பாண்டித்துரைத் தேவரின் செய்யுட் கடிதம்
உ.வே.சாமிநாதையர்
டிசம்பர் 2. பாண்டித்துரைத் தேவரின் நினைவு நாள்.
உ.வே.சா.வுக்கு அவர் ஒரு செய்யுட் கடிதம் எழுதியதை "என் சரித்திரத்தில்" பதிவிடுகிறார் உ.வே.சா.
===
புறநானூற்றைப் பெற்றுக் கடிதமெழுதியவர்களுள் பாலவ நத்தம் ஜமீன்தாராகிய பாண்டித்துரைத் தேவரும் ஒருவர். அதில் அவர், “தங்களால் லோகோபகாரமாய் அரிய நூல்கள் அச்சிடுவதாக எடுத்துக் கொள்ளப்பட்ட நன்முயற்சிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்ய எப்பொழுதும் ஆவலுற்றிருப்பவனாதலின் அதற்குரிய நற்சமயம் அறிவிக்கக் கேட்டுக் கொள்ளும் தங்கள் பாண்டித்துரை” (14-11-1894) என்று குறிப்பித்திருந்தார். இக்கடிதம் வந்த சில வாரங்களுக்குப் பிறகு அவர் திருவாவடுதுறையாதீன கர்த்தரைத் தரிசிக்கும் பொருட்டுத் திருவிடைமருதூருக்கு வந்தார். ஆதீன கர்த்தராகிய அம்பலவாண தேசிகர் அவர் வரவை எனக்குத் தெரிவித்து என்னையும் வரும்படியாக எழுதினார். அவ்வாறே சென்று பாண்டித் துரையைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் புறநானூற்றுப் பதிப்பைப் பாராட்டி விட்டு “இனிமேல் எந்த நூலை அச்சிடப் போகிறீர்கள்!” என்று கேட்டார்.
“பல நூல்கள் இருக்கின்றன, மணிமேகலையை அச்சிடலாமென்று நினைத்தேன். ஆனால் இன்னும் அதிலுள்ள சில விஷயங்கள் தெளிவுபடவில்லை. புறத்திரட்டென்ற தொகை நூல் ஒன்று இருக்கிறது. அதில் இப்போது வழக்கில் இல்லாத பல நூற் செய்யுட்கள் உள்ளன. புறநானூற்றைப் பதிப்பித்தபோது புறத் துறைகளின் இலக்கணங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள எண்ணினேன். அந்நூலிற்கண்ட துறைகளுக்கு விளக்கம் தேடுகையில் புறப்பொருள் வெண்பாமாலை மிகவும் உபயோகமாயிற்று. அதனை நன்கு ஆராய்ந்தேன். அதற்குப் பழைய உரையொன்று என்பால் இருக்கிறது. மூலம் மாத்திரம் சரவணப் பெருமாளையரால் முன்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது உரையுடன் வெளியிடலாமென்று எண்ணுகிறேன்” என்றேன் நான்.
செய்யுட் கடிதம்
அவர் இராமநாதபுரம் சென்றவுடன் எனக்கு ஒரு செய்யுட் கடிதமும் ஐந்நூறு ரூபாய்க்கு ஓர் உண்டியலும் 17-12-1894 அன்று எனக்கு அனுப்பினார். அக்கடிதத்திற் சில பகுதிகள் வருமாறு.
(கலி வெண்பா)
1. “திங்கள் புரையுந் திருவதனச் செல்வியொரு
பங்கினமர் பெம்மான் பதமலரே - துங்க
2. முடிக்கணியாத் தாங்கி முதுபரவை வேலிப்
படிக்கணியா யென்றும் பலநூல் - வடிக்கும்
3. உளத்தார்க் கொருநிதியா யோங்குபுகழ் மேய
வளத்தா லுயர்குடந்தை மன்னித் - துளக்கரிய
4. நேமிநா தன்மருகி நேயமனையா ளோடுவாழ்
சாமிநா தைய தகுநண்ப - மாமுகவை
5. மன்னியபாண்டித்துரைபல் வந்தனஞ்செய் தின்றெழுதும்
நன்னிருப மீதாம்..............
6. காமாரி தந்தவிளங் காதலனே ராய்த்தமிழின்
மாமாரி பெய்துலகை வாழ்விப்போய் - ..............
7. பயன்சிறிய தேனும் பனையளவாக் கொள்வர்
நயன்றெரிவோ ரென்றவுண்மை நாடி - முயன்றிதுபோ
8. தைந்நூறு ரூபா வனுப்பினனஃ தேற்றருள்வாய்
மெய்ந்நூ றுரீஇயொழுகும் வித்தகா - மைந்நூறி
9. ஆமாலை யிற்சுவையுண் டாக்கும் புறப்பொருள்வெண்
பாமாலை யச்சிற் பதிவுசெயும் - மாமுயற்சி
10. ஊறிகந்து முற்ற லுறுவிப்பா னோங்குகவான்
ஆறுகந்த சென்னியருள்.”
1. செல்வி - உமாதேவியார், பெம்மான் - சிவபெருமான்.
2. முதுபரவை வேலிப்படிக்கு - பழைய கடலாகிய எல்லையையுடைய பூமிக்கு. வடிக்கும் - இயற்றும்.
4. நேமிநாதன் மருகி - திருமாலுக்கு மருமகளாகிக் கலைமகள். நேய மனையாள் - அவனுக்கு அன்புள்ள மனையாளாகிய திருமகள். முகவை -இராமநாதபுரம்.
6. காமாரி - சிவபெருமான்.
7. காதலன் - முருகக்க டவுள்.
8. மெய்ந்நூறுஉரீஇ - மெய்யில் திருநீற்றைப் பூசி.
மை நூறி - குற்றத்தை நீக்கி.
9. ஆம் ஆலையின் சுவை உண்டாக்கும் - ஆகின்ற கரும்பைப்போலச் சுவையை உண்டாக்கும்.
10. ஊறு இகழ்ந்து - இடையூறு நீங்கி. ஆறு உகந்த சென்னி - கங்காதரனது அருள் ஒங்குக.
பாண்டித்துரைத் தேவர் இங்ஙனம் செய்த உதவியை நான் பாராட்டி எழுதியதோடு, அம்பலவாண தேசிகரிடமும் தெரிவித்தேன். அவர் உடனே முந்நூறு ரூபாய் வழங்கினார். இவ்விருவரும் உதவிய பொருளைக் கொண்டு வீட்டுக்காக நான் வாங்கின கடனை அடைத்து விட்டேன்.
If you are already a Follower of my blog , thanks for reading!
மிக அருமை. பாண்டித்துரைத் தேவரின் பாண்டித்தியமும் தமிழ்மேல் அவல் கொண்டிருந்த காதலும் வேளிப்படுமாறு அமைந்த கடிதம்.
பதிலளிநீக்குஇலந்தை