திங்கள், 28 மே, 2012

’தேவன்’ : மிஸ்டர் ராஜாமணி -3

மிஸ்டர் ராஜாமணி -3

தேவன்

விகடனில் சேர்ந்தவுடன் ‘தேவன்’ எழுதிய முதல் தொடரில் ஒரு கதை.
தொடர் இன்னும் நூலாக வெளிவரவில்லை. 
==============

சென்ற வியாழனும் வெள்ளியும் எனக்குத் தூக்கமே கிடையாது. குழந்தை ராஜாமணியைப் பார்த்து ஆறு மாதங்களாகிவிட்டபடியால் உடனே ஓடிப்போய்ப் பார்த்துவிட்டு வந்தாலொழிய மனம் சமாதானம் அடையாது போல் தோன்றிற்று. சனியும் ஞாயிறும் விடுமுறை நாட்களாகையால் வெள்ளிக்கிழமை இரவே சென்னையில் ரெயில் ஏறினேன். மறுநாள் விடியற்காலையில் ஒரு சூட்கேஸுடன் மதுரை ஜங்ஷனில் இறங்கி நேராக வீட்டை அடைந்தேன். அங்கே நான் முதன் முதலில் பார்த்தவன் ராஜாமணிதான். வாசற்படியில் நின்றுகொண்டு சாவதானமாய்த் தன் அரிசிப் பற்களைத் தேய்த்துக்கொண்டிருந்தான். முன்பு பார்த்தபொழுது எப்படி இருந்தானோ அதே போலதான் இப்பொழுதும் இருக்கிறான். ஒரு வேளை சற்று உயர்ந்து இருக்கலாமோ என்னவோ! முன்பு இருந்த சுறுசுறுப்பும், கள்ளப் பார்வையும், பொல்லாத்தனமும் சற்றுகூடக் குறையவில்லை. வாசற்படியில் காலை வைத்தேன்.

''நீ யாரு?'' என்றான் ராஜாமணி, எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் நான்கு வயதுக் குழந்தைதானே என்று மனத்தைச் சமாதானம் செய்துகொண்டு, 'என்னைத் தெரியவில்லையா?' என்றேன். யோசனை செய்தான். ''நோக்குக் கும்பகோணமா?'' என்றான். ''ஆம்'' என்றேன். திடீரென்று அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. ''நீ அம்பி மாமாவா, வந்திக்கியா?'' என்றான். நான், ''ஆமாம்'' என்று பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் ஒரே பாய்ச்சலாய் என்னைக் கட்டிக்கொண்டு, ''நேக்கு என்ன வாங்கிண்டு வந்திருக்கே, மாமா? பொட்டியைத் திற!'' என்று ஆரம்பித்துவிட்டான்.

சிறிது நேரத்திற்குள் கூடம், தாழ்வாரம் எல்லாம் ரப்பர் யானை, குதிரை, ஒட்டகம் முதலியவைகளால் நிரம்பின. ராஜாமணி அவைகளை ஒவ்வொன்றாய் ஒட்டிப் பார்த்துவிட்டு வெளியிற் சென்றான். சில நிமிஷங்களுக்கெல்லாம் ஐந்தாறு சின்னப் பையன்களுடன் உள்ளே நுழைந்தான். அவர்களுக்கு ஒவ்வொன்றையும் பெருமையாய்க் காட்டி, ''பாத்தியாடா, எங்க அம்பி மாமா மெட்ராஸ்லேருந்து வந்திக்கா, என்னெல்லாம் வாங்கிண்டு வந்திருக்கா, பாருடா'' என்றான். பிறகுதான் என்னுடன் பேச வந்தான்.
               
குழந்தையை நோக்கினேன். அவன் முதன்முதலாக இரண்டு வயதில் எங்கள் ஊருக்கு வந்திருந்தபோது விளையாடிய விளையாட்டுக்கள் என் மனக்கண் முன் ஓடிவந்தன. அப்பொழுது அவன் காலை ஏழு மணிவரையில் தூங்குவான். என் தாயார் அவனை எழுப்புவதற்காக, ''ஆசாமணி, எழுந்திருக்கிறாயா?' என்று கேட்கும்பொழுது அவன் கண்களை இறுக மூடிக்கொண்டு, ''தூங்கறேன், அம்மா'' என்று ராகம் இழுப்பான். சற்று நேரத்துக்கெல்லாம் உள்ளே தோசை வார்க்கும் சப்தம் கேட்டதும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருப்பான். குண்டு குண்டென்று உள்ளே ஓடி என் தாயார் பின்னால் நின்று பின் கையைக் கட்டிக்கொண்டு நயமான கெஞ்சின குரலில், ''பாத்தீ, தோசை வாக்கறியா? நேக்குத் தரயோ?'' என்று கேட்பான்.

ஒரு சமயம் நாங்கள் ஸ்வாமிமலைக்குச் சென்று சுப்பிரமணிய ஸ்வாமிக்கு அபிஷேகம் - அர்ச்சனைகள் செய்தோம். குழந்தையை ஸ்வாமி சந்நிதியில் தூக்க வேண்டாம் என்று சற்றுக் கீழே விட்டதும், சரசரவென்று சமீபத்திலிருந்த நெய் விளக்கிற்குப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்துவிட்டான். பிறகு குருக்கள் அர்ச்சனை செய்து கர்ப்பூரம் காட்டும் பொழுது அவர் அவனைச் சற்றுக் கவனியாமல் அலட்சியமாய்ப் போய்விட்டதற்குத் தம் தம் என்று குதித்து எம் பெருமான் சந்நிதி கிடுகிடாய்க்கும்படி இரைச்சல் போட்டு, மேற்படி குருக்களைத் திரும்பி வரச் செய்து, பிரசாதங்களை வாங்கிக் கொண்டான். அப்போது நான் குழந்தைக்குத் தீர்க்காயுளும், சிறந்த கல்வியறிவும் கொடுத்தருளும்படி முருகனை மனமார வேண்டிக்கொண்டது ஞாபகத்துக்கு வந்தது.

அன்று சாயந்தரம் குழந்தையை வெளியில் அழைத்துக் கொண்டு போனேன். அவனுக்கு அந்த ஊரில் தெரியாத இடம் கிடையாது. எனக்கு எல்லாவற்றையும் காட்டிக் கொண்டே வந்தான். ஒரு பெரிய காப்பி ஹோட்டலின் வாசலில் வந்து நின்றோம்.

''மாமா, நீ கொஞ்சம் காப்பி சாப்பிடேன்.''

''வேண்டாம், ராஜா! இப்போதானே சாப்பிட்டோம்.''

''மாமா, கொஞ்சம்போறம் சாப்பிடு, மாமா'' என்று கையைப் பற்றி இழுத்தான்.

''என்னடா உபசாரம் பண்ணுகிறாய்?'' என்றேன்.
               
''இல்லை! நீ சாப்பிட்டா நானுங் கொஞ்சம் சாப்பிடலாமேன்னுதான்'' என்று உண்மையைச் சொல்லிவிட்டான்.

இவனை அழைத்துக்கொண்டு போவதென்றால் எனக்குச் சற்றே பயந்தான். முன் ஒரு சமயம் இவனுடைய சித்தப்பா இவனை ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போனார். அவர் மிகவும் மதிப்பாய்க் குழந்தையைப் பார்த்து, ''எலே! போய் வேணுங்கறத்தைச் சாப்பிடுடா!'' என்றார். குழந்தை பேசாமல் இருந்தான். ''போடா எலே, எதேது பிடிக்கிறதோ போய்த் தின்னுட்டு வாடா!'' என்று வெகு அலட்சியமாய் பேசினார். ராஜாமணிக்குப் பொறுக்கவே முடியவில்லை. உள்ளே சென்று ஒவ்வொரு தினுசிலும் ஒவ்வொன்று கேட்டு வாங்கிக் கடித்துக் கடித்துக் கீழே வைத்தான். பில் ரூ. 1-14-6 ஆயிற்று. பிறகு வெளியில் வந்து, ''இந்த ஹோட்டல் பிரயோசனமே இல்லை!'' என்று பிரமித்துப்போய் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவிடம் சொன்னானாம்.

நாங்கள் போய்த் தலைக்கு ஒரு கப் காப்பிதான் சாப்பிட்டோம். நான் சில்லறை கொடுத்துக் கொண்டிருக்கும்போது ராஜாமணி சமீபத்தில் போட்டிருந்த ஒரு ஸ்டூலின்மேல் ஏறி நின்றுகொண்டு ஹோட்டல்காரரைப் பார்த்து, ''என்ன காப்பி கொடுக்கிறேள்! ரொம்ப நன்னாவே இல்லையே? நேத்திக்குச் சின்னராயர் ஓட்டல்லே சாப்பிட்டேன். என்னமா ஜில் ஜில்லுனு இருந்தது, தெரியுமா?'' என்றான். ஹோட்டல்காரர் சிரித்தார். நானும் மதுரை முழுவதும் விசாரித்தாகிவிட்டது. ''சின்னராயர்'' என்று எவரும் ஹோட்டல் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. நேயர்களில் எவராவது கண்டுபிடிக்க நேர்ந்தால் தயவு செய்து எங்கள் ராஜாமணி கணக்கில் ஒரு கப் காப்பி சாப்பிடும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

எனக்கும் ராஜாமணிக்கும் சண்டை வந்து நீங்கள் பார்த்ததில்லையே? பத்து நிமிஷத்திற்குள் 'டூ' விட்டுக் கொண்டு மறுபடியும் 'சேத்தி'யாகிவிடுவோம். குழந்தை அவன் தாயாரிடம் போய், ''அம்மா, அம்பி மாமாவுக்கு ரொம்பப் பச்சிக்கிறதாம். தோசை வேணும்னு சொல்றா'' என்றான். அது என் காதில் விழுந்து விட்டது. ''என்னடா, உன்னை நான் சொல்லச் சொன்னேனாடா?'' என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்றேன். அதனால் அவனுக்கு ரொம்பக் கெளரவக் குறைச்சல் ஆகிவிட்டாம். உடனே என்னுடன் 'டூ' விட்டுக்கொண்டு ஒரு பத்தடி தூரத்தில் அரைமுகமாகத் திருப்பிக்கொண்டு விசிக்க ஆரம்பித்தான். அடிஉதடு வாய்க்குள் வெகு விசையாய்ச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தது.

               
''அடே ராஜாமணி! துருத்தி ஊதாதே, வேண்டாம்'' என்றேன். சற்று நேரம் மெளனம். மெதுவாகப் பின்நடை நடந்து என்னை நெருங்கிக் கொண்டிருந்தான். நான் கவனிக்ககாததுபோல் பாசாங்கு செய்தேன். அவன் முதுகு என் மேல் பட்டது. என்னுடன் 'டூ' விட்டதாகக் காண்பித்துக் கொள்ளக் கூடாதாம். ''அம்பி மாமா! சித்தே முந்தி 'வேண்டாம்'னு சொன்னியே, அதுக்கு 'வாண்டாம்'னுதானே அர்த்தம்?'' என்றான்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி. ஊருக்குக் கிளம்பினேன். ராஜாமணிக்குத் தெரியாமல் என் டிரங்கு, படுக்கை முதலிய சாமான்கள் அடுத்த வீட்டுக்குக் கொண்டு போய் வைக்கப்பட்டன. எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினேன். குழந்தைக்கு நான் ஊருக்குப் போவதாகத் தெரியாது.

''அம்பி மாமா, சின்ன அத்தை யாத்துக்குப் போறியா?'' என்றான். பதில் ஒன்றும் சொல்லாமல நகர்ந்தேன்.

நேற்று அவன் தகப்பனாரிடமிருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அது பின்வருமாறு :

''சிவி. அம்பிக்கு அநேக ஆசீர்வாதம். நீ செளக்கியமாய்ப் போய்ச் சேர்ந்திருப்பாயென்று நம்புகிறேன், ... குழந்தை ராஜாமணி 'அம்பி மாமா சின்னத்தையாத்திலிருந்து வந்துண்டே இருக்காளே. வந்த அப்புறம் நானும் கூடப் போய் மெராஸ்லே பி.. வாசிக்கப் போறேனே' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். .... வேறு விசேஷமில்லை.

உன் பிரியமுடன்

வி.கே.

[ நன்றி : appusami.com]

தொடர்புள்ள பதிவுகள்:
மிஸ்டர் ராஜாமணி: மற்ற கட்டுரைகள்

தேவன் படைப்புகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக