என் பாட்டனார்
தமிழ்த் தாத்தா,
தமிழ்த் தாத்தா என்று தமிழுலகம் கொண்டாடும்
பெரியாரைத் தாத்தா என்று நேரிலே அழைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவருடைய
ஒரே பேரனாகிய எனக்கு உள்ள அந்தத் தனி உரிமையை இப்போது நினைத்துப் பார்க்கையில்
எனக்கு உண்டாகும் உணர்ச்சிகள் பல.
ஐயரவர்கள் பிறந்த
தமிழ் ஆண்டிலேயே அடியேனும் பிறந்தேன்; அவருடைய 61-ஆம் ஆண்டுத்
தொடக்கத்திலேதான் ஆனந்த வருஷத்தில் நான் பிறந்தேன். எனது 27-ஆம் பிராயம் வரை என்னுடைய பாட்டனார் ஜீவித்திருந்தார்.
அவரைப்பற்றி
நினைக்கும் போதெல்லாம் என் கண்முன் நிற்பது அவர் மாணவர்களுடன் பழகிய
காட்சிகளேயாகும். மாணவர் என்று குறிப்பிடுவது கல்லூரியில் படித்த மாணவர்கள் அல்ல.
அவ்வகையில் பயன் பெற்றோர் பலருண்டு. ஆயினும் அவர் இல்லத்திலேயே முழு நேரத்தையும்
செலவிட்டு அவருக்குப் பணிவிடை செய்து இன்பம் கண்ட சிலரைப் பற்றியே நான் குறிப்பிட
விரும்புகிறேன்.
திருவாவடுதுறை
மடத்தில் ஏற்பட்ட நற்பழக்கங்கள் எல்லாம் ஐயரவர்களின் வாழ்நாளில் தலைசிறந்து
விளங்கின. தம் ஆசிரியப் பிரானாகிய மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்களிடத்தும், திருவாவடுதுறை
ஆதீனகர்த்தராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களிடத்தும் தாம் பெற்ற அன்பின் திறத்தை
மாணவர்களுக்குக் கதை கதையாகப் பரிவுடன் பல முறை எடுத்துக் கூறுவார். என் இளமைப்
பிராயத்தில் என் பாட்டனாரவர்களிடம் நெருங்கிப் பழகியவர்கள் ஸ்ரீ இ. வை.
அனந்தராமையர், ஸ்ரீ ம. வே. துரைசாமி ஐயர், ஸ்ரீ சு. கோதண்டராமையர் முதலியோராவர். இவர்களில் ஸ்ரீ அனந்தராமையர் வயசானவர். அவர் காலையிலும்
மாலையிலும் வெகு நேரம் வரை விடுமுறை நாட்களில் ஐயரவர்கள் செய்துவந்த ஆராய்ச்சிப்
பணியில் ஈடுபடுவார். பல மணி நேரம் அவர் கருத்தையும் கண்ணையும் ஏடு பார்ப்பதிலும்,
பிரதிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதிலும், 'ப்ரூப்' பார்த்தலிலும் செலுத்துவதைக் கவனித்தால் ஆச்சரியமாகவே
இருக்கும். சிறந்து உறுதியுடன் இவ்வகைப் பணியில் இக்காலத்தில் ஈடுபடுகிறவர்
அரியர்.
ஸ்ரீ கோதண்டராமையர் ஐயரவர்களுக்குப் பணிவிடை செய்வதில் சிறந்த
பக்தராக விளங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சென்ற சமயம் அங்கே
சங்கத்தில் படித்துக் கொண்டிருந்த அவரை ஐயரவர்கள் சென்னைக்கு உடன் அழைத்து
வந்தார். 15 வயசுச்
சிறாராகிய அவர் தியாகராச விலாசத்திலேயே ஐயரவர்களிடம் படித்துக் கொண்டும்
அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டும் வரலானார். வெளியூர் யாத்திரை செல்லும்
பொழுதெல்லாம் அவர் உடன் செல்வார். ஐயரவர்களின் குறிப்பை உணர்வதில் அவர் வெகு
சமர்த்தர். அதனால் அவரிடம் ஐயரவர்களுக்கு மிகுந்த அன்பு உண்டு. அந்த அன்பு பல
சமயங்களில் பல விதமாகப் புலப்படும்.
தாம் அருந்தும்
எந்தச் சிற்றுண்டியையும் ஐயரவர்கள் தம் இல்லத்தில் பழகிய மாணவர்களுடனேயே பகிர்ந்து
கொள்வார். எதையும் மறைத்துச் சாப்பிடும் வழக்கம் அவரிடத்தில் இல்லை. உடன் பழகிய
மாணவர்கட்கு உணவும் ஆடையும் தேடித் தந்து அவர்களைப் பாதுகாப்பதில் அளவற்ற
இன்பங்கொண்டார். சிலருக்கு விவாகம் செய்வித்தும் மகிழ்ந்தார்.
ஐயரவர்கள் 1924-ஆம் ஆண்டு முதல் 1927-ஆம் ஆண்டு வரை ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியாரவர்களால்
சிதம்பரத்தில் நிறுவப் பெற்ற மீனாட்சி தமிழ்க் கல்லூரித் தலைவராக இருந்தார். அங்கே
அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் பலர். ஒவ்வொருவரும் சிறந்த பண்புடையவராகவே
விளங்கினர். இந்தக் கல்லூரியைப் பற்றி நினைக்கும் பொழுது வித்துவான்கள் தண்டபாணி
தேசிகர், சிவப்பிரகாச தேசிகர்
இவர்கள் ஞாபகம் வருகிறது. இவர்கள் இருவரும் ஐயரவர்களுடைய தலை சிறந்த மாணவர்களாக
விளங்கினர். இவர்களிடம் ஐயரவர்களுக்குத் தனிப்பட்ட அன்பு ஏற்பட்டது.
மீனாட்சி தமிழ்க்
கல்லூரியில் படித்த மாணவரில் ஸ்ரீ வி. மு. சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். இவர்
மிகவும் அடக்கமான சுபாவமுள்ளவர். சுயநலம் பாராதவர். ஆழ்ந்த கல்வியறிவும், சிறந்த ஞாபக சக்தியும் உடையவர். திருப்பனந்தாள்
ஸ்ரீ காசி மடத்து ஆயிரம் ரூபாய்த் தமிழ்ப் பரிசை முதல் முதலாகப் பெற்றவர். இவரை
ஒரு நடமாடும் புத்தகசாலை என்றே சொல்ல வேண்டும். ஐயரவர்கள் புத்தக வேலைகளுக்கு இவர்
செய்த உதவி மிகுதியானது.
சென்ற முறை
சென்னையில் காங்கிரஸ் மகாசபை கூடிய
பொழுதுதான் ஸ்ரீ கி. வா. ஜகந்நாதன் அவர்கள் ஐயரவர்களிடம் தமிழ்ப் பாடங் கேட்கத்
தியாகராச விலாசத்திற்கு வந்து சேர்ந்தார். இவருக்கு அப்பொழுதே முருகக் கடவுளின்
மீது அபார பக்தியும், அதன் விளைவாகச்
சிறந்த தமிழறிவும், கவியியற்றும்
ஆற்றலும் இருந்தன. இவரைப் பற்றி நான் எழுத விரும்பும் விஷயங்கள் பல. பிறிதொரு
சமயம் வாய்ப்பு நேரும்பொழுது தனிக் கட்டுரையாகத்தான் எழுத வேண்டும் என
எண்ணுகிறேன். இவருடைய இடையறா முயற்சியினால்தான் ஐயரவர்கள் சுயசரிதம் வெளிவந்தது.
நூறாண்டு விழாவிற்குள் சுயசரிதத்தின் பிற்பகுதியும் வெளிவரச் செய்ய வேண்டுமென்ற
அவா இருந்தது. இவ்விழாவை ஒட்டி ஸ்ரீ கி.
வா. ஜ அவர்கள் அப்பணியைத் தொடங்கி நன்கு பூர்த்தி செய்வார் என்பது திண்ணம்.
உற்றார்
உறவினர்களிடம் ஏதோ வியாஜமான அபிமானமே வைத்திருந்தார் என்னுடைய தாத்தா. முக்கியமான
சந்தர்ப்பங்களில் மட்டும் அவர்களுடன் பழகுவார். அவருடைய தமிழ்ப் பணிக்கு இடையூறாக
இருக்கக் கூடாதென்று நெருங்கிய உறவினர்களும் அவரிடத்துப் பக்குவமாகவே பழகி
வந்தார்கள். தம் சிறு பிராயத்திலே உதவி செய்த உறவினர்களை அவர் மறக்கவே இல்லை.
அவர்கள் சந்ததியாருக்கெல்லாம் தாம் சௌகரியமாக இருந்த பிற்காலத்தில் இயன்ற அளவு
பொருளுதவி செய்து வந்தார். திருவாவடுதுறை மடத்தில் தாம் படித்துப் பயனடைந்ததை
ஆயுள் பரியந்தம் மறக்கவேயில்லை. மடத்துச் சம்பந்தமான எவ்வகைப் பணியிலும் மிகுந்த
அக்கறையும் கவலையும் கொண்டார். ஆதீனத்தின் சிறப்பைத் தம்முடன் அன்பாகப் பழகிய தக்க
கனவான்களிடத்தும் பிரமுகர்களிடத்தும் விரிவாக எடுத்துரைத்தார். ஆதீனகர்த்தர்களின்
சிறப்பியல்புகளைச் சுவாரசியமாகக் கூறுவார்.
தாம் பெற்று வரும் நலன்களுக்கெல்லாம் காரணம் தம் தந்தையாரின் சிவபூஜா
விசேஷமே என்று அடிக்கடி சொல்வதுண்டு.
ஏட்டுச்
சுவடிகளும் பயன்படுத்திய அச்சுப் புத்தகங்களுமே ஐயரவர்களுடைய சிறந்த பொக்கிஷங்களாக
விளங்கின. தியாகராச விலாசத்தில் அவர் வீட்டின் மாடியில் தம் தொண்டுகளைப் புரிந்து
வந்தார். புத்தகங்களும் அவரும் மாணவர்களுமே அவ்விடத்தில் உறைந்து வந்தனர்.
மாடியிலுள்ள மேற்புறத்து அறையில் ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும்
பாதுகாத்து வந்தார். அவர் அநுமதியின்றி யாரும் அங்கே சென்று எதையும் பார்க்க
இயலாது. நூல்களின் மேல் அளவு கடந்த பற்றும் பழைய நூல்களெல்லாம் நன்கு
வெளிவரவேண்டுமே என்ற கவலையும் அவரிடம் குடி கொண்டிருந்தன. குடும்பச் செலவுகளைப்
பற்றியோ வருவாயைப் பற்றியோ அவர் கவலைப்படவில்லை. குடும்ப விஷயங்களையெல்லாம் இளம்
பிராயத்தில் அவர் தந்தையாரும், நடுத்தர வயசில்
அவர் தம்பியாரும், பின்னர் என்
தந்தையாரும் கவனித்துக்கொண்டார்கள். அவசர சந்தர்ப்பத்திற்கென ஒரு ரூபாய் சில்லறை
மாத்திரம் தம்மிடம் வைத்துக்கொள்வார். இல்லத்தில் படித்து வந்த மாணவர்களே அவர்
குடும்பத்தினராக விளங்கினர். மாணவர்களுக்குப் பாடம் சொல்வது, அவர்களுடன் தமிழ்ப் பணியில் ஈடுபடுவது, கவிகள் சொல்லியும் கேட்டும் இன்புறுவது என்பனவே
அவருடைய தினசரி நடவடிக்கைகளாக இருந்தன. தமக்கு எந்தச் சிறிய வகையிலும் உதவி
புரிந்தவர்களை அவர் மறக்கவே இல்லை. ஞாபகம் வைத்துக்கொண்டு நன்றி செலுத்திவந்தார்.
காலையில் தவறாமல்
தினந்தோறும் முதலில் தேவாரத்தில் ஒரு பதிகமேனும் பாராயணஞ் செய்து இன்புறுவார்.
பிறகு புத்தக ஆராய்ச்சி வேலை நடைபெறும். 11 மணிக்கு மேல் நீராடல், அநுட்டானம்,
பூஜை, போஜனம் முதலியன நிகழும். பிற்பகலில் சிறிது நேரம் நித்திரை செய்வார். நித்திரை
வரும்வரை உடனிருக்கும் மாணவரை அழைத்துப் பத்திரிகைச் செய்திகளைப் படிக்கச் செய்து
கேட்பார். அயர்ச்சி நீங்கியபின் மாணவர்களுக்குப் பாடம் சொல்லுவார். மீண்டும்
மாலையில் புத்தகப் பதிப்பு வேலையும் ஆராய்ச்சியும் தொடங்கும். இரவு 10 மணி வரை பதிப்புச் சம்பந்தமான பணிகள்
நடைபெறும்.
இதற்கிடையே,
காண வரும் அன்பர்கள் பலர். அவர்களிற் பல
வகையினர் உண்டு. பிரபுக்கள், புலவர்கள்,
புத்தகப் பதிப்பாளர்கள், மாணவர்கள், உறவினர், யாசகர்கள், உற்றார்கள் எனப் பல விதமாகப் பிரிக்கலாம். யாவரிடத்தும்
அவர் அவர் தகுதிக்கு ஏற்ற வண்ணம் முகமன் கூறி அன்புடன் உசாவி அவர் உரையாடும் விதம்
சுவையாக இருக்கும். சிலேடையாகப் பேசிச் சிலரைச் சிரிக்கச் செய்வார். கொஞ்சம்
கடுமையான சுபாவமுள்ளவர்கள் ஐயரவர்களிடம் விடை பெற்றுத் திரும்பும் பொழுது
இன்முகத்துடனேயே செல்லுவார்கள். புத்தகங்களுக்கு அபிப்பிராயம் பெறும் அன்பர்கள்
வருகை அதிகம். நல்ல அபிப்பிராயம் பெற வேண்டுமென்று சிலர் தந்திரமாக, அந்தச் சமயத்தில் ஐயரவர்கள் வெளியிட்ட நூல்களை
விலைக்குப் பெறுவர். நூல்களுக்கு அபிப்பிராயம் நிதானமாகவே ஐயரவர்கள் அளிப்பது
வழக்கம். தம் கருத்துக்கு ஒவ்வாத நூல்களுக்கு விரிவான முறையில் அபிப்பிராயம் எழுத
மாட்டார். சமத்காரமாகவும் பக்குவமாகவும் பதில் எழுதி அனுப்பி விடுவார்.
வரும்
கடிதங்களுக்குப் பதில் அனுப்பும் பணியை என் தந்தையார் செய்து வந்தார். என்
தந்தையாருக்கும் பாட்டனாருக்கும் இடையே ஒரு சிறு தூதனாக நான் இருந்தேன். ஆதலின்
இருவர் கருத்துக்கும் இணங்க நான் நடந்தேன். இளமையில் செய்து வந்த இந்தச் சிறு
தொண்டு இப்பொழுது நினைக்குந்தோறும் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
புத்தகங்களுக்கு
அகராதி தயாரிக்கும் முறை வேடிக்கையாக இருக்கும். இந்தப் பணியில் நான்கூட
ஈடுபடுவதுண்டு. இதில் அதிகமாக ஈடுபட்டவர் என் சிறிய பாட்டனாராகிய ஸ்ரீ சுந்தரமையரவர்கள். நீளமான காகிதங்களில்
வார்த்தைகளைக் குறித்து விடுவார்கள். அவற்றை ஒவ்வொரு வார்த்தையாகக் கத்தரித்து
அகராதி வரிசைப்படி அதற்கென அமைந்த சிறிய பெட்டியில் பிரித்துப் போட்டுப் பின்
சேகரித்து வரிசைப்படுத்தும் முறை என் இளம் பிராயத்தில் ருசிகரமாகவே இருந்தது.
இந்தப் பணியில் அன்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு விரைவில் பணியை முடிப்பார்கள்.
அகராதி வேலை செய்வதில் எனக்குப் பழக்கம் உண்டாகும்படி செய்து 'ப்ரூப்' பார்க்கும் விதத்தையும் என் பாட்டனார் எனக்கு நன்கு
போதித்தார். அகராதி வரிசை தெரியுமா என்று விசித்திரமாக அவர் இடையே கேள்வி கேட்டு
ஆராய்வது வேடிக்கையாக இருக்கும்.
நான் சிறு
நூல்கள் சிலவற்றை அவரிடம் பாடம் கேட்டதுண்டு. சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், நள வெண்பா, ஆறுமுக நாவலர்
இயற்றிய சிற்றிலக்கண வினா விடை முதலியவை படித்தேன். ஒரு நாளைக்கு ஒரு பாட்டிற்கு
மேல் பாடஞ் சொல்ல மாட்டார். செய்யுளை நிதானமாகப் பலமுறை படிக்கச் செய்து கேள்வி
கேட்கத் தொடங்குவார். பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பது போல் வார்த்தைக்கு வார்த்தை
அர்த்தம் சொல்லும் வழக்கம் அவரிடம் இல்லை. எழுவாய் பயனிலை செயப்படுபொருள் இவை யாவை
என்று வினவிப் படிப்பவனையே சிந்திக்கச் செய்து, பிறகு ஒவ்வொரு தொடருக்கும் பொருள் சொல்லுவார். பாடலில்
ஏதாவது வரலாறு வந்தால் அதனை விளக்குவார். ஒரு பாட்டைப் பாடம் கேட்கும் பொழுதே
படிப்பவனுக்குப் பல விஷயங்கள் புலப்படுமாறு அரிய செய்திகளை எளிதில் எடுத்துரைப்பார்.
இசையுடன் செய்யுட்களைப் படித்துக் காட்டுவார்.
ஐயரவர்கள் எனக்கு
அவ்வப்பொழுது கூறிய புத்திமதிகள் பல. தம்மிடம் கற்ற மாணவர்களிடம் எப்போதும்
பிரியமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார். "வேறொன்றும் வேண்டாம்; அவர்களிடம் சுமுகமாக இருந்தாற் போதும்"
என்று வேடிக்கையாகச் சில சமயம் சொல்லுவதுண்டு. பழைய அன்பர்களை உபசரித்து
அவர்களுக்குச் செய்யக்கூடிய சிறிய உதவிகளைச் செய்யத் தயங்கக்கூடாது என்றும்,
யாசகர்கள் வந்தால் 'போ' என்று சொல்லுதல்
பிழை என்றும், நம்முடைய வலிமையை
அவர்களிடம் காட்டக் கூடாதென்றும் அறிவுறுத்துவார். சிறியவர்களையும் ஏகவசனமாக
அழைத்தல் கூடாது என்று கூறுவார். காயத்திரி ஜபம் அவசியம் செய்ய வேண்டுமென்றும்,
ஜபம் செய்யுங்கால் சூரியனைத் தியானம் செய்ய
வேண்டுமென்றும் உபதேசிப்பார். சந்தியாவந்தனம் செய்யும்பொழுது ஆசமனம் இப்படிச்
செய்ய வேண்டும், பிரோக்ஷண ஜலம்
சிரசில் படவேண்டும் என்பன போன்ற விஷயங்களையும் பிரியமாக மனங் கொள்ளுமாறு கூறுவார்.
சுற்றந் தழுவுதல் மிகவும் முக்கியம் என்றும், அவர்களைத் திருப்தி செய்வதற்காகப் பெரியவர்களாயின்
நமஸ்கரித்து ஆசி பெற வேண்டியது நல்லதென்றும் கூறுவார். திருவாவடுதுறை, திருப்பனந்தாள் மடங்களிலிருந்து தாம் அடைந்த
நன்மை பலவென்றும், அவ்விரண்டு
மடத்து அதிபர்களிடத்தும் என்றென்றும் உண்மையன்புடன் நடந்துவர வேண்டுமென்றும் பல
நிகழ்ச்சிகளை எடுத்துரைத்து உள்ளம் உருகப் பேசிய சந்தர்ப்பங்கள் பல உண்டு.
ஐயரவர்கள்
சிலரைப்போல் கையெழுத்துப் போடுவதற்குக் கூட ஆங்கிலம் பழகவில்லை. சிலர் அவரிடம்
ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விடுவார்கள். தமிழ் தெரிந்தும் ஆங்கிலத்தில் பேசுவது
ஒரு கௌரவமென்று நினைத்த காலம் அது. ஐயரவர்கள் அவர்களுக்குப் புன்னகையுடன்
"தேங்க்ஸ்" (Thanks) அல்லது "நோ
தேங்க்ஸ்" (No Thanks) என்று
சொல்லியனுப்பி விடுவார்.
(++)மீண்டும்
ஐயரவர்கள் தோன்றினால் இன்றைத் தமிழுலகில் அவர் எங்ஙனம் விளங்குவார் என்று சில
சமயம் நான் சிந்திப்பதுண்டு. பல விதமான புரட்சிகளும் போராட்டமும் நடந்துவரும்
இக்காலத்திலும் அவர் வெற்றிகரமாக வாழ்வார் என்பது திண்ணம். காரணம், அவருடைய சிறந்த பண்பும் அனைவரிடத்தும் பழகும்
முறையுமேயாகும்.
[ நன்றி: வெண்பா விரும்பி ]
தொடர்புள்ள பதிவுகள்:
உ.வே,சா அவர்களின் "என் சரித்திரம்" ஒரு சிறந்த சுய சரிதை. அது அவர்தம் சுய புராணம் என்று எண்ணலாகாது. 19ம் நூற்றாண்டில் தமிழும், தமிழகமும் எப்படி இருந்தது என்பது குறித்த அரிய செய்திகள் அதில் கொட்டி கிடக்கும். இப்போதுதான் தமிழ் வளர்ந்திருப்பதாக ஒரு புரட்டு செய்யப் படுகிறது. உண்மையில் தமிழ் எப்படிப்பட்ட மகோன்னத நிலையில் அந்நாளில் இருந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் மேற்படி நூலை படிக்க வேண்டும். அது ஒரு வரலாற்று பெட்டகம். மேலும் திருவாடுதுறை ஆதீனம் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்தது , எத்தகு தமிழ் பணியாற்றியது என்பதையெல்லாம் புரிந்து கொள்ளலாம். தற்கால நிலைகளை கண்டு வெறுப்பும் ஏமாற்றமும் அடையும் போதெல்லாம் மேற்படி நூலை எடுத்து படிப்பது என் வழக்கம்.
பதிலளிநீக்கு