புதன், 19 அக்டோபர், 2022

2275. ஆர்.கே.சண்முகம் செட்டியார் -1

பல்துறை வித்தகர் டாக்டர் சர் ஆர்.கே.சண்முகனார்

முனைவர் ராமஸ்வாமி சுந்தர்ராஜ்


 அக்டோபர் 17.  ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் பிறந்த தினம்

=====

உலகப் பொருளாதார நிபுணர், இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர், சிறந்த பேச்சாளர், தமிழ் இசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர், தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டவர். இவ்வாறு பல்துறை திறன் பெற்றவராகத் திகழ்ந்தவர், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார். 

கோவை நகரத்தின் செல்வமிக்க குடும்பத்தில் 1892-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி, ஆர்.கந்தசாமி செட்டியார்-ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சண்முகனாருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள். 

 கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். மிகக் குறுகிய காலமே வழக்குரைஞராகப் பணியாற்றி, பின்னர் பொதுவாழ்வில் ஈடுபட்டார். 

ஆர்.கே.எஸ்., பொது வாழ்வில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். கோவை நகர் மன்ற உறுப்பினராகவும், நகர் மன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும், இந்திய தேசிய சட்ட சபையின் (அன்றைய பாராளுமன்றம்) உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றினார். 

சுதந்திரப் போராட்ட வீரர் கோபாலகிருஷ்ண கோகலேயின் நூல்களைப் படித்து, பொது வாழ்வில் தன்னலமற்ற சேவை என்பதையே வாழ்நாள் குறிக்கோளாக மேற்கொண்டார். இவரது அறிவாற்றலையும், வாதத் திறமையையும் கண்டு வியந்த மோதிலால் நேரு, இவரைத் தமது பிரதான சீடராக ஏற்றுக் கொண்டார். 

பாராளுமன்றத்தின் சுயராஜ்யக் கட்சியின் (காங்கிரஸ்) தலைவராக நேருவும், செயலாளராக சித்தரஞ்சன் தாசும்,கொறடாவாக ஆர்.கே.சண்முகனாரும் பணியாற்றிச் சிறப்பித்தனர். 

கோவை மாநகரில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருந்த இவரது ஹவார்டன் எனும் இல்லம், கண்டிராத விருந்தாளிகள் இல்லை. மகாத்மா காந்தியடிகள், கவியரசர் ரவீந்திரநாத் தாகூர், ஆங்கிலேய அறிஞர் சி.எப்.ஆண்ரூஸ், தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், தமிழறிஞர் டி.கே.சிதம்பரனார், தமிழ்த்தென்றல் திரு.வி.க. சமூக சேவகி கமலா சட்டோபாத்யாயா, கஸ்தூரிபாய், லால்பாய் இன்னோரென பலரும் பல நாள்கள் இவர் இல்லத்தில் விருந்தாளிகளாகத் தங்கி மகிழ்ந்தனர். 

இளம் வயதிலேயே பல மொழிகளைக் கற்றறிந்தார். இவரது இல்லத்திலிருந்த நூலகம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று. 

இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய பாராளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர். 

1941-இல் இரண்டாவது உலகமகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார்.   ÷1920-இல் அன்னி பெசன்ட் அம்மையாருடன் சில மாதங்கள் இங்கிலாந்து சென்று பல பொதுக் கூட்டங்களில் உரையாற்றி, இந்திய சுயாட்சிக்காக தமது கருத்துகளை வெளியிட்டார். 

பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க இவர் ஆற்றிய பணிகள் பல. 

1947-இல் இந்தியத் தாய்த்திரு நாடு விடுதலை அடைந்த பின்னர், காந்தியடிகளின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். உலகப் போரின் பின்னர் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்த அந்தக் கால கட்டத்தில் உலக வரலாற்றில் இந்தியப் பிரிவினையின் காரணத்தால் நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரங்கள், இனப் படுகொலைகள், பலகோடி மக்களின் இடமாற்றம், இவற்றால் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளித்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்தும் பெரும்பணி ஆர்.கே.எஸ். மீது சுமத்தப்பட்டது. 

சுதந்திரத்துக்குப் பின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் மாட்டிக்கிடந்த பல நூறு கோடி ரூபாய் அந்நியச் செலாவணியையும், தங்க இருப்பையும் தமது வாதத் திறமையால் மீட்டு, வெள்ளையரிடமிருந்து இந்தியருக்கே இந்தச் செல்வம் கிடைக்க வழி வகுத்தமை இவரது அளப்பரிய சாதனைகளாகும். 

ஆர்.கே.எஸ்., ஆங்கில மொழித் திறமையுடன் தமிழ்மொழிப் புலமையிலும் தேர்ந்து விளங்கினார். இளம் வயதில் தாய்மொழி தமிழைப் புறக்கணித்து, ஆங்கில மொழி மோகம் கொண்டு விளங்கிய சண்முகனார், தனது வாழ்வின் பிற்காலத்தில் தாய்த் தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து விளங்கினார். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய அற்புதமான எளிய தமிழில் உரை எழுதி வெளியிட்டார். 

தமிழ் இசைப் பாடல் தீண்டத்தக்கது என தமிழர்களே கருதிய வெட்கக் கேடான சூழ்நிலையில், மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார். தேவார பண் ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் நடத்தி, தேவார பண் இசை ராகங்களை முறைப்படுத்தினார். 

தமது ஊரான கோவை மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள கீழை சிதம்பரமாம் திருப்பேரூரில் அருள்மிகு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மடாலயத்தில் தமிழ்க்கல்லூரி ஒன்றையும் உருவாக்கினார். தெள்ளு தமிழில் குற்றாலக் குறவஞ்சிக்கு அழகிய உரை எழுதினார். 

ஆர்.கே.சண்முகனார் இந்திய நிதி அமைச்சராக இருந்தபோதுதான் தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, பதிப்பிப்பதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக இவர் மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கினார். கம்பராமாயணப் பாடல்கள் எளிமை ஆக்கப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளோடு வெளிவர, ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசனுடன் இணைந்து பணியாற்றினார். 

"வசந்தம்' என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கியதோடு, தம் வாழ்நாளின் இறுதி வரை அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தார். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக திறம்படப் பணியாற்றி, தமிழ்கூறும் நல்லுலகின் கலங்கரை விளக்கமாக பல்கலைக்கழகத்தைப் பிரகாசிக்கச் செய்தார். 

1943-இல் இந்திய அரசாங்கம் உருவாக்கிய தொழில் ஆய்வு நிலைக்குழுவின் தலைவராக சண்முகனார் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான இந்தக் குழுவின் பரிந்துரைகளின் காரணமாகவே அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுவின் கீழ் இந்தியா முழுவதும் 32 தேசிய ஆய்வகங்கள் நிறுவப்பட்டன. 

1950-இல் அன்றைய சென்னை மாகாணத்தை தொழில் மையமாக உருவாக்கப்பட்ட சென்னை தொழில் முதலீட்டுக் கழகம் எனப்படும் இன்றைய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார். 

நமது நாட்டிலும், ஆசியக் கண்டத்திலும் மிகப் பெரிய தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். 

அளப்பரிய தமிழ்ப் பற்றைக் கொண்ட சண்முகனார், தமது நண்பர்களுடன் உரையாடும்போது யாராவது ஒருவர் தூய தமிழன்றி ஆங்கிலத்தில் பேசினால், வார்த்தை ஒன்றுக்கு ஓர் அணா அபராதம் விதித்து, ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் சேர்த்த மொத்த அபராதத் தொகையை தமிழ் இசைச் சங்கத்துக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இவ்வாறு பல்துறை வித்தகராகவும், தமிழறிஞராகவும், வாழ்ந்த ஒப்பற்ற இம் மாமேதை, தமது 61-ஆம் வயதில் 1953-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். 

கொங்கு மண்டலத்தின் தலைமகனான ஆர்.கே.சண்முகனாரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு, தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த இருக்கும் கோவை மாநகரில், ஒரு பெரும் நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழார்வலர்களின் வேண்டுகோளாகும்.

[ நன்றி: தினமணி]

தொடர்புள்ள பதிவுகள்:



பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக