புதன், 7 பிப்ரவரி, 2018

983. பகீரதன் -1

எழுத்துலகில் ஒரு "சத்திய கங்கை'!
திருப்பூர் கிருஷ்ணன்



பிப்ரவரி 7. எழுத்தாளர் ‘பகீரத’னின் நினைவு தினம்.( இயற்பெயர்: மகாலிங்கம்) 
====
சிவனது தாளை நோக்கித் தவமிருந்து நித்திய கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தவர் புராண பகீரதன். பத்திரிகைத் தாளில் அச்சேற்றி, மாதமிரு முறை இதழான "சத்திய கங்கை'யை இலக்கிய உலகுக்குக் கொண்டு வந்தவர் எழுத்தாளர் பகீரதன். "சத்திய கங்கை' பகீரதனின் பத்திரிகையாகத் தொடர்ந்து 33 ஆண்டுகள் வெளிவந்து சாதனை படைத்தது.


பகீரதன், "கல்கி'யின் தயாரிப்புதான். 18 ஆண்டுகள் கல்கியில் துணையாசிரியராகவும், "ஓம் சக்தி' மாத இதழில் 14 ஆண்டுகள் ஆசிரியராகவும், "கிஸான் வர்ல்ட்' என்ற ஆங்கில வேளாண்மை இதழில் 4 ஆண்டுகள் இணையாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.


தமிழுக்கு இவர் பங்கு 14 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுதிகள். தவிர, தாம் சென்ற இடத்தைப் பற்றியெல்லாம் அவர் எழுதிய எண்ணற்ற பயணக் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை. வெளியூர் சென்ற ஒவ்வோர் அனுபவத்தையும் மிக சுவாரஸ்யமான பயண இலக்கியமாகத் தர இவரால் முடிந்தது.

[ நன்றி: நசன் ] 


கல்கியில் வெளிவந்த இவருடைய பயணக் கட்டுரைகளை வாசித்தார் புகழ்பெற்ற ஓர் அரசியல் பிரமுகர். "திராவிட நாடு' இதழில் இவரது எழுத்தை மனமாரப் பாராட்டிய அந்தப் பிரமுகர் - அறிஞர் அண்ணாதுரை.


பகீரதனின் நூல்களில் மிகுந்த மதிப்போடு பேசப்பட்ட நூல்கள் என்று "சர்தார் வேதரத்தினத்தின் வாழ்க்கை வரலாறு', "ஜோதி வழியில் வள்ளலார்', "முல்லை வனத்து மோகினி', "கல்கி நினைவுகள்' முதலியவற்றைச் சொல்லலாம். எதை எழுதினாலும் ஆதாரங்களைத் தேடி, கடுமையாக உழைத்து எழுதுவது பகீரதனின் பாணி. பொத்தாம் பொதுவாகவோ, ஏனோதானோ என்றோ அவர் எதையும் எழுதியதில்லை. அவர் எழுத்தைப் படிக்கும் போதே தகவல் திரட்டுவதில் அவர் மேற்கொண்ட கடின உழைப்பு வாசகர்களுக்கு நன்கு புரியும்.

இவர் எழுதிய புத்தகங்கள் மதிப்பு மிக்கவை மட்டுமல்ல, விற்பனையிலும் பெரும் சாதனை படைத்தவை. அழகப்ப செட்டியார் பற்றி இவர் எழுதிய "அதிசய மனிதர் அழகப்பர்' என்ற வாழ்க்கை வரலாற்று நூல் 30,000 பிரதிகளும், சுதந்திரப் போராட்ட வீரர் "சர்தார் வேதரத்தினத்தின் வாழ்க்கை வரலாற்று' நூல் 25000 பிரதிகளும் விற்று சாதனை படைத்தவை.


தொல்காப்பிய ஆய்வுப் பதிப்பொன்றை (ஆயிரம் பக்கங்களுக்கு மேல்) வெளியிட்டு இலக்கண உலகிலும் முத்திரை பதித்தார். வள்ளலாரின் தீவிர அடியவர். சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய ஆங்கில நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து ஆன்மிக உலகிற்கும் தொண்டாற்றியுள்ளார்.
"தேன்மொழியாள்' என்றொரு நாவல் எழுதினார். அது அதே தலைப்பில் நாடகமாக ஆக்கப்பட்டு, இந்தியா முழுவதும் சுமார் இருநூறு தடவைகளுக்கு மேல் மேடையேறியது. அதில் ராமசாமி என்ற நடிகர் ஒருவர் ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தை ஏற்று நடித்து, சென்ற இடமெல்லாம் கலகலக்க வைத்தார். அந்தப் பாத்திரத்தின் பெயர் "சோ'. அச்சச்சோ... பிறகு அதுவே அந்த நடிகருக்குப் பெயராக மாறிவிட்டது. ராமசாமி என்ற பெயர் மக்களுக்கு மறந்தே போய்விட்டது. பத்திரிகையாளர் "சோ'வுக்குப் பெயர் பெற்றுத்தந்தது பகீரதனின் "தேன்மொழியாள்' நாடகம்தான்.


சுதந்திரப் போரில் ஈடுபட்ட பகீரதன், எப்போதும் கதரே அணிந்தவர். வார்தாவில் மகாத்மாவிடம் மூன்று மாதம் லோகசேவா சங்கப் பயிற்சி பெற்றவர். இறுதிவரை காந்தி அன்பராக வாழ்ந்தவர். "காந்தியம்தான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, உலகின் எதிர்காலத்திற்கே நல்லது' என்ற தீவிரமான கருத்துடையவர். மூதறிஞர் ராஜாஜி, பெரியார், காமராஜ், திரு.வி.க., டி.கே.சி., கல்கி போன்ற பிரமுகர்களோடு நெருங்கிப் பழகியவர் மட்டுமல்ல, அவர்களின் அன்பைப் பெற்றவரும் கூட.



இராமலிங்கர் பணிமன்றம், பாரதியார் சங்கம் ஆகிய இலக்கிய அமைப்புகளில் பல்லாண்டுகள் செயலாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் பகீரதன். முத்தமிழ்க் காவலர், செந்தமிழ்ச் செல்வர், கலைமாமணி, ஞான பாரதி முதலிய பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இளம் வயதிலேயே காந்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், தன் மனைவி சரோஜாவைக் கைப்பிடித்தபோது பெற்ற சீதனங்கள், மனைவிக்கான கதர்ப் புடவையும், மஞ்சள் சரடும் மட்டுமே! அவ்விதம் சொந்த வாழ்விலும் காந்தியத்தை அனுசரித்து வாழ்ந்தவர்.


காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு வாழ்ந்த, காந்தி யுக எழுத்தாளர்கள் வரிசையில் சி.சு.செல்லப்பா, கல்கி, ஆர்.வி., அ.கி.கோபாலன், அ.கி.ஜெயராமன் போன்ற சுதந்திரத் தியாகிகளோடு சேர்த்து பகீரதனையும் வரிசைப்படுத்தலாம்.
"சத்திய கங்கை'யை மண்ணுலகுக்கு வழங்கிய பகீரதன், 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

[ நன்றி: தினமணி ]

பி.கு.

முதலில் ‘கங்கை’ என்ற பெயரில் தான்  பகீரதனின் இதழ் வந்தது. ( ~60 களில்? ) ( ‘மணியம்’ வரைந்த அட்டைப்படத்தைக் கவனிக்கவும். ) 

தொடர்புள்ள பதிவுகள்:

6 கருத்துகள்:

  1. நான் அறிந்திராத தகவல்கள். மிகவும் நன்றி. இத்தகு நல்லோரின் பணி சரியான அளவில் வெளி வராதது வருத்தமளிக்கிறது.
    தங்களது பதிவுகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை.
    வாழ்க உங்கள் நற்தொண்டு . - பாபு

    பதிலளிநீக்கு
  2. பகீரதன் அவர்களைப் பற்றி நிறைய விவரங்கள் அறிய முடிந்தது இந்த பதிவால்.
    நன்றி .

    பதிலளிநீக்கு
  3. நெல்லைத் தமிழன், நன்றி. ‘நசன்’ தான்.
    பொள்ளாச்சி நசன் பற்றி அறிய:
    https://ta.wikipedia.org/s/zxl

    பதிலளிநீக்கு
  4. ஒரு காலத்தில் எனது சிறுகதைகளை 'கங்கை'யில் பதிப்பித்து மகிழ்ந்தவர். திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் நினைவு கூறல் பொருத்தமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. @ஜீவி. நன்றி.
    'கங்கை’ யிலிருந்து ஒரு தொகுப்பு, பகீரதனின் “ஓம் சக்தி” இதழ் பங்களிப்பு, மேலும் விவரமாய் ஆவணப் படுத்தல் வேண்டும். எத்தனை வருடங்கள் ‘கங்கை’? எப்போது ‘சத்திய கங்கை’ ஆனது? போன்ற விவரங்கள் எனக்குக் கிட்டவில்லை. அவருடைய நூல்கள் கூட இப்போது கிட்டுகின்றனவா? எனக்குத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு