வியாழன், 8 பிப்ரவரி, 2018

984. மு. மு. இஸ்மாயில் -1

கம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்!


 பிப்ரவரி 8. நீதியரசர் மு.மு.இஸ்மாயிலின் பிறந்த தினம்.

அவருடைய சில நூல்களைப் படித்திருக்கிறேன்.  மிகச் சுவையான ஆழமான எழுத்துகள்.  டொராண்டோவில் அவர் வந்து கம்பனைப் பற்றிப் பேசினபோது கேட்டிருக்கிறேன்.

தினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ:

====

முகமதிய மதத்தைச் சேர்ந்த பலர் தமிழ் அன்பர்களாய் வாழ்ந்து, தமிழைத் தங்கள் புலமைத் திறத்தால் வளப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அன்பர்களின் வரிசையில், அண்மைக்கால உதாரணம் 84 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவரும், வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தில் தோய்ந்து வாழ்ந்தவருமான பெரும்புலமை படைத்த அறிஞர் நீதிபதி மு.மு.இஸ்மாயில். 1921-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பிறந்தார்.
அவர் தம்மைத் தாமே உருவாக்கிக்கொண்ட பெருமைக்குரியவர். ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை வளர்த்தவர்கள் உறவினர்கள்தான். (""நான் கடவுளால் வளர்க்கப்பட்ட பிள்ளை தெரியுமோ?'' என்று சொல்லி இஸ்மாயில் நகைப்பதுண்டு) நிறைந்த கடவுள் பக்தியுடன் வாழ்ந்த பெருமகன். "அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்' என்ற குறிப்பிடத்தக்க நூலை எழுதியவரும்கூட.
அவரது இளமைக்காலமும் பள்ளி வாழ்வும் நாகூரில்தான் கழிந்தது. இளம் வயதிலேயே மிகுந்த புத்திசாலியாக இருந்தார். அதனால் பள்ளி அவரை மூன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாக ஐந்தாம் வகுப்புக்கு (இரட்டைத் தேர்ச்சி) அனுப்பியது.



பாடகர் ஏ.வி.ரமணனின் தந்தையான ஆராவமுது ஐயங்கார் என்ற பெரும் தமிழறிஞரிடம் எஸ்.எஸ்.எல்.சி.யில் பாடம் கேட்ட பெருமையும் இஸ்மாயிலுக்கு உண்டு. மிகப்பெரும் புலவரிடம், தமிழறிவுக்கான அஸ்திவாரம் பலமாகப் போடப்பட்டதால், அவருக்கு அது இறுதிவரை கைகொடுத்தது. சட்டப் படிப்புப் படித்த அவர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தம் சொந்த ஆர்வத்தால் நிறையப் படித்துத் தேர்ந்தார்.

பேராசிரியர் கே.சுவாமிநாதன் என்ற புகழ்பெற்ற காந்தியவாதியைத் தெரியாதவர்கள் இருக்க இயலாது. தனிமனித ஒழுக்கத்தின் சிகரமாக தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவாழ்வு வாழ்ந்தவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர். கல்லூரி நாள்களில் இஸ்மாயில் தனது அறிவுக் கூர்மை காரணமாக பேராசிரியர் சுவாமிநாதனின் பெறாத பிள்ளைபோல் ஆகிவிட்டார்.

காந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லாம் அசைவம்தான். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது. (இளம் வயதிலிருந்தே காந்தியின் "ஹரிஜன்' இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.)

உணவில் சைவத்தைப் பின்பற்றிய அவருக்கு, மிகவும் பிடித்தது வைணவக் காப்பியமான கம்பராமாயணம். கம்பர் அவரது முழுமனதையும் கொள்ளை கொண்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.


இஸ்மாயிலின் கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்ட தமிழ் அன்பர்கள், ஆய்வுச்சுவை தோய்ந்த அந்த இனிய தமிழில் சொக்கிக் கிறங்கினார்கள். இஸ்மாயில், பல இடங்களில் மீண்டும் மீண்டும் கம்பன் குறித்துப்பேச அழைக்கப்பட்டார். பலர் அவர் பேசிய அதே கம்பன் கருத்தை அதே சொற்களில் மறுபடி மறுபடி அவரிடமிருந்தே "நேயர் விருப்பம்'போல் கேட்க ஆசைப்பட்டார்கள்.

சொற்பொழிவாளராக இருந்த இஸ்மாயில், புகழ்பெற்ற பல பத்திரிகைகளின் தீபாவளி மலர் உள்ளிட்ட சிறப்பிதழ்களில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய முதல் புத்தகம், "மௌலானா அபுல்கலாம் ஆசாத்' பற்றியது. அதற்கு முன்னுரை தந்து பெருமைப்படுத்தியவர் மூதறிஞர் ராஜாஜி.


கம்பன் கண்ட ராமன், கம்பன் கண்ட சமரசம், செவிநுகர் கனிகள், வள்ளலின் வள்ளல், மும்மடங்கு பொலிந்தன, பழைய மன்றாடி - என அடுத்தடுத்து இவரது பழந்தமிழ் ஆய்வு நூல்கள் நிறைய வெளிவரலாயின.
வாலிவதை பற்றிய இவரது "மூன்று வினாக்கள்' என்ற நூல், உலகப் புகழ்பெற்ற ஓர் ஆன்மிகப் பெரியவரைப் பெரிதும் கவர்ந்தது. அந்த நூலுக்காகவே இவருக்குப் பொன்னாடை அணியச் செய்து, பாராட்டி மகிழ்ந்த அந்தத் துறவி நூறாண்டு வாழ்ந்த காஞ்சி மகாபெரியவர் பரமாச்சாரியார்.

இஸ்மாயிலுக்கும் பரமாச்சாரியார் மேல் மிகுந்த மரியாதை உண்டு. "ஒருவர் எந்த மதத்தில் பிறந்தாரோ, அந்த மதத்தின் ஆன்மிக நெறிகளை அனுசரித்து வாழவேண்டும்' என்ற பரமாச்சாரியாரின் கருத்தை இஸ்மாயில் பெரிதும் போற்றியவர்.

இயல் செல்வம், சேவா ரத்தினம், இராம ரத்தினம் முதலிய பல பட்டங்கள் இவரது இயல்புக்குப் பொருத்தமாக வழங்கப்பட்டன. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாருக்கு இவர்மேல் அன்பும் மதிப்பும் உண்டு. இவருக்குக் கடிதங்கள் எழுதும்போது, "உலகம் போற்றும் உத்தம' என்று தொடங்கித்தான் கடிதம் எழுதுவாராம் அண்ணங்கராச்சாரியார்.
கம்பன் கழக நிறுவனர்களுள் ஒருவர் இஸ்மாயில். "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன் ஆகியோர் மற்ற நிறுவனர்கள். இப்போது கம்பன் கழகத்தின் தலைவராக இயங்குபவர் ஆர்.எம். வீரப்பன்.

கம்பராமாயண மூல நூலை, மெல்லிய உறுதியான தாளில் முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாகப் பதிப்பித்த பெருமை இஸ்மாயிலுக்கு உண்டு. தெ.பொ.மீனாட்சிசுந்தரம், அ.ச.ஞானசம்பந்தன், தெ.ஞானசுந்தரம் முதலிய தமிழ் அறிஞர்கள் அந்தப் பதிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். இஸ்மாயிலின் மிகப்பெரிய சாதனை என்று இந்தப் பதிப்புப் பணியைச் சொல்லலாம்.

1976-இல் நடைபெற்ற கம்பன் விழாவில் அதன் முதல் பதிப்பு வெளியாயிற்று. ஆயிரத்துக்கும் மேலான கம்பன் அன்பர்கள் அந்தப் பதிப்பை விலைகொடுத்து வாங்க வரிசையில் நெடுநேரம் நின்றார்கள். வாங்குவதில் பெரும் போட்டி இருந்ததால், காவல்துறையினர் தலையிட்டு வரிசையை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.

மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜ் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் இஸ்மாயில். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக விளங்கிய பெருமைக்குரியவர் இஸ்மாயில். 1980-இல், முந்தைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரிக்குப் பிறகு, தமிழகத்தின் தாற்காலிக ஆளுநராகவும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார்.

தமிழின் பக்தி இலக்கியம், மதங்கடந்து தமிழர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் ஆற்றல் பெற்றது என்பதற்கு இஸ்மாயிலின் கம்பராமாயணப் புலமை ஓர் எடுத்துக்காட்டு.

÷2005-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி இஸ்மாயில் காலமானார். அவர் நினைவைப் போற்றும் வகையில், பழ.பழனியப்பன் எழுதிய "இலக்கியமான நீதிபதி' என்ற தலைப்பில் 19.1.2005 அன்று "தினமணி' நாளிதழில் கட்டுரை வெளியானது குறிப்பிடத்தக்கது.

[ நன்றி: தினமணி, 2011 ]

தொடர்புள்ள பதிவுகள்:

மு. மு. இஸ்மாயில் : விக்கிப்பீடியா

2 கருத்துகள்:

  1. திரு ஆராவமுத ஐயங்கார் enஅது உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சில காலம் இருந்தார். அவர் புகழ் பெற்ற த மிழ் பேரறிஞர் என்பது தற்போதுதான் தெரியும். அதே போன்று பரமாச்சார்யர் பாராட்டிய அறிஞர் திரு இஸ்மாயில் என்பதும் எனக்கு புது தகவல். நல்லோர்களின் சிறப்புகளை நீங்கள் உங்கள் பதிவு களில் போற்றி வெளியிடுகிறீர்கள். உங்கள் பணி மகத்தானது. நன்கு செழிக்கட்டும். இறைவன் அருள். - பாபு

    பதிலளிநீக்கு
  2. @Babu. நன்றி. இந்தச் சுட்டியைப் படியுங்கள்:
    https://tinyurl.com/yabef9ws

    பதிலளிநீக்கு