வெள்ளி, 11 நவம்பர், 2022

2307. கதம்பம் - 103

கண. முத்தையா 10

ராஜலக்ஷ்மி சிவலிங்கம்

நவம்பர் 12. கண.முத்தையாவின் நினைவு தினம்.



விடுதலை வீரர், எழுத்தாளர்

நேதாஜி தலைமையில் சுதந்திரத்துக்காக போராடியவரும், தமிழ் பதிப்புலக முன்னோடியுமான கண. முத்தையா (KN.Muthiyah)  பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் செல்வச் செழிப்பு மிக்க ஜமீன் குடும்பத்தில் (1913) பிறந்தார். தந்தையின் மறைவால் 17 வயதிலேயே குடும்ப பாரம் இவரது தோளில் விழுந்தது. மெட்ரிக் தேர்வுகூட எழுத முடியவில்லை. மனம் தளராமல் உழைத்து, தந்தை செய்துவந்த வியாபாரத்தை மீட்டெடுத்தார்.


# விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தியில் புலமை பெற்றவர். 1936-ல் வியாபாரத்துக்காக பர்மா சென்றார். அங்கு ‘தன வணிகன்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணி யாற்றினார். 1937-ல் ‘ஜோதி’ மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற் றார்.

# கம்பை நகரில் உயர்நிலைப் பள்ளி நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியபோது, நேதாஜியின் வீர உரைகளைக் கேட்டு, அவர் மீது பக்தி கொண்டார். 1945-ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) சேர்ந்து, அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியின் மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்தார். நேதாஜியை கடைசியாக சந்தித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.

# பர்மாவில் போர்க் கைதியாக ஓராண்டு காலம் சிறையில் இருந்தபோது, ராகுல் சாங்கிருத்தியாயனின் 2 நூல்களை (‘பொதுவுடைமைதான் என்ன’, ‘வால்காவில் இருந்து கங்கை வரை’) தமிழில் மொழிபெயர்த்தார்.

# தமிழ் புத்தகாலயத்தை1946-ல் நிறுவினார். ‘நேதாஜியின் புரட்சி’ என்ற நூலை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார். ஜூலிஸ் பூசிக், மாவோ, கார்க்கி, ஸ்டாலின் ஆகியோரது நூல்களை தமிழில் பதிப்பித்தார். தமிழ் இலக்கியவாதிகளின் நூல்களை மட்டுமல்லாது, ப்ரேம்சந்த் போன்ற இந்தி இலக்கியவாதிகளின் நூல்களையும் தமிழில் வெளியிட்டார்.


# வெளிநாடுவாழ் தமிழ் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், அறிஞர்களின் நூல்களையும் தமிழ் வாசகர்களுக்கு வழங்கினார். ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை வென்ற படைப்புகளை வெளியிட்டார். புதுமைப்பித்தனின் கட்டுரை நூலை முதலில் பதிப்பித்தவர் இவரே.

# ஜீவா, பெரியார், காமராஜர், அண்ணா, பக்தவத்சலம் உள்ளிட்ட தலைவர்கள் இவரிடம் அன்பும் நட்பும் கொண்டிருந்தனர். தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரான எந்த படைப்பையும் பிரசுரிப்பதில்லை என்பதை கொள்கையாகவே கொண்டவர்.

# நாடு விடுதலை அடைந்த பிறகு, நண்பர் ஒருவர் இவரிடம் வந்து, ‘‘ஐஎன்ஏ தியாகிகளுக்கு மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் தருகிறதாம்’’ என்று சொல்லி ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார். இவரோ, ‘‘இந்தியாவே எங்களுக்கு சொந்தம் என்று நினைத்தேன். வெறும் 5 ஏக்கரை வாங்கிக் கொடுத்து என்னை ஏன் பிரிக்கப் பார்க்கிறாய்?’ என்று கேட்டு கையெழுத்திட மறுத்துவிட்டார்.

# நூல்கள் விற்பனையை அதிகரிக்க கல்கியின் தலைமையில் 1951-ல் ஒரு இயக்கம் தொடங்கினார். இந்த அமைப்பு சென்னையில் முதன் முதலாக தமிழ்ப் புத்தகக் காட்சியை நடத்தியது. எழுத்தாளர், பதிப்பாளர் சங்கங்களின் நிர்வாகியாகவும் இருந்து செயலாற்றினார். 1962-ல் நடத்தப்பட்ட பாரதி விழாவில் இவரது பங்களிப்பு மகத்தானது.

# சுதந்திரப் போராட்ட வீரர், படைப்பாளி, பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், நூல் வெளியீட்டாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட கண. முத்தையா 84-வது வயதில் (1997) மறைந்தார். ]

[ நன்றி: https://www.hindutamil.in/news/blogs/79837-10.html  ]

தொடர்புள்ள பதிவுகள்:

கண. முத்தையா: விக்கி 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக