ஞாயிறு, 11 ஜூன், 2017

743. பாடலும், படமும் - 18

ஐம்பூதத் தலங்கள்  -2
திருவானைக்கா
எஸ்.ராஜம் , சில்பி


[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

”இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது. “    https://ta.wikipedia.org/s/32w3

கி.வா.ஜகந்நாதன் எழுதுகிறார்.

” திருவானைக்காவல் என்ற தலத்தைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அங்கே யானை பூசை பண்ணியதாம். சிலந்தி பூசை பண்ணியதாம். ஒரு நாவல் மரத்தின் அடியில் சிவ பெருமான் லிங்க உருவத்துடன் தோன்றினான். ஒரு சிலந்திக்கு அந்தப் பெருமானிடத்தில் பக்தி உண்டாயிற்று. 'பெருமான் வெயிலில் காய்கிறானே' என்று மனம் வருந்திய சிலந்தி லிங்கத்தின்மேல் பந்தல் போட்டது போல வலை பின்னியது. ஆண்டவனுக்கு இந்த வழியிலாவது தொண்டு செய்யலாம் என்ற அறிவு அதற்கு இருந்தது. தன்னுடைய இயல்புக்கு ஏற்றபடி விதானம் போலக் கூடு கட்டித் தொண்டு செய்தது.

அந்தப் பெருமானிடத்தில் ஒரு யானைக்கும் பற்று உண்டாயிற்று. அது தன்னுடைய இயல்புக்கு ஏற்பப் பூசை செய்யத் தொடங்கியது. காவிரி ஆற்றுக்குச் சென்று தன் துதிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தது. லிங்கத்தின் மேலே சிலந்திக் கூடு இருப்பதைப் பார்த்து அதைக் குலைத்து விட்டது. யானை போன பிறகு சிலந்தி வந்தது. தான் கட்டிய கூடு குலைந்துவிட்டதே என்ற கோபம் அதற்கு வரவில்லை. எம்பெருமான் வெயிலில் காய்கிறானே என்று மனம் இரங்கி வருந்தியது. மறுபடியும் ஒரு நாழிகையில் வலை பின்னிக் கூடு கட்டிவிட்டது. மறுநாள் அந்த யானை கூட்டைப் பார்த்து மறுபடியும் கலைத்துவிட்டது. யானை கலைப் பதும், சிலந்தி மீட்டும் கூடு கட்டுவதுமாக நடந்து வந்தது. ஒருநாள் சிலந்தி, "இதை யார் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்' என்று நினைத்தது. வலை கட்டின பிறகு அங்கே தங்கிக் கவனித்தது. அப்போது துதிக்கை நிறையத் தண்ணிரை முகந்து வந்து யானை அபிஷேகம் செய்தது. சிலந்திக் கூட்டை யும் துதிக்கையினாலே குலைத்தது. அந்தச் சமயம் பார்த்துச் சிலந்தி யானையின் துதிக்கையினுள் புகுந்து குடைய ஆரம்பித் தது. யானையோ வலி தாங்க முடியாமல் துதிக்கையை நீட்டித் தரையில் அறைந்தது. அதனால் சிலந்தியும் இறந்து போயிற்று; யானையும் இறந்துவிட்டது. அந்த யானை சிவ கணங்களில் ஒரு வராக ஆகிவிட்டது. சிலந்தி என்ன பதவி பெற்றது தெரியுமா? பெரிய அரசனாகப் பிறந்தது. கோச்செங்கட் சோழன் சோழச் சக்கரவர்த்திகளுக்குள் கோச்செங்கட்சோழன் என்று ஒர் அரசன் இருந்தான். அவனை, திருவானைக்காவில் ஆண்ட வனை வழிபட்ட சிலந்தியின் மறுபிறவி என்று சொல்வார்கள்

சிலந்தியும் ஆனைக் காவில் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவ ணிறந்த போதே கோச்செங்க ணானும் ஆகக்
கலந்தநீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே

                              - திருநாவுக்கரசர் தேவாரம்-4-49-4-

என்று அப்பர் சுவாமிகள் இந்த வரலாற்றைக் குறிக்கிறார்.”  

[ பாடலின் பொழிப்புரை: 


திருவானைக்காவிற் பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரைஉடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான் என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார். ]


‘சில்பி’யின் இரு படங்கள்:








தொடர்புள்ள பதிவுகள்:


பாடலும், படமும்

காஞ்சிபுரம்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக