செவ்வாய், 13 மார்ச், 2018

1008. பாடலும் படமும் - 28

செவ்வாய் 
கி.வா.ஜகந்நாதன்


மங்களன், குஜன், செவ்வாய் முதலிய பெயர்களை உடைய அங்காரகன், நவக்கிரக மண்டலத்தில் மூன்றாவதாக வருகிறான். சூரியனுக்குத் தெற்கே இவனே ஆவாகனம் பண்ணிப் பூஜிப்பது மரபு. திருமேனியும் உடை, மாலை முதலியனவும் நல்ல சிவப்பாக இருத்தலின் செவ்வாய் என்ற பெயர் தமிழில் வழங்குகிறது; செம்மீன் என்றும் சொல்வதுண்டு.

"முந்நீர் நாப்பண் திமிற்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்” என்பது புறநானூறு.


 செம்மேனிப் பெருமாளாகிய அங்காரகன் மேஷ வாகனத்தின் மேல் முக்கோணப் பீடத்தில் எழுந்தருளியிருக்கும் கோலத்தில் ஒவியம் அமைந்திருக்கிறது. மூன்று திருக்கரங்களிலும் சக்தி, சூலம், கதை என்னும் ஆயுதங்களைத் தாங்கி, ஒரு கரத்தால் அபயந் தருகிறான் அங்காரகன். அவனுக்குரிய ராசிகளை ஓர் ஓரத்தில் உள்ள ஆடும் தேளும் காட்டுகின்றன. பின்னால் மேருமலை இருக்கிறது. செவ்வாய், அம்மலையை வலம் வரும் செய்தியை இது நினைப்பூட்டுகிறது.

முழங்காலின்மேல் ஒரு கையை வைத்திருக்கும் குஜனுடைய கண்கள் சிவப்பாக இருக்கின்றன. திருமுடியில் செம்மணிகள் முன்னே தோன்று கின்றன. அவன் திருச்செவியில் இடப்பக்கத்தே அதிதேவதையாகிய நிலமகள் இருக்கிறாள். பிருத்வி என்பதையே இத் திருவுருவம் காட்டு கிறது. க்ஷேத்ரபாலன் செவ்வாய்க் கிரகத்தின் பிரத்தியதி தேவதை. வலப் பக்கத்தில் உலகையாளும் மன்னனைப்போல அத் தேவதையைக் காணலாம். அவன், பயிரையும் பசுவையும் பாதுகாக்கிறவன் என்பதை அத் திருவுருவத்திலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

செங்கண்ணன் செம்மேனிச் செல்வன்செம் மாலையினான்
அங்கையில்வேல் சூலம் அடற்கதைகொள் - மங்கலத்தான் 
மோதுந் தகரேறும் மூர்த்தி நிலமகட்குக் 
காதற்சேய் அங்கார கன். 

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

சூரியன்

சந்திரன்

பிருகஸ்பதி

சுக்கிரன்

தொடர்புள்ள பதிவுகள்:
[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]

1 கருத்து: