ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

1602. கதம்பம் - 28

மகான் அரவிந்தர்
க.புவனேஷ்வரி



ஆகஸ்ட் 15. அரவிந்தரின் பிறந்த தினம்.
=====


தேச விடுதலைக்கும் ஆன்ம விடுதலைக்கும் தன்னையே அர்ப்பணித்த மகான் அரவிந்தர்.


1872-ம் ஆண்டு இந்திய தேசிய வரலாற்றிலும் சரி, இந்திய ஆன்மிக வரலாற்றிலும் சரி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. ஆம். அந்த ஆண்டுதான் சுதந்திரப் போராட்ட வீரராக, கவிஞராக, 'சாவித்திரி' என்னும் அற்புத காவியத்தை வடித்த எழுத்தாளராக, அனைத்துக்கும் மேலாக மாபெரும் ஆன்மிக ஞானியாக என்று பன்முகம் கொண்டு திகழ்ந்த மகான் அரவிந்தர், இன்றைய கொல்கத்தா நகரில் ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள் கிருஷ்ண தன கோஷ் - ஸ்வர்ணலதா தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

பெற்றோர் அவருக்கு அரவிந்தர் என்று பெயர் சூட்டினர். அரவிந்தம் என்றால், 'அன்றலர்ந்த தாமரை' என்று பெயர்.

மலர்ந்த தாமரையைப் போன்றே எப்போதும் மலர்ந்த முகத்துடன் திகழ்ந்த அரவிந்தர்-

பிறந்த குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல; அவர் இறைவனுக்குச் சொந்தமானவர்.

நன்கு பழுத்த நிலையில் ஓட்டுக்குள் ஒட்டாமல் இருக்குமே விளாம்பழம், அந்த விளாம்பழம் போன்றதுதான் அரவிந்தரின் வாழ்க்கை.

இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர் அவர்;

இறைவனால் இயக்கப்பட்டவர் அவர்!

அவர் தொடக்கக் கல்வியை டார்ஜிலிங்கில் படித்தார். பின்னர் உயர்கல்விக்காக சகோதரர்களோடு இங்கிலாந்து சென்றார். கேம்ப்ரிட்ஜில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்டிருந்தார்.

1893-ம் ஆண்டு- இதுவும் இந்திய தேசிய வரலாற்றிலும் சரி, ஆன்மிக வரலாற்றிலும் சரி பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டுதான்.

ஆம்-,

இந்த ஆண்டுதான் இந்து தர்மத்தின் மகிமைகளை, புண்ணிய பாரதத்தின் தொன்மைச் சிறப்பினை மேலை நாடுகள் எல்லாம் அறியும்படிச் செய்த ஜகத்குரு சுவாமி விவேகானந்தர் சிகாகோ பயணமானார்;

இதே வருடத்தில்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குக் காரணமாக அமைந்த மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம் நடைபெற்றது.

இந்த இரண்டு பயணங்களும் இந்தியாவில் இருந்து தொடங்கியது என்றால், மற்றொரு பயணம் இந்தியாவில் முடிந்தது.

இதே ஆண்டுதான் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்த அரவிந்தர் தாய்த்திருநாட்டுக்குத் திரும்பினார்.

இந்தியா திரும்பியவர் பரோடா சமஸ்தானம் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றினார். பிறகு கொல்கத்தாவில் இருந்த வங்காள தேசியக் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது ஏற்பட்ட வங்கப் பிரிவினைதான் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தது. அதன் காரணமாக இரண்டு முறை கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் செல்லவும் நேர்ந்தது.

சிறைவாழ்க்கைதான் அவரை யோக நெறிக்குத் திருப்பியது. சுதந்திரம் என்பதை அரசியல் நோக்கில் மட்டுமில்லாமல், ஆன்மிக நோக்கிலும் சிந்தித்தார். இறைவனின் ஆட்சியை பூவுலகில் நிலைபெறச் செய்வதற்கு விடுதலையே முதல் படி என்று நினைத்தவர், சிறையில் இருந்து விடுதலை அடைந்த பிறகு, அரசியல் ஈடுபாடுகளைத் தவிர்த்துக்கொண்டு, யோக நெறியில் முழுக் கவனமும் செலுத்தினார்.

ஆனாலும், 1910-ல் ஒரு கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. அவரைக் கைதுசெய்யவும் உத்தரவு பிறந்தது. கைதில் இருந்து தப்பிக்க அரவிந்தர் ஏப்ரல் மாதம் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு வந்தார்.

இவ்வாறாகத் தன்னை முதலில் விடுதலைப் போராட்ட வீரராக அடையாளப் படுத்திக்கொண்ட அரவிந்தர், ஆங்கிலேய அரசின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, புதுச்சேரிக்கு வந்து சேர்ந்ததும், ஓர் ஆசிரமம் அமைத்து தம்மை யோகநெறியில் ஈடுபடுத்திக்கொண்டு, தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வதிலும், ஆன்மிக சாதனைகளில் ஈடுபடுத்திக் கொள்வதிலும் ஈடுபட்டார்.

இந்த ஆசிரமத்தில்தான் ஶ்ரீஅன்னை அரவிந்தரைச் சந்தித்தார். அரவிந்தரின் ஆன்மிக சாதனைகளுக்கு உற்ற துணையாக இருந்தார்.

இந்த ஆசிரமத்தில்தான் அரவிந்தரை பாரதியார் சந்தித்தார்.

இந்த ஆசிரமத்தில் இருந்தபடிதான் அரவிந்தர் ஒப்பற்ற காவியமான சாவித்திரி காவியத்தைப் படைத்தார்.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வந்த 'சாவித்திரி காவிய'ம் 1950-ம் ஆண்டுதான் நிறைவு பெற்றது. அதே ஆண்டுதான் அரவிந்தரின் மகா சமாதியும் நிகழ்ந்தது.

தேச விடுதலைக்காக மட்டுமில்லாமல், ஆன்ம விடுதலைக்காகவும் பாடுபட்ட மகான் அரவிந்தரின் அவதார தினத்தில்தான் இந்தியத் திருநாடும் சுதந்திரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

'எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; எவரையும் ஒதுக்காதே; உனக்கான பணிகளை ஊக்கத்துடன் செய்''

என்ற அரவிந்தரின் அமுத மொழியின்படி நாம் நம்முடைய பணிகளைத் தொடர்வோம்.


[   நன்றி: https://www.vikatan.com/spiritual/temples/99154-sri-aurobindo-history-and-glory ]


தொடர்புள்ள பதிவுகள்:

அரவிந்தர்: பசுபதிவுகள் 

அரவிந்தர்; விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக