திங்கள், 20 ஏப்ரல், 2020

1524. சங்கீத சங்கதிகள்- 227

பண்டிட் ரவிசங்கர் 10


உலகப் புகழ்பெற்ற சிதார் இசைக் கலைஞர் ‘பாரத ரத்னா’ பண்டிட் ரவிசங்கர் (Pandit Ravi Shankar) அவர்களின் நூற்றாண்டு இது. ( அவருடைய பிறந்த நாள் ஏப்ரல் 7, 1920) . அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 வாரணாசியில் (1920) பிறந்தார். இயற்பெயர் ரவீந்திரோ சங்கர் சவுத்ரி. தந்தை, ராஜஸ்தானின் ஜாலாவார் சமஸ்தான திவானாக இருந்தவர். ரவிசங்கர் தனது 10 வயதில், பாரிஸில் அண்ணன் நடத்திய பாலே நடனக்குழுவில் சேர்ந்தார். தனக்கான துறை நடனம் இல்லை என்பதை சீக்கிரமே கண்டுகொண் டார். 1938-ல் இந்தியா திரும்பினார்.

 வாரணாசி அருகே ஒரு குக்கிராமத்தில் ஏறக்குறைய அனைத்து வாத்தியங்களிலும் நிபுணத்துவம் பெற்ற உஸ்தாத் அலாவுதீனின் வீட்டில் தங்கி குருகுல முறையில் இசை பயின்றார். இவர் வாசிக்க விரும்பியது சரோட் வாத்தியம். ஆனால், குருதான் சிதார் பயிலச் சொன்னார்.

 குருவின் வாரிசுகளுடன் சேர்ந்து இசை அரங்கேற்றம் இவரது 19-ம் வயதில் ஜுகல்பந்தியாக நடந்தது. பின்னர் தீவிர பயிற்சியால் சிதார் இசை நுணுக்கங்களை வசப் படுத்திக்கொண்டார். பல நடன நிகழ்ச்சிகளுக்கு இசை அமைத்தார்.

 அகில இந்திய வானொலியில் 1949-ல் பணியாற்றினார். உருதுக் கவிஞர் முகமது இக்பாலின் ‘ஸாரே ஜஹான்சே அச்சா’ பாடலுக்கு இசை அமைத்தார். பதேர் பாஞ்சாலி, காபுலிவாலா என சில திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ஏராளமான தனிக் கச்சேரிகள், ஜுகல்பந்திகள் நடத்தியுள்ளார்.

 உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அமெரிக்க ராக் இசைக் கலைஞர் ஜார்ஜ் ஹாரிசன், வயலின் இசைக் கலைஞர் யெஹுதி மெனுஹின் ஆகியோருடன் இவருக்கு ஏற்பட்ட நட்பு இவரது இசைக் கனவுகளின் எல்லைகளை விரிவடையச் செய்தது.

 பாரம்பரிய மரபுக் கட்டுப்பாடு என்ற பெயரில் இசையை சிறை வைக்கக் கூடாது. இசைஞானம் இல்லாதவர்கள்கூட கேட்டு ரசிக்கும்படியாக இசை இருக்கவேண்டும் என்ற கருத்து கொண்டவர்.

 யெஹுதி மெனுஹினுன் இணைந்து ‘வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்’ என்ற இசை ஆல்பம் வெளியிட்டார். இது உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்திய இசைக்கு உலக அங்கீகாரம் கிடைத்தது. இவருக்கு ‘பண்டிட்’ என்ற பெருமையும் கிடைத்தது.

 கேளிக்கை சாயல் அதிகம் இருப்பதையே தன் தனித்துவ பாணியாக ஆக்கிக்கொண்டார். உலகப் புகழ்பெற்ற பல கலைஞர்கள், அமைப்புகளுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகள் நடத்தியதோடு பல ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார்.

 1986-1992 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பத்பூஷண், பத்மவிபூஷண், மகசேசே, பாரத ரத்னா விருதுகளைப் பெற்றவர். கிராமி விருதை 3 முறை வென்றுள்ளார்.

 உலக இசையின் ஞானத் தந்தை, இந்தியப் பாரம்பரிய இசையின் தூதர் என்று போற்றப்படுகிறார். மாஸ்ட்ரோ, பண்டிட் என்று பல்வேறு அடைமொழிகளால் குறிக்கப் படும் இசை மேதை ரவிசங்கர் 92 வயதில் (2012) மறைந்தார்.

[ நன்றி : https://www.hindutamil.in/news/blogs/40785-10-2.html  ]


தொடர்புள்ள பதிவுகள்:

ரவி சங்கர்: விக்கிப்பீடியா

சங்கீத சங்கதிகள் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக