பிரசங்கத்தைச் செய்தார். சுருக்கமாகப் பேசுவதற்கு மகாத்மா எப்படிப் பேர் போனவரோ அப்படியே பண்டித மாளவியா நீளமான பிரசங்கம் செய்வதில் பெயர் போனவர். அவர் அன்று ஆதிகாலத்திலிருந்து, அதாவது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஆரம்பித்த நாளிலிருந்து தொடங்கினார். பிறகு காங்கிரஸ் ஆரம்பித்த வரலாற்றுக்கு வந்தார். பிறகு ஹோம்ரூல் இயக்கம், ரவுலட் சட்டம், பஞ்சாப் படுகொலை, கிலாபத் அநீதி, ஒத்துழையாமை இயக்கம் எல்லாவற்றையும் பற்றிச் சாங்கோபாங்கமாகப் பேசினார். மகாத்மாவின் பெருமையையும் தேசத்தில் அவருடைய செல்வாக்கையும் பாராட்டித் தற்போது தேசத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமையில் ஒத்துழையாமை இயக்கத் தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் ராஜி ஏற்பட வேண்டிய அவசியத்தைப் பற்றி வற்புறுத்தினார். இதற்காகப் பிரிட்டிஷ் சர்க்கார் ஒரு வட்ட மேஜை மகாநாடு கூட்டவேண்டும் என்றும் அதை வற்புறுத்தவே இந்த சர்வகட்சி மகாநாடு கூட்டியதாகவும் தெரியப் படுத்தினார்.

பிறகு மாளவியாவின் பிரேரணையின் பேரில் ஸர் சங்கரன் நாயர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தலைமைப் பீடத்தில் அமர்ந்தார். அவர் சில வார்த்தைகள் கூறிய பிறகு, ஜனாப் ஜின்னா அந்த மகாநாட்டைக் கூட்டியவர்கள் தயாரித்திருந்த நகல் தீர்மானங்களைப் பிரேரணை செய்தார். அத்தீர்மானங்களைச் சில மிதவாதிகள் ஆமோதித்தார்கள்.

மகாத்மாவின் அபிப்பிராயத்தைச் சொல்லும்படி கேட்டதின் பேரில் அவர் பேச எழுந்தார். தாம் காங்கிரஸின் சார்பாகவோ தனிப்பட்ட முறையிலோ அந்த மகாநாட்டுக்குப் பிரதிநிதியாக வரவில்லையென்பதை முதலில் தெளிவு படுத்தினார். மகாநாடு கூட்டிய தலைவர்களின் நல்ல நோக்கத்தை ஒப்புக்கொண்டு பாராட்டினார். ஆனால் ஜனாப் ஜின்னா பிரேரேபித்த தீர்மானங்களினால் உத்தேசித்த பலன் விளையாது என்று தெரிவித்தார்.

பஞ்சாப், கிலாபத், சுயராஜ்யம் ஆகிய இந்த மூன்று விஷயங்களையும் ப்ற்றிக் காங்கிரஸின் கோரிக்கைகள் என்னவென்பதை விளக்கி மேற்படி கோரிக்கைகள் குறைக்க முடியாத அடிப்படைக் கோரிக்கைகள் என்பதை வற்புறுத்தினார். ஆயினும் சர்க்கார் வட்டமேஜை கூட்டுவதில் ஆட்சேபம் எதுவும் இல்லையென்றும் அதில் காங்கிரஸ் கலந்து கொள்ளுவதற்குக் காங்கிரஸின் நிபந்தனைகள் என்னவென்றும் விளக்கினார்.

ஜனாப் ஜின்னாவின் நகல் தீர்மானங்கள் பண்டித மாளவியா குன்ஸ்ரூ முதலியவர்கள் கல்கத்தாவிலிருந்து மகாத்மாவுக்கு அனுப்பிய தந்திகளை யொட்டியிருந்தன. மகாத்மாவே தமது பழைய பல்லவியையே மறுபடியும் வற்புறுத்திப் பாடினார். அதாவது வட்டமேஜை மகாநாட்டுக்குப் பூர்வாங்கமாகப் புதிய அடக்கு முறைச் சட்டங்களின் கீழ் (அதாவது கிரிமினல்லா அமெண்ட்மெண்ட் சட்டம், இராஜத் துவே ஷக் கூட்டச் சட்டம் இவற்றின் கீழ்க்) கைது செய்தவர்களை மட்டும் விடுதலை செய்தால் போதாது. அலி சகோதரர்கள் உள்ளிட்ட பத்வா கைதிகளையும் மற்றும் 124ஏ, 144 முதலிய சாதாரணச் சட்டப் பிரிவுகளின் கீழ்க் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினார். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் சமீபத்தில் கையாண்டு வரும் அடக்கு முறைக் கொடுமைகளை எடுத்துச் சொல்லி, அந்தக் கொடுமைகளைச் செய்ததற்காக அதிகார வர்க்கத்தார் உண்மையான பச்சாதாபம் காட்ட வேண்டும் என்றும், எல்லாக் கைதிகளையும் விடுவித்தால் உண்மையான பச்சாதாபம் கொண்டதற்கு அறிகுறியாயிருக்கும் என்றும் தெரிவித்தார்.

மகாத்மாவின் பேச்சைச் சபைத் தலைமை வகித்த ஸர் சங்கரன் நாயர் கொஞ்சங்கூட விரும்பவில்லை. அதிலும் அதிகார வர்க்கம் பச்சாதாபம் காட்ட வேண்டும் என்றும், சைன்யத்தின் ராஜ பக்தியைக் கலைக்கப் பார்த்த அலி சகோதரர்களை விடுதலை செய்யவேண்டும் என்று காந்திஜி சொன்னது சங்கரன் நாயருக்குப் பொறுக்கவில்லை. அதிகார வர்க்கத்தின் தாஸானு தாஸனாகும் மனோ நிலையை அச்சமயம் ஸர் சங்கரன் நாயர் அடைந்திருந்தார். "ஆகையால், அதிகார வர்க்கம் பச்சாதாபம் காட்டவாவது? மகாத்மாவல்லவா மன்னிப்புக் கேட்கவேண்டும்?" என்று கர்ஜித்தார். பிறகு இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்ட மகாத்மாவுடன் எந்தவிதமான சம்பந்தமும் பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள தமக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு மகாநாட்டின் தலைமை ஸ்தானத்தைக் காலி செய்து மகாநாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

பிறகும் அவர் சும்மா இருக்கவில்லை. மகாத்மாவைத் தாக்கி ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதினார். "மகாத்மாவும் அராஜகமும்" என்ற புத்தகமும்; எழுதினார்.

மகாநாட்டிலிருந்து ஸர் சங்கரன் நாயர் எழுந்து போனதைப் பின்பற்றி வேறு யாரும் போகவில்லை. அந்த நாடக நிகழ்ச்சியை மற்ற மிதவாதிகள் விரும்பவும் இல்லை. உண்மையில் அவர்களில் பெரும்பாலோர் மகாத்மா கூறியதின் நியாயத்தை ஒப்புக் கொண்டார்கள். எனவே, ஸர் சங்கரன் நாயருக்குப் பதிலாக ஸர். விசுவேசவரய்யாவைச் சபைத் தலைமை வகிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு தடைபட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.

மகாத்மாவின் கருத்தையொட்டித் தீர்மானங்கள் திருத்தி எழுதப்பட்டன. முக்கியமாக, அலி சகோதரர்களையும் பத்வாக் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்று சேர்க்கப் பட்டது. ஆனால், மகாத்மாவின் பஞ்சாப், கிலாபத், சுயராஜ்யக் கோரிக்கைகளை, சர்வ கட்சி மகாநாடு அப்படியே ஒப்புக்கொள்ள வில்லை.

"மகாத்மா கோரிக்கைகளின் நியாயங்களைப் பற்றி இந்த மகாநாடு யோசனை செய்யவில்லை. அவை சர்க்கார் கூட்டும் வட்ட மேஜையில் தீர்மானிக்கப்பட வேண்டியவை. அந்த வட்டமேஜை மகாநாட்டுக்குப் பூர்வாங்கமாக அலி சகோதரர்கள் உள்ளிட்ட அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. ஜனாப் ஜின்னாகூட அதை ஒப்புக் கொண்டார். மகாநாட்டின் இரண்டாம் நாள் இரவு ஜனாப் ஜின்னா மகாத்மாவை அவருடைய ஜாகையில் வந்து பார்த்து "உங்களுடைய தீர்க்க திருஷ்டியையும் உறுதியையும் ரொம்பவும் பாராட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனார். சர்வ கட்சி மகாநாட்டுத் தீர்மானங்கள் லார்ட் ரெடிங் சர்க்காருக்கு அனுப்பப்பட்டன. ஜனாப் ஜின்னா பதில் கோரி தந்தி மேல் தந்தி அடித்தார். பண்டித மாளவியா மறுபடியும் லார்ட் ரெடிங்கை நேரிலேயே பேட்டி கண்டு பேசினார்.

ஒன்றும் பயன்படவில்லை. ஏனெனில் காந்திஜியுடன் ஒரு ராஜி செய்து கொள்ள வேண்டிய அவசியம் லார்டு ரெடிங்குக்கு இல்லாமற் போய்விட்டது. வேல்ஸ் இளவரசர் சுற்றுப் பிரயாணம் அதற்குள் முடிந்துவிட்டது. காங்கிரஸ் ஆணையினால் வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரம் நாடெங்கும் வெற்றிகரமாக நடந்துவிட்டது. இதனால் கோபங்கொண்டிருந்த லார்ட்ரெடிங் எப்படியும் மகாத்மாவைத் தொலைத்து அவருடைய இயக்கத்தை நசுக்கி விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். ஆகவே பம்பாயில் கூடிய சர்வகட்சி மகாநாடு என்னும் நாடகத்தினால் பயன் எதுவும் விளையவில்லை.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக