ஹரதத்தரின் சிவபக்தி
டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்
[ ஓவியம்: மணியம்] |
'கல்கி' முதல் இதழில் ( 1-8-41) வந்த உ.வே.சா வின் கட்டுரை!
ஒரு நாள் பகலில் அவர் சிவபூஜை செய்வதற்கு அமர்ந்தார். சிவபெருமானின் திருவுருவங்களாகிய ஸத்யோஜாதம் முதலிய ஐந்து மூர்த்தங்களையும் ஜந்து தீர்த்த பாத்திரங்களில் ஆவாகனம் செய்து ஐபித்து, ருத்ரம் சமகம் முதலியவற்றைச் சொல்லி அத்தீர்த்தத்தைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது அவர் வழக்கம், அப்படியே அன்று ஆவாகனம் செய்து ஜபம் செய்யும்போது கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் இருந்தார். அச்சமயம் ஒரு நாய் உள்ளே வந்து ஒரு பாத்திரத்திலுள்ள அபிஷேக தீர்த்தத்தை நக்கத் தொடங்கியது. ஹரதத்தர் கண்ணைத் திறந்து பார்த்தார், நாய் அபிஷேக தீர்த்தத்தை எச்சிற்படுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தார். அவர் அதை ஓட்டவில்லை. அது தன் தாகம் தீருமட்டும் தீர்த்தத்தைப் பருகிப் போய்விட்டது. அப் பெரியவர் வழக்கம் போல நான்கு பாத்திரங்களிலுள்ள தீர்த்தத்தோடு ஐந்தாம் பாத்திரத்தில் நாய் உண்டு எஞ்சிய தீர்த்தத்தையும் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தார்.
அருகில் இருந்து அதைக் கவனித்த சிலருக்கு அப்பெரியார் செய்த காரியம் உசிதமாகத் தோற்றவில்லை. அந்நாயை ஓட்டாமல் இருந்தது அவரது கருணை மிகுதிக்கு அடையாளமானாலும், அதனால் எச்சிற்படுத்தப்பட்ட தீர்த்தத்தை அபிஷேகம் செய்தது மாத்திரம் அவர்கள் மனத்தில் ஒரு பெரிய சங்கடத்தை உண்டாக்கிவிட்டது. சிறந்த ஆசார சீலராகிய ஹரதத்தர் அவ்வாறு செய்ததை மறுப்பதற்கும் அவர்களுக்குத் தைரியம் உண்டாகவில்லை. ஆனாலும் அவர்கள் அச்செய்தியை மெல்ல அயலார்களுக்குத் தெரிவித்தனர். கேட்டவர்கள் யாவரும் ஒன்றும் தெரியாமல் மயங்கினர். அச் செய்தி எங்கும் பரவியது. கடைசியில் வேதாத்தியயனம் செய்து ஒழுக்கத்தால் நிரம்பிய சிலர் அப் பெரியாரை அணுகி, "ஒரு சந்தேகம் இருக்கிறது. அதைப் போக்கவேண்டும்" என்று ஆரம்பித்தார்கள்.
அவர்கள் கருத்தை ஹரதத்தர் ஊகித்துக்கொண்டார்; "உங்கள் சந்தேகத்தை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வதற்கு முன்பே நான் சமாதானம் சொல்லுகிறேன்; கேளுங்கள் ; வேதங்களுக்குள் சிறந்ததாகிய யஜுர்வேதத் தின் மத்திய பாகமாக இருப்பது ஸ்ரீருத்ரம். பரமேசுவரனுடைய பெருமையை அது வெகு விரிவாக வெளிப் படுத்துவது. அதில் 'ஶ்வப்ய: ஶ்வபதிப்யஶ்ச' என்று வருகிறது ஞாபகம் இருக்கிறதா? அதற்கு என்ன அர்த்தம்? நாயாகவும் நாய்க்குத் தலைவனாகவும் இருப்பவன் பரமசிவன் என்ற தாத்பர்யம். அதனால் விளங்குகிறதே. அபிஷேக தீர்த்தத்தை நக்கிய அந்நாயை நான் பரமசிவனாகவே பாவித்தேன். நான் ருத்திர ஜபம் செய்து கொண்டிருந்த சமயம் அது; அந்த ருத்திரம் வாயளவில் இருக்கிறதா? மனதளவில் இருக்கிறதா?' என்பதைப் பரிசோதிப்பதற்காகப் பரமேசுவரன் செய்த லீலை இது என்பதே என் எண்ணம்'' என்றார், அந்தச் சிவஞானி . ஆக்ஷேபம் செய்ய வந்தவர்கள் மறுமொழி ஒன்றும் கூற இயலாமல் அப்பெரியாரை வந்தனம் செய்து விட்டுச் சென்றனர்.
நாய் மேலே பட்டால் ஸ்நானம் செய்வது அந்தக் காலத்து வழக்கம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கஞ்சனூரிலும் அதைச் சார்ந்த மணலூர், துகிலி, கோட்டூர் என்னும் அக்கிரகாரங்களிலும் நாய் மேலே பட்டால் அதனை அசுசியாகக் கருதி ஸ்நானம் செய்வதில்லை.
ஒரு நாள் சாயங்காலம் ஹரதத்த சிவாசாரியார் திருவிடைமருதூர் ஆலயத்திற்குச் சிவதரிசனம் செய்யும் பொருட்டு வந்தார். ஆலயத்தினுள் நுழையும் போது ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. "இல்லை; இனிமேல் இல்லை" என்று அவள் சொல்லிச் சொல்லி அழுதாள். அவர் எங்கிருந்து அவ்வொலி வருகிறதென்று கவனிக்கும் போது ஆலய வாசலின் ஒரு பக்கத்தில் அந்த ஆலயத்தைச் சேர்ந்த ருத்திர கணிகையர் சிலரை ஆலய மணியகாரர் தண்டித்துக் கொண்டிருந்தார். முதலில் ஒருத்திக்கு அண்ணாந்தாள் பூட்டி அவள் முதுகில் கல்லை ஏற்றிக் கையில் பிரம்புடன் அவளைப் பயமுறுத்திக்கொண்டிருந் தார். கணிகையோ தண்டனையைத் தாங்க முடியாமல் கதறினாள்.
ஹரதத்தர் கண்ணில் அந்தக் காட்சி பட்டது. அவருக்கு மிக்க இரக்கம் உண்டாயிற்று. அவர் ராஜகுரு என்றும் பெரிய மஹானென்றும் உணர்ந்து ஆலயத்தைச் சார்ந்தவர்களும் மற்ற ஜனங்களும் அவர்பால் பயபக்தியோடு நடந்து கொள்வார்கள். அங்கே நின்றிருந்த ஆலய அதிகாரி ஒருவரை அழைத்து, 'ஏன் ஐயா இப்படி அந்தப் பெண்ணை வருத்துகிறார்கள்?" என்று கேட்டார்.
அதிகாரி. 'இவள் இந்த ஆலய கைங்கரியம் செய்யும் ருத்திர கணிகையர்களில் ஒருத்தி. ஒரு வாரமாக ஆலயத்திற்கு வரவே இல்லை. இடையிடையே இவள் மஹாலிங்க மூர்த்தியின் கைங்கரியம் செய்யாமல் இப்படியே தவறு செய்துவருகிறாள். பல முறை வார்த்தைகளால் கண்டித்துப் பார்த்தோம். அபராதம் போட்டோம். மீண்டும் மீண்டும் இந்தக் குற்றத்தைச் செய்துவருகிறாள். அதனால் தண்டோபாயந்தான் இவளைத் திருத்துவதற்கு ஏற்றதென்று இவ்வாறு செய்கிறார்கள்" என்று விஷயத்தை விளக்கினார்.
இயல்பாகவே மிக்க இரக்கத்தோடு அதைக்கேட்டு வந்த அப்பெரியார், அதிகாரி சொல்லச் சொல்ல ஏதோ துக்கத்தில் ஆழ்ந்தவரைப்போல விம்மத் தொடங்கினார். அவர் உதடுகள் துடித்தன. உடம்பில் ஒரு படபடப்பு உண்டாயிற்று. விஷயம் முழுவதையும் அதிகாரி சொல்லி முடித்தவுடனே ஹரதத்தர் அப்படியே கீழே விழுந்து புரண்டு புரண்டு கதறத் தொடங்கினார்.
அதைக்கண்ட யாவரும் திடுக்கிட்டுப் போயினர். தாசியைத் தண்டித்தவர்கள் தண்டனையை நிறுத்தி அவரைப் பார்த்தனர். அழுது கொண்டிருந்த தாசி கூட ஆச்சரியத்தால் ஸ்தம்பித்து அழுகையை நிறுத்தினாள். ஒரே கூட்டம் கூடிவிட்டது.
ஹரதத்தர் உண்மை ஞானி என்று உணர்ந்திருந்த பலர் அவர் செய்கைக்குக் காரணம் தெரியாமல் பிரமித்தனர். பிறரால் அவர் பெருமையைத் தெரிந்து கொண்டிருந்த பலருக்கு அவர்பால் இருந்த நன்மதிப்புச் சிறிது கலைந்தது. வம்புப் பேச்சில் இன்பம் காணும் சிலர், "இந்தக் காலத்தில் யாரையும் நம்பக்கூடாது. அந்தத் தாசியை அடித்தால் இவர் எதற்காக இப்படிக் கதற வேண்டும்? இதில் ஏதோ இரகசியம் இருக்கிறது" என்றனர்.
"யார் கண்டார்கள்? அவள் அடிக்கடி கோவிலுக்கு வராமலிருப்பதற்கு இவரே காரணமாக இருக்கலாம். தம்மால் அவள் அடிபடுவதைக் கண்டு இவருக்கே பொறுக்க முடியவில்லை. அதனாலே தான் எல்லாவற்றை யும் மறந்து, இப்படி இவர் துக்கிக்கிறார்" என்றார் சிலர். ஒருவராவது உண்மை இன்னதென்று தெரிந்துகொண்டவராகத் தெரியவில்லை .
துக்கம் தாங்காமல் அவசமாகச் சிறிது நேரம் கிடந்த ஹரதத்தர் மெல்ல எழுந்திருந்தார். கோவில் உத்தியோகஸ்தரில் ஒருவர் தைரியமாக அவரை அணுகி அஞ்சலி செய்து, ''ஸ்வாமி, நாங்கள் செய்த காரியம் தங்களுக்கு இவ்வளவு துக்கத்தை உண்டாக்கக் காரணமாகுமென்று தெரிந்திருந்தால் அவளைத் தண்டித்திருக்க மாட்டோம். குறிப்பாக ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் முன்னமே தண்டனையை நிறுத்தியிருப்போம். கோயில் வழக்கப்படி நாங்கள் செய்தோம். க்ஷமிக்க வேண்டும்" என்றனர்.
அப்பெரியார் சிறிது நிதானித்தார்; அதிகாரியின் பேச்சில் அவன் சொன்ன வார்த்தைகளுக்கு ஊடே வேறு குறிப்பு இருப்பதை உணர்ந்து தம்மை அறியாமலே புன்னகை பூத்து, "நீங்கள் அவளைத் தண்டித்தது பற்றி நான் துக்கப்படவில்லை . பரமேசுவரனது கைங்கரியத்தைச் சரியாகச் செய்யவில்லை என்று நம்மையும் தண்டித்து ஈசுவர கைங்கரியத்திலிருந்து மாறாமல் இருக்கும்படி செய்பவர்கள் இல்லையே என்றுதான் துக்கித்தேன். ஸ்ரீ மஹாலிங்க மூர்த்தியின் கைங்கரியமே கண்ணாக இருக்கும் நீங்கள் சிவகணங்களுக்குச் சமானமானவர்கள். உங்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்து கைங்கரியம் செய்வதற்கு இல்லையே என்ற குறை எனக்கு இருக்கிறது'' என்றார்.
அங்கிருந்தவர்களெல்லோரும் உள்ளம் உருகிக் கண்களில் நீர்ததும்ப அப்பெரியாரின் சிவ பக்தித் திறத்தைப் பாராட்டினர். தவறாக எண்ணியவர்களும், "இவர் உலகியலுக்குப் புறம்பானவர் என்பதை நாம் அறியாமல் அபசாரம் செய்தோமே" என்று கன்னத்தில் அடித்துக்கொண்டனர்.
நாயின் உருவத்திலே சிவபெருமானையும் தாசியின் உருவத்திலே தம் குறையையும் நினைந்து கனிந்து உருகும் சிந்தையையுடைய ஹரதத்தர் அப்பால் ஆலயத்தினுள்ளே புகுந்தார்.
( இந்த விஷயத்தை எனக்குத் தெரிவித்தவர் சைவ சாஸ்திர நிபுணராகிய திருவிடைமருதூர் ஸ்ரீ சுந்தர சாஸ்திரியவர்கள் )
======
* இது திருவாவடு துறைக்கு வடமேற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள ஒரு சிவஸ்தலம்.
=====
[ நன்றி: கல்கி, Picture-Courtesy: Ananth ]
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
If you are already a Follower of my blog , thanks for reading!
கிழடுகளுக்கு பக்தி பைத்தியம் முற்றினால் நல்லது எது கெட்டது என்று தெரியாது .அறியாமையில் உழலும் பைத்தியங்கள் நிரம்பிய நாடு என்றும் முன்னேறாது
பதிலளிநீக்கு