திங்கள், 6 ஏப்ரல், 2015

உ.வே.சா -2

ஆசிரியரின் 1872-ஆம் வருட கடிதம் 

ஏப்ரல் 6, 2015.

இன்று மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் 200-ஆவது பிறந்தநாள்.






உ.வே.சா அவர்கள் தன் ஆசிரியரிடம் வைத்திருந்த  பக்திக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. பிள்ளையவர்கள் என்று சொல்வார்களே அன்றி முழுப்பெயரைச் சொல்லக்கூடப் பயப்படுவார். தம்மை வாழ்விக்க வந்த கண்கண்ட தெய்வமாகவே  அந்தக் கவிஞரைப்  போற்றினார்.  ஆறு ஆண்டுகள் அவரிடம் தமிழ்த் தாத்தா தமிழ் பயின்றார்.  அவருக்குக் கையேடு எழுதுபவராகவும், கற்றுச்சொல்லியாகவும், உதவியாசிரியராகவும், தூதுவராகவும், ஏவலாளராகவும், மாணாக்கராகவும் இருந்திருக்கிறார். 800 பக்கங்களுக்கு மேல் அவருடைய சரித்திரத்தை இரண்டு பாகமாக எழுதியிருக்கிறார்.

மகாவித்துவான் பிள்ளையவர்கள் தன் கைப்பட எழுதிய கடிதங்கள் பலவற்றைத் தமிழ்த் தாத்தா சேமித்தார். அவற்றில் ஒன்றைக் கீழே காணலாம். மதுரையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த கட்டளை மடத்துத் தம்பிரானுக்கு எழுதிய கடிதம் இது.  50-களில் ஒரு கலைமகள் இதழில்  வந்த   கடிதம். 1872-இல் ( ஆங்கிரஸ வருடம்) எழுதப்பட்ட கடிதம்!





                                                       உ
                                                சிவமயம்

திருவளர்அங் கயற்கணொடு சுந்தரநா
      யகர்மருவுந் தெய்வக் கூடல்
உருவளரா லயமுதன்மைக் கட்டளைமேற்
      கொடுநடத்தும் உரவோன் தேமாந்
தருவளர்சீர் ஆவடுதண் டுறைநமச்சி
      வாயகுரு சாமி பொற்றாள்
மருவளர்சென் னியன்திருச்சிற்  றம்பலமா
       முனிவரனை வணக்கஞ் செய்வாம்.

இவ்விடமடியேன் சேமம். சுவாமிகளவிடம் திருமேனி ஆரோக்கியமாயிருப்பது தெரிய அடிக்கடி தெரிவிக்கவேண்டும்.  அடியேன் குமாரன் சிதம்பரத்திற்கும், சீகாழி குருசாமி பிள்ளையவர்கள் குமாரத்திக்கும் விவாக முகூர்த்தம் மிதுன ரவி எஉ நிச்சயித்திருப்பதால் சுவாமிகளுக்கு விண்ணப்பஞ் செய்துகொண்டேன்.
                                                                                           இங்ஙனம்
                                                                                           அடியேன்
                                                                                       மீனாட்சிசுந்தரம்
                                                                                       திருவாவடுதுறை

[ நன்றி : கலைமகள் ]

பி.கு.

கவிமாமணி இலந்தை இராமசாமியின் பின்னூட்டம்:

ஆதீனத்திற்குக் கடிதம் எழுதும் போது எப்படி எழுத வேண்டும்  என்பதற்குச் சான்று இது.  உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்க முடியாது. திருமேனி ஆரோக்கியத்திற்குத் தெரிவிக்கவேண்டியது என்பது நல்ல குறிப்பு. அதைப்போலவே திருமணத்துக்கு வரச்சொல்லி அழைக்க முடியாது. ஆனால் விண்ணப்பம் செய்கிறேன் என்பதில் பல பொருள்கள் தொக்கி நிற்கின்றன.  விண்ணப்பம் என்ற ஒரு வார்த்தையில் பிள்ளையவர்களின் பணிவும் அதேசமயம்  திருமணத்துக்கு வேண்டிய சகாயங்களைச் செய்யும் கடமையும் உணர்த்தப்படுகின்றன. 

இலந்தை


தொடர்புள்ள பதிவுகள்: 

உ.வே.சா : பதிவுகள்

2 கருத்துகள்:

  1. அற்புதம். 'உடல் நலம்' அன்றி 'திருமேனி ஆரோக்கியம்' வினவும் பழக்கத்தை அஹோபில மதம் ஜீயர் ஸ்வாமியின் ஸன்னிதியிலும் பார்த்திருக்கிறேன். அதே போல் திருமணம் பற்றி விண்ணப்பம் செய்யும் பழக்கமும் அங்கே தற்போதும் பின்பற்றப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  2. எத்தனை பெரிய மகான்கள் ஏத்தனை எளிமையாக இருந்திருக்கின்றனர் இதே தமிழ் நாட்டில்

    பதிலளிநீக்கு