சனி, 5 நவம்பர், 2016

பாடலும், படமும் - 15

ஆறுமுகமான பொருள் 


எல்லோருக்கும் தெரிந்த திருப்புகழ்.
“ ஏறு மயிலேறி விளையாடு முகமொன்றே”.

அதிலிருந்து ஓர் அடிக்குப் படம் வரைகிறார் கோபுலு. ஒரு பழைய விகடன் தீபாவளி மலரில்.

“ ஆறுமுகமான பொருள்” என்பது  அறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய ஒரு நூல். அதிலிருந்து ஒரு பகுதி:

'தமிழ் நாட்டில் தெய்வ வடிவில் உருவாகியிருக்கும் வடிவங்களுக்கு அடிப்படையில் ஒவ்வொரு தத்துவ உண்மையிருக்கும். எல்லாம் வல்ல இறைவனை பகவான் என்று அழைக்கிறோம். பகவான் என்னும் சொல்லுக்கு ஆறு நல்ல பொருள் அமைந்தவன் என்பதே பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், ஐசுவரியம், கீர்த்தி, அறம் ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ அவனே பகவான். இந்த ஆறினுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக ஒருவனுக்கு அமைந்துவிடுமானால் அவனே பெருமகன் ஆகிவிடுகிறான். ஆறும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் குடியிருக்குமானால் அவன் கடவுளே ஆகிவிடுகிறான். இப்படி எண்ணியிருக்கிறான் தமிழன் தமிழ்நாட்டுக் கலைஞன். அப்படி தமிழன் கற்பனை பண்ணிய தமிழ்க் கடவுளே முருகன். 

"இவ்வளவுதானா? இல்லை. இன்னும் பேரொளி படைத்தவன், அடியார்க்கு எளியவன், வேள்விக் காவலன், ஞானபண்டிதன், வீரப்பெருமகன், இன்பத் தலைவன் எல்லாம் அவனே என்று காட்டவே அவனுக்கு ஆறு திருமுகங்களைக் கற்பனை பண்ணியிருக்கிறான் என்றெல்லாம் அறுமாமுகவனுக்கு விளக்கம் கூறினேன்.


சந்தேகப் பேர்வழியான நண்பருக்கோ, இதனால் எல்லாம் சந்தேகம் தீர்ந்த பாடாக இல்லை. இவரை மடக்குவதற்கு, அவர் பெரிதும் போற்றும் பெளதிக விளக்கம் கூறத்தான் வேண்டும் என்று எண்ணினேன், சொன்னேன். 


- 'இந்தப் பெளதிக உலகம் பரம்பொருளின் ஸ்துல தோற்றமே. பரம்பொருளைக் காரண வஸ்து என்றால் இந்த உலகைக் காரியவஸ்து என்று வைத்துக் கொள்ளலாம் தானே. இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது. இந்தப் பூதப் பொருள்களைப் பகுத்துக் கொண்டே போனால் பகுக்க முடியாத ஒரு நிலையில் அதனை அணு என்கிறோம். அந்த அணு. இயங்கும் போது புரோட்டான், எலக்ட்ரான் என்று இரண்டு வடிவங்கள் எடுக்கின்றன. புரோட்டான் அசையாது நிலைத்து நிற்கிறது. அதைச் சுற்றி சுற்றி எலக்ட்ரான்கள் சுழல்கின்றன. அத்தகைய பூதப்பொருள்களில் கரி (carbon) என்பது ஒன்று. அதில் புரோட்டான் ஒன்றும் எலக்ட்ரான் ஆறும் இருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த எலக்ட்ரான் எண்ணிக்கையில் ஆறுக்கு அதிகமா கப் போய்விட்டாலும், குறைவாய்ப் போய்விட்டாலும் உயிர்த் தத்துவத்தை ஊட்டும் சக்தியை அது இழந்துவிடுகிறது. கரியில் ஆறு எலக்ட்ரான் சேர்ந்திருக்கிறது. 


உயிர்த்தத்துவத்தை வளர்க்கும் நடைமுறையை விளக்கவே ஆறு கார்த்திகைப் பெண்களால் இறைவனாம் முருகன் வளர்க்கப்பட்டான் என்று உருவகப்படுத்தியிருக்கின்றனர். ஆறு பெண்கள் வளர்த்த ஆறு பிள்ளைகளையும் இணைத்தே ஓர் அறுமாமுகனை உருவாக்குகிறாள் உலகெலம் புகழ்கின்ற அன்னை உமை.


 “என்ன அன்பரே விளங்குகிறதா உமக்கு இப்போது, ஆறுமுகமான பொருள் ஏன் எப்படி, அறுமாமுகனாக உருவாகியிருக்கிறது என்று' என்று ஒரு போடு போட்டேன். நண்பர் வாயடைத்துப் போய்விட்டார். 


இப்படி ஆறுமுகமான பொருளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதுதான் அருணகிரியார் பாடிய பாடல் ஞாபகத்துக்கு வந்தது. ஆம் எல்லோருக்கும் தெரிந்த அந்த திருப்புகழ்தான். 


ஏறுமயிலேறி விளை யாடுமுகம் ஒன்றே 
   ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே 
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே 
   குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே 
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே 
   வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே 
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும் 
   ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.




தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

  1. ஆனந்தமாக படித்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. படம் அல்லது அச்சிட்ட பக்கங்க்களை வெளியிடும் போது பிரசுரமான தேதிகள் தெரிந்தால் அதையும் வெளியிட்டால் பின்னால் இதை யாரேனும் ஆவணமாகப் பயன் படுத்த நேரும்போது உதவியாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு