செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 1

ஆனந்தசிங்’ - 1



இது ‘ஷெர்லக் ஹோம்ஸி’ன் காலம் ;  அவன் பல புதிய கதைகள் மூலம், திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறான். ஆம், பிரிட்டிஷ் பி.பி.சி நிறுவனம் அண்மையில் தயாரிதது வழங்கிய ‘ ஷெர்லக்’ என்ற தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

பி.பி.சியின் ‘ஷெர்லக்’ 

பி.பி.சியின் தொடர் , மற்றும் அண்மையில் வந்த இரு திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்த்து, அமெரிக்கத் தொலைக் காட்சியில் நியூயார்க்கில் வாழும் ‘ஷெர்லக்’கைப் பற்றிய  ‘எலிமெண்டரி’ என்ற ஒரு புதுத் தொடர் 2012-செப்டம்பரில் தொடங்க உள்ளது.

அமெரிக்க ‘ எலிமெண்டரி’ 

தமிழில் ‘ஷெர்லக் ஹோம்ஸ்’ கதைகளின்  புது மொழியாக்கங்கள்  வரத்தொடங்கி உள்ளன.

ஷெர்லாக் ஹோம்ஸ்  

இந்தத் தகவல்கள்  எனக்கு முதன்முதலில் ஷெர்லக் ஹோம்ஸைத் தமிழில் நடமாடச் செய்த ஆரணி குப்புசாமி முதலியாரின் நினைவுகளைத் தூண்டிவிட்டன.  ‘வளவள’ வென்று 40-களில் தமிழில் எழுதிக் கொண்டிருந்த பலருடைய எழுத்துகளுக்கிடையே ஒரு நல்ல கட்டுக் கோப்புடனும், கதைச் சிறப்புடனும் இருந்த ஆங்கிலக் கதையுலகத்தை எனக்குக் காட்டியவர் ஆரணியார்.



முதலில், ஆரணியாரின் படைப்புகளைப்  பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

ஆரணி குப்புசாமி முதலியார் ( 1866/67 - 1925)  முதலில் எழுதிய நாவல்: ‘லீலா’. இது ரெய்னால்ட்ஸின் ( G W M Reynolds) ஒரு நாவலைத் தழுவியது. ( இதே ரெய்னால்ட்ஸின் நாவலைத் தழுவித்தான் மறைமலை அடிகளும் குமுதவல்லி என்ற புதினத்தை எழுதினார் என்பது குறிப்பிடத் தக்கது. இது ரெய்னால்ட்ஸின் நாவல்கள் எப்படிப் பல அறிஞர்களின் மனங்களை அக்காலத்தில் கவர்ந்திருந்தன என்பதற்கு ஓர் அத்தாட்சி ) இதற்குப் பிறகு ஆரணியார் ரெய்னால்ட்ஸ், அலெக்ஸாண்டர் டூமாஸ், வால்டர் ஸ்காட், எட்கர் வாலஸ், கானன் டாயில் போன்றோரின் நாவல்களின் தழுவல்களைத் தந்தார்.  75 நாவல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

ஆரணியார், ஈசான்ய மடத்தின் தலைவரான மகாதேவ சுவாமிகளிடம் தீக்ஷை பெற்று, பல சமய நூல்களையும் எழுதியுள்ளார். அவர் ஆசிரியராக இருந்த ‘ஆனந்த போதினி’ இதழில் அவருடைய பல நாவல்கள், கட்டுரைகள்  வெளியாகி வந்தன.  ஆரணியார் மறைந்த பின்பும் அவருடைய படைப்புகளை ‘ஆனந்தபோதினி’ பதிப்பித்து, விற்றுவந்தது.

அந்தப் பத்திரிகையில் வந்த சில விளம்பரங்கள் கீழே உள்ளன. அவற்றிலிருந்து ஆரணியாரின் சில படைப்புகளைப் பற்றிய விவரங்கள் தெரியவரும்.
விளம்பரங்களின்  தமிழ் நடையே சுவையுடன் இருக்கிறது அல்லவா? 
(  இவை வந்தது 1932-ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆனந்தபோதினி இதழில் என்று நினைக்கிறேன்.)







சிறுவயதில் ஆரணியாரின் பல புதினங்களை நான் படித்து, சேமித்து வைத்திருந்தேன். ஆனால்  ஒரு சில புதினங்களே இப்போது என்னிடம் உள்ளன. அவற்றிலிருந்து, ‘ஆனந்தசிங்’கைச் சிறிது பார்க்கலாமா?

ஆனந்தசிங் தான் தமிழில் முதலில் வந்த ‘ஷெர்லக் ஹோம்ஸ்’.

( தொடரும்)

தொடர்புள்ள பதிவுகள்:

’ஆனந்தசிங்’ ; மற்ற பதிவுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக