வெள்ளி, 8 மே, 2020

1536. கதம்பம் - 18

 “என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?”
ஜெ.பிரகாஷ்


மே  9. கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்த தினம்.

படிப்பெனும் கடலை நீந்திப்
     பணமெனும் ஆசை போக்கிக்
கடிப்புடன் மமதை யென்னும்
     களையிலா தொழுகி நின்று
துடிப்புடன் இந்து தேசத்
     தொண்டனாம் தலைமை பூண்டு
கொடிப்படை யில்லா தாண்டான்
     கோகலே என்னும் வேந்தன்.
                                   - நாமக்கல் கவிஞர் ----

====

“அழுவது எனக்குப் பிடிக்காது; அழுவதானால் இந்த இடத்தைவிட்டுச் செல்லுங்கள்” - உடல்நிலை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு... காலன், கணக்கை முடிக்க காத்திருந்த காலகட்டத்தில், ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களிடம்... ‘பாரத மணி’ என்று அழைக்கப்பட்ட கோபாலா சொன்ன வார்த்தைகள்தான் அவை. பெருமாளின் பெயர்களில் ஒன்றான கோபாலா என்ற பெயரை, தன் சிறுவயதில் கொண்டிருந்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... பின்னாட்களில் சுதந்திரப் போராட்டக் களத்தில் உயிரைநீத்த கோபால கிருஷ்ண கோகலேதான். அவருடைய பிறந்த தினம் இன்று.

ஆங்கிலேயர் முன் வைத்த வாதம்!

 தம் பெயரான கோபாலனையும், தன் தந்தையின் பெயரான கிருஷ்ண ராவில் உள்ள கிருஷ்ணாவையும், தம் வம்சத்தின் பெயரான கோகலே என்பதையும் ஒன்றாக இணைத்து கோபால கிருஷ்ண கோகலே என்று மாறினார் அந்தக் கோபாலன். ''ஒரு துறவியின் மனநிலையுடன் எல்லாவற்றையும் துறந்து தேச சேவையில் பலர் ஈடுபட்டு இந்தத் தேச உயர்வுக்குப் பாடுபட வேண்டும்'' என்று எண்ணினார்; அதற்காக அல்லும்பகலும் அயராது உழைத்தார். இந்திய - இங்கிலாந்து பொருளாதார உறவுகளைப் பரிசீலிக்க 'வெல்பி கமிஷன்' எனும் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு முன், இந்தியாவில் உள்ள பொது நிறுவனங்களைச் சாட்சியம் அளிக்க பிரிட்டிஷ் அரசு கேட்டுக்கொண்டது. அதற்காக இங்கிலாந்து சென்று தன் வாதத்தை வைத்தார் கோகலே. ''இந்தியாவின் வருமானத்தில் பெரும் பகுதி ராணுவத்துக்கும், உயர் பதவி வகிப்பவர்களுக்கான சம்பளம் மற்றும் பென்ஷன் ஆகியவற்றுக்குமே செல்கிறது. இதனால் சுகாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குப் பணம் செலவழிக்க முடிவதில்லை. இந்நிலை மாற வேண்டும்; பிரிட்டிஷ் அரசு ஏழைகளாய் உள்ள அடிப்படை வசதிகளற்ற இந்தியர்களின் நிலையை அறிய வேண்டும்; இந்நிலை மாற வழிவகை செய்ய வேண்டும்'' என்பதுதான் அவர் வைத்த வாதமாகும். இப்படி ஆங்கிலேயர் முன் அவர் அளித்த வாதத்துக்கு அன்றே வெற்றி கிடைத்தது.

உண்மையின் உறைவிடத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் கோபால கிருஷ்ண கோகலே. அதற்கு உதாரணமாய் அவரது வாழ்வில் நடந்த எத்தனையோ சம்பவங்களைச் சொல்லலாம்... அதில், சிலவற்றை இப்போது காண்போம்.

''என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?'' 

தன்னுடையச் சிறுவயதில் நண்பர்களோடும், தன் சகோதரரோடும் விளையாடுவது வழக்கம். ஒருநாள் தம் அண்ணன் ஓர் அணியாகவும், தான் ஓர் அணியாகவும் பிரிந்து விளையாடிக்கொண்டிருந்தார் கோகலே. அப்போது, இவருடைய அணி வெற்றிபெறும் தருவாயில் இருந்தது. அந்த நேரத்தில் கோகலேயின் சகோதரரான கோவிந்தா, கோகலேயை அழைத்து... ''உன்னைவிடப் பெரியவன் நான்; என்னோடு நீ போட்டிபோடுவதால் உன் அணி வென்றுவிடும்போல் உள்ளது. எனது அணி தோற்றால் எனக்கு அவமானம்; உன் அண்ணன் தோற்பதை நீ விரும்புகிறாயா? எனவே, எனக்காக நீ கொஞ்சம் விட்டுக்கொடுத்து விளையாடு. என் அணி தானாக வெற்றிபெறும்'' என்றார். தன் சகோதரர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த கோகலே, ''அண்ணா... தாங்கள் கூறினால் இந்த விளையாட்டில் இருந்துகூட விலகிக்கொள்கிறேன். ஆனால், என்னை நம்பியுள்ள எனது குழுவினரை நான் எப்படி ஏமாற்றுவது... அது தவறல்லவா'' என்றார்.

உண்மையை ஒப்புக்கொண்ட கோகலே!

பால்ய பருவத்தில், அண்ணன் தம்பி இருவருமே ஒரே பள்ளியில் படித்துவந்தனர். அப்போது, கணக்கு ஒன்றைக் கொடுத்து... அதை வீட்டுப்பாடம் செய்துகொண்டு வரச் சொன்னார் வகுப்பாசிரியர். மறுநாள், கோகலேயைத் தவிர வேறு எவரும் அந்தக் கணக்கைச் செய்யவில்லை. ஆகையால், அவரைச் சிறப்பித்தார் வகுப்பாசிரியர். அப்போது, கோகலேயின் கண்களிலிருந்து நீர் கசிந்தது. காரணம் புரியாத ஆசிரியர், ''ஏன் கோபால் அழுகிறாய்? நீதான் கணக்குச் சரியாகப் போட்டிருக்கிறாயே'' என்றார். அதற்கு கோகலே, ''இல்லை... ஐயா! என்னை மன்னித்துவிடுங்கள். இந்தக் கணக்கை நான் மட்டும் தனியாகச் செய்யவில்லை. என் அண்ணன் உதவியுடன்தான் இதைச் செய்தேன்'' என்று உண்மையை ஒப்புக்கொண்ட கோகலேதான், பின்னாளில் உலகம் போற்றும் தேச பிதாவாக உயர்ந்த மகாத்மா காந்திக்குக் குருவாக இருந்தார்.

ரானடேவைத் தடுத்து நிறுத்தினார்!

விழா ஒன்றில், அரங்கத்துக்குள் வருபவர்களை டிக்கெட் பரிசோதனை செய்து அனுப்பும் பணியில் தீவிரமாக இருந்தார் கோகலே. அந்தச் சமயத்தில் டிக்கெட் கொண்டுவராமல் வந்த ஒருவரை வாசலிலேயே நிறுத்திவிட்டார் கோகலே. அவருடைய நேர்மையையும், திறமையையும் பற்றிக் கேள்விப்பட்டு மிகவும் வியந்துபோனார் டிக்கெட் கொண்டுவராதவர். பின்னர், அவரைப்பற்றி நன்கு அறிந்த ஒரு நண்பர், கோகலேயிடம் விளக்கிக் கூறினார். அதன்பின்பே, அவரை உள்ளே அனுப்பினார் கோகலே. உள்ளே சென்ற அந்த நபர் வேறு யாருமல்ல... குரு மகாதேவ் என்று அழைக்கப்பட்ட மகாதேவ கோவிந்த ரானடேதான். இவர்தான், கோகலேயின் குருவாக இருந்தார். இந்தச் சந்திப்புதான் அவர்களுக்குள் ஒரு நீண்டகால தொடர்பை ஏற்படுத்தியது.

''ஓய்வெடுக்க வேண்டிய இடம்!'' 

''என் தாய்நாடே!  நீ அரசியல், சமயம், இலக்கியம், விஞ்ஞானம், கலை, தொழில் என எல்லா வளமும் பெற்றுத் திகழவேண்டும். இதுவே என் மனப்பூர்வமான ஆசை'' என்று சொன்ன கோகலேயின் ஆசை இன்று ஓரளவு இந்தியாவில் நிறைவேறியிருந்தாலும், இதைவிட முழுதாக மாற வேண்டும்; முன்னேற வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது.

1912-ல் அமைக்கப்பட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் கோகலேயின் பணி மிகவும் முக்கியமானது. இந்தியர்கள் உயர்வான அரசுப் பணிகளுக்குத் தகுதி உடையவர்களா, இல்லையா என ஆராய்வது இந்தக் கமிஷனின் நோக்கம். இதற்கு வாக்குறுதி அளிக்க வந்தவர்களை விசாரிக்க வேண்டிய பணி கோகலேவுடையது. இதன் ஓயாத உழைப்பு, அவருக்கு உடல்நலக் குறைவை உண்டாக்கியது. மருத்துவர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுரை கூறினர். அவரோ, ''இது கர்ம பூமி; ஓய்வெடுக்க வேண்டிய இடம் வேறு எங்கோ உள்ளது'' என்று சொல்லி ஓய்வில்லாமல் உழைத்த அந்த கோகலேவை, அவர் சொன்ன அந்த ஓய்வெடுக்க வேண்டிய இடம் அவரை நிரந்தரமாக அழைத்துக்கொண்டது.

[ நன்றி : https://www.vikatan.com/oddities/miscellaneous/88774-gopal-krishna-gokhale-birthday-special-article ]

தொடர்புள்ள பதிவுகள்:

கோபால கிருஷ்ண கோகலே: பசுபதிவுகள்

கதம்பம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக