செவ்வாய், 6 அக்டோபர், 2020

1649. கொத்தமங்கலம் சுப்பு - 30

'கொத்தமங்கலம் சுப்பு'வின் நூல்: “மருக்கொழுந்து": அணிந்துரை

பசுபதி 




பத்மஸ்ரீ, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் 

மண்வாசனை கமழும் கவிதைகளை ரசிகமணி டி.கே.சி. , 

பேராசிரியர் கல்கி போன்றோர் ரசித்து, அந்த 

நடையிலேயே தொடர்ந்து எழுதச் சொன்னார்கள் என்பதை 

நாடு அறியும். அப்படிப்பட்ட மண்மணமும் , தமிழ்மரபின்  

வளமும்  சேர்ந்த கவிதைத் தொகுப்பே “மருக்கொழுந்து”.  

இந்தத் தலைப்பைக் கவிஞர் அவர்களே பல வருடங்களுக்கு 

முன்பு தன் நூலுக்குத் தேர்ந்தெடுத்தார் என்பதும் 

தொகுப்புக்கு ஒரு தனிச் சுவையைச் சேர்க்கிறது. இப்போது 

அவருடைய குடும்பத்தினர் இந்தத் தலைப்பில் ஒரு நூலைக் 

கொணர்வதில் அவருடைய ஆன்மா மிகுந்த திருப்தி 

அடையும் என்பதில் ஐயமில்லை. 





“மருக்கொழுந்து” என்ற கொத்தமங்கலம் சுப்பு 

அவர்களின்  கவிதைத் தொகுப்பு இரண்டு தொகுதிகளாய்

 வந்துள்ளது. முதல் தொகுதியில் பண்டிகை, அறிவுரை,

 காதல், நாட்டு நடப்பு, நாட்டுப் பற்று என்ற தலைப்புகளில்

 200-க்கு மேற்பட்ட பாடல்கள் உள்ளன. இரண்டாம்

 தொகுதியில் தெய்வீகம், இவர்களைப் பற்றி,

 இவைகளைப் பற்றி    என்ற தலைப்புகளில் 160-க்கு

 மேற்பட்ட  கவிதைகள்உள்ளன.


கொத்தமங்கலம் சுப்பு அவர்களைத் தமிழ் கூறும் 

நல்லுலகம் நன்றாய் அறியும். கவிஞர், எழுத்தாளர்,

 திரைப்படப் பாடலாசிரியர் திரைப்படக்

 கதை  வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர்,

 நடிகர்,கதாகாலக்ஷேப விற்பன்னர், வில்லுப் 

பாட்டிசைக்  கலைஞர், பத்திரிகையாளர், ரசிகர், 

கவியரங்கத் தலைவர் என்று பன்முகங்களில் பிரகாசித்த 

மேதை. மிகச்சிலருக்கே இருக்கக்கூடிய இத்தகைய 

அனுபவங்கள் அவருடைய கவிதைகளில் தோய்ந்துள்ள 

உணர்ச்சிகளுக்கும், கற்பனைக்கும் நீர் வார்த்துள்ளன 

என்றால் மிகையாகாது. 


நாட்டுப் பாடல்களுக்குத் தமிழில் நீண்ட பாரம்பரியம் 

உண்டு. வாய்மொழி இலக்கியமாய், நாடோடிப் 

பாடல்களாய்ப் பரிமளித்தவை இவை. பெரும்பாலும் எளிய 

தமிழில், தெம்மாங்கு போன்ற கவர்ச்சியான இசையுடன் 

விளங்கியிருக்கும். கி.வா.ஜகந்நாதன், வானமாமலை, 

ஆறு.இராமநாதன் போன்ற அறிஞர்கள் இவற்றின் 

பலவகைகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள்  . 

உதாரணமாக, 

தெய்வங்கள், மழையும் பஞ்சமும், தாலாட்டு, விளையாட்டு, 

காதல், திருமணம், குடும்பம், சமூகம், உழவும் தொழிலும், 

ஒப்பாரி என்பது அந்த வகைகளின் ஒரு பட்டியல். இவற்றில் 

எல்லாம் கவிஞர் சுப்புவும் பாடியுள்ளார். மேலும் அவர் 

காலத்திற்கேற்ப எழுந்த பல புதிய பிரச்சினைகளை, 

பொருட்களங்களை, மனிதர்களை மையப்படுத்தியும் 

பாடியுள்ளார். சித்தர்களின் கருத்துகளை வெளிப்படுத்திய 

‘சிந்து’ என்ற எளிய பாடல் வகையை  பாரதி புதிய 

கருத்துகளுக்குப் பயன்படுத்தி , “சிந்துக்குத் தந்தை” என்று 

புகழ்பெற்றார். அதைப் போலவே, சுப்புவும் தமிழ்நாட்டுப் 

பாடல் இயற்றினோர் மரபின் ஒரு தொடர்ச்சியாக 

விளங்குவது மட்டுமன்றி, புதிய கருத்துகளுக்கும் அந்தப் 

பாடல் வகையைப் பயன்படுத்தித் தற்காலத்திற்கேற்பத் 

தனக்கே உரிய ஒரு தனிப்பாணியில் எழுந்த ஓர் 

இலக்கியத்தை நம்முன் வைத்துள்ளார். அதனால், கவிஞர் 

சுப்புவை “ நாட்டுப்பாடல் இலக்கியத் தந்தை” என்றே 

கூறலாம். மேலும், பாரதியைப் போலவே கவிஞர் சுப்புவும் 

தெய்வீகம், நாட்டுப் பற்று, தமிழ்மொழி என்ற மூன்றுமே 

தன் 

மூச்சாய் இருந்தார் என்பது இந்த நூலிலிருந்து நன்கு 

விளங்குகிறது.    


இந்த நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு காலகட்டங்களில் 

எழுதப்பட்டுள்ளன என்பதை மனத்தில் வைத்துக் கொண்டு  

வரலாற்று நோக்குடன் இப்பாடல்களைப் படிக்கும்போது 

இவற்றின் கருத்தோட்டத்தையும், சமூகச் 

சூழ்நிலைக்கேற்பக் கொட்டும் கவிஞரின் கற்பனை, 

உணர்ச்சி ஊற்றுகளையும் மேலும் ரசிக்க முடிகிறது., 

உதாரணமாக, 1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ 

என்ற விண்கலத்தில் லைகா என்ற நாயை அனுப்பியது ; 

இது 

யாவரும் அறிந்த விஷயம். ஆனால், இதைப் பற்றி, “ 

சந்திரனே, சந்திரனே, சௌக்கியமா’ என்ற பாடலில் புதிய 

கண்ணோட்டத்தில் லைகா, ஸ்டாலின் போன்றோர் 

பேசுவதுபோல் பேசி


 நாயைப்பறக்க விட்டபோதே நன்றிபறந்து போச்சுடா

 நாம்செய்த பாவம் நம்மை நாடுமறந்து   போச்சுடா  

மாயப்ரபஞ்மென் றுரைத்தவாக்குப் பலிச்சுப்போச்சுடா

  மானத்திலே ஏறினாலும் மனிசன் மனிசன்தானடா   


 என்று நம்மைச் சாடுகிறார்.  


1935 முதல் 1973 வரை , ‘சக்தி, ஹனுமான், பாரதமணி,  

அமுதசுரபி, சிவாஜி, ஆனந்த விகடன், கல்கி போன்ற 

இதழ்கள், வானொலி, கவியரங்கங்கள் என்று பல 

தளங்களில் வலம் வந்தவை இந்தப் பாடல்கள். சிறிய 

பாடல்கள் மட்டுமன்றி. கருணையின் கதை ( 

அங்குலிமாலன் 

கதை) , அக்கூ அக்கூ அக்கூ, தெய்வச்சிலை, நந்தன் வீட்டில் 

விஷ்ணு, பொற்பனையான் கோயில்,  போன்ற  

அருமையான நீண்ட கதைப்பாடல்களும் நூலில் உள்ளன. 

”இவர்களைப் பற்றி” என்ற பகுதியில் காந்தி, நேரு, சுபாஷ் 

சந்திர போஸ், ராஜாஜி, பாரதி, ம.பொ.சி, காமராஜர், ஜீவா, 

கருணாநிதி, அண்ணாதுரை போன்ற தலைவர்களைப் 

பற்றிய கவிதைகள் நாட்டின் வரலாற்றை 

நினைவூட்டுகின்றன.


பேராசிரியர் கல்கியிடம் பெருமதிப்புக் கொண்டவர் கவிஞர் . 

கல்கி மறைந்தவுடன் ‘கல்கி’; இதழில் அவர் எழுதிய 

உணர்ச்சிமயக் கவிதை நம் உள்ளத்தை உருக்குகிறது.  

மேலும் ”கல்கிதமி”ழின் சிறப்பை 


    சொல்லழகு பொருளழகு சோர்வில்லா நீர்வீழ்ச்சி

    நல்லதையே தான்எழுத நாணமில்லா நல்லகுணம்

    எல்லாரும் படிச்சிடலாம் இலக்கணமும் குறைவில்லை

    கல்லாலின் கீழமர்ந்த கடவுள்மொழி கல்கிதமிழ்


என்று துல்லியமாய் எடை போடுகிறார்.    


குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் என்று எல்லா 

வயதினரும் ரசிக்கக் கூடிய பாடல்கள் உள்ளன. ‘அரிச்சுவடி’ 

என்ற குழந்தைகளுக்கு உயிர்எழுத்துகளைக் கற்றுக் 

கொடுக்கிறார் ஒரு பாடலில்.

அதில் அ,ஆ, இ – எழுத்துகளுக்கு அப்பன், ஆத்தாள், இட்லி 

என்று பாடிக்கொண்டு போகிறவர் 


  இட்டிலியில் மொய்க்கும் ஈக்கு முதல் எழுத்து 

      ஈயன்னா ஈயன்னா ஈயன்னா ‘ 


 என்று பாடும்போது , நாமும் குழந்தைகளுடன் சேர்ந்து ‘ஈ’ 

என்று சிரிக்கிறோம். 


நாட்டுப் பாடல்களுக்கே உரிய பல மெட்டுகளில் 

மிளிர்கிறது நூல்.

வில்லுப்பாட்டுக் கலைஞரின் ‘வில்லுப்பாட்டு’ என்ற 

பாடலின் துள்ளும் நடையைப் பாருங்கள்.


   வில்லெடுத்தா  தம்பி வில்லெடுத்தா வெற்றி

      வேலன் புகழ்பாட வில்லெடுத்தா 


 முருகபக்தரான கவிஞரின் “ அறுபடை வீட்டு வழிநடைப் 

பாட்டு” 

கணவன்-மனைவி உரையாடலாக ஆனந்தக் களிப்பு 

மெட்டில் அமைகிறது.! 


   மனைவி:  சண்முகம் ஆறுபடை வீடு – கந்த 

               சட்டிக்கு போய்வா காசுபணம் தேடு

   கணவன்:  சிந்தனை ஏண்டி ரயிலேறு – நம்ம 

               செலவுக்கு வேண்டியதை சாமி தருவாரு 


பல பிரபலமான பாடல்கள் இத்தொகுதிகளில் உள்ளன 

என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இவற்றுள் 

அவருடைய போர்சார்ந்த பாடல்கள் மிகப் பிரசித்தி 

பெற்றவை, அவற்றுள் , 1945 இல் இரண்டாம் உலகப் போர் 

முடிந்த பின்னர் அவர் விகடன் தீபாவளி மலரில் எழுதிய 

ஒரு 

பாடல் எல்லோர் மனத்திலும் இன்றும் நிலைத்து உயர்ந்து 

நிற்கும்,  “ பொறந்த நாட்டை நினைச்சுப் பார்த்து புறப்பட்டு 

வாங்க” என்ற ஒரு ‘கோபுர’க் கவிதை. இரண்டாம் உலகப் 

போர் முடிந்துவிட்டது, பல வருடங்களாய் வெளிநாட்டில் 

இருந்த சிப்பாய்களை நாட்டுக்குத் திரும்பி வந்து நாட்டுக்கு 

உழைக்கச் சொல்லி வேண்டுவதுபோல் அமைந்த கவிதை 

இது. 


இந்தியச் சிப்பாய்களின் வீரம், கடமை உணர்ச்சி இவற்றில் 

பெருமை கொள்ளும் அதே நேரத்தில் , சிப்பாயின் 

குடும்பத்தினரும், அண்டை அயலும் -- ஏன், மாடு, 

கன்றுகளும் தாம் -- அவனைப் பார்க்காமல் ஏங்கும் 

சித்திரம் நம்மை நெகிழவைக்கிறது. 

போருக்குப் போகும்போது தொட்டிலில் இருந்த குழந்தை

 --இப்போதோ பள்ளிக்குச் 

செல்லும் பிள்ளை -- ‘அப்பன் எங்கே’ என்று அம்மாவைக் 

கேட்பது, தந்திதபால்காரன் வந்தால் ‘எங்கே துயரச் செய்தி 

வந்துவிடுமோ’ என்று தாலியைத் தொட்டுப் பயப்படும் 

மனைவி, சிப்பாய்க்குப் பேர் இட்ட கிழவி தன் கடைசிக் 

காலத்தில் அவனைப் பார்க்கத் துடிப்பது ..போன்ற பல 

மனமுருக்கும் காட்சிகள் நிறைந்த ‘நிறைகுடம்’ இந்தக் 

கவிதை. 


பெத்துவளத்துப் பேருமிட்ட

   பெரிய நாச்சியா

பித்துப்பிடிச்சு ராப்பகலா

   பேத்தி நிக்கிறா

முத்தைஉதுத்துப் பேந்தபேந்த

   முளிச்சுப் பாக்குறா

முகத்தைக்காட்ட வேணுமிடா

   வீட்டுக்கு வாங்க.


தந்திதவால் காரன்வந்தா

   தவிதவிக் கிறா

தாலிச்சரட்ட பாத்துக்கண்ணு

   தண்ணி வடிக்கிறா

அந்திப்பட்டா ஒருயுகமா

   அவ துடிக்கிறா

ஆறுவருச மாச்சுதப்பா

   வீட்டுக்கு வாங்க.


இப்படி நம்மைக் கண்கலங்க வைக்கும் கவிஞர் இன்னொரு 

பாடலில் சிப்பாய்க்குத் தன் மனைவியின் கடிதத்தால் 

ஏற்படும் மகிழ்வையும் விவரிக்கிறார். பின்னர் 1963-இல் 

சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து வானொலியில் ஒலிபரப்பான “ 

ஊரைக் காக்கப் புறப்படுங்க: சீன வெடி’ என்ற பாடல்.


          “ தாளம் தட்டு தம்பி தாளம் தட்டு – சீனன்

              தவிடு பொடியாகத் தாளம் தட்டு 

            

என்று வீரரச நடைபோடுகிறது.


முடிவாக, ஆனந்த விகடன் இதழ் 1974-இல்  : “திரையுலகில் 

பணியாற்றிய போதும், பத்திரிகைகளில் எழுதிய 

போதும், கவியரங்குகளில் பங்கு பெற்றபோதும் சுப்பு 

தம் முத்திரையைப் பதிக்காமல் விட்டதில்லை. தமது 

பாடல்களில், எழுத்தில், பேச்சில் தேசிய உணர்வையும், 

தமிழ்ப்பற்றையும், கிராமிய மணத்தையும், 

நகைச்சுவையையும் கலந்து நம் இதயத்தைத் தொடும் 

ஓர் அபூர்வ பாணியை உருவாக்கியவர் அவர். “ என்று 

எழுதியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே கருத்து, 

கற்பனை, உணர்ச்சி, இசை என்று யாவும் கலந்து நாட்டுப் 

பாடல் இலக்கியத்தில் தனித்துவம் ஒளிரும் 

தமிழ்மணத்துடன் விளங்கும் ” மருக்கொழுந்தை”த்  

தமிழ்கூறும் நல்லுலகம் விரும்பி வரவேற்கும் என்பதில் 

ஐயமில்லை. 


  மண்ணின் நறுமணமும் 

                 மரபுதந்த நல்லுரமும் 

 வண்டமிழில் வளமுடனே 

                மலர்ந்துள்ள மருக்கொழுந்”தில்

  பண்பட்ட தன்மனத்தில் 

                 பயிரான எண்ணங்களை

  வண்ணமயப் பாடல்களாய் 

                வழங்கியுள்ளார் கவிசுப்பு.

  ஒண்ணொளி  மஞ்சரியாய் 

               உயுர்ந்தோங்கும்  இந்நூலும்

  எண்டிசையில்  வலம்வரும்  

               எனச்சொல்லி  வாழ்த்துவனே!


                   சு.பசுபதி 

        தகைசார் வாழ்நாள் பேராசிரியர் ( Professor Emeritus)

        டொராண்டோ பல்கலைக் கழகம், டொராண்டோ

         கனடா.  

===== 

*மருக்கொழுந்து - கொத்தமங்கலம் சுப்பு கவிதைகள்.* 

தொகுதி 1, விலை ரூ 400, தொகுதி 2, விலை ரூ400, 

வெளியீடு: 

மீனாட்சி பதிப்பகம், 

கொத்தமங்கலம் சுப்பு இல்லம், 

185/ 107. அவ்வை சண்முகம் சாலை, 

ராயப்பேட்டை, சென்னை - 600 014. 

தொலைபேசி: 044- 2811 6938, 2811 1992, 281 6440



( 4 அக்டோபர், 2020 - 'திண்ணை' இதழில் வெளியான 

கட்டுரை ]



[ நன்றி: திண்ணை : http://puthu.thinnai.com/?p=40981  }


தொடர்புள்ள பதிவுகள்:


கொத்தமங்கலம் சுப்பு: பசுபதிவுகள்


பசுபடைப்புகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக