ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

கொத்தமங்கலம் சுப்பு -10

படத்தொழில் செழிக்கப் பாடுபட்டவர்கள்!
கொத்தமங்கலம் சுப்பு

15 பிப்ரவரி.  கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவின் நினைவு நாள்.

1974-இல் அவர் மறைந்தபோது , 


மக்களின் உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் பரவ வேண்டும், நம் கலாசாரங்கள் ரத்தத்தில் ஊற வேண்டும், பண்பட்ட சிந்தையில் உயரிய கருத்துக்கள் பயிராகி, நாடு செழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் காலமெல்லாம் எழுதி வந்த அன்பர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் உறக்கத்திலேயே உயிர்நீத்து, இறைவனடி சேர்ந்து விட்ட செய்தி, தமிழன்னையைக் கண்கலங்கச் செய்துவிட்டது.

திரையுலகில் பணியாற்றிய போதும், பத்திரிகைகளில் எழுதிய போதும், கவியரங்குகளில் பங்கு பெற்றபோதும் சுப்பு தம் முத்திரையைப் பதிக்காமல் விட்டதில்லை. தமது பாடல்களில், எழுத்தில், பேச்சில் தேசிய உணர்வையும், தமிழ்ப்பற்றையும், கிராமிய மணத் தையும், நகைச்சுவையையும் கலந்து நம் இதயத்தைத் தொடும் ஓர் அபூர்வ பாணியை உருவாக்கியவர் அவர்.

என்று எழுதியது ‘விகடன்’. 

அவருக்கு ஓர் அஞ்சலியாக 1957-இல் ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு பகுதியை இங்கிடுகிறேன்.


1931-இல் தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியானது . அதைப் பற்றி கல்கி எழுதிய விமரிசனத்தையும் நீங்கள் இங்கே   படித்திருப்பீர்கள். அதனால், 1957-இல் தமிழ் வெள்ளித் திரை தன் வெள்ளி விழாவைக் கொண்டாடியது! இதையொட்டி, 27-01-57 இதழ் விகடனில் பல சினிமாக் கட்டுரைகள் வெளிவந்தன. அந்த இதழில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு துளிதான் இது! 

==========
க்காலத்தில் 'பிளேபாக்' முறை கிடையாது. நடிகருக்குப் பக்கத்தில் ஒரு பஜனை கோஷ்டி வந்து கொண்டிருக்கும். இடுப்பிலே ஆர் மோனியத்தைக் கட்டியிருப்பார்கள். பிடில்காரர் கையிலே பிடிலை வைத் துக்கொண்டு வாசித்துக்கொண்டே நடந்து வருவார். மிருந்தங்கக்காரர், இடுப்பில் மிருதங்கத்தை வைத்துக் கொண்டு தட்டிக்கொண்டு வருவார். நடிகர் காமிரா எதிரில் பாடிக்கொண்டே நடந்து வருவார். பக்க வாத்தியக்காரர்கள் எல்லோரும் சற்று விலகி, காமிராவின் எல்லைக்குள் விழுந்து விடாமல் வந்துகொண்டிருப்பார்கள். நடிகரின் தலைக்கு மேல், ஒரு துரட் டிக் கொம்பில் சொருகிய மைக் பிரயாணம் செய்துகொண்டே வரும். பக்க வாத்தியமும் பாட்டும் ஒன்றாக ரிக்கார்ட் செய்யப்பட்டுவிடும்.

இதிலே ஒரு வேடிக்கை... நடு ஷூட்டிங்கில் காற்று திசை மாறி அடிக்க ஆரம்பிக்கும். நடிகர் பாட்டை 'மைக்' ரிக்கார்டு செய்துவிடும். ஆனால், பக்க வாத்தியத்தை யெல்லாம் காற்று அடித்துக்கொண்டு போய்விடும். படத்திலே பாட்டைக் கேட்கும்போது, பாதிப் பாட்டில் பக்க வாத்தியம் கேட்கும்; இன்னொரு பாதியில் பக்க வாத்தியங்கள் கேட்காது. இன்று 'பிளேபாக்' வந்துவிட்டது. இறைவனின் ஒரு குரலுக்குக் கட்டுப்பட்டு உலகம் நடப்பதுபோல இன்று தமிழ் சினிமா 4, 5 குரல்களுக்குக் கட்டுப்பட்டே நடந்து வருகிறது.

திடீர் திடீர் என்று, ஒரு வருஷத்தில் கட்டிய கட்டடங்களுக்கு எல்லாம் 'சரோஜ், சரோஜ்' என்று பெயர் வைத்தார்கள். அப்பொழுது பிறந்த பெண் குழந்தைகளுக்கு எல்லாம் சரோஜா என்று பெயரிட்டார்கள். காரணம், பேபி சரோஜா நடித்த 'பால யோகினி' படம்தான். ஷெர்லி டெம்பிள் நடித்த படங்களையே பார்த்து மகிழ்ந்திருந்த நம் மக்கள், தமிழ்நாட்டில் ஒரு பேபி சரோஜாவைக் கண்டவுடன் சிந்தை மகிழ்ந்தனர். இப்படி ஒரு சின்னக் குழந்தையின் பெயரால் கட்டடங் கள் கிளம்பியதும், குழந்தைகளுக் குப் பெயரிட்டதும் சரித்திரத்தி லேயே காண முடியாத விஷயம்.

இம்மாதிரி சினிமாவை நல்ல தொழிலாக்கி, நிறைய மக்கள் இதிலே ஆனந்தம் அடைய வேண் டுமென்று பாடுபட்டவர்கள் தமிழ் நாட்டில் எத்தனையோ பேர்! அவர்கள் எல்லோரும் இன்றைய சினிமா அபிவிருத்தியைப் பார்த்து ஆனந்திப்பார்கள். இன்று சினிமா வீறு கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குப் போட்டியாக, டெலிவிஷன் வரக் காத்துக்கொண்டு இருக்கிறது.

ஆனால், கலைகளில் எதையும் போட்டி என்று சொல்ல முடியாது. ரோஜா வந்ததற்காக மல்லிகை மறைந்து விடவில்லை; மருக்கொழுந்து வந்ததற்காக தாமரை மணம் வீசாமல் இல்லை. காலப்போக்கிலேயே மலர்வது கலை! என்றென்றைக்கும் அது வளருமே யொழிய, மறையாது!

[ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்: 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக