புதன், 23 மே, 2012

’தேவன்’: மிஸ்டர் ராஜாமணி - 2

மிஸ்டர் ராஜாமணி - 2
தேவன்

தேவன்’ 30-களில் விகடனில் எழுதிய மிஸ்டர் ராஜாமணிக் கட்டுரைகளில் இன்னொன்று. இவை இன்னும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவரவில்லை. இவற்றிற்கு விகடனில் யார் ஓவியங்கள் போட்டார் என்றும் தெரியவில்லை! ( ‘மாலி’ யோ?)  

==============

ஒரு நாள் மாலை நான் ஆபீஸிலிருந்து சுமார் இரண்டரை மணிக்குத் திரும்பி வீட்டுக்குள் சென்றேன். வீட்டில் நுழைந்ததும் எனது அறைக் கதவு சாத்தப்பட்டிருந்தபடியாலும், இருவர் உள்ளே பேசும் சப்தம் கேட்டதாலும் சற்று அப்படியே நின்றுகொண்டிருந்தேன். பின்வரும் சம்பாஷணை காதில் விழுந்தது.
''நான் இன்னிக்கி சினிமா போப்போறேனே!''
''அதெல்லாம் இன்றைக்கு நிச்சயமாய்ப் பலிக்காது.''
''அம்பி மாமாகூடப் போப்போறேன்னா, அப்புறம்?''
''பலிக்காது என்றால், அப்புறம்?''
''நான் போவேன்!''
''நீ போகக்கூடாது!''
''உன்னை யார் கேட்டா?''
''நீ யார் சொல்வது?''
''நான்தான் சொல்றேன்; சின்ன ஆசாமணி சொல்றேன். அம்பி மாமா ஆபீஸிலேருந்து வந்துண்டே இருக்காளே, என்னை அழைச்சுண்டு போவாளே!''
''வந்துட்டேனே!'' என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். என் அருமை மருமான் சின்ன ராஜாமணியும் என் அக்காளும் பேசிக்கொண்டிருந்தனர். குழந்தையும் முகத்தைத் துடைத்துக்கொண்டு கிராப்பை வாரிக்கொண்டு, நிஜாரைப் போட்டுக்கொண்டு தயாராய் நின்றான். என்னைக் கண்டதும் ஓட்ட ஓட்டமாய் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, ''மாமா, இன்னிக்குச் சினிமாவுக்கு போகணும், மாமா'' என்றான்.


''இன்னிக்கு சினிமா வாண்டாம்; பீச்சுக்குப் போவோம்'' என்றேன்.
      
''பீச்சுன்னா என்ன?''
''அப்படீன்னால் என்ன?''
''சமுத்திரத்துக்குக்கிட்டே இருக்கும் கரை.''
''அங்கே என்ன பண்றது?''
''உட்கார்ந்து கொண்டிருக்கிறது.''
''எதற்காக?''
''சும்மாத்தான்.''
''சும்மா அங்கே போய் உட்கார வேண்டாம்.''
''பின் என்ன செய்யவேண்டுமென்கிறாய்?''
''நீ சினிமாவுக்கு வர்றயா, வல்லையா?''
''வரவில்லை என்றால் என்ன பண்ணுவாய்?''
''அப்போ, நீ வரமாட்டியா?''
''அப்போ வரவேண்டுமா?''
''மாமா, மாமா, வரமாட்டியா நீ?'' என்று கெஞ்சினான்.
நான் தோல்வியடைந்தேனென்று சொல்லவேண்டியதில்லை. சினிமாவுக்குப் போயிருந்தோம். வெகு கவனமாய்ப் படத்தைப் பார்த்துக்கொண்டே வந்தான். ஒவ்வொரு தரமும் அவனுக்குப் படத்தில் வருபவர்கள் யாரென்று சொல்லவேண்டும். ''ஏன் அப்படிப் போனார்கள்? ஏன் அப்படி நின்றார்கள்?'' என்று சொல்ல வேண்டியதுடன் சினிமா எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதையும் சொல்ல வேண்டும். அவனுக்குப் புரிந்தவரையில் கேட்டுத் திருப்தியடைவான். எங்கள் முன்னிலையில் ஆங்கிலோ / இந்தியக் கனவான் ஒருவர் ஒரு பெரிய தொப்பியை அணிந்து அமர்ந்திருந்தார்

அவருடைய தொப்பி ராஜாமணிக்குப் படத்தை மறைத்ததுபோலும்! குழந்தை என்னிடம் அதைப் பற்றிப் பல தடவை சொல்லியதிலிருந்து நான் அவரை, 'ஸார்! தயவு செய்து கொஞ்சம் தொப்பியை எடுத்தால் நல்லது'' என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டேன். ஆனால் அப்பெரியார் என்னை நான்கு முறை விழித்துப் பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார். குழந்தைக்குப் பொறுக்க முடியவில்லை.
             


''டேய்!''' என்றான்.
அவர் உக்கிரமாய்த் திரும்பினார். எனக்குச் சற்று பயந்தான்.
''எடடா டொப்பியை, மறைக்கிறது!'' என்றான்.
இதைக் கேட்டுப் பக்கத்திலிருந்த ஐந்தாறு பேர்வழிகள் எங்கள் பக்கம் திரும்பிக் கவனித்தனர். ராஜாமணி லக்ஷியமில்லாமல் இருந்தான். அவனுக்குப் பயம் இன்னதென்று தெரியாது. இனிமேல்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.
''எடடா, என்கிறேன், முழிக்கிறாயா?'' என்று நாற்காலியில் ஏறி நின்று கை விரலை ஆட்டிக் கொண்டு கேட்டான்.
நான் ராஜாமணியை அடக்கினேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்பெரியாரும் வாய் பேசாது தம் கிரீடத்தைக் கழற்றினார். கடைசியில் வீட்டுக்குப் போகும்பொழுது, ''சினிமா எப்படி?'' என்றேன். வழக்கம் போல், ''நன்னாவேயில்லை'' என்று பதில் வந்தது.


ராஜாமணியைச் சாதாரணமென்று நினைத்துவிட வேண்டாம். அவன் மதராஸுக்குச் சொற்ப காலம் வந்து விட்டுப் போவதற்குள் ரொம்ப இங்கிலீஷ் கற்றுக் கொண்டு விட்டான்! அதுவும் மேனாட்டார் முறையிலேயே பேசுவான். 'மெட்ராஸ்' என்று சொல்வது பிழையாம். 'மெராஸ்' என்று சொல்ல வேண்டுமென்பான். அவனைக் கொஞ்சம் இங்கிலீஷ் பேசச் சொல்லுகிறேன், கேட்கிறீர்களா?


''அப்பா சொன்னா, 'தி ஸினிமா இஸ் நைஸ்' இன்னு. அம்பி மாமா சொன்னா 'இடீஸ் வெர்ரி நைஸ்' இன்னு. நான் சொன்னேன் 'இடீஸ் வெர்ரி நைஸ்' இன்னு'' என்பான். இல்லாவிட்டால் 'அப்பா சொன்னா 'அயம் ஸாரி' இன்னு. அம்பி மாமா சொன்னா, 'அயாம் வெர்ரி, வெர்ரி ஸாரி' இன்னு என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பான்.
      ராஜாமணிக்கு நெய், சர்க்கரை தின்பதில் வெகு பிரியம். ஆனால் ஒருவருக்கும் தெரியாமல் எடுக்கமாட்டான். அவை வைத்திருக்கும் இடத்தில் தாராளமாகப் போய் நின்றுகொண்டு, 'மெராஸ் காலிங்! தி நெக்ஸ்ட் ஐடம் இஸ்! ஆசாமணி நெய்யைத் திருடறது!'' என்பான். (நாலைந்து தினங்கள் பீச்சில் ரேடியோ கேட்க அழைத்துக்கொண்டு போனதில் குழந்தை இதைக் கற்றுக் கொண்டான்.) உள்ளே போய்ப் பார்த்தால் நெய்யில் ஐந்து விரல்களும் ஆழமாய்ப் பதிந்திருக்கும்.


ராஜாமணி சாப்பிடும்போது வெகு விநோதமாய்ப் பேசுவான். இலையில் உட்கார்ந்தவுடன், என்னைக் கூப்பிட்டு,
''பரமானம், பச்சடி, பஸ்ட் வில் கம்.
பொடலங்காய்க்கூட்டு நெக்ஸ்ட் வில் கம்'' என்பான்.
''பருப்பு ரஸம், மோர்க் குழம்பு,
பதிர்ப்பேணி, லட்டு, பால்ப் போளி!
மாமா! ஆல் வெர்ரி நைஸ். வெர்ரி குட்! வெர்ரி ஹாட்'' என்பான்.
ராஜாமணிக்குத் தெரியாத விஷயமே கிடையாது. போதாக்குறைக்கு இரு சாரிகளிலும் பத்து வீடுகளுக்குச் சென்று பல செய்திகள் கொண்டு வந்து விடுவான். அவைகளைக் கேட்காவிட்டால் விடமாட்டான்.


''அவாத்து மாமா சொல்றா, டாக்டர் ஜான்ன்னு ஒத்தனாம்.''
''உம்.''
''அவனுக்கு வெல்லக் கொழக்கட்டை புடிக்குமாம்.''
''சரி.''
''அத்தைத் தின்னா அவனுக்கு வயத்தை வலிக்குமாம்.''
''உம்.''
''பாத்தானாம்...''
''உம்.''
''கொழுக்கட்டை நிறையத் தின்னூட்டு, டுபாக்கி யாலே - டபார்னு - சுட்டூண்டானாம், மாமா!'' என்று சிரிப்பான்.
''காந்தீனு ஒத்தராம்.''
''அப்புறம்.''
''உம்.''
''கோவிலுக்குள்ளே போகணும், விடறியா, மாட்டியா?'' இன்னாராம்.''
''உம்.''
''ஆகட்டும்னு சொல்லியிருக்காளாம்'' என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான்.
ராஜாமணி எங்களிடம் வந்து வெகு நாட்களாகி விட்டன. அவன் தகப்பனாருடன் ஊருக்குக் கிளம்பினான். அவனைவிட்டுப் பிரியும்பொழுது மனம் மிகவும் கஷ்டப்பட்டது. எப்போதும் ஓயாமல் பேசிக்கொண்டும் குதூகலமாகவும் இருந்த குழந்தையை விட்டுப் பிரிய மிகவும் ஆயாசப்பட்டேன். அவர்களுடன் கூடவே ரெயில்வே ஸ்டேஷனுக்கும் போயிருந்தேன். ரெயில் வந்து கிளம்பும் நேரமாகிவிட்டது. குழந்தை என்னைக் கூப்பிட்டான். அரைத் தலை நிமிர்ந்து நோக்கினேன். அவன் குறும்பைக் காட்டினான்.


''அம்பி மாமா, சமத்தா இருக்கயா?'' என்ன கேட்டான். நான் பேச முடியாமல் மெளனமாய் நின்றேன்.
''மண்ணிலே போகாதே? வெய்யில்லே அலையாதே! அம்மாவைப் படுத்தாதே!'' என்றான். சிரிப்பும் துக்கமும் ஒருங்கே என் மனத்தைத் தாக்கின. உடனே ரெயில் ஊதிற்று. மெதுவாய் நகர்ந்தது. 'குழந்தை எங்கே போய் விடுகிறான்? தகப்பனார் வீட்டுக்குத்தானே?' என்று பலவாறு மனத்தைத் திடம் செய்துகொண்டும் முடியவில்லை. குழந்தை கைக்குட்டையை வீசினான். முகத்தில் புன்சிரிப்பும், போக்கிரித்தனமும் ஒருங்கே ஜ்வலித்தன. ''அம்பி மாமா! மெராஸ் காலிங்... தி நெக்ஸ்ட் ஐடம் ஈஸ் - ஆசாமணி மடுரைக்குப் போறது!'' என்றான். என் கண்ணீரை அடக்க முடியவில்லை. தலை குனிந்து திரும்பி நடந்தேன்.

==========

[ நன்றி : appusami.com; ஓவியம் : நடனம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

மிஸ்டர் ராஜாமணி: மற்ற கட்டுரைகள்

தேவன் படைப்புகள்

2 கருத்துகள்:

  1. குழந்தையின் பேச்சும் தோரணையும் ரசிப்போம்.ஆனால்
    பிரியும்போது குழந்தை அதே ஜாலி மூடில் பேசும்.
    நமக்கு அழுகை வரும்.

    'பரமானம்' பாயசத்தைக் குறிப்பது. அந்தநாளில்,
    பெரியவர்கள் பரமானம்(பரமான்னம் வைஷ்ணவ பாஷையோ?)
    நாங்களும் அப்படித்தான் சொன்னோம்.
    பிறகு அந்த வார்த்தை காணோம்.பாயசம் என்றுதான் சொல்வோம்.

    பதிலளிநீக்கு
  2. பரமானம் : பரமான்னம் - என்பதிலிருந்து
    மருவியது என்று தோன்றுகிறது.

    தமிழ் லெக்சிகன் சொல்கிறது:

    பரமான்னம் paramāṉṉam
    , n. < id. + anna. Rice boiled with milk and sugar; பாயச வகை.

    பதிலளிநீக்கு