வெள்ளி, 7 டிசம்பர், 2018

1190. சங்கீத சங்கதிகள் - 165

கமலாவும், கர்நாடக சங்கீதமும் 
கடுகு


 ’கடுகு’, ’அகஸ்தியன்’ என்ற புனைபெயர்களில் எழுதுகிற நகைச்சுவை எழுத்தாளர்,  பி.எஸ்.ரங்கநாதன் சாரின் படைப்பு  இதோ.

2010 -இல் ‘தேவன்’ தினத்தன்று சென்னையில் அவரைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. பின்னர் அவருடன் மின்னஞ்சல் தொடர்பு இருந்தது.  'இசை'த் தொடர்பாக அவருடைய ஒரு படைப்பு வேண்டுமென நான் கேட்டபோது, அவர் எனக்கு அனுப்பிய கதை இது. 




இன்று கர்நாடக இசை உலகில் முன்னணியில் இருப்பவர்கள் கமலாவிற்கு, அதாவது என் அருமை மனைவிக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள். கமலாவிற்குக் குரல் வளமும், இசை ஞானமும், கற்பனா சக்தியும் இருந்திருந்தால், அவள் எல்லாரையும் சாப்பிட்டு இருப்பாள். துரதிர்ஷ்டம். இந்த மூன்றும் அவளுக்குத் துளிக்கூட இல்லை. அதைவிட துரதிர்ஷ்டம்! இந்த மூன்றும் தன்னிடம் இருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருப்பது தான். நினைப்பதோடு இருந்தால் பரவாயில்லையே.  பாடவும் ஆரம்பித்து விடுவாள்!

அதுவும் டிசம்பர் வந்துவிட்டால் போதும், எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிடும்.

"ஏன்னா, உங்களைத்தான், பரணிலிருந்து ஆர்மோனியத்தை எடுத்துக் கொடுங்கள். நாலு நாள் சாதகம் பண்ணினால், திருவையாறு போனால் பாட முடியும்'' என்பாள். பரணிலிருந்து ஆர்மோனியத்தை எடுக்கும்போது அதில் வாசம் செய்யும் எலிக் குடும்பம் தாறுமாறாக ஓடிக் கீழே குதித்து ஓடும். அதைக் கண்டு பயந்து கமலா கத்துவாள். இந்தக் கத்தலைக் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரர்கள், "கமலா மாமி, சங்கீதம் சாதகம் செய்கிறாள்'' என்று பேசிக் கொள்வார்கள்!


ஹார்மோனியத்தை சுருதி கூட்டிக் கமலா பாட ஆரம்பிப்பாள். அதைக் கர்நாடக இசை என்பதைவிட கர்நாடக இ(ம்)சை என்று கூறுவதுதான் சரி.

அப்போது நான் ரேடியோவை உரக்கப் போட்டு விடுவேன்.
உடனே கமலா, "அடடா... கொஞ்ச நேரம் நிம்மதியாகப் பாட முடியாது... உங்களைத்தான்! நான் பாடறது காது கேட்கலை?'' என்பாள்.

"கேட்கிறது கமலா, நல்லா கேக்கிறது. அதனால்தான் ரேடியோவைப் போட்டேன்'' என்று முணுமுணுத்து விட்டு, ரேடியோவை நிறுத்துவேன்.



இரண்டு நிமிஷம்கூட "ஸ ப ஸ' என்று பாடியிருக்க மாட்டாள். அதற்குள் ஹார்மோனியத்தின் ஏதோ ஒரு கட்டை சுயாட்சி பெற்று, தன்னிச்சையாக உரிமைக் குரலை எழுப்பும். (கமலாவின் கட்டைக் குரலுக்கு ஆர்மோனியக் கட்டையின் குரல் எவ்வளவோ தேவலாம் என்பேன்.)

கமலா உடனே, 5 கட்டை சுருதியில், "உங்களைத் தானே'' என்று கத்துவாள். கமலா பாடும் போது சுருதி சேராது. ஆனால் இப்படிக் கத்தும் போது சுருதி சுத்தமாகச் சேரும்!

"உங்களைத் தானே. இதைக் கொஞ்சம் சரி செய்யுங்களேன்.''நான் அதை சரி செய்வேன்.

மறுபடியும் கமலா, "ரார வேணுகோபாலா'' என்று ஆரம்பிப்பாள். அதற்குள் அதன் "பெல்லோஸ்' பிய்ந்து விடும். கமலாவின் சொந்தப் பாட்டியின் ஆர்மோனியம் அது.


"எல்லாம் இங்கிலீஷ் ரீட்'' என்பாள் கமலா.
"ஆனானப்பட்ட இங்கிலீஷ்காரனே போய்விட்டான். நீ என்னமோ இங்கிலீஷ் ரீட் என்று உசத்தியாகப் பேசறியே'' என்பேன்.

"ஐயோ, உங்கம்மா உசத்தியா பேசறதை விடவா நான் பேசறேன். "எங்காத்து கடிகாரம் அசல் ஜெர்மன் கடிகாரம்' என்று சொல்லிப் பெருமையடிச்சுப்பாரே, அந்தக் கடியாரத்தின் அழகு எனக்குத் தெரியாதா? ஏழு பதினாலு, ஒன்பது இருபது போன்ற சமயத்தில் சரியாக 13 தடவை மணி அடிக்குமே... அடியம்மா. கடிகாரம்னா அந்த மாதிரி எங்கே கிடைக்கும்? ஹூம்.'' என்பாள்.

கமலாவின் சங்கீதத்திற்கு சுருதி முக்கியமோ இல்லையோ, என்னை வசைப் ‘பாட’ வேண்டுமென்றால் என் அம்மாவிடம் ஆரம்பிப்பது முக்கியம். (பெரியவர்களுக்கு முதல் இடம் கொடுக்கிறாளோ?)

அதன் பிறகு கமலா மூக்கைச் சிந்தி அழ ஆரம்பிப்பாள். பல சமயம் இந்தக் கண்ணீரைத் துடைக்கப் புது புடவையே வாங்க வேண்டியிருக்கும்!

"நான் பாட உட்கார்ந்தால் உங்களுக்குப் பொறுக்காதே. சங்கீத சீஸன் வந்தால் அவரவர் அகாடமி என்ன, அண்ணாமலை மன்றம் என்ன என்று போகிறார்கள். நமக்கு அதெல்லாம் கொடுப்பினை இல்லையே. உம்... அது நாம் வந்த வழி... ஊரெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் புதுப்புது டிசைனில் புடவை வாங்கிக்கிறா, நமக்குப் பழைய பாஷன்தான். இதுமாதிரி நாலு கச்சேரிக்குப் போனால் தானே, எது புது பாஷன் என்று தெரியும்? நான் என்ன உங்க அக்காவா?'' என்று சொல்லி மூக்கால் அழுவாள். (யு ஆர் ரைட், அழுகை சுருதி சுத்தமாக இருக்கும்!)

கமலா சிறிது நேரம்  அழட்டும். அப்போது தான் அவளுக்குச் சந்தோஷம்! அதுவரை கமலாவின் இசைப் பயிற்சியின் துவக்க கால அனுபவங்களை  (சரியாகப் படிக்கவும். துக்க காலம் இல்லை)  பார்க்கலாம்., துவக்க காலப் பயிற்சிகளை அவளுடைய வீட்டார் பல சமயம் பெருமையுடன் கூறிய விவரங்களில், சக்கைகளை நீக்கிவிட்டு, அதாவது 99 சதவிகிதம் போக மீதியுள்ள சாரத்தைப் பார்க்கலாம்!

முன்பிறவி, முன்ஜன்மம், மறுபிறவி போன்றவைகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
கமலாவின் அப்பா முற்பிறவியில் ஒருவருக்குக் கடன் பட்டிருக்கிறார். அதை இந்த ஜன்மத்தில் அடைப்பதற்காகத்தான் அவரைக் கமலாவின் பாட்டு வாத்தியாராக ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவரும் கடனுக்குத் தானே என்று ஏனோ தானோ என்று சொல்லிக் கொடுத்து இருக்கிறார் மறக்காமல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு!

ஒரு நாள் கமலாவிற்கு சங்கீத சிட்சை ஆரம்பித்தது. (இந்த சிட்சை என்ற வார்த்தைக்குத் தண்டனை என்ற அர்த்தமும் இருப்பதையும் அதன் பொருத்தத்தையும் எண்ணி எண்ணி வியக்கிறேன்.) கமலாவின் சங்கீத சிட்சை, இசைக்கு மட்டுமல்ல, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் தண்டனை தான்.

அடுத்த நாளே என் அருமை மாமியார், "ரேடியோவில் பாடினா பணம் சுமாராகத்தான் கொடுப்பார்கள். சபா கச்சேரிதான் கமலா செய்யப் போகிறாள்'' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

என் மைத்துனன் தொச்சு, "அக்கா வந்து தமிழிசை சங்கத்தில் பாடட்டும். அங்க இருக்கிற கான்டீனில்தான் பஜ்ஜி பிரமாதமாக இருக்கும்'' என்று யோசனை கூற ஆரம்பித்தான்.

கமலா இவைகளை எல்லாம் சட்டை செய்யாமல் கருமமே கண்ணாயிருப்பாள். எல்லோரும் சமம் என்ற தத்துவத்திலும் அவளுக்கு ஈடுபாடு உண்டு. ஆகவேதான் ஆரோகணம், அவரோகணம் என்ற தாரதம்மியங்களைப் புறக்கணித்து விட்டு, ஸ்வரங்களை ஏழாகப் பிரிக்காமல், ஒரே ஸ்வரமாக அல்லது ஒரே அபஸ்வரமாகப் பாடுவாள்.
அவளுக்கு எல்லா ராகங்களும், ஒரே ராகம் தான். முகாரியின் சாயல் கொண்ட அந்த ராகத்தின் பெயர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை, பாலமுரளியால் கூட!

"கமலா. பச்சைத் தண்ணிகிட்டேயே போகாதே. இந்த ஏப்ரல் பனி உடம்புக்கு ஆகாது. தொண்டை கட்டிக்கும்...ஆமாம்..உங்களைத்தான். வால் மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் எல்லாம் பத்து பத்து கிலோ வாங்கிப் போடுங்கோ. கஷாயம் பண்ணிக் கொடுக்கணும் குழந்தைக்கு (ஹாஹாஹஹா! கமலா குழந்தையாம்!) தொண்டை தான் முக்கியம்'' என்று என் மாமியார் பிராட்காஸ்ட் செய்வார்.

கமலாவிற்குத் தொண்டை கட்டிவிடுமோ என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. காரணம், தொண்டை கட்டினாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, வித்தியாசமே தெரியாது. ரேடியோ ரிப்பேர் ஷாப்பில் வரும் கொர கொர ஒலியைக் குயிலோசையாக்கும் "இனிய' குரல் கமலாவிற்கு.
கமலாவிற்கு அரங்கேற்றம் நடத்தத் தீர்மானித்து அண்ணாமலை மன்றமா, தீவுத்திடலா (கூட்டம் சமாளிக்கப் பெரிய இடம் வேண்டாமா?) என்றெல்லாம் யோசித்து, தலைமை வகிக்க சினிமா ஸ்டாரா, அல்லது செம்மங்குடி போன்ற வித்வானா என்று அலசி கடைசியில் உள்ளூர் பிள்ளையார் கோவிலில் சிக்கனமாக அரங்கேற்றினார்கள்.

"அக்கா பாட்டு அரங்கேற்றத்திற்கு சரியா நூறு பேர் வந்திருந்தாங்க'' என்று என்னிடம் கூறியிருக்கிறான் தொச்சு. (கமலாவின் உறவினர்களில் மீதிப் பாதிப் பேர் ஏன் வரவில்லை என்பது தெரியவில்லை.)

"கச்சேரி முடிந்து போன போது எண்ணியிருந்தால் 101 பேர் போயிருப்பார்கள். ஆமாம், பிள்ளையார் கூடக் கோவிலை விட்டு ஓடியிருப்பார்'' என்று நான் சொல்லவில்லை, நினைத்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு நவராத்திரி கொலு சமயங்களில், "மாமி, ஒரு பாட்டுப் பாடுங்கள்'' என்று யாராவது சொன்னால் பாடியதைத் தவிர, கமலா வேறு சந்தர்ப்பத்தில் பாடியதில்லை. இருந்தாலும் வீட்டில் இருக்கும் போது பாடாமல் இருப்பாளா? இதைத்  தவிர்க்க  நான் அடிக்கடி கமலாவை ஷாப்பிங் அது இது என்று பல இடங்களுக்கு அழைத்துப் போகிறேன்.
இதோ கமலா அழுகையை நிறுத்தி விட்டாள்!. பாட ஆரம்பிக்கப் போகிறாள்.

"கமலா... கிளம்பு, கடைக்கு. பாம்பே சேலில் எட்டு ரூபாய்க்கு நூறு புடவைகளோ 100 ரூபாய்க்கு 8 புடவைகளோ தருகிறார்களாம், கிளம்பு'' என்று கத்தினால்தான் நான் பிழைப்பேன்!

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

’கடுகு தாளிப்பு’ : கடுகு சாரின் வலைப்பூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக