செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சாவி -5 : ’வைத்தியர்’ வேதாசலம்

'வைத்தியர்' வேதாசலம் 
சாவி
                                                          




'சாவி’ என்று அழைக்கப்பட்ட சா.விஸ்வநாதன் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைத் தொடர்களில் ‘கேரக்டர்’ மிகச் சிறப்பு.

இருபத்தெட்டு நபர்களைப் பற்றிய “குறும்பு வர்ணனை”கள் கொண்டது அந்நூல். அதிலிருந்து ஒரு ‘கேரக்டர்’ இதோ!. படித்து முடிந்ததும், எங்கேயோ இவரைப் பார்த்தது போல் இருக்கும்! நிச்சயமாய்! 



==== 



எமனே பயந்து நடுங்கக் கூடிய குரல். பேச்சில் நயமோ தயவோ தாட்சண்யமோ இருக்காது. யாரையும் தூக்கி எறிந்தாற் போலத்தான் பேசுவார். நோயாளிகள் தங்கள் வியாதியைப் பற்றி  விவரிக்கும்போது வைத்தியர் வேதாசலம் இஷ்டமிருந்தால் 'ஊம்' போடுவார். காட்டு மிருகங்கள் உறுமுவதைப்போல் அவர் 'ஊம்' போடுவதைக் கேட்கும்போதே நோயாளிகளுக்குச் சப்த நாடிகளும் அடங்கிப் போகும், கடைசியில் அவர் புட்டியில் மருந்தையும், டப்பாவில் லேகியத்தையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் கண்டிப்பான குரலில், ''மூன்று நாளைக்கு இதைச் சாப்பிடணும். அடுத்த வெள்ளிக்கிழமை மறுபடியும் என்னை வந்து பார்க்கணும். இப்போது மருந்துக்கு இரண்டு ரூபாய் கொடுக்கணும்'' என்பார்.


''அடுத்த வெள்ளிக்கிழமை கலியாணங்க. அதனாலே...''


''வியாதியெல்லாம் தீர்ந்த பிறகு கலியாணம் செய்துக்கலாம்...... இப்ப ஒண்ணும் அவசரம் இல்லே...''


''கல்யாணம் எனக்கு இல்லிங்க. என் சகலபாடி மகனுக்கு.''


''அது சகலபாடியோ, வியாசர்பாடியோ? வெள்ளிக்கிழமை இங்கே வந்தாகணும்.''


''ஊம்; அடுத்த கேஸ் யாரய்யா? நீயா? உனக்கு என்ன?''


''மூணு நாளா பாதை பொறுக்கலீங்க. முதுகுப் பக்கம் ஒரே வலியாயிருக்குது. மல்லாந்து படுத்தா மாரை வலிக்குது.''


''அப்படியா? இனி மல்லாந்து படுக்காதே, போ! இந்தா, இந்த மாத்திரையை ஒரு வாரம் சாப்பிடு. சரியாயிடும்! ஊம்... பெரியவரே, உமக்கு என்ன?...''


''உடம்புக்குச் சொகம் இல்லீங்க!''


''அது தெரியுது. இல்லேன்னா எதுக்கு என்னைத் தேடிக்கிட்டு வரப்போறீங்க? வைத்தியரைத் தேடிக்கிட்டு வந்தாலே உடம்புக்குச் சொகம் இல்லேன்னுதான் அர்த்தம். வியாதி என்னங்கறதைச் சொல்லும்!''


''பசி இல்லே.''


''இருக்காது.''


''காது கேட்கல்லே.''


''கேட்காது!''


''கண் தெரியல்லே.''


''தெரியாது.''


''இதுக்கு என்ன செய்யலாங்க?''


''உமக்கு என்ன வயசு ஆகுது?''


''எழுபத்தொன்பது.''


''பேசாமல் வீட்டிலேயே இரும். வயசாயிட்டப்புறம் இதுக்கெல்லாம் மருந்து கிடையாது. அப்புறம்? இந்தக் குடையை இங்கே யார் வைத்தது? நீயா? இந்த ஈரக் குடையைக் கொண்டுவந்து நாலுபேர் உட்காருகிற பெஞ்ச் மேலே வெச்சிருக்கியே? உனக்கு புத்தி இருக்கா?'' வைத்தியர் அந்த ஈரக் குடையை எடுத்துக் கோபமாக வெளியே வீசி எறிவார்.


[ ஓவியம்: நடனம் ]


''வைத்தியரய்யா, என்னைக் கொஞ்சம் சீக்கிரம் கவனியுங்க. தெருவிலே டாக்ஸி வெயிட் பண்ணுது.''
           
''ஏன்யா, உனக்கு எந்த ஊரு?''


''திருநெல்வேலிங்க.''


''மெட்ராஸுக்கு எதுக்கு வந்தே?''


''வைத்தியம் செஞ்சுக்கத்தான்.''


''உன்னோடு எத்தனை பேரு வந்திருக்காங்க?''


''இரண்டு பேரு!''


''எங்கே தங்கியிருக்கீங்க?''


''ஓட்டல்லே.''


''ஏன்யா, ரயிலுக்கும் ஓட்டலுக்கும் பணத்தைச் செலவழிச்சுக்கிட்டு வந்தவருக்கு டாக்ஸிக்கு வெயிட்டிங்கிலே ஒரு நாலணா கூட ஆயிட்டா குடியா முழுகிடும்? உனக்கு முன்னாலே வந்தவங்களையெல்லாம் கவனிச்சப்புறந்தான் உன்னைக் கவனிப்பேன். அவசரமாக இருந்தா எழுந்து போகலாம்.''


''ஐயா, ஐயா, ஒரு மாசமா வயிற்றுவலி தாங்காமல் துடிக்கின்றேன்யா.''


''இந்தச் சூரணத்தைத் தேனிலே குழைச்சு மூணு நாளைக்குச் சாப்பிடு. சரியாப் போயிடும்.''


''ஆகாரம் என்னங்க சாப்பிடலாம்?''


''மசாலா தோசையும், மலபார் அடையும் சாப்பிடு. ஆளைப்பாரு ஆளை! வயிற்று வலின்னுட்டு ஆகாரம் என்ன சாப்பிடலாமாம்? ஒரு மாசத்துக்குச் சாப்பாட்டையே தொடக்கூடாது. தெரியுமா? ரவையும், சர்க்கரையும் சேர்த்துக் கஞ்சி பண்ணிச் சாப்பிடணும். ரவையும் சர்க்கரையும் சேர்த்து லட்டா செஞ்சு சாப்பிட்டா என்னான்னு கேட்கக் கூடாது. ஊம்... உமக்கு என்ன?''

''அடிக்கடி மயக்கமா வருது.''



''உத்தியோகம் எங்கே?''


''ரயில்வேயிலே இருக்கேன்.''


''ரெயில்வேலே இருக்கேன்னா போறாது. போர்ட்டர்கூட ரெயில்வேலேதான் இருக்கான். என்ன வேலைங்கறதைச் சொல்லணும்.''


''ஹெட் கிளார்க்!''


''அப்படிச் சொல்லுமே; சம்பளம்?''


''நூற்றெண்பது ரூபாய்.''


''பிடிப்பு உண்டா?''


''இடுப்பாண்டை அடிக்கடி பிடிச்சுக்குது.''


''ஓய், அதைக் கேட்கலை. சம்பளத்திலே பிடிப்பு உண்டான்னு கேட்டேன்.''


''உண்டு, உண்டு; பிடிப்பெல்லாம் போக கைக்கு நூற்றைம்பதுதான் வருது!''


''ஊம்; இதிலே மூணு வேளை மருந்து இருக்குது; நாலு மணிக்கொரு தடவை சாப்பிடணும். அப்புறம் ஒரு மண்டலம் நவரக்கிழி சிகிச்சை செய்துக்கணும். நூறுரூபாய் செலவாகும். அதுக்குத்தான் உம் வேலையைப்பற்றி விசாரிச்சேன்.''


''சரிங்க, இந்த மூணு அவுன்ஸை எத்தனை நாளைக்குச் சாப்பிடறது?''


''நாலு மணிக்கு ஓர் அவுன்ஸ்வீதம் மூணு வேளை சாப்பிட்டால், இந்தப் புட்டியிலே இருக்கிற மருந்து   ஒருநாளைக்குத்தான் காணும். இந்தச் சின்னக் கணக்குக்கூடத் தெரியறதில்லே. நான் சொல்றப்பவும் கவனிக்கிறதில்லே. ஊம்... அடுத்த கேஸ் யாரு?...''


''சவனப்பிராஸம் அரைபாட்டில் வேணுங்க!''


''இப்படி எழுந்து வந்து, என்னுடைய நாற்காலியிலே உட்கார்ந்துகொள்ளும். என்னய்யா முழிக்கிறீர்? ஏன்யா வைத்தியர் நானா? நீரா? உம் வியாதி என்னங்கறதைச் சொல்லும். மருந்து என்ன என்பதை நான் சொல்கிறேன் சவனப்பிராஸம் வேணுமாம், சவனப்பிராஸம்!''


வைத்தியர் வேதாசலம் நோயாளிகளிடம் என்னதான் சீறிப் பாய்ந்தாலும் எவ்வளவுதான் எரிந்து விழுந்தாலும் எல்லோரும் அவரைத்தான் தேடி வருவார்கள். என்ன செய்யலாம்? வைத்தியருக்கு வாய் பொல்லாதுதான். ஆனால் கைராசிக்காரராயிருக்கிறாரே!

 =============
[ நன்றி: சாவியின் ‘கேரக்டர்’ நூல் ]

தொடர்புள்ள பதிவுகள்

சாவியின் படைப்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக