திங்கள், 7 டிசம்பர், 2015

ஹார்வர்டில் தமிழிருக்கை அமைப்போம்!

ஹார்வர்டில் தமிழிருக்கை அமைப்போம் !
நேற்று (டிசம்பர் 6, 2015 ) அன்று  ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ் இருக்கைக்காக ஒரு மில்லியன் டாலர்களைச் சேர்ந்து கொடுத்து,  அந்த முயற்சியைத் தொடங்கியுள்ள மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம் இருவரையும் டொராண்டோவில் சந்தித்தேன். தமிழ் இலக்கியத் தோட்டம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். 

 [ திருஞானசம்பந்தம், ஜானகிராமன், முத்துலிங்கம், சந்திரகாந்தன் ] 

தீவிரமான தமிழ் உணர்ச்சியும், ஆர்வமும் உள்ள  அந்த மருத்துவர்களின் உற்சாகம் ஒரு தொற்று வியாதி போல் அந்த அறையில் இருந்த யாவருக்கும் உடனே பரவியது  :-) பலர் பேசி முயற்சிக்கு ஆதரவைத் தெரிவித்தனர். நானும் சில மணித்துளிகள் பேசினேன். ஹார்வர்டுடன் எப்போதும் போட்டி இடும் யேல் பல்கலைக் கழகத்தில் நான் படித்தது, 1968-இல் அறிஞர் அண்ணாதுரை யேலுக்கு வந்தது, அவருடன் அமெரிக்காவில் தமிழ் என்பது பற்றிப்  பேசியது போன்றவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் முயற்சிக்கு என் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டேன்.




அமெரிக்காவில் இம்முயற்சிக்கு  IRS அண்மையில் Tax-exempt status கொடுத்திருக்கிறது!  
[Letter from IRS ]

நிகழ்ச்சியில் பேசிய வாட்டர்லூ பேராசிரியர் செல்வகுமார் சொன்னதுபோல், ஊர் கூடித்  தேர் இழுப்போம் வாரீர்! இதோ எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஆனந்த விகடனில் ( செப்டெம்பர் 15 -இல் ) எழுதிய கட்டுரை . இதையும், தொடர்புள்ள பதிவுகளையும் படியுங்கள்! ஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை !
அ.முத்துலிங்கம், ஓவியம்: டிராட்ஸ்கி மருது
'சின்ன சம்பவம்’ என ஒன்றுமே இல்லை. சோதனைக் குழாயில் தற்செயலாக ஒட்டியிருந்த பூஞ்சணத்தில் தொடங்கிய ஆராய்ச்சிதான், பென்சிலின் மருந்து கண்டுபிடிப்பில் முடிந்தது. அதே மாதிரிதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
'வைதேகி ஹெர்பெர்ட்’ என்ற அமெரிக்கர், தமிழ் சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். வைதேகியைப் பாராட்டிய ஒரு விழாவில், பென்சில்வேனியாவைச் சேர்ந்த இதய அறுவைசிகிச்சை மருத்துவர் ஜானகிராமன் அவரைச் சந்திக்க நேர்ந்தது.
2,000 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சங்க இலக்கியத்தின் மேன்மைக்காக, தானும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் அப்போது எழுந்தது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஜானகிராமன் தொலைபேசியில் வைதேகியை அழைத்து
'என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை என்ன?’ என்றார். வைதேகிக்கு அந்தக் கணம் மனதில் தோன்றியதைச் சொன்னார்... 'உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது. தொன்மையான தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அங்கே அமையுமானால், உலகமே பயனுறும். தமிழுக்குப் பெருமை; தமிழர்களுக்கும் பெருமை’ என்றார்.
அதைத் தொடர்ந்து காரியங்கள் அதிவிரைவாக நடந்தன. ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களோடும் துறைத் தலைவரோடும் மருத்துவர்கள் ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் பேசினார்கள்.
பல சந்திப்புகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பின்னர் ஹார்வார்டு பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்புதலை வழங்கியது. இதற்கான முதலீடு ஆறு மில்லியன் டாலர் (இப்போதைய நிலவரப்படி சுமார் 40 கோடி ரூபாய்). இதை இரண்டு வருட கால அவகாசத்துக்குள் திரட்டவேண்டும். குறிப்பிட்ட தொகை இலக்கை அடைந்துவிட்டால், ஒரு வருடத்துக்குள்கூட தமிழ் இருக்கையை நிறுவிவிடலாம்.
ஜானகிராமனும் திருஞானசம்பந்தமும் கூட்டாக ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளனர். மீதி ஐந்து மில்லியன் டாலரை, உலகத் தமிழ்ப் பற்றாளர்களிடம் திரட்டிவிடலாம் என்பதுதான் நம்பிக்கை.
மருத்துவர் ஜானகிராமன், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், வட கண்டம் என்ற ஊரில் பிறந்தவர். தமிழில் மேல்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தவருக்கு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததும் அங்கே சேர்ந்து படிக்கவேண்டிய நிர்பந்தம். 1975-ம் ஆண்டில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்; தற்போது பென்சில்வேனியாவில் பிரபல இதய சிகிச்சை நிபுணர். இவரைத் தொடர்புகொண்டபோது கணீர் குரலில், ஒரு சொல்கூட ஆங்கிலம் கலக்காமல், அழகுத் தமிழில் பேசினார்...
''360 வருடங்களுக்கு மேலாக ஹார்வார்டு பல்கலைக்கழகம் உலகில் கல்விப் போதனையில் முன்னணியில் இருக்கிறது. தமிழை வளர்ப்பதற்கு ஏதாவது செய்வதாக இருந்தால் முதல்தரப் பல்கலைக்கழகமான ஹார்வார்டில் அதை ஏன் நிகழ்த்தக் கூடாது? எங்கள் வருங்காலத் தலைமுறை தமிழின் பெருமையை உணர்ந்து படிப்பதற்கு ஏற்ற இடமாக அது அமையும். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த
20 தமிழ் மாணவர்கள் ஆர்வம் காரணமாக ஆசியவியல் துறையில் தமிழ் படிக்கிறார்கள். அதைக் கற்பிப்பது ஒரு வெள்ளைக்கார அமெரிக்கர். ஒரு தமிழ் இருக்கை அமைத்தால், அதனால் எத்தனையோ பேர் பயனடைவார்கள்! என் அருமை நண்பர் திருஞானசம்பந்தமும் நானும் இதற்கு ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. இதனால் கிடைக்கும் வெற்றி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தம்!''  
ருத்துவர் திருஞானசம்பந்தம் அவர்களின் குரலில் அத்தனை கனிவு. அவர் அமெரிக்காவுக்கு 1971-ம் ஆண்டில் புலம்பெயர்ந்தவர்.
''என் இளமைக்கால பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பை திருக்குடந்தை நகரில்தான் கற்றேன். நான் பிறந்து, வளர்ந்த குடும்பம் தமிழையும் சித்தாந்த சைவத்தையும் இரு கண்களாக எண்ணியது. ஆகவே, 'தமிழ் என் உயிருக்கு நேர்’ ஆனதில் வியப்பு ஒன்றும் இல்லை. திருக்குறள் எங்கள் வேதம். அது சொல்கிறது... 'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு.’
கற்றவருக்கு எல்லா நாடும் ஒன்றுதான்; எல்லா ஊரும் ஒன்றுதான். கல்வியை எவரும் எந்த நாட்டிலும் கற்றுக்கொள்ளலாம். உலகத்தின் பழம்பெருமை வாய்ந்த ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலே கல்வி கற்பது அதி சிறப்பானது. 20 ஆண்டுகளாக இங்கே தமிழ் இருக்கை தொடங்குவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது பலன் அளிக்கவில்லை. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான இருக்கைகள் இருந்தாலும் ஓர் இனக்குழு ஒன்றுசேர்ந்து உருவாக்கிய இருக்கைகள் ஒரு சிலவே. 30 மில்லியன் மக்கள் பேசும் உக்ரேனிய மொழிக்கு இரண்டு இருக்கைகள் உள்ளன. 1.5 மில்லியன் மக்கள்தொகை மட்டுமே பேசக்கூடிய செல்டிக் மொழிக்குக்கூட ஹார்வார்டில் இருக்கைகள் இருக்கின்றன. ஆனால், தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை இன்று வரை இல்லை. இப்போது ஹார்வார்டு பல்கலைக்கழகம் அதற்கான சம்மதத்தைத் தெரிவித்திருக்கிறது.
எம் வாழ்நாளில் கிடைத்த பெரும் பேறு இது.''
''இதற்கான இணையதளம் இருக்கிறதா?''
'' Harvard Tamil Chair  என்ற இணையதளம் விரைவில் செயல்பட இருக்கிறது. தமிழ் இருக்கை பற்றிய பின்னணியும் செயல்பாடும் விளக்கங்களும்  அதில் கொடுக்கப்பட்டிருக்கும். ஏற்கெனவே ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் Bank of America வங்கிக்கணக்கு  Sangam Professorship in Tamil என்ற பெயரின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காசோலையாகவோ, வங்கி மூலமாகவோ செலுத்தப்படும் பணம் ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக் கணக்கில் நேரடியாகப் போய்ச் சேரும்.''
''மீதி ஐந்து மில்லியன் டாலரைச் சேர்ப்பதற்கு என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன?''
''தமிழை வளர்ப்பதிலும், இந்த இருக்கையின் உருவாக்கத்திலும் தமிழ்நாடு அரசின் உதவியைப் பெரிதும் எதிர்பார்க்கிறோம். தமிழ் இன்றும் வாழும் ஆதி மொழிகளில் ஒன்று. அது உலகத்துக்குச் சொந்தமானது. அது தமிழ்நாட்டிலும் வளரலாம்; அயல்நாட்டிலும் வளரலாம். அதை வளர்க்க வேண்டியது தமிழரின் கடமை. ஹார்வார்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையால் பயன்பெறப்போவது உலக மக்கள். இதனால் கிடைக்கும் பெருமை தமிழ்நாட்டுக்கும் உலகத் தமிழர்களுக்கும் போய்ச் சேரும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பலவிதங்களில் உதவலாம். அவற்றுக்கு எதிர்காலத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன்  ஏற்படப்போகும் தொடர்பு, இரு பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கும் உதவும்.
தமிழ் நிறுவனங்கள் பல இன்று உலக நிறுவனங்களுடன் போட்டிபோட்டு உயர்ந்து நிற்கின்றன. இவை நிதி வழங்கலாம். பல உலக நிறுவனங்களுக்கு தமிழ் ஆளுமைகள் தலைமை வகிக்கிறார்கள். இவர்களில் பலர் தமிழ்ப் பற்றாளர்கள். இவர்களின் உதவியையும் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். மற்றும் தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணினித் துறை நிபுணர்கள் போன்ற பலரிடம் இருந்தும் உதவிகள் வரும் என நம்புகிறோம்.
தவிர கல்வியாளர்கள், தமிழ்த் துறை வல்லுநர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள் என யாரும் தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப நிதி உதவி செய்யலாம். உலகம் முழுக்க 5,000 தமிழர்கள் ஒன்றுபட்டால், ஒரு வருட கால அவகாசத்துக்குள் வேண்டிய நிதியைத் திரட்டிவிடலாம். இதற்கு முதலில் வேண்டியது தமிழ்ப் பற்று; இரண்டாவது மனம்; மூன்றாவது பணம்!''
''ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதால் கிடைக்கும் பலன்கள்?'
''அண்மையில் வெளியான பல்கலைக்கழக உலகத் தரவரிசையில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கே முதல் இடம். இங்கே ஹீப்ரு, சம்ஸ்கிருதம் போன்ற மற்ற செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. எனவே செம்மொழியான தமிழுக்கும் இருக்கை அவசியம். ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வுகள் உலக அங்கீகாரம் பெற்றவை. இந்தப் பல்கலைக்கழகத்தை உலக அறிவு மையம் என்பார்கள். எனவே, உலகின் பல திசைகளில் இருந்து தரமான மாணவர்கள் தமிழைக் கற்க, ஆராய வாய்ப்புகள் அமையும். தமிழ் இருக்கையின் பெயர் Sangam Professorship in Tamil. ஆகவே 2,300 ஆண்டுகள் பழமையான சங்க நூல்களுக்கும், பழைமையான தமிழ் இலக்கியங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கற்பிக்கப்படும்; உலகம் முழுக்கப் பரப்பப்படும். இது தமிழின் மேன்மையைப் பரப்ப உகந்த இடமாக இருக்கும்!''
1.5 மில்லியன் மக்கள் மட்டுமே பேசும் செல்டிக் மொழிக்கு ஹார்வார்டில் இரண்டு இருக்கைகள் இருக்கின்றன. சுமார் 80 மில்லியன் மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு ஓர் இருக்கையாவது நிறுவவேண்டியது எத்தனை அவசியம்? அது அமைந்தால் எத்தனை பெருமையான கணமாக இருக்கும்!
[ நன்றி: விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள்:
Sangam Tamil Chair at Harvard University!




(  இந்தத் தளத்தில் நீங்கள் எப்படிப் பணம் அனுப்பலாம் என்றெல்லாம் விவரங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள பலர் எப்படி வங்கிகள் மூலம் பணம் அனுப்பி உள்ளனர் என்பதைத் திருஞானசம்பந்தம் தன் கைபேசியில் எனக்குக் காண்பித்தார்! )

[ Letter from Haravard Univ. ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

1 கருத்து: