வியாழன், 27 செப்டம்பர், 2018

1157. காந்தி - 45

39. கைதிக் கூண்டில்!
கல்கி




கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்) என்ற நூலில் வந்த  39-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

டில்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலிருந்து மகாத்மா சபர்மதி சத்யாக்கிரஹ ஆசிரமத்துக்குத் திரும்பி வந்தார். அவருடைய உள்ளம் அமைதி இழந்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் முடிவாக மகாத்மாவின் தீர்மானத்துக்கு அதிக வோட்டுக்கள் வந்தது பற்றி அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை.

தெரிந்தோ, தெரியாமலோ, பலருடைய மனதிலும் பலாத்காரம் குடியிருப்பதைக் கண்டேன். ஆகவே, எனக்குத் தோல்வி ஏற்படவேண்டும் என்றே பிரார்த்தித்தேன். நான் அதிகமாகப் பயப்படுவது பெரும்பான்மை வோட்டுப் பலத்தைக் கண்டுதான். என்னை ஆதரிப்பவர்கள் வெகு சிலராயிருக்கும் சமயங்களிலேயே என்னால் மிகவும் முக்கியமான வேலை செய்ய முடிந்திருக்கிறது" என்ற காந்திஜி டில்லியிலிருந்து திரும்பி வந்ததும் "எங் இந்தியா"வில் குறிப்பிட்டார். மேலும் காந்திஜி எழுதியதாவது:--

"காங்கிரஸ் ஊழியர்களில் ஓரளவு ஏமாற்றத்தையும் உற்சாகக் குறைவையும் நான் எதிர்பார்த்தேன். ஆனால் இப்படிப்பட்ட சண்டமாருத எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் ஊளியர்களிடையில் நிர்மாண திட்டத்தை நிறை வேற்றுவதில் உற்சாகத்தையே காணவில்லை. 'இது என்ன சமூக சீர்திருத்த இயக்கமா?' என்று கேட்டார்கள். இம்மாதிரி ஜீவகாருண்யத் தொண்டுகளைச் செய்து பிரிட்டிஷாரிடமிருந்து ஆதிகாரத்தைக் கைக்கொள்ள முடியுமா?' என்றும் கேட்டார்கள். ஆகவே அஹிம்சையின் அடிப்படையைப் பெரும்பாலோர் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை யென்றே ஏற்பட்டது. அ.இ.கா. அங்கத்தினர்களுக்கு நான் எச்சரிக்கை செய்தேன்:- 'உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் என் தீர்மானத்தை ஒப்புக்கொள்ள வேண்டாம்; நிராகரித்து விடுங்கள்' என்று. அப்படி எச்சரிக்கை செய்த பிறகும் பெரும்பான்மையோர் என்னுடைய பிரேரணையை மாறுதல் ஒன்றுமின்றி ஒப்புக் கொண்டார்கள். ஆகவே அவர்கள் இனித் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். சட்ட மறுப்புப்போரை இப்போதைக்கு மறந்துவிட்டு நிர்மாண வேலையில் ஈடுபட வேண்டும். நம்முடைய கால் தவறியபடியால் வழுக்கி விழுந்து விட்டோம். இப்போதாவது நாம் ஜாக்கிரதையடைந்து நமது காலை ஊன்றி வைக்காவிட்டால் வெள்ளம் நம்மை அடித்துக் கொண்டே போய்விடும்"

இவ்வாறு காந்திஜ காங்கிரஸ் தீவிரவாதிகளையும் அவசரக்காரர்களையும் நிதானப்படுத்துவதில் தமது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கையில், அதிகார வர்க்கத்தார் தங்களுடைய ஆயுதத்தைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். தேசமெல்லாம் சோர்வு குடிகொண்டிருக்கும் இந்தச் சமயமே மகாத்மாவைக் கைது செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் என்று முடிவு செய்தார்கள். இந்த முடிவு ஒருவாறு வெளிப்பட்டுப் போயிற்று. "மகாத்மாவைக் கைது செய்யப்போகிறார்கள்" என்ற வதந்தி பரவியது. இது மகாத்மாவின் காதிலும் விழுந்தது. உடனே காந்திஜி "நான் கைது செய்யப்பட்டால்" என்ற கட்டுரையை எழுதினார். மார்ச்சு 9-ஆம் தேதி "எங் இந்தியா" வில் இக்கட்டுரை வெளியாயிற்று.


நாம் சுதந்திரத்துக்குத் தகுதியானவர்கள் தான் என்பதை நிரூபிப்பதற்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் வரப்போகிறது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் அதிகார வர்க்கம் எதிர்பார்ப்பதுபோல் கலகமும் குழப்பமும் உண்டானால் அதிகார வர்க்கத்துக்கு அத வெற்றியாகும். 'அஹிம்சைப் புரட்சி யென்பது ஒருநாளும் நடவாத காரியம்' என்று சொல்லும் மிதவாத நண்பர்களின் கட்சிக்கும் அது ஜயமாகும். சர்க்காரும் சர்க்காரை ஆதரிப்பவர்களும் கொண்டிருக்கும் பயம் வீண் பயம் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். என்னைக் கைது செய்தால் அதற்காக ஹர்த்தால்களோ, ஊர்வலங்களோ, கோஷங்களுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களோ எங்கும் நடக்கக் கூடாது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் பூரண அமைதி குடி கொண்டிருக்குமானால் அதை என்னுடைய தேசத்தார் எனக்குச் செய்த மகத்தான மரியாதையாகக் கருதுவேன். அதற்கு மேலே, காங்கிரஸின் நிர்மாண திட்டங்கள் எல்லாம் 'பஞ்சாப் எக்ஸ்பிரஸ்" வேகத்தில் நடைபெற்றால் மகிழ்ச்சி அடைவேன். அஹிம்சை, சமூக ஒற்றுமை, தீண்டாமை விலக்கு, கதர், இந்த நாலு திட்டங்களும் சுயராஜ்யத்தின் நாலு தூண்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.


இவ்விதம் பொது மக்களின் கடமையைக் குறிப்பிட்டு விட்டு மகாத்மாஜி மேற்படி கட்டுரையைப் பின்வருமாறு முடித்திருந்தார்.:--

"தற்சமயம் என்னை மக்களின் மத்தியிலிருந்து நீக்கிச் சிறைக்கு அனுப்புவதினால் பல நன்மைகள் விளையும் என்று கருதுகிறேன். முதலாவது என்னிடம் 'மாயமந்திர சக்திகள்' இரப்பதாகச் சலெர் கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கை போகும். இரண்டாவதாக ஜனங்கள் என்னுடைய தூண்டதலினாலேதான் சுயராஜ்யம் வேண்டுகிறார்கள். அவர்களுக்காகச் சுதந்திரப் பற்று இல்லை என்ற கூற்று பொய்யாகும். மூன்றாவது, என்னை அப்புறப்படுத்திய பிறகும் மக்கள் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றினால் சுயராஜ்யம் ஆளுவதற்கு மக்களின் தகுதி நிரூபணமாகம். நாலாவது சுயநல காரணம் ஒன்றும் இருக்கிறது. ரொம்பவும் அலுப்படைந்திருக்கும் என்னுடைய துர்ப் பல சரீரத்துக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இவ்வளவு நாள் நான் செய்த வேலையின் காரணமாக இந்த ஓய்வுக்கு நான் தகுதி பெற்றிருக்கிறேன் அல்லவா?". காந்திஜி இவ்விதம் எழுதிய கட்டுரை வெளியான இரண்டு தினங்களுக்கெல்லாம் அந்த மகான் கோரிய ஓய்வை அவருக்குக் கொடுக்க அதிகார வர்க்கத்தார் முன் வந்தார்கள்.

மார்ச்சு 8-ஆம் தேதியன்று மகாத்மா கைது செய்யப்படுவார் என்ற வதந்தி பரவியது. ஆனால் அதைக் குறித்து ஆசிரமவாசிகள் சிறிதும் பரபரப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள். ஜனாப் சோடானி சாகிப்பின் கோரிக்கையின் பேரில் 8-ஆம் தேதி மகாத்மா ஆஜ்மீருக்குச் சென்றார். 10-ஆம் தேதி திரும்பி வந்தார். அன்றைக்கு ஆஜ்மீரிலிருந்து ஆசிரமத்துக்கு வந்த தந்திச் செய்தி சந்தேகாஸ்பதமா யிருந்தபடியால் ஆசிரமவாசிகள் சிறிது பரபரப்பை அடைந்தார்கள். எங்கேயோ வெளியூரில், தாங்கள் இல்லாத இடத்தில், மகாத்மாவைக் கைது செய்து கொண்டுபோய் விடுவார்களோ என்ற கவலை உண்டாயிற்று. ஆகையினால் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி முதலியவர்கள் மகாத்மாஜி திரும்பி வரவேண்டிய வண்டியை எதிர்நோக்கிச் சபர்மதி ஸ்டே ஷனுக்கு விரைந்து சென்றார்கள்.


ஒரு சமயம் காந்திஜி பின்வருமாறு எழுதினார்:- "எனக்கும் ஹிந்து மதத்துக்குக் உள்ள பாந்தவ்யம் எனக்கும் என் பத்தினிக்கும் உள்ள பாந்தவ்யத்தைப் போன்றது. ஸ்ரீமதி கஸ்தூரிபாயிடம் நான் பல குறைகளைக் காண்கிறேன். ஆனாலும் அந்தக் குறைகளையுடையவளிடம் அசைக்க முடியாத நேசமும் பற்றும் எனக்கு உண்டு. இதுபோலவே ஹிந்து மதத்தில் நான் பல குறைகளைக் கண்டாலும் அதனிடம் எனக்குள்ள அபிமானம் மிக ஆழ்ந்த அபிமானம், அதை ஒரு நாளும் அசைக்க முடியாது."

காந்திஜி இவ்வாறு ஸ்ரீமதி கஸ்தூரிபாயை ஹிந்து மதத்துக்கு ஒப்பிட்டது ஹிந்து மதத்துக்கே கௌரவம் அளிப்பதாகும் என்று நாம் கருதுகிறோம். காந்தி தமது பத்தினியிடம் பல குறைகளைக் கண்டிருக்கலாம். ஆனால் நம்முடைய அன்னை கஸ்தூரிபாயிடம் நாம் ஒரு குறையையும் காணவில்லை. நாம் காண்பதெல்லாம் அவருடைய பெருமைதான். காந்திஜி தேசத்தின் முடிசூடா மன்னராய் விளங்கியபோதும் தேசமெல்லாம் காந்திஜியைக் குற்றங் கூறிக் கோபித்துக்கொண்ட போதும் அன்னை கஸ்தூரிபாயின் பக்தி அவரிடம் ஒரேவிதமாக மாறாமலிருந்தது. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் கஸ்தூரி பாய் உட்பட்டார். அவர் கொடுத்த கஷ்டங்களை யெல்லாம் மகிழ்ச்சியுடன் அநுபவித்தார். ஆனால் தமக்குத் தெரியாமல் தம் கணவரைச் சிறைக்குக் கொண்டுபோய் விடுவார்களோ என்ற எண்ணம் மட்டும் அவரைத் துணுக்கத்துக்கு உள்ளாக்கியது. சபர்மதி ஸ்டே ஷனுக்கு விரைந்து ஓடினார். நல்லவேளையாக, பயந்தபடி ஒன்றும் நடைபெறவில்லை. காந்திஜி குறிப்பிட்ட ரயிலில் வந்து இறங்கினார். சின்னஞ்சிறு குழந்தையைப் போல் சிரித்துக் கொண்டும் தமாஷ் செய்து கொண்டும் காந்திஜி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்.

அன்று மாலைப் பிரார்த்தனை ஆசிரமத்தில் வழக்கத்தைக் காட்டிலும் அதிக சிரத்தையும் உருக்கமும் உள்ளதாக நடை பெற்றது. பிரார்த்தனை முடிந்ததும் பலருடைய கண்களில் நீர் ததும்பியது. ஆனால் மகாத்மாவோ வழக்கத்தைக் காட்டிலும் அதிக குதூகலத்துடன் ஆசிரமத்துக் குழந்தைகளைக் கூட்டி வைத்துக்கொண்டு அவர்களில் தாமும் ஒரு குழந்தையைப்போல் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். பிறகு, வழக்கம்போலக் கடிதங்களுக்குப் பதில் எழுதத் தொடங்கினார். அச்சமயம் ஆமதாபத்திலிருந்து பல நண்பர்கள் வந்து ஊரில் பரவியுள்ள வதந்தியைப் பற்றி மகாத்மாவிடம் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் காந்திஜி தைரியம் சொல்லித் திருப்பி அனுப்பினார்.

அப்படி வந்தவர்களில் கடைசியாகத் திரும்பிப் போனவர்கள் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஜனாப் ஷுவாயிப் குரேஷீ, ஸ்ரீமதி அனசூயாபென் ஆகியவர்கள். இவர்களில் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் "எங் இந்தியா" பத்திரிகையின் பதிப்பாளர். இவர்கள் மூவரும் இரவு பத்து மணிக்கு மகாத்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். இவர்கள் போனவுடனே மகாத்மாவும் வேலையை நிறுத்திவிட்டுப் படுக்கப் போக எழுந்தார். சில நிமிஷங்களுக்கெல்லாம் ஜனாப் குரேஷியும் ஸ்ரீமதி அனசூயாபென்னும் மட்டும் திரும்பி வந்தார்கள். ஆசிரம எல்லையிலிருந்து ஆமதாபாத் புறப்படும் இடத்தில் போலீஸ் சூபரிண்டெண்டும் போலீஸ் ஜவான்களும் வந்திருக்கிறார்கள் என்றும், ஸ்ரீ சங்கர்லால் பாங்கரைக் கைது செய்து விட்டார்கள் என்றும், மகாத்மாவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்கள். இந்தச் செய்தி ஒரு நிமிஷத்துக்குள் ஆசிரமம் முழுவதும் பரவிவிட்டது. ஆசிரமத்தில் வசித்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் வந்து மகாத்மாவைச் சூழ்ந்து கொண்டார்கள்.

மகாத்மா நீண்டகாலமாகச் செய்த தவம் நிறைவேறியவரைப்போல் சந்தோஷமடைந்தார். ஜனாப் ஷுவாயிப் குரேஷியிடம், "இராஜகோபாலாச்சாரியார் விடுதலையாகி வருகிற வரையில் நீங்கள் 'எங் இந்தியா' வைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் வந்ததும் அவரிடம் ஆசிரியப் பொறுப்பை ஒப்புவித்து விடுங்கள்!" என்று சொன்னார்.

ராஜாஜி டிசம்பர் கடைசியில் வேலூரில் 144-வது உத்திரவை மீறியதற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை அடைந்தார். அவர் விடுதலையாகும் தேதி நெருங்கியிருந்தது. காந்திஜி தீர்க்கமாக யோசித்து, "நான் சிறைப்பட்டால் என் கொள்கைக்கு இணங்க 'எங் இந்தியா'வை நடத்தக்கூடியவர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார்தான்" என்று முடிவுகட்டித் தெரிவித்திருந்தார். அதையே இப்பொழுதும் சொன்னார்.

பிறகு ஆசிரமவாசிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே பேசி அவர்களை உற்சாகப்படுத்தி சிரிப்பூட்டி விடைபெற்றார். இது முடிந்ததும் எல்லாரும் சேர்ந்து "வைஷ்ணவ ஜனதோ" கீதத்தைப் பாடும்படி சொன்னார். பிள்ளைப் பிராயத்தில் மகாத்மாவின் உள்ளத்தில் பதிந்த இந்தக் கீதத்தை ஒவவொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் மகாத்மா பாடச் சொல்வது வழக்கம். அவ்வாறே இச் சமயத்திலும் அந்தக் கீதத்தைப் பாடச்சொல்லிக் கேட்ட பிறகு மகாத்மா பிரயாணமானார்.

அந்தச் சமயத்தில் மௌலானா ஹஸரத் மோஹினி வந்த சேர்ந்தார். இவர் மகாத்மா காந்தியைப் பலதடவையும் எதிர்த்துப் போராடியவர். ஆமதாபாத் காங்கிரஸிலேகூட எதிர்த்தார். அப்படிப்பட்டவர் இப்போது கண்ணுங்கண்ணீருமாக வந்தார். இச்சமயத்தில் அவர்வந்தது மகாத்மாவுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இருவரும் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அஹிம்சை அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு இனிப் பூரண ஆதரவு தருவதாக மௌலானா கூறினார்.

காந்திஜியையும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கரையும் சபர்மதி சிறைக்குக் கொண்டு போனார்கள். அங்கே பலமான இரும்புக்கம்பிக் கதவுகள் போட்ட இரு அறைகளில் அவர்கள் அடைக்கப் பட்டார்கள். ஒவ்வொரு அறையிலும் ஒரு இரும்புக் கட்டில், ஒரு கயிற்று மெத்தை, ஒரு தலையணை, ஒரு ஜமக்காளம், ஒரு கம்பளம் இவை இருந்தன. அறைகளுக்கு வெளியே தாழ்வாரம் இருந்தது.

இந்தச் சிறை வாசல் வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் இன்னம் சில ஆசிரமவாசிகளும் சென்றார்கள். சிறைக்குள்ளே காந்திஜியை அனுப்பிக்தைவைச் சாத்திப் பூட்டும் வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் தமது பதியின் அருகில் இருந்துவிட்டுப் பின்னர் ஆசிரமத்துக்குத் திரும்பினார்.

காந்திஜியின் உள்ளத்தில் அன்றிரவு அமைதி குடிகொண்டிருந்தது. ஆனால் அன்னையின் உள்ளம் எப்படித் தத்தளித்தது என்பதை யாரால் விவரிக்க முடியும்? "இன்னம் எத்தனை காலம், எத்தனை தடவை, இப்படியெல்லாம் இந்தக் கிழவர் சிறைபுக வேண்டும் இந்த நாட்டுக்காக!" என்று அன்னையின் மனம் கஷ்டப்பட்டிருந்தால் அதில் வியப்பு ஒன்று மிராது. ஆனால் அவ்விதம் மனம் கஷ்டப்பட்டதாக ஸ்ரீமதி கஸ்தூரி பாய் அணுவளவும் காட்டிக்கொள்ளவில்லை.

மறுநாள் மார்ச்சு 11 - ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் ஆலன் பிரௌன் ஐ.சி.எஸ். அவர்களின் கோர்ட்டுக்கு மகாத்மாவையும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கரையும் அழைத்துச் சென்றார்கள். "எங் இந்தியா" பத்திரிகையில் 29-9-'21, 15-12-'21, 23-2-'22 தேதி இதழ்களில் வெளியான மூன்று கட்டுரைகளுக்காக 124-ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப்படுகிறதென்று தெரியவந்தது. மேற்படி கட்டுரைகளின் தலைப்புகள் "இராஜ விசுவாசத்தைக் கெடுத்தல்", "புதிரும் விடையும்", "சிங்கத்தின் பிடரி குலுங்குகிறது" என்பவையாகும். இந்தக் கட்டுரைகள் கோர்ட்டில் படிக்கப்பட்டன. இவை "எங் இந்தியா"வில் வெளியாயின என்பதற்கும் "எங் இந்தியா" வின் ஆசிரியர் மகாத்மாகாந்தி, பதிப்பாளர் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் என்பதற்கும் சம்பிரதாயமான சாட்சியங்கள் பதிவு செய்யப் பட்டன. ஜில்லா மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் சார்பீல்டு, ஜில்லா போலிஸ் சூபரிண்டெண்ட் மிஸ்டர் ஹீலி, ஒரு ஸப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஸி.ஐ.டி. உத்தியோகஸ்தர் ஆகியவர்கள் சாட்சி சொன்னார்கள். சாட்சியங்களைப் பதிவுசெய்த பிறகு மிஸ்டர் ஆலன் பிரௌன் ஐ.சி,எஸ். குற்றப் பத்திரிகையைப் படித்தார். ஆமதாபாத் செ ஷன்ஸ் ஜட்ஜு மிஸ்டர் சி. என். புரும்பீல்டு ஐ.சி.எஸ். மன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடை பெற வேண்டும் என்று முடிவு கூறினர்.

1922-ஆம் வருஷத்திலே கூட ஒரு ஜில்லாவின் பிரதம உத்தியோகஸ்தர்கள், ஜட்ஜுகள் முதலியோர்கள் ஐரோப்பியர்களாகவே இருப்பதை வாசகர்கள் கவனிப்பார்களாக. அதைக் கவனித்தால்தான் மகாத்மாஜியின் தலைமையில் இந்தியாவின் விடதலைப் போர் வெற்றி அடைந்து இன்று நம்மை நாமே ஆண்டுகொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பது எவ்வளவு மகத்தான சாதனை என்பது தெரியவரும்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக