வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

வெண்பா வீடு - 1: இன்று ஏன் பல்லிளிப்பு?

என் நண்பன் ‘நம்பி’, அவன் மனைவி ‘நங்கை, அவர்கள் குழந்தைகள் யாவரும் இருக்கும் வீட்டின் பெயர் ‘வெண்பா வீடு’;

இது என் வீட்டிற்கு அருகில்தான்  உள்ளது. எல்லோரும் அங்கே ‘வெண்பா’க்கள் மூலமாய்த்தான் பேசிக்கொள்வார்கள்.


ஒரு நாள்  ‘வெண்பா வீட்'டிற்குள் நுழையும் போது, நான் கேட்டது:


நம்பி:


முன்தூங்கிப்  பின்னெழுந்துன் மூஞ்சிக்குச் சாயமிட்டுப்
பொன்னான நேரத்தைப் புத்தகத்தில் பாழாக்கி
மிஞ்சிடுமிவ் வேளையிலே வீண்வம்பு பேசாமல்
கொஞ்சம்நீ என்னுடன் கொஞ்சு.



இதற்குப் பதில் சொன்னாள் நங்கை


நங்கை:


பண்பற்ற நண்பருடன் பாதிநாள் சீட்டாட்டம்;
கண்கெடுக்கும் தீயதொலைக் காட்சி சிலமணிகள்;
மின்னிணைய மேனகைகள் மீதிநாள் வீணடிக்க
என்னிடமின்(று) ஏன்பல் இளிப்பு ?



என்கையில் இருந்த சீட்டுக் கட்டை அவசரம் அவசரமாக மறைத்துக் கொண்டு, நான் வெண்பா வீட்டை விட்டு வெளியேறினேன்.

[ பல வருடங்களுக்கு முன் ‘மன்றமைய’த்தில் ( forumhub)  ‘வெண்பா வடிக்கலாம் வா!’ என்ற இழையில் எழுதியது. ]

 தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள் 

7 கருத்துகள்:

  1. அருமையான அகம்மகிழ் நகைசுவைபா இந்த வெண்பாக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான நகைச்சுவை கவிதைகள். அற்புதமான கற்பனை.

    பதிலளிநீக்கு
  3. If it is today's world it might have referred to whatsapp be FB or Twitter

    பதிலளிநீக்கு