ஞாயிறு, 16 அக்டோபர், 2022

2270. கி.சாவித்திரி அம்மாள் - 1

முழுமையானதொரு பெண்மணி

பிரபா ஸ்ரீதேவன்


அக்டோபர் 16. கி.சாவித்திரி அம்மாளின் நினைவு தினம்
=====

சாவித்திரி அம்மாள் எங்கள் பாட்டி. பாட்டி என்றால் என் தந்தையின் அத்தை. எழுத்துலகம் அவரை அறியும். "அவரைப் பற்றி எழுதுங்கள்' என்று சென்ற இரு வாரங்களில் மூன்று பேர் (குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை) என்னிடம் தனித்தனியாக சொன்னார்கள். 1898 மே 8 அன்று, அதாவது 116 ஆண்டுகளுக்கு முன் பிறந்த பெண்மணி. 1992இல் மறைந்தார்.

எங்கே துவங்குவது? ஆசிரமம் என்று ஒரு வீடு, ஒரு கூட்டு குடும்பம், என் இளம்பிராயத்தின் பின்னணி. இன்றைய சென்னையின் நெரிசலும், சப்தங்களும், கண்ணைக்கூசும் வெளிச்சமும் நிறைந்த பகுதி. ஆனால் அன்று ஏற்றமும் சிறு குட்டையும் மரங்களும் அமைந்த இடம். எங்கள் கண்கள் எதிரேயே ஏற்றம் போயிற்று, குட்டை போயிற்று, பரப்பளவு குறைந்தது என்று நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தின் மாற்றங்களை அந்த வீடும் அந்த தோட்டமும் தங்கள் மேல் பதித்துக்கொண்டன.

மனைவியை இளம் வயதில் இழந்த தன் சகோதரனின் (கி. பாலசுப்ரமணிய அய்யர்) மக்களுக்கு தாயாக கி. சாவித்திரி அம்மாள் தன் கணவருடன் ஆசிரமத்தில் இருந்து விட்டார். அவருக்கு குழந்தைகள் இல்லை. கணவரும் அறுபது தாண்டவில்லை . எனக்கு இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் அவர்தான். எங்களுக்கு தினமும் கதை சொல்லுவார். நாங்கள் படித்ததை சுவைக்க அவர் கற்று கொடுப்பார்.

கதை என்றால் புராணம், இதிகாசம் மட்டும் அல்ல "பிரதாப முதலியார் சரித்திரம்' முதல் தமிழ்வாணனின் "மணிமொழி நீ என்னை மறந்து விடு' வரை. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் துவங்கி அகதா கிறிஸ்டியின் மர்ம நாவல்கள் வரை. ஒரு கதை நினைவிற்கு வருகிறது. "ரோஜர் அக்ராய்டின் வழக்கு' என்ற அகதா கிறிஸ்டியின் நாவல். கதை கூறுபவர்தான் அதில் கொலையாளி, கொலை செய்யும் அத்தியாயத்தில், "நான் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்த்துவிட்டு கதவை மூடினேன்' என்று வரும். பாட்டியால் யார் கொலை செய்தார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் விளக்கத்தைப் படித்துவிட்டு, "இது அநியாயம், வாசகர்களை இப்படி போக்கு காட்டக் கூடாது' என்றார்.



பாட்டிக்கு அவர் படிக்கும் கதையின் களம் உண்மை ; அந்த பாத்திரங்கள் உயிருள்ளவர்கள்; அந்த சம்பவங்கள் உண்மை. பிரேமா நந்தகுமார் எழுதிய "செங்கண்மால் தான் கொண்டு போனான்' என்ற கதையில் ஆசாரமான ஒரு தந்தையின் மகள் அமெரிக்க இளைஞரை மணப்பாள். பாட்டி அந்தக் கதையின் கருவை எடுத்து சொல்வார். கலப்பு திருணமாயிற்றே என்று தள்ளவில்லை. "அதற்குதான் செங்கண் மால்ன்னு எழுதியிருக்கு' என்றார்.

பண்டித நடேச சாஸ்திரி எழுதிய "திக்கற்ற இரு குழந்தைகள்' கதை கேட்டு நாங்கள் உருகினோம். வேதநாயகம் பிள்ளை உருவாக்கிய ஞானாம்பாளின் சிறப்பை விளக்குவார். அவருக்கு ஜெயகாந்தன் கதைகள் பிடிக்கும். "அக்னிப்பிரவேசம்' கதை ஒப்புக்கொள்ள முடியாத ஒன்றை சொல்லியது என்று அவர் நினைக்கவில்லை . அந்த கதை முதலில் பிரசுரமான நேரம், அதற்கு எத்தனையோ எதிர் மறையான கடுமையான விமர்சனங்கள்.



பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் இன்றும் சமூகத்திலும் நீதிமன்றத்திலும் குற்றவாளி போல நிற்கிறாள். ஆனால் 1898இல் பிறந்த சாவித்திரி அம்மாள் ஜெயகாந்தன் எடுத்து வைத்த நியாயத்தை ஆமோதித்தார். அது மட்டுமல்ல, "பாரிசுக்குப் போ' கதையையும் அவர் ரசித்தார். கத்திமேல் நடக்கும் விஷயத்தை அதில் ஜெயகாந்தன் கையாண்டிருப்பார். சாரங்கன் இங்கு வேர் பதிக்க இயலாமல் பாரிசுக்கு திரும்பும், நிர்பந்தத்தை நம் சமூகம் விதிப்பதைக் கண்டு பாட்டி சற்றே வருந்தினார் என்றுகூட சொல்லலாம்.

முற்போக்கு என்றும் பெண்ணியம் என்றும் பேசாமல் அவர் பார்வைக்கு என்ன விரிவு இருந்தது என்று இன்று நான் வியக்கிறேன். வசதி படைத்தவர் என்றாலும் அவரிடம் படாடோபம் கிடையாது. நாலு புடவைகள்தான் இருக்கும். ஒன்று உடுத்திக்கொண்டிருப்பது. ஒன்று தோய்த்து துணிக்கொடியில் இருக்கும். ஒன்று ஈரம் காய்ந்தது அதே துணிக்கொடியில் மடித்து தொங்கும். ஒன்று உள்ளே வைத்திருப்பார். அவ்வளவே. இதில் ஒன்று கிழிந்துப் போய்விட்டால் அப்பொழுது தான் இன்னொன்று வாங்கப்படும். வணிகமயமான, விளம்பரமயமான இன்றைய உலகில் இது முட்டாள்தனமாகத் தோன்றும்.

உள்ளங்கழுத்தில் துவங்கி உந்திச்சுழி வரை மணமகளின் தாய் கூட ஆபரணங்களைத் தரித்துகொள்ளும் இந்நாளில், சாவித்திரி அம்மாள் ஒரு வித்தியாசமான பெண்மணி. "அவர்கள் வீட்டிலேயே இருந்திருப்பார்கள், நாலு இடம் போக வேண்டும் என்றால்...' என்ற ஐயம் எழலாம். அவர் வெளியே செல்வார். பூப்பந்தாட்டமும் விளையாடுவார். வானொலியில் வீணை வாசித்திருக்கிறார். பெண் சுதந்திரம் என்றால் என்ன என்று அவர் வாழ்ந்த விதம் கூறும்.


அவரைப்பார்க்க அன்றைய பெண் எழுத்தாளர்கள் பலர் வருவார்கள், அநுத்தமா, லக்ஷ்மி, வசுமதி ராமஸ்வாமி முதல் பிரேமா நந்தகுமார் வரை வந்து பேசிவிட்டு போவார்கள். அது போலவே எங்கள் சிறிய பாட்டனாரான கி.சந்திரசேகரனைப் பார்க்க வரும் எழுத்தாளர் ஆர்.வி., கல்கி, சாமா போன்றவர்களும் பாட்டியுடன் பேச உள்ளே வருவார்கள். அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் போன்ற சமூக சேவையில் ஈடுபட்டவர்களும் பாட்டியின் வட்டத்தில் அடங்குவார்கள்.

எம்.எஸ் அம்மா, டி.கே.எஸ். சகோதரர்கள்... எங்கே நிறுத்துவது? நாடகங்கள் என்றால் உயிர். சேவா ஸ்டேஜின் "தேரோட்டி மகன்', டி.கே.எஸ்.ஸின் "கள்வனின் காதலி' பிறகு வானொலி நாடகம் "காப்புக்கட்டி சத்திரம்' என்று அவர் ரசித்த நாடகங்கள் ஒவ்வொன்றாக என் நினைவிற்கு வருகின்றன.

வெள்ளிமணி போல ஆங்கிலம் பேசியவர் என்று புகழ் பெற்ற ஸ்ரீனிவாச சாஸ்திரியார், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை சமஸ்க்ருத கல்லூரியில் ராமாயணத்தை பேருரையாக சொல்லி வந்தார். அது நிறைவு பெற்றதும் ஒரு நூலாக வெளிவந்தது. இதை தமிழாக்கம் செய்யவேண்டும் என்ற பேச்சு எழும்பியதும் இந்தப் பணியை சாவித்திரி அம்மாள்தான் செய்ய வேண்டும் என்று அவரே முனைவர் வே. ராகவனிடம் கூறியுள்ளார்.

F.W.Bain எழுதிய A Digit of the Moon என்னும் நூல் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு "காலைப்பிறை' என்ற தலைப்பில் வெளிவந்தது. அதற்கு முன்னுரை எழுதிய கி.வா.ஜ., "ஸ்ரீமதி சாவித்திரி அம்மாளது மொழிபெயர்ப்பில் இயற்கை ஓட்டம் இருக்கிறது. இந்த தமிழ் புத்தகத்தை படித்துவிட்டு பிறகு இங்கிலீஷ் புத்தகத்தைப் படித்தால் அது இதன் மொழிபெயர்ப்பென்று தோன்றும்' என்று கூறுகிறார். இது ராமாயணப் பேருரைகளுக்கும் பொருந்தும்.

அதை அவர் எப்படி எழுதுவார் என்று நான் கூறித்தான் ஆகவேண்டும். மேசையில் எழுதுகோல் வைத்து குனிந்து பார்த்துக் கொண்டே இருப்பார். சிறிது நேரம் சென்றதும் எழுதத் துவங்குவார். பிறகு அடித்தல், திருத்தல் ஒன்றும் கிடையாது. துல்லியமான நதி போல வாசகங்கள் காகிதத்தில் இறங்கும். அதை முடித்ததும் மறுபடியும் யோசனை, மறுபடியும் எழுதுவது என்று இது போலவே போகும்.

கோயில், குளம் என்று இன்று ஓடுகிறோமே, பாட்டி அப்படி சென்றதாக நினைவே இல்லை. பாட்டிக்கு ஜோசியத்திலெல்லாம் நம்பிக்கை கிடையாது. உற்சவங்களில் அறுபத்து மூவர் அன்று மட்டும்தான் அவர் கோயிக்குச் செல்வார்.

அறுபத்து மூவர் உற்சவத்தைப் போல சமத்துவமும் சகோதரத்துவமும் சொல்லித்தரும் வேறு உற்சவம் இல்லை . ஆண்-பெண், அரசன்-ஆண்டி, பல சாதிகள், மாற்றுத்திறனாளி என்று யாரையும் விடவில்லை அந்த அறுபத்து மூன்று பேர் அடங்கிய குழுமம். அவர்கள் கபாலியை கும்பிட்டு கொண்டே செல்வார்கள். அதற்கு மட்டும், அன்று மட்டும் தான் சாவித்திரி அம்மாள் கோயிலுக்குபோவார். ஏன் என்று அன்று கேட்கத் தோன்றவில்லை. இப்பொழுது ஆண்டுகள் பல கடந்த பின் ஏதோ புலப்படுகிறது.

கோடை விடுமுறை என்றாலும் எங்களுக்கு அந்த ஆசிரமம் தான். அங்கே நாங்கள் துப்பறியும் வல்லுனர்களாக உலா வருவோம்; "தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்' என்று நாடகம் போடுவோம்; சமையல் செய்பவரைச்சுற்றி மாமிக்கு ஜே என்று கூவி கள்ளக்காதலராக வரும் விக்ரமாதித்தன் கதை கேட்போம் (நல்ல வேளை ஒன்றும் அவ்வளவாக புரியாது). 

வெளியே மரத்தடியில் கல்லை வைத்து சமைப்போம். சமயலறையில் நாங்கள் போய் எங்கள் கைவரிசையை காட்ட முடியாது. வீட்டில் வேலை செய்பவரின் உதவியுடன் செங்கல் வைத்து அடுப்பு கட்டி புளியும் மிளகாயுமாக ஒரு குழம்பு வைப்போம். பாட்டியும் பாவம் எல்லாருடன் நிற்பார். நாங்கள் சுட்டுகொண்டு விடுவோமோ என்று கவலை. பிறகு அந்த அதி காரபராக்கிரம குழம்பை உள்ளே கொண்டுவந்து "ஸ்..ஸ்...' என்று உண்போம். 

குழந்தைகளுக்கு சுதந்திரமும் இருக்கவேண்டும். அதே நேரத்தில் அவர்கள் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும். அந்த நடுநிலை நூலை அவர் அசையாமல் பிடித்தார். இன்றுதான் குழந்தைகளின் உளவியல் நிபுணர்கள் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். என் தாயாரிடம், "எல்லாரும்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். பிரபா படித்து கலெக்டராகட்டும். திருமணம் பற்றி பிறகு யோசிக்கலாம்' என்று 19ஆம் நூற்றாண்டில் பிறந்த பெண் கூறினார் என்றால் வியப்பாக இல்லை?

அந்தக் கால கட்டுப்பாடும் அந்த மூன்று நாள்களும் என்பது பற்றி நிறைய எழுதலாம். அது போன்ற நேரத்தில் எங்களுக்கு பிடித்த நாடகமோ நாட்டிய நிகழ்ச்சியோ இருந்தால் ரகசியமாக எங்களிடம் "இப்பொழுது யாரிடமும் சொல்ல வேண்டாம், பிறகு சொல்லிக்கலாம்' என்பார். சமூக விதிகள் ஏதோ ஒரு காலக்களனில் உருவாகின்றன. ஆனால், மென்மையான மனித உணர்ச்சிகளை அவ்விதிகளுக்கு பலியாக்கக் கூடாது என்று நினைத்தாரோ?

பாரதி முதல் சுஜாதா வரை என்ற ஆய்வு, 1988 என்று நினைக்கிறேன், நூல் வடிவமாக வெளிவந்தது. அதில் தமிழில் முக்கிய எழுத்தாளர்கள் என்று குறிப்பிடப்பட்டவருள் சாவித்திரி அம்மாளும் ஒருவர். அந்த நூலை இந்தக் கட்டுரை எழுதும் முன் நான் தேடினேன். கன்னிமாரா நூலகம், ரோஜா முத்தையா நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்று பல இடங்களில் தேடினேன். வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு நூலகத்திலும் இருந்த நூலக அதிகாரிகள் உற்சாகத்துடன் தாங்கள் எப்படியாவது கண்டுப்பிடித்து சொல்கிறோம் என்றது மகிழ்ச்சியாக இருந்தது.

1958இல் அவரிடமிருந்த சொத்தில் பெரும்பகுதியை ஒரு பள்ளிக்கூடம் துவங்க தானமாகக் கொடுத்தார். அதுதான் சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளி. மேலும் வித்யா மந்திர் பள்ளிக்கூடத்திற்கும் லேடி சிவஸ்வாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் அவர் பெரும் தொகையை தானமாகக் கொடுத்தார்.

எளிமை, கல்வியறிவு, யாரையும் சாராத சுதந்திரம், சுயநம்பிக்கை, இலக்கிய ஆர்வம், ஈகை குணம், விரிவான பார்வை, முற்போக்கான எண்ணம் இன்னும் என்ன என்னவோ சொல்லலாம் பாட்டியைப்பற்றி. பெண் சுதந்திரம் என்றால் இதுவுமா, இல்லை இது தான் பெண் சுதந்திரமா?

[ நன்றி: தினமணி, 2014 ]

தொடர்புள்ள பதிவுகள்:

கி.சாவித்திரி அம்மாள் - அரவிந்த்

கி.சாவித்ரி அம்மாள்: தமிழ்.விக்கி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக