முந்தைய பகுதி:
ஆனந்தசிங் - 1
( தொடர்ச்சி)
ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்களால் விளைந்த ‘நன்மைகள்’ யாவை ?
கி.வா.ஜகந்நாதன் சொல்கிறார்: “ அவருடைய மொழிபெயர்ப்பு இயல்பான தமிழ்நடையில் அமைந்திருந்தது ...அது ஒரு சிறப்பு. மற்றொன்று: அவருடைய மொழிபெயர்ப்புகளைப் படித்தவர்கள் மேலும் பல நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைப் பெற்றார்கள்.” போயும் போயும் ரெய்னால்ட்ஸின் நாவல்களையா மொழிபெயர்க்க வேண்டும் என்று சில இலக்கிய விமர்சகர்கள் புருவங்களை இன்று உயர்த்துகின்றனர்.
( ஆனால் கல்கியையும், மறைமலை அடிகள் போன்ற பலரையும் அக்காலத்தில் மனங்கவர்ந்த ஆசிரியர்களில் ஒருவர் ரெய்னால்ட்ஸ் என்பதை மறக்கக் கூடாது! )
ஆனால், இன்றும் மதிக்கப்படும் கானன் டாயிலை அன்று மொழிபெயர்த்தது ஒரு தரமற்ற பணி என்று சொல்ல முடியுமா? மேலும், என்னைப் போன்றவர்க்குப் பல நல்ல ஆங்கில ஆசிரியர்களை அடையாளம் காட்டினவர் ஆரணியார். ( ஒரு சுவையான பிரெஞ்சு ஆசிரியரையும் தான் ; மாரிஸ் லெப்ளாங் ( Maurice LeBlanc ) ! அவரைப் பற்றிப் பின்னர் வேறொரு பதிவில் பார்ப்போம்.)
எனக்குத் தெரிந்து இரு ஷெர்லக் ஹோம்ஸ் நாவல்களை மொழிபெயர்த்தார் ஆரணியார். கானன் டாயிலின் எட்டு கதைகள் கொண்ட “ஹிஸ் லாஸ்ட் போ ”( His Last Bow) என்ற நாவல் “ ஆனந்தசிங்கின் அஷ்டஜயங்கள்” என்று வெளிவந்தது. ( அதில் ஒரு கதையில் ஷெர்லக் ஹோம்ஸ், வாட்ஸன் என்ற பெயர்களையே பயன்படுத்தினார் என்று நினைவு.) ( Hound of the Baskervilles என்ற கானன் டாயில் நாவலை “பாஸ்கரவிலாஸ் படுகொலை” என்று அவர் எழுதியதாகச் சொல்வர்; ஆனால் நான் படித்ததில்லை.)
மற்றொன்று “ ஆனந்தசிங் அல்லது அற்புதத் துப்பறி நிபுணன்” . அவற்றின்
முதல் சில பக்கங்களின் படங்கள் இதோ:
என்னிடம் இருப்பது 1954-இல் வெளிவந்த ஐந்தாம் பதிப்பு. ஆனால் முதல் பதிப்பு எழுதப் பட்டது 1918 -இல்.
“ஆனந்தசிங்” நாவலில் உள்ள 11 கதைகள் கானன் டாயிலின் கீழ்க்கண்ட ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளின் மொழியாக்கங்கள்:
1. The Final Problem
2. The Adventure of the Empty House
3. The Adventure of the Priory School
4. The Adventure of Black Peter
5. The Adventure of the Norwood Builder
6. The Adventure of the Second Stain
7. The Adventure of the Six Napoleons
8. The Adventure of the Three Students
9. The Adventure of the Golden Pince-Nez
10. The Adventure of the Abbey Grange
11. The Adventure of Charles Augustus Milverton
ஆரணியாரின் மொழிபெயர்ப்பிற்கோர் உதாரணமாய் ஏழாம் கதையான, ஆறு நெபோலியன்களின் மர்மத்தைத் தொடர்ந்துவரும் மடல்களில் படிக்கலாம்
முக்கிய பாத்திரங்கள்:
ஆனந்தசிங் - ஷெர்லக் ஹோம்ஸ்
விஸ்வநாதர் - வாட்ஸன்
இன்ஸ்பெக்டர் அண்ணுராவ் - இன்ஸ்பெக்டர் லெஸ்ட்ரேட்
( தொடரும் )
பி.கு. பாயிரத்தில் குறிப்பிட்ட ‘இலண்டன் சாமர்த்தியக் கள்ளர்’ என்ற நாவல்
Adventures of Sherlock Holmes என்ற நாவலின் தழுவல் என்ற நினைவு.
தொடர்புள்ள பதிவுகள்:
ஆனந்த சிங்: மற்ற பதிவுகள்
பசுபதி சார்,
பதிலளிநீக்குஎனக்கு இணையான (வயதில்) ஒருவரை பதிவுலகில் பார்ப்பதில் மெத்த மகிழ்ச்சி. என் அதிகாரபூர்வ பிறந்த நாள் 15-6-1934. ஜாதகப்பிரகாரம் 14-7-1935. நீங்கள் என்னைவிடப் பெரியவராக இருக்கும் பட்சத்தில் வணங்குகிறேன். இளையவராக இருக்கும் பட்சத்தில் வாழ்த்துகிறேன்.
ஆரணி குப்புசாமி முதலியாரின் கதைகளை அந்தக் காலத்தில் விரும்பி படித்திருக்கிறேன். அதே காலத்தில் ரங்கராஜு என்று ஒருவரும் துப்பறியும் கதைகள் எழுதுவார் என்று ஞாபகம்.
வணக்கம்.
உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி. என்னைவிட ஆறு வயது பெரியவர் நீங்கள்; வணங்குகிறேன்!
பதிலளிநீக்குநிற்க.
http://s-pasupathy.blogspot.ca/2011/12/blog-post.html
-இல் கல்கி எழுதிய ஜே.ஆர்.ஆர் நாவலின் மதிப்புரை பர்ர்க்கவும். மேலும் அவரைப் பற்றி எழுதுகிறேன்! உங்களைப் போல் ஒருவர் படித்து இருப்பதே நான் செய்த நற்பேறு!
ஆரணி குப்புசாமி முதலியாரின் தமிழாக்கம் பற்றி அறிந்துகொண்டேன் நன்றி .
பதிலளிநீக்குபொதுவாக வேற்று மொழியிலிருந்து தமிழாக்கம் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது : இது பாத்திரங்களின் பெயர் பற்றியது
துய்மா போன்றவர்களின் வரலாற்று நாவல்களை தமிழாக்கம்செய்யும்போது பாத்திரங்களின் பெயர்களை தமிழ் நாட்டு பெயர்களாக மாற்ற முடியாது .வாசகர்களின் வாசிப்பு ஓட்டத்துக்கு இது ஒரு தடை தான் என்றாலும் இது தவிர்க்க இயலாதது காரணம் வரலாற்றை transpose பண்ண முடியாது .
இலக்கிய தரமுள்ள மோப்பசான் போன்றவர்களின் கதைகளை தமிழாக்கம்
செய்யும்போது எழுத்து நடையும் பாத்திரங்களின் மன போராட்டங்களும் முன்னுரிமை பெறுகின்றன .இங்கும் பாத்திரங்களின் பெயர்களை மாற்றுதல் அந்தந்த கலாசார வாழ்க்கை முறையின் தனி தன்மையை மாற்றி மாறு வேஷம் போடுவது போல் ஆகும்
ஆனால் துப்பறியும் நாவல்களில் சம்பவங்களுக்கு தான் முன்னுரிமை.அவற்றின் தொடரில் புத்தி கூர்மையும் ,ஒன்றை ஒன்று மிஞ்சும் சாமர்த்தியமும் தான் வாசகர்களுக்கு முக்கியம். இதிலிருந்து நாம் அறிவை வளர்த்து கொள்ள முடியும் என்று ஆரணியாரே கூறுகின்றார் .ஆகவே இவற்றில் பெயர் மாற்றம் செய்யலாம் வாசக தன்மையின் ஓட்டம் கெடாமல் இருக்க.அனால் தழுவல் என்றோ தமிழாக்கம் என்றுசொல்லி மூல நூல் ஆசிரியர் பெயரை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
ஆரணியார் இந்த பிரிரெசினையை எவ்வாறு சந்திக்கிறார் என்று அறிந்து கொள்ளஆறுநெப்போலியன் கதையை உங்கள் பதிவில் படிக்க ஆவலாக இருக்கிறேன். தலைப்பிலேயே நெப்போலியன் என்று குறிப்பிட்டதில் இருந்து ஓரளவு அனுமானிக்க முடிகிறது.
மிக்க நன்றி
ராஜகோபாலன்
Sent from http://bit.ly/otv8Ik
நன்றி. “ ஆனந்தசிங்கின் அஷ்ட ஜயங்கள்” என்ற புதினத்தில் ஒரு கதையில் ( இரண்டாம் உலகப் போர் தொடர்பு) ஷெர்லக் ஹோம்ஸ் , வாட்சன் என்றே ஆரணியார் பயன்படுத்தினார் என்பது என் நினைவு.
பதிலளிநீக்கு