நகைச்சுவை முன்னோடி எஸ்.வி.வி
எஸ்.வி.வி. என்றே பலரும் 40-50 -களில் அறிந்த எஸ்.வி.விஜயராகவாச்சாரியார் தமிழின் நகைச்சுவை எழுத்தாளர்களின் முன்னோடி.
அவர் தமிழில் விகடனில் எழுதத் தொடங்கியதே ஒரு சுவையான கதை!
எஸ்.வி.வி. திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தபோதே, “ஹிந்து” பத்திரிகையில் 20-களில் ஆங்கில ஹாஸ்யக் கட்டுரைக்கதைகளை ( கதைக்கட்டுரைகளை?) இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எழுதி எல்லோரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் கட்டுரைத் தொடரின் தலைப்பு “ என் மனைவியும் நானும்” ( My Wife and I ).
எஸ்.வி.வி க்கு இன்னொரு பொழுதுபோக்கும் உண்டு. ஆம், அது வீணை வாசிப்பது. அவருடைய ஒரு மகன் எஸ்.வி.கே. என்று அறியப்பட்ட “இந்து”வின் முக்கிய இசை விமர்சகராய் இருந்த எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ; இன்னொரு மகன் சங்கீத வித்வான் எஸ்.வி.பார்த்தசாரதி என்பதிலிருந்தே அந்தக் குடும்பத்தின் இசைப் பாரம்பரியம் புரியும்!
’கல்கி’ விகடனில் சேர்ந்தது 1928-இல். ஆனால், அதற்கு முன்பே, ‘நவசக்தி’ இதழில் இருக்கும்போதே எஸ்.வி.வி -யைப் பற்றி யோசித்திருக்கிறார் என்பது “சுந்தா” எழுதிய கல்கியின் வாழ்க்கை வரலாறாகிய “பொன்னியின் புதல்வர்” மூலம் தெரிகிறது. எஸ்.வி.வி. யின் ஆங்கிலக் கதைத் தொகுப்பான “சோப் குமிழிகள்” ( Soap Bubbles ) என்ற புத்தகத்தில் இருந்த “கோவில் யானை “ ( The Temple Elepahant) என்ற கதையைப் படித்து வயிறு வலிக்கச் சிரித்ததாக விகடன் இதழில் எழுதுகிறார் கல்கி. அதே சமயம். இவ்வளவு ஹாஸ்யத்தை இங்கிலீஷில் கொட்டியிருக்கிறாரே என்ற வருத்தமும் ஏற்படுகிறது கல்கிக்கு.
எஸ்.வி.வி-யைத் தமிழில் எழுதச் சொல்லவேண்டும் என்று எண்ணி, ஒருநாள் கல்கி, வாசன், துமிலன் மூவரும் திருவண்ணாமலைக்குச் செல்கிறார்கள்.
ஆனால், அதுமட்டும் தான் அவர்கள் சென்றதுக்குக் காரணமா? இல்லை! “சுந்தா “ எழுதியதைப் படியுங்கள்! மர்மம் வெளிப்படும் !
கல்கி விகடனில் சேர்ந்த புதிதில் அவருடைய சகா ஒருவர், எஸ்.வி.வி -யின் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழாக்கி விகடனில் வெளியிட்டிருக்கிறார். அதற்கு எஸ்.வி.வி. ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார். அந்தப் பிரச்சினையைச் சமாளிக்கவும் மூவரும் திருவண்ணாமலைக்குச் சென்றிருக்கிறார்கள். இதுவே “சுந்தா” வின் யூகம்.
( விகடனின் "காலப் பெட்டகம்" நூல் 1931-இல் எஸ்.வி.வி. யின் கட்டுரைகள் விகடனில் வந்ததாகக் குறிப்பிடுகிறது. அதாவது , எஸ்.வி.வி. அதிகார பூர்வமாய் விகடனில் எழுதத் தொடங்கிய 1933-க்கு முன்பு. அதனால் ஒரு 1931 கட்டுரை “சுந்தா” குறிப்பிட்ட தமிழாக்கக் கட்டுரையாய் இருக்கலாம்; அல்லது 1929 விகடன் அனுபந்தத்திலுள்ள எஸ்.வி.வி.யின் கட்டுரை யாய் இருக்கலாம். )
இப்போது கல்கியின் எழுத்தில் அந்தத் திருவண்ணாமலை விஜயத்தைப் பற்றிப் படிக்கலாம்:
“ ஒருநாள் எஸ்.வி.வி. யைப் பார்ப்பதற்காக ( இரண்டு நண்பர்களும் நானும் ) திருவண்ணாமலைக்குச் சென்றோம். இரவு பதினோரு மணிக்கு அவருடைய வீட்டைக் கண்டுபிடித்துக் கதவை இடித்தோம். எஸ்.வி.வி.யே வந்து கதவைத் திறந்தார். யாரோ கட்சிக்காரர்கள் அவசரக் கேஸ் விஷயமாய் வந்திருக்கக் கூடும் என்று அவர் நினைத்திருக்கலாம். நாங்கள் விஷயம் என்னவென்று சொன்னதும் இடி இடியென்று சிரித்தார். இராத்திரி பதினோரு மணிக்கு வந்து கதவை இடித்துத் தூக்கத்திலிருந்து எழுப்பி, “ஒன்றும் காரியமில்லை. வெறுமனே உங்களைப் பார்ப்பதற்கு வந்தோம்” என்று சொன்னால் யாருக்குத்தான் சிரிப்பு வராது? “எங்களை எத்தனையோ தடவை காரணமில்லாமல் சிரிக்கச் சிரிக்க அடித்தீர்கள் அல்லவா? அதற்குப் பழிக்குப் பழி வாங்கிவிட்டோம்” என்று நான் சொன்னேன்.
“ இந்த எஸ்.வி.வி. எப்படி இருப்பார்?” என்று பார்ப்பதற்குத்தான் நாங்கள் முக்கியமாய்ப் போனோம் என்றாலும், மனத்துக்குள் வேறோர் அந்தரங்க நோக்கம் இல்லாமற் போகவில்லை. அவரைத் தமிழிலும் எழுதப் பண்ண வேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். இதற்கு அந்தத் தடவையில் விதை போட்டுவிட்டுத் திரும்பினோம். அதற்குப் பலன் சில வருஷங்களுக்குப் பிறகு கிடைத்தது. எஸ்.வி.வி.யின் முதல் தமிழ்க் கட்டுரை , “தாக்ஷாயணியின் ஆனந்தம்” என்ற தலைப்புடன் 1-7-33 விகடன் இதழில் பிரசுரமாயிற்று. அதை ராஜாஜி படித்துவிட்டு அளவற்ற மகிழ்ச்சி தெரிவித்தார். “இவ்வளவு நன்றாய் எஸ்.வி.வி. இங்கிலீஷில் எழுதியது கிடையாது, “ என்றார். ஸ்ரீ டி.கே.சிதம்பரநாத முதலியாரும் அதே அபிப்ராயத்தைத் தெரிவித்தார். ஏதோ அரும் பெரும் காரியத்தைச் சாதித்துவிட்டது போல் எனக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. “
1933 இலிருந்து விகடனில் தமிழில் எழுதத் தொடங்கிய எஸ்.வி.வி. ஆங்கிலத்தில் எழுதுவதையே விரைவில் நிறுத்தியே விட்டார்! 1940-இல் அவருக்கு அறுபதாண்டு நிறைந்து, மணிவிழா நடந்தது. கல்கி , கி.சந்திரசேகரனின் துணையுடன் விழாவை நடத்தினார். விகடனின் அட்டையில் எஸ்.வி.வி.யின் முகத்தை வெளியிட்டார்.
விழாவிற்கு நான்கு மாதங்களுக்குப் பின் விகடனை விட்டு விலகின கல்கி, தன் சொந்தப் பத்திரிகையான ‘கல்கி’யில் எழுத எஸ்.வி.வி.யை அழைத்தார். மறுத்த எஸ்.வி.வி. தொடர்ந்து விகடனுக்கு மட்டுமே அவர் மறையும் வரை --50 வரை --எழுதிவந்தார்.
எஸ்.வி.வி. யின் பல படைப்புகள் --- ஆங்கில நூல்கள் உட்பட --- அல்லயன்ஸ் பதிப்பகத்தில் கிட்டும்.
[ நன்றி: ”பொன்னியின் புதல்வர்”, அல்லயன்ஸ் ]
தொடர்புள்ள பதிவுகள்:
எஸ்.வி.வி.
[ நன்றி : ஹிந்து ] |

அருமை ...
பதிலளிநீக்கு