சனி, 26 நவம்பர், 2022

2327. வி. ஸ. காண்டேகர் - 4

இறைவன்

காண்டேகர் ; தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.

                                           




ஓர் உருவகக் கதை.
=====

 வெளியே இருள் சூழ்ந்திருந்தது. வெட்டுக் கிளிக்கு அந்த இடம் பிடிக்கவில்லை. ஜன்னல் வழியாக அது அறைக்குள்ளே வந்தது. அந்தி வேளையில் கதிரவனின் ஒளியிலே ஒளிரும் கடல் நீர்போல , விளக்கின் வெளிச்சம் அதன்மீது பட்டவுடனே அதன் பசுமை நிறம் பளபளத்தது.

வெட்டுக்கிளி மிக்க இறுமாப்புடன் தன் நிறத்தைக் கண்டு களித்தது. 'உர்ர், உர்ர்' என்னும் சப்தத்தைக் கேட்டு அது திடுக்கிட்டுப் பார்த்தது. விளக்கின் கீழே ஒரு பூனை உட்கார்ந்திருந்தது. அது தான் எவ்வளவு கறுப்பு ! ' விளக்கு நிழலில் இருட்டு இருக்கும்' என்னும் வசனம் பொய்யல்ல.

வெட்டுக்கிளியின் உள்ளத்தில் கர்வ அலைகள் மோதின. 'என் நிறம் எவ்வளவு பச்சைப் பசே லென்று இருக்கிறது, பச்சை மணிபோலே ! விளக்கின் கீழே இருக்கும் அந்தக் கரிக்கட்டையைப் பார்! சீ!' என்று அது ஆனந்தக் கூத்தாடியது.

பறவைகள் மரக்கிளைகளில் தாவி விளையாடுகின்றனவே : அவை ஒரு கிளையின் நுனியில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ; மறுகணம் அடுத்த கிளைக்கு மாறும். வெட்டுக்கிளியும் அவ்வாறே செய்யத் தொடங்கியது. இந்தக் கணத்திலே அது கூரைக்கு மேலே பறந்து செல்லும் ; அடுத்த கணத்தில் விர் ரென்று கீழே இறங்கி வரும்.

இறங்கியவாறே, ' என் உடல் எப்படி ஆகாய விமானம் போலே அமைந்திருக்கிறது ! விளக்கின் கீழே குந்தியிருக்கும் அந்தக் கறுப்பன் எப்படி இருக்கிறான் பார் ; எருமை மாட்டைக் காட்டிலும் மோசம்!' என்றெல்லாம் அது நினைக்கும்.

விளக்கின் நிழலில் பூனை வருத்தத்தோடு உட் கார்ந்திருந்தது. நான்கு நாட்களாக அதற்கு - எலி அகப்படாவிட்டால் போகிறது - ஒரு பல்லி , அதுவும் இல்லையென்றால், ஒரு புழுவாவது கிடைக்கக்கூடாதா? பாவம் ! அதற்கு அதுகூடக் கிடைக்கவில்லை. 'உர், உர்' என்று உறுமிக்கொண்டே, " இறைவன் கருணையே இல்லாதவன். இன்று நான்கு நாட்கள் ஆயின, நான் சாப்பிட்டு" என்றது அது.

அதன் வார்த்தையைக் கேட்டு வெட்டுக்கிளி வியப்புற்று, ' இறைவனா கருணையற்றவன்? எனக்கு இவ்வளவு அழகிய பசுமைநிறமும், ஆகாய விமானத்தைப்போல் பறக்கும் உடலும் தந்திருக்கிறானே; அப்படிப்பட்ட ஆண்டவனா கருணை இல்லாதவன்?' என்று நினைத்தது.

அது விளக்கின் அருகில் தாவிச் சென்று, " பூனை யாரே, தங்களைப்போன்ற முழு முட்டாளும் உலகில் உண்டோ ? கடவுள் மிகக் கருணை கொண்டவர். பாரும் ஐயா, கடவுள் எனக்குக் கொடுத்திருக்கும் நிறத்தை ! இதோ பாரும், என் ஆகாய விமானம் பறக்கிறது...'' என்றது

ஆனால், அந்த ஆகாயவிமானம் மேலே பறப்பதற்கு முன்னமே தரையில் குப்புற விழுந்தது. பூனை குறி தவறாமல் அதைப் பிடித்தது.

" இறைவன் கருணையற்றவன்! து...ஷ்....ட..... ன்!'' என்று வெட்டுக்கிளி கூவியது.

பூனையோ நாவினால் தன் இரையைச் சுவைத்துக் கொண்டே , "இறைவன் கருணாகரன் ; அவனுடைய கருணை மிக மிகப் பெரிது" என்றது.


தொடர்புள்ள பதிவு:

வி. ஸ. காண்டேகர்  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக