தேவனுக்கு வழி விடுங்கள் !
ராணிமைந்தன்
ராணிமைந்தன்
[ மேல் வரிசையில் ஓவியர்கள்: மணியம் செல்வன், நடனம், கேசவ். ] |
எளிமையாகவே வாழ்ந்து
தன் 44 வயதில் மறைந்தவர்
எழுத்தாளர் தேவன் (1913 - 1957). இம்மாதம் கடந்த எட்டாம்
தேதி (8.9.13) ஞாயிற்றுக் கிழமையன்று
சென்னை சிவகாமி பெத்தாச்சி அரங்கில், தேவன் அறக்கட்டளை எடுத்த தேவன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியும்
அதேபோல் எளிமையாகவே இருந்தது. விழாத் துளிகளில் சில:
ஞாயிற்றுக் கிழமையாக
இருந்தாலும் அன்று காலை ஒன்பது மணிக்கே முக்கால் வாசி அரங்கம் நிரம்பியதற்கு முக்கியக்
காரணம் சஞ்சய் சுப்ரமணியம். ஒன்றே முக்கால் மணி நேரம் ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டார்.
அற்புதமான கச்சேரி.
தேவனின் நெருங்கிய
நண்பர் ஓவியர் கோபுலு கைத்தாங்கலாக மெதுவாக அடிமேல் அடி எடுத்து வந்தபோது அவரை வாயிலில்
நின்று வரவேற்றார் ஓவியர் நடனம். தேவனுக்கும் இந்த இருவருக்கும் தொடர்பு உண்டு. அவருடன்
நெருங்கிப் பழகி அவர் கதைகளுக்கு சித்திரம் வரைந்தவர் கோபுலு என்றால், தேவனின் மறைவிற்குப் பிறகு வெளியாகியுள்ள
முப்பதுக்கும் மேலான அவருடைய புத்தகங்களில் பெரும்பாலானவற்றுக்கு அட்டைப் படச் சித்திரம்
நடனத்தின் கைவண்ணம்தான்.
பலரின் பார்வையில்
"தேவன் வரலாறு'' என்ற தலைப்பில் சாருகேசி
தொகுத்த நூலை கீழாம்பூர் வெளியிட, திருப்பூர் கிருஷ்ணன்
பெற்றுக் கொண்டார்."ஒருமுறை அண்ணா பெருங்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அந்த
இடத்தின் வழியாக தேவன் காரில் வரவும், அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் அண்ணாவிடம் போய் "தேவனின்
கார்' என்று சொன்னதும்
"ஆனந்த விகடன் தேவனா... உடனே அவர் போக வழி விடுங்கள்' என்றாராம் அண்ணா. இதைச் சொன்னவர்: கீழாம்பூர்.
"தேவனின் கதைகளை பதிப்பிக்கும்போது
கோபுலுவின் சித்திரங்களையும் சேர்த்து வெளியிட வேண்டும்'' என்றார் திருப்பூர் கிருஷ்ணன்.
தேவனைப் பற்றி இவ்வளவு
தெரிந்த ஒருவர் கனடாவில் இருக்கிறாரா என்று வியக்க வைத்தார் அங்கிருந்து வந்து உரை
நிகழ்த்திய பேராசியர் எஸ். பசுபதி. தன் கருத்துகளை சில நிமிடங்கள் பாடல்களாகவும் அவர்
பாடினார். ""தேவன் எழுத்தில் இசையின் தாக்கம் உண்டு. அவரது "மைதிலி'
நாவல் முழுக்க முழுக்க இசைத் தொடர்பானதுதான்.
தேவன் போன்று எழுதுபவர்களை ஊக்குவிக்க போட்டி வைக்கலாம்'' என்றார் பேராசிரியர் பசுபதி.
எழுத்தாளர் அம்பை
(சி.எஸ். லக்ஷ்மி) ஒரு காரியம் செய்தார். தேவனின் "லட்சுமி கடாட்சம்' நாவலுக்கு கோபுலு வரைந்த சித்திரங்களை
ஸ்கேன் செய்து அதை விஷுவலாக திரையில் காட்டியது புதுமையான முயற்சியாக இருந்தது. அது
மட்டுமல்ல, அந்தச் சித்திரம் ஒவ்வொன்றையும்
காட்டியபோது எந்தக் காட்சிக்காக கோபுலு வரைந்தது என்று கையில் எந்தக் குறிப்பையும்
வைத்துக்கொள்ளாமல் அம்பை விளக்கியது வியக்க வைத்தது. மேலும், ""தேவன் காலத்தில் உள்ள நிலையையொட்டி
பெண் பாத்திரங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் சுதந்திரத்தை வலியுறுத்துவதாக அவரது
கதைகள் அமைந்தன'' என்றார் அம்பை.
தேவன் அவர்களின் சகோதரி
மகன் கே. விசுவநாதன் (அன்னம்), தேவனின் பரம ரசிகர்
வாதூலன், பதிப்பாளர் "அல்லயன்ஸ்'
சீனிவாசன், திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் ஆகியோருக்கு தேவனின்
நினைவாகப் பரிசு வழங்கப்பட்டது. "பலரின் பார்வையில் தேவன்' புத்தகத்தைப் பதிப்பித்து நிகழ்ச்சிக்கு
வந்த அனைவருக்கும் இலவசமாக வழங்கினார் "அல்லயன்ஸ்' சீனிவாசன்.
தேவனின் முதல் சிறுகதை
"மிஸ்டர் ராஜாமணி'யை வெளியிட்டதுடன்,
அவரது எழுத்தில் ஈர்க்கப்பட்டு
விகடனில் துணை ஆசிரியராக சேர்த்துக்கொண்டார் கல்கி. பின்னர் "தேவன்' விகடனின் நிர்வாக ஆசிரியராகவே மாறினார்.
அவரது எழுத்தில் நகைச்சுவை நிறைந்திருக்கும். ஜஸ்டிஸ் ஜகநாதன், மிஸ் மாலதி, சி.ஐ.டி. சந்துரு, லட்சுமி கடாட்சம், ராஜத்தின் மனோரதம், துப்பறியும் சாம்பு எல்லாமே வெவ்வேறு
ரகம் என்றாலும் நகைச்சுவையே பிரதானம் என்று பேசியவர்கள் பலரும் ஒருசேர குறிப்பிட்டார்கள்.
ஒரு நூற்றாண்டு விழா
என்றால் அதற்கான பதாகைகளை எப்படியெப்படி எல்லாமோ டிûஸன் செய்து பொருத்துவார்கள். ஆனால் இந்த விழாவிற்கு இரண்டே
இரண்டு பேனர்கள். அவையும் அநியாயத்திற்கு சிறியதாக இருந்தன.
சாருகேசியின் தனி மனித
முயற்சிதான் இந்த நிகழ்ச்சியை சாத்தியமாக்கி இருந்தது என்பது தெளிவாகப் புரிந்தது.
விழா நேரத்தை அவர் எப்போதும்போல துல்லியமாக நிர்வகித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்ச்சி முடிந்ததும்
வந்திருந்தவர்கள் கருத்து வேறுபாடின்றி வெளியிட்ட ஒரு மனதான கருத்து: "ஒரு நூற்றாண்டு
விழாவை இதை விட எளிமையாக யாராலும் கொண்டாடி விட முடியாது''.
(படம்: ஏ.எஸ். கணேஷ்)
[ நன்றி : தினமணி ]
தொடர்புள்ள பதிவுகள்;
தேவன் படைப்புகள்
தேவன்: நடந்தது நடந்தபடியே
துப்பறியும் சாம்பு
தேவன்: மிஸ்டர் ராஜாமணி
தேவன்: மாலதி
தேவன்: கண்ணன் கட்டுரைகள்
தேவன்: நடந்தது நடந்தபடியே
துப்பறியும் சாம்பு
தேவன்: மிஸ்டர் ராஜாமணி
தேவன்: மாலதி
தேவன்: கண்ணன் கட்டுரைகள்
//தேவனைப் பற்றி இவ்வளவு தெரிந்த ஒருவர் கனடாவில் இருக்கிறாரா என்று வியக்க வைத்தார் அங்கிருந்து வந்து உரை நிகழ்த்திய பேராசியர் எஸ். பசுபதி// வாழ்த்துகள்
பதிலளிநீக்கு