ஞாயிறு, 29 மார்ச், 2020

1503. சத்தியமூர்த்தி - 14

நமது நஷ்டம்



மார்ச் 28. சத்தியமூர்த்தியின் நினைவு தினம். அவர் 1943--இல் மறைந்தவுடன்
'விகட'னிலும், 'கல்கி' யிலும் வந்த அஞ்சலிகள் கீழே.

முதலில் 'விகட'னின் அஞ்சலி
======

சென்ற வாரம் வரை நம் கண் முன்னாலிருந்த ஸ்ரீமான் எஸ்.சத்தியமூர்த்தி இன்று பிடி சாம்பலாகி, மண்ணோடு மண்ணாகி மறைந்து போய்விட்டார்! நாம் நேற்றுவரை கேட்டுவந்த அவருடைய அற்புதக் குரலும் அதோ மறைந்துவிட்டது!

சென்ற ஆகஸ்ட் மாதம் பம்பாயில் நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்துக்குப் போகும்போதே அவருடைய தேக நிலைமை சீர்கெட்டிருந்தது. தம்முடைய தேக நலத்தைக் காட்டிலும், தேச நலத்தையே பெரிதாக நினைத்து ஸ்ரீ சத்தியமூர்த்தி காரியக் கமிட்டி கூட்டத்திற்குச் சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் பாது காப்புச் சட்டத்தின்கீழ் போலீஸ்காரர்கள் அவரை மத்ய மாகாணத்திலுள்ள அமராவதி சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவருடைய உடல் நலம் மிகவும் பாதகமடைந்துவிட்டது. தேக அசௌக்யம் வரவர முற்றிவிடவே, பாதுகாப்பிலேயே சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் ஸ்ரீ சத்தியமூர்த்தியைக் கொண்டு போய் அதிகாரிகள் வைத்திருந்தனர். தேக நிலைமை மேலும் கேவலமானதும், அவரை நிபந்தனையின்றி அதிகாரவர்க்கம் விடுதலை செய்துவிட்டது.
அந்த நிலைமையில் அவரை விடுதலை செய்ததும், செய்யாததும் ஒன்றுதான்! தகனக்கிரியை நடந்தபோது ஒருவர், ''ஸ்ரீ சத்தியமூர்த்தி பாதுகாப்புக் கைதியாகவேதான் இறந்தார் என்று சொல்ல வேண் டும்'' என்றார். அப்படித்தான் ஒவ்வொருவரும் ஸ்ரீ சத்தியமூர்த்தியின் மரணத்தைப் பற்றி அபிப்பிராயப்பட வேண்டியிருக்கிறது!

சென்ற இருபத்தைந்து வருஷ காலமாக ஓய்ச்சல் ஒழிவின்றி இந்தத் தேசத்துக்காக அவர் உழைத்து வந்திருக்கிறார்.

சென்னை மேயராக இருந்து, அநேக மேயர்கள் பல வருஷங்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரே வருஷத்தில் செய்து, பூண்டி தண்ணீர்த் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த அரிய சேவையை நகரவாசிகள் சென்னை நகரம் உள்ள வரையில் மறப்பதரிது! அவருடைய மறைவு தமிழ்த் தாய்க்கும் ஒரு மகத்தான நஷ்டமாயிற்று. சங்கீதத்துக்காகவும், கல்விக்காகவும் அவர் செய்த தொண்டுகள் கணக்கிலடங்கா!
ஸ்ரீ சத்தியமூர்த்தி தம்முடைய செல்வப் புதல்வி சௌ.லக்ஷ்மி மீது உயிராக இருந்து வந்தார். தாம் எங்கு சென்றாலும் புதல்வியையும் கூடவே அழைத்துச் சென்று வருவார். அந்தப் பெண்மணிக்கு அடுத்த மாதம் கல்யாணம். அந்த வைபவத்தை இருந்து பார்க்கும் பாக்கியம்கூட அவருக்குக் கிடைக்காமற் போய்விட்டது.

பேச்சு வன்மை, செயலாற்றும் திறமை. புத்திக் கூர்மை முதலிய சக்திகள் அவருக்கு அமைந்திருந்ததற்கு, தேச சேவையில் ஈடு படாமல் சுக வாழ்வையும், உத்தியோகப் பட்டம் பதவியையும் மட்டில் அவர் விரும்பியிருந்தால், அவருக்கு இவை யாவும் வெகு எளிதில் கிடைத்திருக்கக்கூடும். அதன் விளைவாக சுகவாழ்வுடன் சௌக்யமாகவும் இருந்திருக்கலாம். ஆனால், தம்மை தேசத்துக்கே அர்ப்பணம் செய்து, தேசத்துக்காகவே சிறைப்பட்டு, முடிவில் தேசத்துக்காகவே உயிரையும் தியாகம் செய்துவிட்டார் அவர்!


ஸ்ரீ சத்தியமூர்த்தியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.


வீர சொர்க்கம்

'கல்கி'யில் வந்த தலையங்கக் குறிப்பு.  (அடுத்த சில வாரங்களில் அவரைப் பற்றி ஒரு சிறு கட்டுரைத் தொடரையே எழுதினார் 'கல்கி'.)





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சத்தியமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக