தி.ஜானகிராமன் - ஒரு அஞ்சலி
அசோகமித்திரன்
நவம்பர் 18. தி.ஜா.வின் நினைவு தினம். அசோகமித்திரன் கல்கியில் எழுதிய அஞ்சலி இதோ .
[ நன்றி: கல்கி ]
[ If you have trouble reading some of the images, right click on each such image , choose 'open image in a new tab' , then in the new tab , use browser's zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read. ]
தொடர்புள்ள பதிவுகள்:
தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன் - ஒரு அஞ்சலி
பதிலளிநீக்குஅசோகமித்திரன்
(கல்கி - 05 டிசம்பர் 1982)
ஒருவர் அந்தரங்கமாகப் பழகி விட்டால் அவர் பேராற்றல் படைத்தவரானதும் அவருடைய மனிதப் பண்புகள் தான் முதலில் நினைவுக்கு வருகிறது.
வியாழன் நவம்பர் 18 பிற்பகல் சுமார் ஒரு மணிக்கு தி. ஜானகிராமன் இறந்துட்டார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தபோது அவர் எனக்காக வெயிலில் வாடி வதங்கிய தருணங்கள்தான் உடனே மனதில் தோன்றின.
ஏனோ நாங்கள் இருவரும் நெடு நேரம் பேசியதெல்லாம் நல்ல வெயில் நேரமாக இருந்திருக்கிறது. அவர் டில்லிக்குக் குடிபோகும் முன் சென்னையில் வசித்த நாட்களில் சைக்கிளில்தான் எங்கும் போவார். வருவார்.
இருபது வருடங்களுக்கு மேலாகிறது - என்னுடைய கதை முதன் முதலாக ‘இல்லஸ்டிரேடட் வீக்லி’யில் வெளியாகியிருந்தது. ஜானகிராமன் வழியில் என்னைப் பார்த்து சைக்கிளை நிறுத்தினார். நல்ல புரட்டாசி வெய்யிலைப் பொருட்படுத்தாமல் ஒரு மணி நேரம் பேசி கொண்டிருந்தோம். அவருக்கு மிகவும் பெருமை. சந்தோஷம்.
இன்னொரு சித்திரைப் பகல், கடுமையான வெயில்.
பதிலளிநீக்கு"சிதம்பர சுப்பிரமணியத்துக்கு உடம்பு சரியில்லையாம். போய்ப் பார்த்துவிட்டு வருவோம்" என்றார்.அவர் வைத்திருந்த முகவரிக்குப் போனோம். அங்கு சிதம்பர சுப்பிரமணியன் இல்லை. அடுத்த வீட்டுக்குப் போனோம். அங்கும் இல்லை. ஒவ்வொரு வீடாக அந்தத் தெருவில் இருந்த அனைத்திலும் விசாரித்தோம். எழுத்தாளர் சிதம்பர சுப்பிரமணியன் பற்றி கேள்விப்பட்டது கிடையாது. அன்று மாலையே ஜானகிராமன் டில்லி திரும்ப வேண்டியிருந்தது. ஒரு வாரம் பொருத்துச் சரியான முகவரி தெரிந்து கொண்டு நான் சிதம்பர சுப்பிரமணியன் வீட்டுக்கும் போனேன். அந்தத் தெருவே வேறு.
அவரை எனக்குப் பார்க்க வாய்ப்பில்லை. அன்று அவர் காலமாகி விட்டிருந்தார்.
இந்தத் தீபாவளிக்கு மறுநாள் நானும் எழுத்தாளர் ராஜரங்கனும் ஜானகிராமனைப் பார்க்கப் போயிருந்தோம். அவர் வீட்டில் இல்லை, ஆஸ்பத்திரியில் சேர்த்திருத் தார்கள். நெருக்கடி ஒன்றும் இல்லை, சில பரிசோதனைகளை ஒழுங்காகச் செய்து பார்க்கத்தான்….
நல்ல வெயில், இப்போது சிரமப்படுத்த வேண்டாம். ஒரு மாலைப் பொழுதில் போய்ப் பார்க்கலாம் என்று திரும்பி வந்து விட்டோம். அந்த மாலை வருவதற்குள் அவர் போய்விட்டார்.
ஜானகிராமனின் கலையுணர்வு, அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் எல்லாருக்கும் தெரியக் கிடைக்கும். ஆனால் சாதாரண அன்றாட்ப் பேச்சு வார்த்தைகளிலும் செய்கைகளிலும் கூட அவருடைய மென்மையான, பண்பட்ட தன்மை அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும்.
பதிலளிநீக்குஅவருக்கு யாரையும் வெறுக்க முடிந்திருக்க முடியாது. அதனால்தான் அவருடைய படைப்புக்களில் முற்றிலும் தீய பாத்திரம் என்று ஒன்று கிடையாது. குரோதமும் துவேஷமும் எப்போதோ வெளிப்படச் சந்தர்ப்பச் சூழ்நிலைதான் காரணம்.
ஜானகிராமன் நிறைய எழுதியும் சாவு அவருடைய கவனத்தை அதிகம் பெற்றதில்லை. மனித சிருஷ்டியின் நிரந்தரத் தன்மைதான் அவருள் நிறைந்திருக்க வேண்டும்.
தஞ்சாவூர் மண் வாசனையைத் தமிழ் உரைநடையில் வடித்தவர் என்று எல்லாரும் அவரை அடையாளம் கூறுகிறார்கள, அதைவிட தஞ்சாவூர் போன்ற நீண்ட பாரம்பரியம் உடைய கலாசாரத்தின் பிரதிநிதிகள் சமரசங்கள் மிகுந்த இன்றைய வாழ்க்கையில் தங்களைப் பொருத்திக்கொள்ள முயலும் ஆழ்ந்த துன்பத்தைத்தான் அவர் பிரதிபலிக்க முயற்சி செய்தார் என்பதுதான் பொருத்தமானது.
ஜானகிராமனின் பெண் பாத்திரங்கள் பெரிதும் விவாதிக்கப்பட்டவை. ஜானகிராமனின் மகோன்னதப் பாத்திரங்களும் பெண்கள் தான். அவருடைய சிறந்த படைப் புகளாக 'மோக முள்’ளையும் ‘அம்மா வந்தாளை’யும் கூறுகிறார்கள். ஆனால் அவருடைய பாத்திரங்கள் பரிபூரணமாக வெளிப்பட்ட நாவல் 'உயிர்த் தேன்' என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஜானகிராமன் எழுதின நாடகங்கள் (நாலு வேலி நிலம், வடிவேலு வாத்தியார், டாக்டருக்கு மருந்து) எஸ். வி. சகஸ்ரநாமத்திற்காக அவருடைய உந்துதலில் எழுதப்பட்டவை. ஜானகிராமனோடு நெருங்கிப் பழக எனக்கு வாய்ப்பு ஏற்பட்டதே சகஸ்ரநாமம் வீட்டில் தான், கலாசாகரம் ராஜகோபால், என். வி. ராஜாமணி, கு. அழகிரிசாமி, பி. எஸ். ராமையா, முகவை ராஜமாணிக்கம் என ஒரு தமிழ்க் கலை இலக்கியத்திற்கு சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் மையமாக இருந்தது.
யாரையும் உற்சாகப்படுத்துவது ஜானகிராமனின் இயல்பு. அதனாலேயே ஒவ்வொரு தலைமுறையிலும் அவருக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் ரஷ்ய மொழியிலும் அவருடைய நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு ரசிக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பல நாடுகளில் இலக்கியக் குழுவினர் மதிக்கும் தமிழ் எழுத்தாளர்களில் அவர் தனி இடம் பெற்றவர்.
சாகித்ய அகாடமி பரிசு ஜானகிராமனுக்கு அளிக்கப்பட்டது பற்றி எல்லா அரசு செய்தி ஸ்தாபனங்களும் குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால் அது அவருக்கு மறுக்கப்பட்ட பல ஆண்டுகளில் அகாடமி குழுவினரின் விவாதங்கள் யாராவது வெளிப்படுத்த முடியுமானால் பல விசித்திரமான தகவல்கள் தெரிய வரலாம்.
மரணம் எப்போது தேர்ந்தாலும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஜானகிராமன் மறைவு பற்றி கேள்விப்பட்டவுடன் நானும் ஐய்யய்யோ என்றுதான் கத்தினேன். வெயில் திடிரென்று சகிக்க முடியாத தீவிரத்தை அடைந்த மாதிரி இருந்தது. ஜானகிராமன் கடைசியாக சுவாசம் விட்டு அமைதி அடைந்தபோதும் நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது.
நவம்பர் 19, 1982
- அசோகமித்திரன்