செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சசி -7 : பொதுஜன சேவை

பொதுஜன சேவை 
சசி





ரிசி, சர்க்கரை போன்ற ரேஷன் பண்டங்களை 'பிளாக் மார்க்கெட்'டில் விற்கிறவர்களைக் கண்டால் உடனே அவர்களைப் போலீஸாரிடம் ஒப்புவித்துத் தண்டனை அடையச் செய்யவேண்டும் என்றும், அது ஒரு பெரிய பொதுஜன சேவையாகும் என்றும் பத்திரிகைகளில் அடிக்கடி படித்திருந்த எனக்கு, அன்று அந்த ஆசாமியிடம் அளவு கடந்த கோபம் வந்ததில் என்ன ஆச்சரியம்?

துணிச்சல் என்றால், சாதாரண துணிச்சலா அவனுக்கு! பட்டப்பகலில், பலர் நடமாடும் ஒரு பொது இடத்தில் நின்றவாறு, அந்தப் பேர்வழி சிறிய மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு ''வெள்ளை மணல், எத்தனை வீசை வேணும்? வீசை 2 ரூபாய்'' என்று கொஞ்சங்கூட பயப்படாமல், பக்கத்திலிருந்த ஒரு மனிதரிடம் விலை கூறிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த மனிதர் ஒரு நீண்ட பெருமூச்சுடன், ''சர்க்கரைப் பஞ்சம் என்றுதான் ஒழியுமோ! இந்த பிளாக் மார்க்கெட்காரர்கள் என்று தான் ஒழிவார்களோ!'' என்று முணுமுணுக்கவே, பிளாக் மார்க்கெட் ஆசாமி கோபத்துடன், ''ஏன் ஐயா எங்களை ஒழியச் சொல்லுகிறீர்? உங்களைப் போன்ற ஆசாமிகள், எவ்வளவு அதிக விலை கொடுத்தும் சர்க்கரையை வாங்க முன் வருவதால் தானே ஐயா, நாங்கள் செழிக்கிறோம்! முதலில் நீர் தான் ஒழிய வேண்டும்!'' என்று இரைச்சல் போட ஆரம்பித்தான். 

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த எனக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது. 'வெள்ளை மணல்' என்று சொல்லி, சர்க்கரையை பிளாக் மார்க்கெட் விலைக்கு விற்கும் அந்தப் பேர்வழியை எப்படியாவது போலீஸாரிடம் அப்போதே ஒப்புவித்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஆனால், அவனுடைய குற்றத்தை எப்படிப் போலீஸார் முன்னிலையில் ருசுப்படுத்துவது? ''நான் யாருக்கும் விற்கவில்லை!'' என்று அவன் சொல்லி விட்டால்?

அதற்கு ஒரு நல்ல யோசனை தோன்றிற்று எனக்கு. அவனிடமிருந்து 'வெள்ளை மணலை' அப்படியே நாம் விலைக்கு வாங்கிக்கொண்டுவிட்டு, பக்கத்திலிருந்த மனிதரை சாட்சி சொல்லச் சொன்னால், சட்டப்படி அந்த ஆசாமியின் குற்றத்தை ருசுப்படுத்திவிடலாமல்லவா?

இந்த யோசனையின்படி, அவனிடமிருந்து 'வெள்ளை மணல்' மூட்டையை விலைக்கு வாங்கி விட்டேன். அவன், ''இன்னும் உங்களுக்கு வேணுமானால், நம்ம வீட்டுக்கு நாளைக்குக் காலையிலே வாங்க, தரேன்'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டபோது, ''தம்பி! சித்தே என்னோடு போலீஸ் ஸ்டேஷன்வரை வந்துவிட்டுப் போயேன்'' என்றேன்.

''எதுக்காக?'' என்றான் அவன் முறைப்பாக.

''பிளாக் மார்க்கெட்டிலே சர்க்கரை விற்ற குற்றத்துக்காக!''

''உங்களாலே அதை ருசுப்படுத்த முடியுங்களா?''

''ஏன் முடியாது? இதோ, இந்த நண்பர் எனக்கு சாட்சி சொல்லுவார்.''

''சொன்னா அவருக்குத்தான் ஆபத்து. பைத்தியம்னு சொல்லி, பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோவாங்க.''

''ஏன்?''

''இந்த மூட்டையில் இருக்கிற மணலைப் பார்த்து, சர்க்கரைன்னு சொன்னா பின்னே எங்கே கொண்டு போவாங்களாம்?''

''இதுலே மணலா இருக்குது?''

''வேற என்ன இருக்கு? நான்தான் ஆரம்பத்திலேர்ந்து சொல்லிண்டு வந்தேனே, வெள்ளை மணல்னு!''

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற படைப்புகள்

2 கருத்துகள்: