வியாழன், 21 ஜூலை, 2022

2183. அகிலன் - 6

என் முதல் கதை

அகிலன்

'உமா' இதழில் வந்த கட்டுரை இது.
======

பதினெட்டு வருடங்களுக்கு முன்னால் நான் ஒன்பதாவது வகுப்பில் படிக்கும் போது எழுதிய முதல் கதை இது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் வெளியான கல்லூரிச் சஞ்சிகையில் எழுதினேன். கதையின் நகல் இப்போது கைவசம் இல்லை. கதைச் சுருக்கம் நினைவில் இருக்கிறது.

இதுதான் கதை : -

பெற்றோரற்ற ஓர் ஏழைச் சிறுவன் நகரத்துப் பள்ளிக் கூடத்தில் படிக்கிறான். பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் அவன் தமக்கை அவனை மிகவும் சிரமப்பட்டுப் படிக்க வைக்கிறாள். பணக்காரக் குழந்தைகளின் மத்தியில் படிக்கும் போது, அவனுடைய ஏழ்மை பரிகாசத்துக்குள்ளாகிறது.

தீபாவளி நெருங்குவதால், உள்ளவர்கள் வீட்டுப் பிள்ளைகள் பெருமையடித்துக் கொள்ளுகிறார்கள். பையனின் தமக்கையும் விரைவில் தீபாவளிக்கு உடையும் பணமும் அனுப்புவதாக வாக்களிக்கிறாள். ஏழைச் சிறுவனும் மற்றவர்களின் பெருமையில் பங்கு கொள்ளப் பார்க்கிறான்.

ஆனால், தீபாவளிக்கு முதல் நாள் அவன் தமக்கை திடீரென்று இறக்கிறாள். அவனுக்கு இவ்வுலகத்திலிருந்த ஒரே ஒரு ஊன்றுகோலும் ஒடிகிறது. அவனுடைய தமக்கையின் சாவுகூடப் பணக்காரக் குழந்தைகளின் பரிகாசத் துக்கு இலக்காகிறது. இதைப் பொறுக்க முடியாமல் அவன் ஆற்றில் விழுந்து உயிர் விடுகிறான்.

கதையை எழுதிக் கொடுத்த மறுநாள் தமிழாசிரியர் என்னைத் தனியே கூப்பிட்டார். எடுத்த எடுப்பில் "இதை எங்கே காப்பி அடித்தாய்?'' என்று கேட்டார். எனக்குக் கண்கலங்கி விட்டது.

"போடுவதானால் போடுங்கள். இல்லாவிட்டால் வேண் டாம். இனி இப்படிப் பேசாதீர்கள்'' என்றேன்.

சிரித்துக் கொண்டே தமிழையா என்னைத் தட்டிக் கொடுத்தார் . "கதை நன்றாக இருக்கிறது. ஆனால் தலைப்பை மாற்ற வேண்டும்" என்றார்.

நான் கொடுத்திருந்த தலைப்பு - 'அவன் ஏழை', அதை அவர் 'மிடியால் மடிதல்' என்று மாற்றி அமைத்தார். கதை வெளிவந்த பல நாட்களுக்குப் பின்பு, மேல் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு அந்தத் தலைப்பின் பொருளை அறிந்து கொண்டேன். ஏழ்மையால் இறத்தல் என்று அர்த்தமாம். எப்படியாவது கதை வந்து விட்டதே என்ற பெருமை எனக்கு.

அட்டா ! முதல் முதலாக என் எழுத்துக்களை அச்சில் கண்டபோது நான் அடைந்த ஆனந்தம்!

முழுவதும் கற்பனைக் கதை என்று நான் அதைச் சொல்ல முடியாது. அன்று நான் எழுதிய முதற்கதையும் சரி. இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால் கருத்தெல்லாம் நான் காணும் உண்மைக்கே.

இருபது வருடங்களுக்கு முன்பு என் பள்ளி வாழ்க்கை யில் நடந்த சில நிகழ்ச்சிகளின் தொகுப்பே அந்தச் சிறுகதை. குலமும் பணமும் அங்கே இன்றைய நிலையை விடக் கொடுமையாகக் கூத்தாடின. சமுதாய வாழ்க்கைக்கு மனிதனை உருவாக்கும் கல்விச் சாலைகளிலேயே வேற்றுமையின் வித்துக்கள் ஊன்றப் பட்டன.

புதுக்கோட்டையில் வாழ்ந்த நான் செழிப்பு நிறைந்த பகுதியைக் கண்டதில்லை. சின்னஞ் சிறு வயதில் தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றிருந் தேன். கொள்ளிடக் கரையின் நாணற்காடும், தென்னந் தோப்பும், தேக்கு மரக் கூட்டமும் என்னைப் பிரமிக்க வைத்தன. என் மனத்தில் அன்று தொட்டுப் பசுமையாக இருந்த அந்தக் காட்சியையும் என் முதல் கதையில் எழுதினேன்.

ஒரு புறம் வளமும் அழகும் நிறைந்த இயற்கை உலகம். மற்றொரு புறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள் - இதையே என் கதைக் கருத்தென்று சொல்லலாம்.

பள்ளியில் என் சிறு கதையைப் படித்த பெரிய மாணவர்களும் ஆசிரியர்களும் அதை எப்படி எப்படி மதித்தார்களோ தெரியாது. ஆனால் நிச்சயம் அதை எழுதிய சிறுவனுக்கு - அப்போது எனக்குப் பதினாறு வயது - தீமையை எதிர்க்கத் துடிக்கும் ஒரு நெஞ்சு இருக்கிறது என்பதை மட்டுமாவது உணர்ந்திருப்பார்கள்.

இந்தச் சிறுகதையைத் தவிர இன்னொரு கதையையும் என்னுடைய முதல் கதை என்று சொல்லுகிறவர்கள் உண்டு. கலைமகளில் முதல் முதலில் வெளியான 'காசு மரம்' என்ற கதையே அது.

காவேரி என்ற ஏழைச் சிறுமி தன் தாயாரை வறுமையிலிருந்து காப்பாற்றக் காசு மரம் முளைக்க வைக்கிறாள் ! வகுப்பில் யாரோ ஒரு குழந்தை ஆரஞ்சு விதையை விழுங்கினதால், மற்றக் குழந்தைகள் அவள் வயிற்றிலிருந்து ஆரஞ்சு மரம் முளைத்து அவள் இறந்து விடுவாள் என்று பயப்படுகிறார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் காவேரி.

காசை விழுங்கினால் காசு மரம் முளைக்குமே . பெற்றவளின் வறுமை நீங்குமே என்ற ஆசையால் காசுகளை விழுங்குகிறாள். தான் இறக்கப்போவது நிச்சயம் என்று தெரிந்தும் அப்படிச் செய்கிறாள். கடைசி யில் மரம் முளைக்கிறது! பாசி பிடித்த செப்புக் காசு களால் வயிறு கெடுகிறது. வாந்தி எடுத்துச் சாகிறாள் காவேரி. அவளைப் புதைத்த இடத்தில் ஒரு மாங்கன்று முளைக்கிறது. அதற்குக் காவேரி என்று பெயரிட்டு அதைக் கண்ணீரால் வளர்க்கிறாள் தாய். - இதுவே காசுமரம்'.

'கலைமகளில் இந்தக் காசு மரம்' வெளியான பிறகு தான் சிறுகதை எழுத்தாளன் என்ற முறையில் நான் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப் பெற்றேன். இதையும் என் முதல் சிறுகதை என்று சொல்லலாமல்லவா?

[ நன்றி: "புனைபெயரும் முதல் கதையும்" நூல். தொகுப்பாசிரியர்: பூவை எஸ்.ஆறுமுகம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

அகிலன்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக