வெள்ளி, 2 அக்டோபர், 2020

1645. சீலர் காந்தி அண்ணல் : கவிதை

சீலர் காந்தி அண்ணல்

பசுபதி

  


நேசர் போல்நு ழைந்து நாட்டில்

 . . நின்று போன ஆட்சியைப்

பூச லின்றி அன்பு வழியில்
. . போக வைத்த புண்ணியர்;
தேச மென்சு வாச மென்று
. . சேவை செய்த தியாகிநற்
சீலர் காந்தி அண்ணல் முன்பென்
. . சென்னி என்றும் தாழுமே       (1)


இந்தி யாவின் விடுத லைக்கு,
. . இம்மை வாழ்வை ஈந்தவர்;
எந்த சமய மென்றில் லாமல்
. . இறையின் உண்மை ஏற்றவர்;
சிந்தை முழுதும் வாய்மை என்ற
. . செஞ்சொல் தீபம் கொண்டவர்;
சீலர் காந்தி அண்ணல் முன்பென்
. . சென்னி என்றும் தாழுமே       (2)

எள்ளி நின்ற ஆங்கி லேயர்
. . இதயம் நிற்க வைத்தவர்;
வெள்ளை யான புன்சி ரிப்பு
. . மிளிரும் வதன சந்திரர்;
தெள்ளு தமிழின் வள்ளு வத்தின்
. . தெட்பம் நன்க றிந்தவர் ;
சீலர் காந்தி அண்ணல் முன்பென்
. . சென்னி என்றும் தாழுமே        (3)

[ தினமணியில் 2016-இல் வந்த கவிதை ] 

[ மூலம்: சில்பி, நகல்: பசுபதி]



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக