வியாழன், 19 பிப்ரவரி, 2015

செந்தமிழ்ப் பாட்டன் ; கவிதை

செந்தமிழ்ப் பாட்டன்

பசுபதி


[ ஓவியம்: ஏ.எஸ்.மேனன் ]


19 பிப்ரவரி . டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் பிறந்த தினம்

உ.வே.சா  ‘சிலப்பதிகார’த்தை 1892 -இல் பதிப்பித்தார். அந்நூலில் உள்ள ‘கந்துக வரிப்’ பாடலை நம் இலக்கியத்தில் வந்த முதல் சந்தப் பாடல் என்றே சொல்லலாம்!  பிற்காலத்தில் எழுந்த எழுசீர் சந்த விருத்தத்திற்கு இது ஒரு முன்னோடி. அந்தக் கந்துகவரி யாப்பின் வடிவத்திலேயே உ.வே.சா வின் புகழ் பாடும் ஒரு முயற்சி இதோ!


செல்ல ரித்த பண்டை யோலை சென்ற லைந்து தேடியே
புல்ல ரிக்க வைக்கு மினிய புத்த கங்கள் பொன்னொளிர்
செல்வம் யாவும் சேர்த்த வர்க்கென் சென்னி யென்றுந் தாழுமே
. . . சீலன் சாமி நாத னுக்கென் சென்னி யென்றுந் தாழுமே (1)

தேமி குந்த காப்பி யங்கள் தீச்செ லாமல் காத்தவன்;
தோமி லாத பார்வை கொண்டு தொன்மை நூல்கள் ஆய்ந்தவன்;
சாமி நாத ஐய னுக்கென் சென்னி யென்றுந் தாழுமே
. . . சங்க நூல்கள் மீட்ட வர்க்கென் சென்னி யென்றுந் தாழுமே (2)

இன்று நேற்றி ரண்டு காலங் கூடும் பால மாகியே
கண்ட காட்சி சொந்த வாழ்வு காகி தத்தில் வார்த்தவன்;
தென்னி சைக்கு நண்பர் முன்பு சென்னி யென்றுந் தாழுமே
. . . செந்த மிழ்தன் பாட்ட னுக்கென் சென்னி யென்றுந் தாழுமே. (3) 




( கலைமகள் மார்ச் 2002 இதழில் வந்த கவிதை .) 


~*~o0o~*~

தொடர்புள்ள பதிவுகள்: 

உ.வே.சா


7 கருத்துகள்:

  1. பண்டை காலப் பாடல் வண்ணம் படைத்த ளிக்க வல்லையோ?
    கண்டு வந்தேன் கண்(டு) உவந்த கால மிந்த காலமே!
    தொண்ட னாகி வாழ்வோர் போற்றும் தூய நெஞ்சம் உன்னுமே!
    உண்டு கல்லா இன்மை ஓட்டத் தூய நெஞ்சம் உன்னுமே!

    அருமையான சந்தப் பாடல் வடிவத்தின் மீட்டெடுப்பும் அதனை தமிழறிஞர்க்கு அர்ப்பணித்திருப்பதும் மிக அருமை அய்யா!
    தங்களிடம் கற்கிறேன்.
    தங்களுக்கு நேரம் வாய்ப்பின்,
    யாப்புச்சூக்குமம்
    மற்றும் இதன் தொடர்பதிவுகள் படித்து அவை குறித்துத் தக்க அறிவுரை வழங்க வேண்டுகிறேன்.
    நான் இணையத்திற்குப் புதியவனும்,நிச்சயம் தங்களை விட இளையவனுமாய் இருப்பேன்.
    நெறிப்படுத்துங்கள்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  2. பல காலமாயிற்று ஐயா, இப்படிப்பட்ட கவிதைகள் பார்த்து! இப்பொழுதெல்லாம் கவிதைகள் வரிக்கு மூன்று, நான்கு சொற்கள் மட்டுமே கொண்டு யாக்கப்படுகின்றன. முன்பெல்லாம் 'கோகுலம்' போன்ற சிறார் இதழ்களில் கூட இப்படிப்பட்ட சந்தக் கவிதைகளெல்லாம் வரும். இப்பொழுது எங்குமே பார்க்க முடிவதில்லை. தங்களுடைய இந்த அருமையான கவிதையைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. @இ.பு.ஞானப்பிரகாசன் வருகைக்கும் , கருத்துக்கு நன்றி.
    @ஊமைக்கனவுகள். நன்றி. என் வலைப்பூவில் என் யாப்பிலக்கணப் பதிவுகள் பற்றிய விவரங்கள் உள்ளன. மேலும், என் நூலைப் பற்றியும் விவரம் உள்ளது.இவை உங்களுக்குத் துணையாய் இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. தங்களைப் படித்திட அவா.. தங்கள் வலைப்பூ எனக்கு பூரண தீனி போடும் என உன்னுகின்றேன். தங்களின் நட்பு என்றோ கிட்டியிருக்க வேண்டும். காலம் என் கவிதைகளுக்கு அங்கீகாரம் வழங்க தாங்கள் இறைதுணையால் எனக்கு துணையாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கையில் நான்... தாங்கள் உடல் உள ஆரோக்கியத்திற்கு அல்லாஹ் துணை! - தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை. நேற்றிரண்டு காலம் கூடும் பாலமாகி அரிய பொக்கிஷங்களை அள்ளித்தரும் பசுபதி அவர்களுக்கு மிக மிக நன்றி .
    அன்புடன்
    அலமேலு மணி

    பதிலளிநீக்கு
  6. @அலமேலு மணி, உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு