சனி, 9 டிசம்பர், 2017

930. காந்தி - 13

6. இராஜ குமார் சுக்லா
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பாகம் 2) என்ற நூலின் ஆறாம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

இந்தியாவின் அரசியல் சரித்திரத்தில் 1917-ஆம் வருஷம் மிகவும் முக்கியமான வருஷமாகும். அந்த ஆண்டில் இந்தியாவின் சுதந்திரப் போருக்குப் பலம்தரக் கூடிய பல சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முக்கியமானது 'சம்பரான் சத்தியாக் கிரஹம்' என்று பெயர் பெற்றது. அந்த நிகழ்ச்சியின் மூலம் மகாத்மா காந்தியின் ஆத்மசக்தியின் பெருமையை இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரையில் இந்திய மக்கள் எல்லாரும் நன்கு அறிந்து கொண்டார்கள்.
.
பீஹார் மாகாணத்தில் சம்பரான் ஒரு ஜில்லா. இமயமலையின் அடிவாரத்தின் அருகில் உள்ளது. ஜனக மகாராஜன் ஆட்சிபுரிந்த விதேக நாடு என்பது அதுதான். அங்கே அவுரித் தோட்டங்கள் அதிகம். பெரும்பாலான அவுரித் தோட்டங்கள் ஆங்கில முதலாளிகளுக்குச் சொந்தமானவை. சம்பரானிலுள்ள ஒவ்வொரு குடியானவனும் இருபது ஏக்கரா நிலம் பயிர் செய்தால் அதில் மூன்று ஏக்கரா கட்டாயம் அவுரி பயிரிட வேண்டும் என்னும் விதி அங்கே அமுலில் இருந்தது. அந்த மூன்று ஏக்கராவில் விளையும் அவுரிப் பயிர் நிலச்சுவாந்தாரனைச் சேரும். இவ்விதம் கட்டாயமாக அவுரி பயிரிடும் முறைக்குத் 'தீன் கதியா' முறை என்ற பெயர் வழங்கிற்று. .
.
1917-ஆம் ஆண்டுக்கு முன்னால் இந்த விவரம் ஒன்றும் காந்தி மகானுக்குத் தெரியவே தெரியாது. 1916-ஆம் ஆண்டின் இறுதியில் லக்னௌ நகரில் காங்கிரஸ் மகாசபை கூடியபோது இராஜகுமார் சுக்லா என்பவர் காங்கிரஸ் விடுதியில் மகாத்மாவின் ஜாகையைத் தேடிக் கொண்டு வந்து கண்டு பிடித்தார். இராஜகுமார் சுக்லா சம்பரான் ஜில்லா குடியானவர்களில் ஒருவர். கட்டாய அவுரிப் பயிர் செய்து கஷ்டப்பட்டவர்.தம்மைப் போலவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான குடியானவர்களுக்குக் கதிமோக்ஷம் பிறக்கவேண்டும் என்ற அவா அவர் மனதில் குடிகொண்டிருந்தது. எனவே மகாத்மாவைக் கண்டு அவரிடம் சம்பரான் குடியானவர்களின் கஷ்டங்களைச் சொன்னார். சம்பரானுக்கு நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அவர் கூறிய விஷயங்கள் மகாத்மாவுக்குத் தெளிவாக விளங்கவில்லை. எனவே இராஜகுமார் சுக்லா "எங்கள் வக்கீல் பாபுவை அழைத்து வருகிறேன். அவர் எல்லாம் தெளிவாகச் சொல்வார்!" என்று கூறிவிட்டுப் போய் பாபு விரஜ கிஷோர் பிரஸாதை அழைத்துக்கொண்டு வந்தார். பின்னாளில் பாபு விரஜ கிஷோர் பிரஸாதும் பாபு ராஜேந்திர பிரஸாதும் தேசத்தொண்டில் மகாத்மாவின் சிறந்த துணைவர்கள் ஆனார்கள். ஆனால் அச்சமயம் பாபு விரஜ  கிஷோரைப் பற்றி மகாத்மாவுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டாகவில்லை. ஒன்றுமறியாத ஏழைக் குடியானவர்களிடம் பணம் பறிக்கும் வக்கீல்களில் ஒருவர் என்று எண்ணினார். எனவே, பாபு விரஜ கிஷோர் கூறியதை யேல்லாம் கேட்டுக்கொண்டு, "நிலைமையை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் ஒன்றுமே சொல்வதற்கில்லை. ஆனால் நீங்கள் இதைப் பற்றிக் காங்கிரஸில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவது நல்லது" என்று சொன்னார். அதன்படியே ஸ்ரீ விரஜ கிஷோர் சம்பரான் குடியானவர்களிடம் அநுதாபம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றைக் காங்கிரஸில் கொண்டுவந்து நிறைவேற்றினார். .
.


இதைக்கொண்டு இராஜகுமார் சுக்லா திருப்தியடைந்து விடவில்லை. "தாங்கள் சம்பரானுக்கு வந்து நேரில் நிலைமை யைப் பார்க்கவேண்டும்." என்று அவர் மகாத்மாவிடம் சொன்னார். "ஆகட்டும்; அந்தப் பக்கங்களில் சுற்றுப் பிரயாணம் செய்வதற்கு வரும்போது சம்பரானுக்கு வருகின்றேன்" என்றார் மகாத்மா. அவர் கான்பூருக்குப் போனபோது இராஜ குமார் சுக்லா அவரைப் பின் தொடர்ந்தார். "இவ்விடத்திலிருந்து சம்பரான் அதிக தூரம் இல்லை. வருகிறீர்களா?" என்று கேட்டார். மகாத்மா அப்போது அவகாசம் இல்லை என்று கூறிவிட்டு ஆமதாபாத் ஆசிரமத்துக்குச் சென்றார். இராஜகுமார் சுக்லா அங்கேயும் போனார். கடைசியாக, காந்திஜி "நான் கல்கத்தாவுக்கு இத்தனாந்தேதி வருகிறேன். அங்கே வந்து என்னைச் சம்பரானுக்கு அழைத்துப் போங்கள்!" என்று சொன்னார். .
.
மகாத்மா கல்கத்தாவுக்குப் போகு முன்பே இராஜகுமார் சுக்லா அங்கே சென்று ஸ்ரீ பூபேந்திரநாத் வஸுவின் வீட்டில் காந்திஜிக்காகக் காத்திருந்தார். இவ்வாறு, கல்வியறிவு அதிகம் இல்லாத ஒரு குடியானவனுடைய உறுதி காரணமாகத் தேசத்துக்கே ஒரு புதிய ஆதர்சம் ஏற்படலாயிற்று. .
.
காந்திஜியும் இராஜகுமார் சுக்லாவும் கல்கத்தாவில் ரயில் ஏறிப் பாட்னாவுக்கு வந்து சேர்ந்தார்கள். பாட்னாவில் காந்திஜிக்குத் தெரிந்த நண்பர் யாரும் இல்லை. இராஜகுமார் சுக்லாவுக்குத் தெரிந்தவர்களோ அவரை மிகக் கீழான மனிதராகக் கருதினார்கள். பாபு ராஜேந்திரப் பிரஸாத்தின் பங்களாவுக்கு மகாத்மாவைச் சுக்லா அழைத்துச் சென்றார். பாபு ராஜேந்திர பிரஸாத் அச்சமயம் ஊரில் இல்லை. அவருடைய வீட்டு வேலைக்காரர்கள் காந்திஜியையும் சுக்லாவையும் இலட்சியம் செய்யவில்லை. அவர்கள் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் இழுப்பதைக்கூட வேலைக்காரர்கள் ஆட்சேபித்தார்கள். தண்ணீர்த் துளி தெளித்தால் தீட்டாய்ப் போய்விடுவோம் என்று சொன்னார்கள். மற்ற மாகாணங்களைக் காட்டிலும் பீஹாரில் தீண்டாமை மிகக் கடுமை என்பதை காந்திஜி அறிந்து கொண்டார். இராஜகுமார் சுக்லாவினால் தமக்கு அதிக உதவி கிடைக்காது என்பதையும் கண்டு கொண்டார். குதிரை லகானைத் தாமே இழுத்துப் பிடிக்க வேண்டியதுதான் என்று தீர்மானம் செய்தார். .
.
பாட்னாவில் மௌலானா மஷ்ருல் ஹக் என்னும் பிரசித்தமான தேசீய முஸ்லீம் தலைவர் வசித்து வந்தார். அவர் லண்டனில் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்த காலத்தில் மகாத்மாவுக்கு அவருடைய அறிமுகம் ஏற்பட்டிருந்தது. பிற்பாடு 1915-ஆம் வருஷத்துப் பம்பாய் காங்கிரஸின்போது மகாத்மா அவரைச் சந்தித்தார். பாட்னாவுக்கு எப்போதாவது வந்தால் தம் இல்லத்துக்கு வந்து தங்கும்படி மௌலானா மஷ்ருல் ஹக் காந்திஜியிடம் சொல்லியிருந்தார். அதை இப்போது ஞாபகப்படுத்திக் கொண்டு மகாத்மா அவருக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பினார். மௌலானா மஷ்ருல் ஹக் உடனே தமது மோட்டாரில் ஏறி வந்து மகாத்மாவைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். .
.
காந்திஜி அவரிடம் தம் வந்த காரியத்தைத் தெரிவித்தார். சம்பரான் விஷயமாக விசாரணை செய்வதற்குத் தாம் எந்த ஊருக்குப் போகவேண்டுமோ அந்த ஊருக்குத் தம்மை முதல் ரயிலில் ஏற்றி அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். முஸபர்பூருக்கு முதலில் செல்வது நலம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆகவே அன்று மாலை மகாத்மாவை முஸபர்பூருக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார் மௌலானா மஷ்ருல் ஹக். .
.
முஸபர்பூரில் அச்சமயம் ஆச்சாரிய கிருபளானி வசித்து வந்தார். அந்நகரில் இருந்த அரசாங்கக் கலாசாலையில் அவர் ஆசிரியராயிருந்து சில நாளைக்கு முன்பு அந்த உத்தியோகத்தை ராஜிநாமா செய்திருந்தார். மகாத்மா வரும் செய்தி அறிந்து ஆச்சாரிய கிருபளானி ஒரு பெரும் மாணாக்கர் கூட்டத்துடன் நள்ளிரவில் ஸ்டே ஷனுக்கு வந்து மகாத்மா காந்தியை வரவேற்றார். ஆச்சாரிய கிருபளானி தமது நண்பரான ஆசிரியர் மல்கானியின் பங்களாவில் வசித்து வந்தார். மகாத்மா காந்தியை அவர் அந்தப் பங்களாவுக்கு அழைத்துப் போனார். .
.
மறுநாள் காலையில் மகாத்மா வந்திருக்கும் செய்தி அறிந்து முஸபர்பூர் வக்கீல்கள் பலர் அவரைப் பார்க்க வந்தார்கள். வந்தவர்களில் இராம நவமி பிரஸாத் என்பவர், "இராஜகுமார் சுக்லா உங்களிடம் சொல்லியிருக்கும் விவரங்கள் எல்லாம் உண்மை தான். அது விஷயமாக நீங்கள் ஏதாவது வேலை செய்வதாக இருந்தால், அரசாங்க கலாசாலை ஆசிரியரின் வீட்டில் தங்கியிருந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. எங்களில் ஒருவர் வீட்டுக்கு வந்து தங்கவேண்டும். கயா பாபு என்பவர் இங்கே பிரபல வக்கீல். அவர் சார்பாக உங்களை அழைக்கவே நான் வந்தேன். நாங்கள் எல்லாரும் சர்க்காருக்கு விரோதமாக எந்தக் காரியமும் செய்வதற்குப் பயந்தவர்கள்தான். ஆயினும் எங்களால் இயன்ற உதவியைத் தங்களுக்குச் செய்கிறோம். இந்த மாகாணத்தின் தலைவர்களான பாபு விரஜ கிஷோர் பிரஸாத்துக்கும் பாபு இராஜேந்திர பிரஸாத்துக்கும் தந்தி கொடுத்து அவர்களை வரவழைக்கிறோம்!" என்று சொன்னார். .
.
இதன் பேரில் மகாத்மா கயா பாபுவின் வீட்டுக்குப் போனார். தர்பங்காவிலிருந்து விரஜ கிஷோர் பிரஸாதும் பூரியிலிருந்து இராஜேந்திர பிரஸாதும் சீக்கிரத்தில் வந்து சேர்ந்தார்கள். அவர்களைப்பற்றி மகாத்மா தம்முடைய பழைய அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. தாம் எண்ணியதுபோல அவர்கள் ஏழைக் குடியானவர்களிடம் பணம் பறிப்பவர்கள் அல்லவென்றும் நேர்மையும் பரோபகார சிந்தையும் உள்ளவர்கள் என்றும் அறிந்தார். விரைவிலேயே மகாத்மாவுக்கும் மேற் கூறிய இரு பீஹார் தலைவர்களுக்கும் நெருங்கிய நட்பு உண்டாயிற்று. இவர்களில் பாபு விரஜ கிஷோர் பிரஸாதின் மருமகன்தான் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவரான ஸ்ரீ ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள். .
.
நிலைமையை நன்றாய்த் தெரிந்துகொண்ட பிறகு காந்திஜி கூறியதாவது:-- "குடியானவர்களின் சார்பாகக் கோர்ட்டுகளில் வழக்காடி அவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் முயன்று வந்திருக்கிறீர்கள். ஆனால் அந்த வழியில் எனக்கு நம்பிக்கை இல்லை. முதலில் குடியானவர்களைப் பயத்திலிருந்து விடுதலை செய்யவேணாடும். 'தீன்கதியா' முறையை அடியோடு ஒழிக்க வேண்டும். இரண்டு நாளில் இங்கிருந்து திரும்பிப்போய் விடலாம் என்ற எண்ணத்துடன் நான் இங்கு வந்தேன். ஆனால் அது சாத்தியமில்லை என்று காண்கிறேன். இரண்டு வருஷம் இங்கே இருக்கும்படி நேர்ந்தாலும் நேரிடலாம். அதற்கு நான் தயார். நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா?" .
.
"என்ன விதமான உதவி வேண்டும்" என்று பாபு விரஜ கிஷோர் கேட்டார். முதலில் தம்முடன் அவர்கள் வந்து குடியானவர்கள் சொல்வதைத் தமக்கு மொழிபெயர்த்துச் சொல்லவேண்டும் என்றும், பத்திரிகைகளுக்கு எழுதுவது, கடிதப் போக்குவரத்து செய்வது முதலிய குமாஸ்தா வேலை அதிகம் இருக்கும் என்றும், கடைசியாகச் சிறைக்குப் போகும் படி நேரந்தாலும் நேரலாம் என்றும் மகாத்மா காந்தி சொன்னார்." .
.
"உங்களுடனேயே இருந்து மொழிபெயர்ப்பு வேலை குமாஸ்தா வேலை செய்வதற்குத் தயாராயிருக்கிறோம். சிறைக்குப் போகிறதென்பது முற்றும் எங்களுக்குப் புதிய விஷயம். அதற்கும் சித்தமாக முயல்கிறோம்" என்று அந்தப் பீஹார் நண்பர்கள் காந்திஜியிடம் சொன்னார்கள். .

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக