வெள்ளி, 8 டிசம்பர், 2017

929. பாக்கியம் ராமசாமி - 1

நகைச்சுவைக் கதைகளின் நாயகன்... 
பாக்கியம் ராமசாமி நினைவலைகள்!
 வி.எஸ்.சரவணன்


நேற்று மறைந்த ஜ.ரா.சுந்தரேசன் அவர்களுக்கு ஓர் அஞ்சலியாய் ‘விகடன்’ -இல் இன்று வந்த இக்கட்டுரை.
====

தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை எழுத்துக்கென்று தனி இடம் இருக்கிறது. வஞ்சப்புகழ்ச்சி, சிலேடை உள்ளிட்ட உத்திகளில் அங்கதம் தமிழ் இலக்கியத்தில் ஆதி முதலே பயணித்து வருகிறது. பாரதிக்குப் பின் எழுச்சிபெற்ற உரைநடையில் நகைச்சுவை மிளிர எழுதிய எழுத்தாளர்கள் பலர். ஆர்.மகாதேவன் எனும் தேவன் உருவாக்கிய ‘துப்பறியும் சாம்பு’ என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தை மறக்க முடியாது. அவர் ஏராளமான நகைச்சுவைக் கதைகளை எழுதினார். அவரைத் தொடர்ந்து பலரும் எழுதினார்கள். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் ஜ.ரா.சுந்தரேசன் எனும் இயற்பெயர் கொண்ட பாக்கியம் ராமசாமி.


சேலம் பகுதியைச் சார்ந்த பாக்கியம் ராமசாமி, குமுதம் பத்திரிகையில் பணியாற்றியவர். இவர் உருவாக்கிய அப்புசாமி - சீதாப்பாட்டி கதாபாத்திரங்கள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவை. அந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவை ததும்பும் கதைகளை எழுதினார். பொதுவாக, அனைவரின் வீடுகளில் இருக்கும் தாத்தா, பாட்டிகளைப் போலத்தான் அப்புசாமியும் சீதாப்பாட்டியும். ஆனால், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டே இருப்பவர்கள்போலக் கதைகளை அமைப்பார். விவரணைகளைத் தவிர்த்து, காட்சிகளாகவே கதையைக் கொண்டுசெல்வார்.



ஒரு காட்சியின் உரையாடலில் அப்புசாமியின் குரல் மேலோங்குவதுபோல இருந்தால், அடுத்த காட்சியில் சீதாப்பாட்டியின் குரல் மேலோங்கும். ஒருவரையொருவர் வார்த்தைகளால் வாரிக்கொள்வதுதான் மைய இழை. அதை வைத்துக்கொண்டு தொடர்கதை, நாவல்களில் புகுந்து விளையாடினார் பாக்கியம் ராமசாமி. இருவரின் உரையாடலில் அதிகம் ஆங்கிலம் புழங்கும். அப்புசாமி - சீதாப்பாட்டி இடம்பெற்ற சின்னச் சின்னக் கதைகளையும் இவர் எழுதினார். அதில் ஒரு கதையில், புகழ்பெற்ற எழுத்தாளர் அப்புசாமியைப் பார்க்க வருவார். ரொம்பவும் சம்பாத்தியம் பெற்ற எழுத்தாளரா.... என்கிற உரையாடல் வரும். அப்புசாமி, அந்த எழுத்தாளரைப் பார்த்து, 'நீர் என்ன ஒரு எழுத்துக்கு ஒரு பைசா வாங்குவீரா..." என்பார். அவரோ பதறியபடி, "அவ்வளவு ரூபாய்... எப்படி?" என்பார். அதற்கு அப்புசாமியோ, "பாத்திரத்தில் பெயர் பொறிப்பவரே அவ்வளவு வாங்குகிறாரே" என்று வாருவார்.

கதைகளைப் போலவே அவர் எழுதும் கட்டுரைகளிலும் நகைச்சுவை உலவும். உடல் குண்டாவது பற்றிய கட்டுரை ஒன்றை இப்படி முடிக்கிறார். "தான் சாப்பிட்ட பொருளை மாடு விரும்பும்போது வாய்க்குக் கொண்டு வந்து சாவகாசமாக அசைபோடுகிறது. அதைப்போல், மனிதர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் இயற்கை அமைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பெரும்பாலானவர்கள் ஒல்லியாகவே இருக்கக்கூடும்!"

பாக்கியம் ராமசாமி முழு வீச்சில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் நகைச்சுவை கதைகளின் முடிசூடா மன்னராக விளங்கினார். 'அப்புசாமியும் 1001 இரவுகளும்' நூல் புகழ்பெற்றது. தொழில் நுட்ப மாற்றம் நிகழ்ந்தபோது, http://www.appusami.com எனும் இணையத்தில் இயங்கி வந்தார். இதில் அவரது பல கதைகள் படிக்க கிடைக்கின்றன.

பாக்கியம் ராமசாமிக்கு இசையின் மீது தனி ஆர்வம் உண்டு. அவரின் கதைகளில் அது வெளிப்படும். அப்புசாமியைப் போலவே சீதாப்பாட்டிக்கும் சபாக்களில் பொன்னாடை கிடைப்பதைப் பார்த்து, பொறாமைப்படும் கதை ஒன்றை எழுதியிருப்பார்.  'அப்புசாமி - சீதாப்பாட்டி இசைக் கூடல்' எனும் அமைப்பை, இசைக்கலைஞர்களைக்கூ ட்ட உருவாக்கினார். சமூகப் பணிகள் செய்வதற்கு 'அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை' எனும் அமைப்பை உருவாக்கினார். இறுதி வரை எழுதியும் இயங்கிக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது.

தமிழ் இலக்கிய உலகுக்குச் சிரிப்பை அள்ளித் தந்த ஜ.ரா.சுந்தரேசன் நேற்று (டிசம்பர் 7) உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவரின் கதைகள் படிக்கும் காலம் வரை அவரும் வாழ்வார்.

[ நன்றி: https://www.vikatan.com/news/miscellaneous/110202-bakkiyam-ramasamy-memories.html  ]

2018-இல் 'கல்கி'யில் வந்த  குறிப்பு.




தொடர்புள்ள பதிவுகள்:
பாக்கியம் ராமசாமி
ஜ. ரா. சுந்தரேசன் : விக்கிப்பீடியா

தென்றல் இதழில் ஜ.ரா.சு.

தினமணியின் அஞ்சலி

பிடித்த பத்து: ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி)

அப்புசாமி, சீதாப்பாட்டிக்கு சொல்லிடாதீங்க..!’

அப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி!

அப்புசாமிக்கு உயிர் கொடுத்தது என் பாக்கியம்! : ஜெயராஜ்

3 கருத்துகள்:

  1. Came to know of his demise only from this article. An excellent writer and his demise is a great loss for Tamil world. May his soul rest in peace - Babu

    பதிலளிநீக்கு
  2. ​சிறு வயதிலிருந்து இவரது கதைகளை படித்து வளர்ந்தேன். சமீபத்தில் முகநூலில் இவரிடம் என்னிடம் இருக்கும் அவரது சிறுகதைகள் பற்றித் தெரிவித்திருந்தேன். தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுத்திருந்தார். நான் என் சோம்பேறித் தனத்தால் ஒத்திப்போட்டிருந்தேன்.​

    எங்கள் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு