திங்கள், 7 நவம்பர், 2022

2300. கே.எஸ்.கிருஷ்ணன் - 1

இயற்பியலின் இமயம் டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன்

எஸ்.ராஜசேகரன்


விருதுநகர் மாவட்டம் அருகே விழுப்பனூர் என்ற குக்கிராமத்தில் 1898ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியன்று பிறந்தவர் விஞ்ஞானி கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன். இவர் தனது தொடக்கக் கல்வியை வத்திராயிருப்பில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். அவரது ஆசிரியர் அவருக்கு ஆரம்பக் கல்வியை ஆர்வத்துடன் கற்பித்தார். இரவு நேரங்களில் வானத்தில் மிளிர்கின்ற நட்சத்திரங்களைக் காட்டி ஆசிரியர் அவருக்கு அறிவியல் ஆர்வத்தை ஊட்டினார்.

ஆரம்பக் கல்வியை வத்திராயிருப்பில் முடித்த பின்பு திருவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் உயர்நிலைப் பள்ளியில் தனது அடுத்தகட்ட கல்வியைத் தொடர்ந்தார். அதன் பின்பு கிருஷ்ணன் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் அடுத்தடுத்த படிப்புகளை முடித்தார்.

அதன்பின்பு அவருக்கு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் துறையில் செய்முறை விளக்குநராகப் பணி கிடைத்தது. இயற்பியலில் பட்டம் பெற்றிருந்தாலும் வேதியியலிலும் தான் சளைத்தவரல்ல என்பதைக் கிருஷ்ணன் நிரூபித்துக் காட்டினார். அந்தக் காலகட்டத்தில் உணவு இடைவேளை நேரத்தில் இவரைத் தேடி ஏராளமான மாணவர்கள் இயற்பியலிலும், வேதியியலிலும், கணிதத்திலும் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள வருவார்கள். இவரது அறிவாற்றல் அண்டைக் கல்லூரி மாணவர்களையும் ஈர்த்தது. கட்டுக்கடங்காத கூட்டம் இவருடைய சேவையைப் பெறுவதற்காகத் தினசரி வந்து சென்றதை வரலாறு சொல்கிறது.

கிருஷ்ணனிடம் அறிவியலில் ஆர்வமும், திறமையும் அபரிமிதமாக இருந்தது. அன்றைய நாட்களில் அணு ஆற்றல் ஆணையம், பல்கலைக்கழக மானியக் குழு, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் போன்ற அத்தனை முன்னோடி அமைப்புகளிலும் இவரது பங்களிப்பு இருந்தது. அவர் தனது அறிவியல் வெளிப்பாடுகளைத் தமிழ் மொழியில் அழகாகவும், எளிமையாகவும் எடுத்துரைக்க முடியும் என்பதைத் தீவிரமாக நம்பினார். சிக்கலான அறிவியல் கருத்துகளைக்கூட, எளிமையாக எடுத்துரைக்க முடியும் என்ற எண்ணத்தை இவருக்கு விதைத்தது இவரது பள்ளி அறிவியல் ஆசிரியர் திருமலைகொழுந்துப் பிள்ளை. இதை அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் என்ற மூன்று மொழிகளில் வித்தகராகத் திகழ்ந்தார். அவர் சிறந்த விளையாட்டு வீரரும்கூட. டென்னிஸ் விளையாட்டிலும், கால்பந்திலும் அளவு கடந்த ஆர்வம் கொண்டவர். தினசரி காலை நேர நடைப்பயிற்சி முடித்தபின்பு, குளிர்ந்த நீரில் குளித்து முடித்து அதிகாலை 6 மணிக்கு முன்பாகவே ஆய்வகத்தில் இருப்பது இவரது அன்றாட நடவடிக்கையாகும்.

1920களில் கல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் இணைந்தார். ராமன் விளைவைக் கண்டறிவதில் டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன் அளவுகடந்த ஈடுபாட்டுடன் கடின முயற்சி மேற்கொண்டார். சர்.சி.வி ராமனுடன் இணைந்து 1930ஆம் ஆண்டு ஒளிச்சிதறல் விளைவைக் கண்டுபிடித்தார். ராமன் விளைவுக்காக இந்திய அறிவியல் துறைக்கு முதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்டது. பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், "ராமன் விளைவைக் கண்டறிவதில் கிருஷ்ணனின் பங்களிப்பு அளப்பரியது" என்று பாராட்டினார்.

சர்.சி.வி ராமனுடன் இணைந்து ஒளிவிலகல் சம்பந்தமான 20க்கும் மேற்பட்ட கட்டுரைகளை "நேச்சர்" என்ற இதழில் கிருஷ்ணன் எழுதியுள்ளார். காந்த படிகங்கள் பற்றியும், சிந்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள் குறித்தும் ஆய்வு செய்து ஏராளமான கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.

பல்துறை வித்தகர்


கிருஷ்ணனின் ஆர்வம் அறிவியல் ஆய்வுகளோடு நின்றுவிடவில்லை. இலக்கியங்கள், தத்துவங்கள் என்று நீண்டுகொண்டே சென்றது. அவர் தமிழில் எழுதிய "நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்ட விதம்" என்ற கட்டுரையைப் படிப்பவர்களுக்குத் தானாகவே அறிவியல் ஆர்வம் ஏற்பட்டுவிடும். "சூரிய சக்தி" என்ற கட்டுரையும் ,"பூமியின் வயது என்ன ?" என்ற கட்டுரையும் இவரது ஆய்வின் வெளிப்பாடுகளை உலகிற்குப் பறைசாற்றியது. அணு ஆயுதத்திற்கு எதிரான சமாதான நோக்கில் உருவாகிய பக்வாஸ் இயக்கம் போன்ற பல்வேறு தளங்களிலும் இவரது பங்களிப்பை அளித்தார்.

சர்.சி.வி ராமனுடன் பணிபுரிந்த நாட்கள் தனக்கு மிகுந்த மன நிம்மதியை அளித்ததாக கிருஷ்ணன் கூறுகிறார். அதன்பின்பு டாக்கா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது, ராமன் விளைவில் இருந்து விலகி காந்தத் தன்மை பற்றிப் படிக்கிறார். மீண்டும் ஒரு காலகட்டத்தில் அவர் கொல்கத்தாவிற்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவருக்கு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பணி கிடைக்கிறது.

கிருஷ்ணனின் பேச்சை ரசித்த நேரு

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் ஜவஹர்லால் நேரு, அடிக்கடி கிருஷ்ணனைப் பார்க்க வருவதுண்டு. எப்படிப்பட்ட பணியாக இருந்தாலும் அந்தப் பணியை ஒதுக்கிவைத்துவிட்டு, ஜவஹர்லால் நேருவுடன் கிருஷ்ணன் உரையாடச் சென்றுவிடுவார். அவருடைய பேச்சை நேரு மிகவும் ரசித்துக் கேட்பார்.

கிருஷ்ணன் 1940ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்வு செய்யப்பட்டார். 1946ஆம் ஆண்டு செவ்வீரர் என்றும் பெருமைப்படுத்தப்பட்டார். 1954ஆம் ஆண்டு இந்தியாவின் பத்ம பூஷண் விருது பெற்றார். 1961ஆம் ஆண்டு ரசாயன விஞ்ஞானங்களுக்காக சாந்தி ஸ்வரூப் பட்நாகர் நினைவுப் பரிசினைப் பெற்றார் .

இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக இவர் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு, அரங்கத்தின் முன்பு இவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய வத்திராயிருப்பு இந்து உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகமும், அவரது திருவுருவச் சிலையும் இன்றும் உள்ளது.

இவர் தனது வாழ்நாளில் சர்வதேச ஆராய்ச்சி இந்திய தேசிய கமிட்டியின் தலைவராகவும், தேசிய பௌதீக ஆராய்ச்சி கமிட்டியின் இயக்குநராகவும், சுதந்திர இந்தியாவில் பிரதமரின் முதல் விஞ்ஞான ஆலோசகராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் 1961ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதியன்று மாரடைப்பின் காரணமாக மரணத்தைத் தழுவினார். அறிவியல் துறைக்கு மாபெரும் பங்காற்றிய இந்த மாமனிதரின் மரணம், மக்களின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. இன்று அவரது 60-வது நினைவு நாள் நாடெங்கிலும் அனுசரிக்கப்படும் நிலையில், விஞ்ஞானி கே.எஸ்.கிருஷ்ணனின் வரலாறு மாணவர்களின் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

கட்டுரையாளர்: எஸ்.ராஜசேகரன்,

தலைமையாசிரியர், இந்து மேல்நிலைப்பள்ளி,

வத்திராயிருப்பு.

[ நன்றி: hindutamil.in  ]

தொடர்புள்ள பதிவுகள்:


க. சீ. கிருட்டிணன்: விக்கி

கே.எஸ்.கிருஷ்ணன்: பசுபதிவுகள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக