வெள்ளி, 31 மே, 2019

1297. பாடலும் படமும் - 64

கூர்மாவதாரம்


[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மத்தாய்ச் சுழன்ற மந்தரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். 

அருணகிரிநாதர் பல திருப்புகழ்களில் இந்த அவதாரத்தைப் பாடியுள்ளார். 



மலையை மத்தென வாசுகி யேகடை
     கயிறெ னத்திரு மாலொரு பாதியு
          மருவு மற்றது வாலியு மேலிட ...... அலையாழி

வலய முட்டவொ ரோசைய தாயொலி
     திமிதி மித்திமெ னாவெழ வேயலை
          மறுகி டக்கடை யாவெழ மேலெழு ...... மமுதோடே

என்கிறார் “ முலை மறைக்கவும்” என்று தொடங்கும் திருப்புகழில்.

மலையை மத்து என வாசுகியே கடை கயிறு எனத் திருமால்
ஒரு பாதியும் மருவும் மற்றது வாலியும் மேல் இட ... (மந்தர)
மலையை மத்தாக நாட்டி, வாசுகி என்னும் பாம்பைக் கடைகின்ற
கயிறாகக் கொண்டு, திருமால் ஒரு பாதிப் புறமும், பொருந்திய
மற்றொரு பாதிப் புறத்தை வாலியுமாக முற்பட்டு,

அலை ஆழி வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம்
எனா எழவே ... அலைகள் வீசும் கடலிலிருந்து பூவலயம் முழுமையும்
ஒரே பேரொலியாய் சப்தம் திமி திமித்திம் என்று கிளம்பவும்,

அலை மறுகிடக் கடையா எழ மேல் எழும் அமுதோடே -
 கடல் கலங்கும்படி கடைதலை மேற்கொள்ள, (அப்போது) மேலே எழுந்த அமுதுடனே

’’ஈரமோடு சிரித்து” என்று தொடங்கும் இன்னொரு திருப்புகழில் ,

பார மேருப ருப்பத மத்தென
     நேரி தாகஎ டுத்துட னட்டுமை
          பாக ராரப டப்பணி சுற்றிடு ...... கயிறாகப்

பாதி வாலிபி டித்திட மற்றொரு
     பாதி தேவர்பி டித்திட லக்ஷுமி
          பாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு

கீர வாரிதி யைக்கடை வித்ததி
     காரி யாயமு தத்தைய ளித்தக்ரு
          பாளு வாகிய பச்சுரு வச்சுதன் ...... 

என்று பாடுகிறார் அருணகிரி.

பார மேரு பருப்பத(ம்) மத்து என நேரிதாக எடுத்து உடன்
நட்டு உமை பாகர் ஆரப் படம் பணி சுற்றிடு கயிறாக ... கனத்த
மேரு மலையை மத்தாகத் தேர்ந்து எடுத்து, உடனே அதை (பாற்கடலில்)
நாட்டி, உமையைப் பாகத்தில் உடைய சிவபெருமானது மாலையாக
விளங்குவதும், படங்களைக் கொண்டதுமான (வாசுகி என்ற) பாம்பை
(அந்த மத்துக்குச்) சுற்ற வேண்டிய கயிறாகப் பூட்டி,

பாதி வாலி பிடித்திட மற்றொரு பாதி தேவர் பிடித்திட
லக்ஷுமி பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு ... ஒரு பாதியை
வாலி பிடிக்க, மற்றொரு பாதியைத் தேவர்கள் பிடித்திட, லக்ஷ்மி,
பாரிஜாதம் முதலான பல சித்திகளும், அரும் பொருட்களும் (பாற்கடலில்
இருந்து) வெளிவரும்படி,

கீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை
அளித்த க்ருபாளு ஆகிய பச்சு உரு அச்சுதன்  ...
பாற்கடலைக் கடைவித்த தலைவனாய், அமுதத்தைத் தேவர்களுக்குக்
கொடுத்தருளிய கிருபா மூர்த்தியாகிய, பச்சை நிறம் கொண்ட திருமால்

திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ:

மலங்கு விலங்கு நெடுவெள்ளம் 
  மறுக அங்கோர் வரைநட்டு
இலங்கு சோதி யாரமுதம் 
  எய்து மளவோர் ஆமையாய்,
விலங்கல் திரியத் தடங்கடலுள் 
  சுமந்து கிடந்த வித்தகனை,
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து 
  அடியேன் கண்டு கொண்டேனே. 

( பொருள்: உள்ளுக்கிடக்கிற) மீன்சாதிகள் தடுமாறும்படியான பெரிய 
வெள்ளம் குழம்பும்படியாக ஆழமான அவ்விடத்திலே ஒரு (மந்தர) பர்வதத்தை நாட்டி விளங்குகின்ற தேஜஸ்ஸோடு கூடின 
அம்ருதமானது  தோன்றும் வரையில் ஒப்பற்ற ஆமையா யிருந்துகொண்டு  அந்த மந்தரமலையானது நாற்புறமும் திரிந்து வரும்படியாக  பெரிய அக்கடலிலே அம்மலையைத்) தாங்கிக் கொண்டிருந்த ஆச்சரியபூதனான பெருமானை கலக்கமுள்ள கடலை அணித்தாக வுடைய  திருக்கண்ணபுரத்திலே அடியேன் கண்டுகொண்டேன்- )

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கடல் கடைந்த வாலி

தசாவதாரம்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

2 கருத்துகள்: