புதன், 24 ஜூன், 2020

1570. சங்கீத சங்கதிகள் - 237

இசை உலகின் மகாராஜா!
வீயெஸ்வி



ஜூன் 24மகாராஜபுரம் சந்தானத்தின் நினைவு தினம்.

அவர் டொராண்டோவிற்கு 81-இல்  முதன் முறை வந்தபோது, எங்கள் வீட்டில் அவரும், அவர் மனைவியும் தங்கிய போது நடந்தவை யாவும் மனத்தில் பசுமையாக இன்னும் இருக்கின்றன.

பல வருடங்களுக்கு முன், நான் சென்னையில் இருந்தபோது, நான் வானொலியில் அடிக்கடி   கேட்ட  அவருடைய ஒரு இசைத்தட்டு என் நினைவுக்கு வந்தது. எப்போதும் அவருடைய அந்தப் பாடல்தான் ஒலிபரப்பாகும்.  அது    " கந்தா குகா..." என்று தொடங்கும் ஒரு ராகமாலிகை.  ( அவர் டொராண்டோவிற்கு வந்தபோது அதை எழுதியவர் யாரெனக் கேட்டேன். அவருக்கும் தெரியாது. யாரோ ஒருவர் அவர் தந்தையிடம் கொடுத்தார் என்பது தான் அவர் நினைவு.)   அந்த  விருத்தத்தை டொராண்டோக்  கச்சேரியில்  பாட வேண்டினேன். பாடினார்,   முன்பு நான்  கேட்டவற்றிற்கு முற்றிலும் வேறுபட்ட  ராகங்கள் ( பிருந்தாவன சாரங்கா, மோகனம், தர்பாரி கானடா, பஸந்த் பஹார் )  கொண்ட ஓர் அற்புத  மாலையாக  அது இருந்தது!   கடைசி ராகம் முடித்த சூட்டில், தன் சாகித்யமான ஒரு பஸந்த் பஹார் தில்லானாவும் பாடிச் சபையினரை பிரமிக்க வைத்தார்.

 இன்னொரு முறை  டொராண்டோவில்  ஒரு 4 மணி நேரக் கச்சேரி.  நேயர் விருப்பங்கள் வந்து கொண்டே இருந்தன. பாடிக்கொண்டே போனார்.   சீட்டுகள் மேடைக்கு வருவது ஓய்வதாய் இருக்கவில்லை.

உடனே  பாடத் தொடங்கினார்: " விளையாட இது நேரமா? " ( டி.என்.பாலாவின் சாகித்யம்) ( ஷண்முகப்ரியா)

 சபையே அதிர்ந்தது கைதட்டல்களால்!

எங்கே எப்படி  எதைப் பாடவேண்டும் என்பதை அளந்து வைத்திருந்தார் சந்தானம்.


அவர் கார்விபத்தில் 92-இல்  அகாலமரணம் அடைந்த பின் விகடனில் வந்த அஞ்சலி.
======

"சங்கீத உலகத்துல நாலு தலை முறை எனக்குத் தெரியும். சந்தானம் மாதிரி இதுவரை யாரும் அத்தனை உசரத்துக்குப் போனதில்லே; அத் தனை பிரபலம் அடைந்ததில்லே!" என்றார் செம்மங்குடி.

"மகாராஜபுரம் சந்தானம் ஒரு சகாப்தம்! ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவிதத்தில் எவரெஸ்ட்டை யெல்லாம் தாண்டி ஒரு உயரத்துக்கு அவர் போய்விட்டார். இனிமே அப்படியொரு அபார சாதனையை யாராலும் நிகழ்த்தமுடியாது!" என்றார் லால்குடி.

ரசிகர்களின் நாடித்துடிப்பை நூறு சதவிகிதம் அறிந்து வைத்திருந்தார் மகாராஜபுரம். கர்னாடக சங்கீதக் கச்சேரிகளில் காலி நாற்காலிகள் மட்டுமே அதிகம் இருந்த ஒரு கால கட்டத்தில், புயலாக நுழைந்து அரங்கத்தில் கூட்டம் அலைமோதச் செய்த பெருமை சந்தானத்துக்கு உண்டு.

கடைசி கச்சேரி...

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள மஞ்சக்குடி, சுவாமி தயானந்தா சரஸ்வதியின் பிறந்த ஊர். அங்கு இருக்கும் தயானந்தா மேல்நிலைப் பள்ளியில், சென்ற மாதம் 23-ம் தேதி, மாலை 4 மணி அளவில் சந்தானத்தின் கச்சேரி ஏற்பாடாகி யிருந்தது.

கச்சேரியின் முடிவில் அன்று 'மங்களம்' பாடாமல், 'வாழிய செந்தமிழ்' பாடலைப் பாடினாராம் சந்தானம். 'வந்தே மாதரம்' என்று அந்த (கடைசி) கச்சேரியை முடித் துக் கொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் மஞ்சக் குடியிலிருக்கும் தயானந்தாவின் அம்மாவைச் சந்தித்து வணங்கிவிட்டு கும்பகோணம் செல்லும் வழியில் உப்பிலியப்பன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார் சந்தானம். சுவாமி தரிசனம் முடிந்ததும், அங்கு தரப் பட்ட புளியோதரை பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, ஓட்டல் திரும்பி யிருக்கிறார். பிறகு, மெட்ராஸ் பயணம்; அதுவே அவரது இறுதிப் பயணமானது!

தன் தந்தையிடம் பாட்டு கற்றுக் கொள்ள வந்த ஞானத்தைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண் டவர் சந்தானம். இப்போது, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஞானத்துக்குச் சென்ற ஞாயிறன்று காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. விபத்துக்குப் பிறகு, முழு நினைவு இன்னும் திரும்பவில்லை.

"எங்கோ பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலில் அடிபட்டிருப்பதாகவே அம்மா நினைத்துக்கொண்டு இருக்கிறார். 'அவர் எப்படி இருக்கார்? வேளாவேளைக்கு அவருக்கு வேண்டியதெல்லாம் கொடுங்க' என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்" என்றார் மகன் ராமச்சந்திரன். விபத்து நடந்தது ஞானத்துக்கு நினைவில்லை. கணவர் இறந்து போய்விட்டது இன்னமும் இவருக்குத் தெரியாது.
====
 [ நன்றி : விகடன் ] 

 தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக