வியாழன், 26 ஜூன், 2014

ம.பொ.சி -1

நன்றியுள்ள தமிழ் என்றும் மறவாது! 
ம.பொ.சிவஞானம் 


ம.பொ.சிவஞானம்


ஜுன் 26. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களுடைய பிறந்த தினம்.

பள்ளிப் பருவத்திலே அவருடைய பல உரைகளைக் கேட்டு, அவற்றில் நனைந்து,  உடலும், உள்ளமும் சிலிர்த்து வளர்ந்தவன் நான். அவருடைய நினைவில், அவர் எழுதிய இரு கட்டுரைப் பகுதிகளை இங்கிடுகிறேன். இரண்டு பகுதிகளும் அவருக்கும் , பேராசிரியர் ‘கல்கி’க்கும் இருந்த அன்பையும், நட்பையும் சுட்டிக் காட்டும் இதய ஒலிகள்.

ஒரு சமயம் ம.பொ.சி கல்லால் அடிபட்டபோது , “ ம.பொ.சி. யின் நெற்றியிலிருந்து இன்று சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் ஓராயிரம் ம.பொ.சிகள் தோன்றுவார்கள்” என்று ஆவேசத்துடன் எழுதினார் “கல்கி” !

கீழே இருக்கும் முதல் கட்டுரை, பேராசிரியர் கல்கி மறைந்தவுடன், டிசம்பர் 19, 1954 - இதழில் ம.பொ.சி எழுதியது.




இரண்டாவது , ‘கல்கி’ இதழின் பொன் விழா மலரில் (1992) அவர் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி :

கல்கி’. ஒரு நாடக விமர்சனம் எழுதும்போது, “நான் மிகவும் ரசித்த பகுதி ‘இடைவேளை’ என்று திரை விழுந்ததே அந்தப் பகுதிதான் “ என்று எழுதினார். நகைச்சுவை இருக்குமே தவிர மனம் புண்படும்படி இருக்காது. யாரையாவது பற்றிக் கடுமையாக எழுதிவிட்டாரென்றால், அதற்குப் பரிகாரம் காண்பதுபோல் அடுத்த சந்தர்ப்பத்திலேயே எழுதுவார். 

இதே நகைச்சுவை அவர் மேடைப் பேச்சிலும் துள்ளல்நடை போடும்.  


இசையை வளர்ப்பதிலே, மொழியை வளர்ப்பதிலே, நாட்டுப்பற்றை வளர்ப்பதிலே கல்கி ஆற்றியுள்ள தொண்டு கிருஷ்ணமூர்த்தியின் உள்ளத்திலிருந்து பிறந்த எதிரொலி ஆகும்.


அது மட்டுமல்ல, அந்தக் கால கதை, நாவல்களில் அக்கிரஹார பாஷைதான். அதை மாற்றி ஒரு தெளிவான தமிழ் நடையுடன் எழுதி மாறுதலைப் புகுத்தினார் ‘கல்கி’. 


ஒரு நாவல் முடிந்ததும், ஒரு மாதமோ இரண்டு மாதமோ சுற்றுலாச் செல்வார் ‘கல்கி’. அந்த சுற்றுலாவில் நல்ல பல யோசனைகள் உருவாகும். கிண்டி காந்தி மண்டபம், எட்டயபுரம் பாரதி மண்டபம் போன்றவை அப்படி உருவானவைதாம். அதே போல் அடுத்த நாவலுக்கான ஏற்பாடுகளில் இறங்குவது மட்டுமல்லாமல், அது சம்பந்தமாக வரலாற்று இடங்களையும் சென்று பார்ப்பார்.


இஸ்லாமிய மன்னர்கள், குறிப்பாக ஆர்காடு நவாப் பற்றி வரலாற்றுப் புதினம் எழுத வேண்டும் என்று என்னிடம் சொல்லி வந்தார். “தெற்கில் ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், வடக்கில் ஆண்டவர்கள் போல நடந்து கொண்டதில்லை. இந்து மன்னர்களைப் பற்றி எழுதியாகி விட்டது. இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி எழுத வேண்டும்” என்று சொல்வார். ஓர் உதாரணம் கூடச் சொன்னார்: “ தேசிங்கு ராஜன் நவாபை எதிர்த்துப் போராடினான். ஆனால் முகமது கான் என்பவன்தான் தேசிங்கு ராஜனின் தளபதி “. இது போன்ற விஷயங்கள் இருப்பதால் நல்ல வரலாற்று நாவல் உருவாக முடியும் என்பது அவர் கருத்து. 


‘கல்கி’யின் கலை விமரிசனங்கள் கலையோடு நகைச்சுவையயும் வளர்த்தன. கலை விமரிசனத்தையே ஒரு கலையாக வளர்த்தார் அவர். ‘காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே” என்று ஒரு இசைவாணர் பாடிக் கொண்டிருந்தார். அவர் “காலைத் தூக்கி தூக்கி ... என்று பல்லவியை நிரவல் செய்ததைக் குறிப்பிட்டு, “எப்போது காலைக் கீழே இறக்குவார் என்றாகி விட்டது என்று எழுதினார் 

முதல் கட்டுரைத் தலைப்பைப் போல, ம.பொ.சி -ஐயும் “நன்றியுள்ள தமிழ் என்றும் மறவாது! “ 

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்: