வியாழன், 21 மார்ச், 2019

1254. சோ ராமசாமி -4

எது வாழ்க்கை ?
சோ




’சோ’ விகடனில் 1970-இல் எழுதிய நான்காம் நவரச(!)க் கதை (தத்துவக் கதை).
===




அவன் நடந்துகொண்டிருந்தான்; முடி வில்லாமல் நீண்டுகொண்டேயிருந்த நடை எங்கேதான் முடியுமோ! கையிலிருக்கும் கமண்டலத்தையும், உடம்பிலிருக்கும் காவி உடையையும், நெற்றியிலிருக்கும் திருநீற்றையும், முகத்திலிருக்கும் தாடியையும் கண்டால் ஒரு சாமியாரோ என்ற சந்தேகம் வருகிறது.

இந்த இளம் வயதில் அவன் சாமியாராகக் காரணமென்னவாக இருக்கும்? இப்போது ஏன் போகுமிடம் தெரியாமல் இப்படிப் போய்க்கொண்டிருக்கிறான்?

வாழ்வாராம் வாழ்வார் வாழாதார்
வாழுண்டு வாழைக்காயாம் வாழ்வே!

என்று திருவள்ளுவர் கூறியதற்கு இலக்கணமாக இருக்கிறதே அவன் வாழ்வு!

பெரிய பண்ணை சுப்புராயன் என்று பேர் சொன்னால் அந்த ஊரே அடங்கும். மாநிறம்; தலையில் கூந்தல். அந்த கூந்தல் கறுப்பு; மீசையும் கறுப்புதான். ஆனால் பற்களோ வெளுப்பு! அந்த கம்பீரத்தோடு பெரிய பண்ணை சுப்புராயன் தெருவில் வந்தால், அழுத குழந்தைகூட வாயை மூடும். ஏனென்றால், ஏதாவது குழந்தை அழுதால் சுப்புராயன் அந்த குழந்தை வாயில் கடலை உருண்டையைத் திணித்துவிடுவார். அவ்வளவு தாராள மனது. அந்த சுப்புராயனின் மகன்தான் ராயப்பன். அவன் பிற்காலத்தில் சாமியாராகப் போகிறான் என்று யார்தான் நினைத்திருப்பார்கள்?
வாழ்க்கை என்பது ஒரு கடிகாரம். அதில் மனிதன் ஒரு பெரிய முள்; சின்ன முள்தான் கடவுள். பெரிய முள்ளை சின்ன முள் துரத்துகிறது. சிறிய முள்ளை பெரிய முள் துரத்துகிறது. இரண்டும் சேரும்போது கடிகாரம் ஓடுகிறது. கடிகாரம் நின்றுவிட்டால் பெரிய முள்ளும், சிறிய முள் ளும் நின்றுவிடுகின்றன. அப்படியிருக்க அலாரம் அடிக்கும் சமயத்தை யாரால் சொல்ல முடியும்? ராயப்பனுக்கு மட்டும் இப்படிப்பட்ட மனப் பக்குவம் சிறு வயதில் எப்படி ஏற்பட முடியும்? சிறிய முள்ளை துரத்தும் பெரிய முள்ளாகவே வாழ்ந்தான். வாழ்க்கை என்னும் கடிகாரம் ஓடிக்கொண்டே இருந்தது. விநாடி முள்ளைத்தான் காணோம்! எங்கே தேடுவது? யாரைக் கேட்பது? என்ன வாழ்க்கை இது?

இந்தச் சமயத்தில்தான் அவனுக்கு அவளுடைய நட்பு ஏற்பட்டது. இதயத்தையே திறந்து அவள் முன் வைத்தான். தன் உயிரையே கொடுப்பதாகக் கூறினான். ஆனால், அவளோ சம்மதிக்கவில்லை. அவளையும் குற்றம் கூறிப் பயன் இல்லை என்பதை அவன் அந்தராத்மா அறியும். வேறு வழியின்றிக் காவியுடை அணிந்தான்.

சித்தனே, பித்தனே, பிறைசூடி கந்தனே
இத்தனை, அத்தனை என்றிராமல் எத்தனை!
பக்தனே, முக்தனே சர்வபுத்த சொந்தனே
வத்தலை, பத்தலை அடியார் குளித்தலை!

என்ற சித்தர் பாடலொன்று ராயப்ப சாமியாருக்கு நினைவு வந்தது.
அப்போது 'சுவாமி' என்ற குரல் கேட்க, தியானத்திலிருந்து விடுபட்டு, அழைத்தது யார் என்று பார்த்தார் சாமியார். என்ன? அவளா இது! எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறான்!

"நீயா?" என்றான் ராயப்பன். "பெண்ணே! இனி நீ கேட்டாலும் என் உயிரைத் தருவதற்கில்லை. உயிர் என்பது புரியாத புதிர்! பசுவிற்கு புல்லைக் கொடுத்தால், பதிலுக்கு அது நமக்கு பாலைத் தருகிறது. ஆனால் மனிதன்? ஐயோ! ஒரு பிடி சோறு போட்டால் பதிலுக்கு ஒரு ஏப்பம் விடுகி றான்! ஏப்பம் பசும்பாலாகுமா? அதுதான் வாழ்க்கை."

"அப்படியானால் நாம் சேர்ந்து வாழவே முடியாதா?" என்று கேட்டாள் அவள்.

அவன் நடந்தான்... அடிவானத்தை நோக்கி! அவளை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.

  [ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சோ ராமசாமி

1 கருத்து:

  1. சோவின் நவரசக்கதை நன்றாக இருக்கிறது. 1970-ல் இப்படி எழுதியிருக்கிறார் என்பது வியப்பாக உள்ளது. பகிர்ந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு