புதன், 25 நவம்பர், 2015

அரியும் அரனென் றறி : கவிதை

அரியும் அரனென் றறி, அரனும் அயனும் அரி:
சிலேடை வெண்பாக்கள்

பசுபதி 


[ சங்கரநாராயணன்; சில்பி ]


25 நவம்பர், 2015. கார்த்திகை தீபத் திருநாள்.

மும்மூர்த்திகளும் பங்குபெறும் அருணாசல புராணக் கதையை எல்லோரும் கேட்டிருப்பர்.


சங்கீத வித்வான் எம்.டி. ராமநாதன் இயற்றிய ‘ஹரியும் ஹரனும் ஒன்றே’ என்ற பாடலை அண்மையில் கேட்டுக் கொண்டிருந்தேன்.

https://youtu.be/VV8FTEjbjfI 

அப்போது நான் முன்பு எழுதின இந்த வெண்பாக்கள் நினைவுக்கு வந்தன.

1. அரியும் அரனென் றறி;
 சிலேடை வெண்பா  ( இரட்டுற மொழிதல் ) 

நாகம்மேல் வாழ்வதால் நாரி உறைவதால்
கோகுல நாமத்தால் கோயிலால் -- ஆகம்
அரவிந்தம் அக்கத்தால் அஞ்சக் கரத்தால்
அரியும் அரனென் றறி .

நாகம்- பாம்பு/மலை ; கோயில் - சிதம்பரம்/சீரங்கம் ;
அரவிந்தம் - தாமரை: அரவு இந்து அம் ( பாம்பு, சந்திரன், நீர்) ;
அக்கம் - கண்/ருத்திராக்ஷம் ; அஞ்சக்கரத்தால் - அம் சக்கரத்தால் (அழகிய
சக்கரத்தால்) ; அஞ்சு அக்கரத்தால் (பஞ்சாக்ஷரத்தால்.)

அரன்: (கயிலை)மலைமேல் வாழ்வதால், ( உமை என்ற) நாரி உடலில்
உறைவதால், பசுக்கூட்டம் இருக்கும் 'பசுபதி' என்ற பெயரால், சிதம்பரத்தால்
, உடலில் பாம்பு, சந்திரன், (கங்கை) நீர் ருத்திராக்ஷம் இருப்பதால்,
பஞ்சாக்ஷரத்தால்

அரி: (அனந்தன்/ஆதிசேஷன் என்ற) பாம்பின்மேல் வாழ்வதால்,
(அல்லது சேஷாசலம்/திருவேங்கடம் என்ற மலைமேல் வாழ்வதால்)
(திருமகள் என்ற) நாரி உடலில் உறைவதால், கோகுலம் உள்ள  'கோபாலன்'
என்ற பெயரால், சீரங்கத்தால், உடலில் இருக்கும் தாமரைக் கண்களால்,
அழகிய சக்கரத்தால் :

அரியும் அரனும் ஒன்றென அறிவாயாக.

பசுபதி
26-02-06


2. அரனும் அயனும் அரி.
இன்னொரு சிலேடை ( முவ்வுற மொழிதல்)

===========
முருகனில் சேர்ந்ததால் முத்தொழிலில் ஒன்றால்
அருணா சலக்கதை ஆனதால் வேதப்
பிரணவம் போற்றலால் பெண்ணுடற் பங்கால்
அரனும் அயனும் அரி.

முருகன் = மு(குந்தன்)+ரு(த்ரன்)+க(மலன்)

பிரணவம் =ஒம் = அ( அயன்) +உ(அரி) +ம்(அரன்)

பி.கு. 

சிலேடை உள்ள மரபுக் கவிதைகளில் வெண்பா வடிவமே அதிகம்.
சிலேடை வெண்பா இயற்ற விரும்பும் அன்பர்கள் காளமேகத்தின் பல சிலேடை வெண்பாக்களைப் படித்தால், அவற்றின் அமைப்புப் பற்றித் தெரியும்.

ஒரு காட்டு:

பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும்

நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம். 

மிகுதியான மலர்கள் தேனைப் பொழிந்து கொண்டிருக்கும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே , வாழைப்பழம் பாம்புக்கு ஒப்புடையதாகும்.

பாம்பிடம் நஞ்சு இருக்கும். பாம்பு தன் தோலை உரிக்கும். சிவபெருமான் முடிமேல் இருக்கும். கொடிய சினத்தில் அதன் பல்லால் கடிக்கப்பட்டால் உயிர் மீளாது.

வாழைப்பழம் நன்கு கனிந்ததால் நைந்து போயிருக்கும். வாழைப்பழத்தின் தோல் உரிக்கப்படும். சிவபெருமான் படையலில் மேலான பொருளாக இருக்கும். துணையுணவாகக் கொள்ளுங்காலத்தே ஒருவர் பல்லில் பட்டால் அப் பழம் மீண்டுவராது.  ( வெஞ்சினம் /வியஞ்சனம் - தொடுகறி; துணை உணவு )

மேலும், அழகான எதுகைகளும், ஒவ்வொரு அடியிலும் 1,3 சீர்களில் மோனைகளும்  ஓசைச் சிறப்பைக் கொடுப்பதைக் கவனிக்கவேண்டும்.
( நாதர்முடி - இங்கே ‘ர்’ அலகு பெறாது , சீர் கூவிளங்காய்தான் , கனிச் சீர் அன்று.)

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

4 கருத்துகள்:

  1. இதைப் படித்ததும் நினைவுக்கு வருவது அந்த காலத்தில் என் பள்ளி வாத்தியார் அடிக்கடி கூறும் வார்த்தை
    "அரியும் அரனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு"!
    -பாலு

    பதிலளிநீக்கு
  2. ஏன் சார், நாகம்மேல் வாழ்வதால் என்றால், வாசுகி நாகம் கழுத்தின்மேல் வாழ்வதால்னும் பொருள் கொள்ளலாமோ?

    பதிலளிநீக்கு
  3. அருமையான சிலேடைப் பாடல்கள் ஐயா....நானுமொன்று முனைந்தேன்

    மானால் ! இரட்டை மனைவியரால் ! அன்பர்சொல்
    தேனாக எண்ணும் செவிமடுப்பால் - கானாடி
    நின்ற செயலினால் ! நீல மிருப்பதனால் !
    மன்னனீசன் ஆவானே மால் !

    -விவேக்பாரதி

    பதிலளிநீக்கு