புதன், 28 மார்ச், 2018

1020. காந்தி - 20

13.  ஆத்ம தரிசனம் ; 14. நாடு எழுந்தது!
கல்கி



கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’( பகுதி 2) என்ற நூலின்   13, 14-ஆம் கட்டுரைகள். ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

13 -ஆம் கட்டுரையை நான் முன்பே இங்கிட்டிருக்கிறேன்,
13.ஆத்ம தரிசனம்

14. நாடு எழுந்தது!
கல்கி


சென்னைச் சுற்றுப் பிரயாணத்தை காந்திஜி சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு பம்பாய்க்கு பிரயாணமானார். ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி கொண்டாட்டத்துக்குப் பம்பாய் வந்து விட வேண்டும் என்று பம்பாய் நண்பர்கள் மகாத்மாவுக்குத் தந்தியடித்திருந்தார்கள். எனவே, பம்பாய்க்கு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி மகாத்மா போய்ச் சேர்ந்தார். மகாத்மா ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போதே டில்லியிலிருந்து விபரீதமான செய்திகள் வந்துவிட்டன.

ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி என்று முதலில் குறிப்பிட்டு விட்டு அப்புறம் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதிக்குத் தள்ளிப்போட்டார்கள் அல்லவா? தேதியைத் தள்ளிப்போட்ட செய்தி டில்லிக்குச் சரியான காலத்தில் போய்ச் சேரவில்லை. ஆகையால் 30-ஆம் தேதி அன்றே டில்லியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு முன்னால் எந்த நாளிலும் டில்லி அத்தகைய காட்சியைப் பார்த்தது கிடையாது. ஹிந்துக்களும் முஸ்லீம்களும் அவ்வளவு ஒற்றுமையுடன் அன்றைக்கு ஹர்த்தால் அனுஷ்டித்தார்கள். பெரிய பெரிய வியாபார ஸ்தலங்களிலிருந்து மிகச் சிறிய சோடாக்கடை வரையில் எல்லாம் மூடப்பட்டிருந்தன. வண்டிக்காரர்கள் அன்று வண்டி ஓட்டவில்லை. வீதிகளில் அங்காடிக் குடைகள் வரவில்லை. அநேகர் உண்ணாவிரதம் அனுஷ்டித்தார்கள். பல ஊர்வலங்கள் நடந்தன; பல பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன. கூட்டங்களில் எல்லாம்பெரிய பிரம்மாண்டமான கூட்டம் ஜும்மா மசூதியில் கூடிற்று. அன்றைக்கு டில்லி ஜும்மா மசூதியில் சரித்திரம் கண்டிராத அதிசயம் ஒன்று நடைபெற்றது. டில்லி ஜும்மா மசூதி மொகலாய சக்கரவர்த்தி ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டது. இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதி அது. அந்த மசூதியின் உட்புறத்து முற்றத்தில் ஐம்பதினாயிரம் பேர் ஏககாலத்தில் கூடிப் பிரார்த்தனை செய்யலாம். வெறும் பொதுக்கூட்டமாகக் கூடினால் ஒரு லட்சம் பேர் கூடலாம். முஸ்லீம்கள் தொழுகை நடத்தும் பிரதான புண்ணிய ஸ்தலமாதலால் அந்த மசூதிக்குள் அதுவரையில் எந்த ஹிந்துவும் பிரசங்கம் செய்ய அனுமதிக்கப்பட்டதில்லை. அத்தகைய என்றும் நடவாத காரியந்தான் அந்த மார்ச் 30-ஆம் தேதிநடந்தது.

அப்போது டில்லியில் இரண்டு மாபெரும் தேசீயத் தலைவர்கள் இருந்தார்கள். ஒருவர் ஹக்கீம் அஜ்மல்கான். இன்னொருவர் சுவாமி சிரத்தானந்தர். இவர்கள் இருவரும் வைத்ததே டில்லியில் சட்டம் என்னும்படியான நிலைமை அப்போது ஏற்பட்டிருந்தது. ஜும்மா மசூதியில் நடந்த பிரம்மாண்டமான முஸ்லீம்களின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சுவாமி சிரத்தானந்தர் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். சுவாமி அவ்விதமே சென்று பேசினார். அவருடைய பேச்சை அவ்வளவு முஸ்லீம்களும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தார்கள்.

இவ்வாறு சரித்திரத்திலேயே கேட்டிராத அளவில் ஹிந்து-முஸ்லீம் ஐக்கியம் ஏற்பட்டிருப்பதையும் பொது மக்களின் எழுச்சியையும் ஆவேசத்தையும் கண்டு பிரிட்டிஷ் சர்க்காரின் அதிகாரிகள் மிரண்டு போனார்கள். இந்த நிலைமையை அவர்களால் சகிக்க முடியவில்லை. அதற்குச் சில வருடங்களுக்கு முன்புதான் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டில்லிக்குச் சென்றிருந்தது. இந்திய ஏகாதிபத்தியத்தின் தலை நகரத்தில் ஒரு முஸ்லீம் தலைவரும் ஹிந்து தலைவரும் சேர்ந்து பொது மக்களின் மீது ஆட்சி நடத்துவதைப் பிரிட்டிஷ் அதிகாரிகளால் பொறுத்துக்கொண்டிருக்க முடியுமா? அன்று நடந்த ஊர்வலங்களில் ஒன்று டில்லி ரயில்வே ஸ்டேஷனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. போலீஸ் அதிகாரிகள் வந்து ஊர்வலத்தை வழி மறித்தார்கள். ஊர்வலத்தினர் கலைய மறுத்தார்கள். சமயம் பார்த்துச் சில கற்கள் எங்கிருந்தோ வந்து விழுந்தன. அதை வியாஜமாக வைத்துக்கொண்டு போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். கூட்டத்தில் சிலர் மாண்டு விழுந்தார்கள். பிறகு ஊர்வலம் கலைந்து போயிற்று. இந்தச் சம்பவம் டில்லியில் பெருங்கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தது. மக்களின் உள்ளம் கொந்தளித்தது. எந்த நிமிஷத்தில் என்ன நடக்குமோ என்ற கவலை தலைவர்களுக்கு ஏற்பட்டது. நிலைமையைத் தங்களால் சமாளிக்க முடியுமா என்ற ஐயமும் அவர்களுக்குத் தோன்றியது. சுவாமி சிரத்தானந்தர் மகாத்மா காந்திக்கு "உடனே புறப்பட்டு வரவும்" என்று தந்தி அடித்தார்.

டில்லியில் நடந்தது போலவே லாகூரிலும் அமிருதசரஸிலும் மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி ஹர்த்தால் நடைபெற்றது. அந்த இரண்டு இடங்களிலும் டில்லியில் நடந்தது போலவே பொது ஜனங்கள் மீது போலீசாரின் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது; உயிர்ச்சேதமும் நிகழ்ந்தது. அமிருதஸரஸில் அச்சமயம் இரண்டு தலைவர்கள் ஒப்பற்று விளங்கினார்கள். இவர்களில் ஒருவர் டாக்டர் சத்தியபால்; இன்னொருவர் டாக்டர் கிச்லூ. ஒருவர் ஹிந்து; இன்னொருவர் முஸ்லீம். இந்தியா தேசத்தில் அச்சமயம் ஏற்பட்டிருந்த மகத்தான ஹிந்து முஸ்லீம் ஐக்கியத்துக்கு அறிகுறியாக டாக்டர் சத்தியபாலும் டாக்டர் கிச்லூவும் விளங்கினார்கள். மார்ச்சு 30உ சம்பவங்களுக்குப் பிறகு அந்த இரு டாக்டர்களும் மகாத்மா காந்திக்கு "உடனே புறப்பட்டு வரவும்" என்று தந்தி அடித்தார்கள்.

காந்திஜி பம்பாய் வந்து இறங்கிய உடனே மேற்கூறிய இரு தந்தி அழைப்புகளும் அவருக்குக் கிடைத்தன. மகாத்மா யோசித்துப் பார்த்தார். டில்லியிலும் அமிருதசரஸிலும் நடந்தது நடந்துபோய்விட்டது. ஆனால் பம்பாயிலோ ஏப்ரல் 6-ஆம் தேதி ஹர்த்தால் நடந்தாகவேண்டும். ஆகையால் 6-ஆம் தேதி பம்பாயில் தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டு வருவதாக மகாத்மா மேற்குறிய நண்பர்களுக்குப் பதில் தந்தி அனுப்பினார்.

1919-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி இந்தியாவின் சரித்திரத்தில் மிக முக்கியமான ஒரு தினம். இந்தியாவின் சுதந்திரப் போரின் சரித்திரத்தில் அதைப் போன்ற முக்கியமான தினம் வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். அன்றைக்கு இமயமலையிலிருந்து கன்னியாகுமரிவரை இந்தியாவில் உள்ள நகரங்களிலும் பட்டணங்களிலும் ஹர்த்தால் நடந்தது. காங்கிரஸைப் பற்றியோ சுதந்திரப் போரைப் பற்றியோ அதுவரை கேள்விப்பட்டிராத பட்டிக்காட்டு கிராமங்களில் கூட மக்கள் விழித்தெழுந்தார்கள்; கடை அடைத்தார்கள்; வேலை நிறுத்தம் செய்தார்கள்; ஊர்வலம் விட்டார்கள். பொதுக் கூட்டம் நடத்தினார்கள். ரவுலட் சட்டத்தை எதிர்த்துச் சட்ட மறுப்புச் செய்வோம் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்தார்கள்.

அன்றைக்குச் சென்னைமாநகரின் கடற்கரையில் இரண்டு லட்சம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். இவ்வளவு பெரியபொதுக் கூட்டத்தைச் சென்னை நகரம் அதற்குமுன் என்றும் கண்டதில்லை. மதுரையிலும் திருச்சியிலும் பொதுக்கூட்டத்தில் ஐம்பதினாயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். கல்கத்தாவிலும் நாகபுரியிலும் லக்னௌவிலும் அலகாபாத்திலும் பூனாவிலும் ஆமதாபாத்திலும் அவ்வாறே ஹர்த்தால்களும் பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளில் ஆங்காங்கு லட்சக்கணக்காக ஜனங்கள் கலந்துகொண்டார்கள்.

சத்தியாக்கிரஹ இயக்கத்தின் தலைமை ஸ்தலம் பம்பாய் நகரம். அன்றைக்கு மகாத்மா காந்தியும் பம்பாயிலேதான் இருந்தார். ஆகையால் பம்பாயில் அன்று நடந்த சம்பவங்கள் மிகவும் முக்கியத்தைப் பெற்றிருந்தன.

பம்பாயில் அன்றைக்கு பூரண ஹர்த்தால் நடைபெற்றது. கடை கண்ணிகள் மூடப்பட்டன. ஆலைகள் மூடப்பட்டன. வண்டிகள்,டிராம்கள் ஒன்றும் ஓடவில்லை. பள்ளிக்கூடங்களும் நடைபெறவில்லை. ஹர்த்தால் பூரண வெற்றியோடு நடந்தது; பூரண அமைதியுடனும் நடந்தது. டில்லியில் நடந்ததுபோல் துப்பாக்கிப் பிரயோகம் முதலிய விபரீத சம்பவம் எதுவும் பம்பாய் நகரில் நடைபெறவில்லை.

அன்று காலையில் பம்பாய் நகரவாசிகள் ஆயிரக் கணக்கில் சௌபாத்தி கடற்கரைக்கு வந்தார்கள். கடலில் நீராடினார்கள். பின்னர் ஊர்வலமாகக் கிளம்பித் தாகூர் துவாரம் என்னும் கோவிலுக்குப் போனார்கள். ஊர்வலத்தில் பெருந்திரளான முஸ்லிம்களும் ஒரு சில ஸ்திரீகளும் குழந்தைகளும் இருந்தார்கள். தாகூர் துவாரத்தில் ஊர்வலம் முடிந்த பிறகு பக்கத்திலிருந்த மசூதிக்கு வரும்படியாகத் தலைவர்களை சில முஸ்லிம்கள் அழைத்தார்கள். அதற்கிணங்கி மகாத்மா காந்தியும் ஸ்ரீமதி சரோஜினி தேவியும் பக்கத்திலிருந்த மசூதிக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் பிரசங்கம் செய்தார்கள்.

அன்றைய தினம் ஏதேனும் ஒரு முறையில் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்று காந்திஜி தீர்மானித்திருந்தார். அதற்கு ஒரு வழியும் கண்டு பிடித்திருந்தார். காந்திஜியின் நூல்களாகிய "இந்திய சுயராஜ்யம்" "சர்வ தயை" என்னும் இரு நூல்களுக்கும் சர்க்கார் ஏற்கனவே தடைவிதித்து அவற்றைப் பிரசுரிக்கக் கூடாது என்றும் தடை உத்தரவு போட்டிருந்தார்கள். மேற்படி புத்தகங்களை அச்சுப் போட்டு அன்றையதினம் பகிரங்கமாக விற்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்விதம் தடுக்கப்பட்ட புத்தகங்களைப் பிரசுரிப்பது சாத்வீக முறையின் சட்டத்தை மீறுவது ஆகுமல்லவா?

அன்று சாயங்காலம் உண்ணாவிரதத்தைப் பூர்த்திசெய்து உணவருந்திவிட்டுப் பொது மக்கள் கடற்கரையில் பெருந்திரளாகக் கூடினார்கள். அங்கே மகாத்மா காந்தியும் ஸ்ரீமதி சரோஜினி தேவியும் மற்றும் சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞையில் கையெழுத்திட்ட தொண்டர்களும் தடுக்கப்பட்ட மேற்படி புத்தகப் பிரதிகளுடன் வந்து சேர்ந்தார்கள். கொண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான பிரதிகளும் அதி சீக்கிரத்தில் செலவழிந்துவிட்டன. பிரதி ஒன்றுக்கு நாலணா வீதம் விலை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருவராவது நாலணா கொடுத்துப் புத்தகம் வாங்கவில்லை. ஒரு ரூபாயும் அதற்கு மேலேயும் கொடுத்துத்தான் வாங்கினார்கள். ஐந்து ரூபாயும் பத்து ரூபாயும் சர்வ சாதாரணமாய்க் கொடுத்தார்கள். ஒருவர் மகாத்மாவிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டார். இந்தப் புத்தகங்களை வாங்குவது சட்டப்படி குற்றம் ஆகும் என்றும், வாங்குவோர் சிறைக்கு அனுப்பப் படலாம் என்றும் ஜனங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லி எச்சரிக்கப்பட்டது. ஆயினும் ஆயிரக் கணக்கானவர்கள் துணிந்து வாங்கினார்கள். இவ்வாறாக இந்திய சரித்திரத்தில் மிகவும் பிரிசித்திபெற்ற 1919 -ஆம் வருஷம் ஏப்ரல் மீ 6-உ முடிவுற்றது.

மறுநாள் 7-உ காலையில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு முதல் நாளைப்போல பெருங் கூட்டம் வரவில்லை. பொறுக்கி எடுத்தவர்களே வந்திருந்தார்கள். மகாத்மாவின் ஆணைப்படி அவர்கள் சுதேசி விரதமும் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைப் பிரத்திஞையும் எடுத்துக் கொண்டார்கள்.

7 -உ இரவு மகாத்மா காந்தி டில்லி வழியாக அமிருதசரஸ் போகும் நோக்கத்துடன் ரயில் ஏறினார். மறுநாள் 8-உ மாலை ரயில் வடமதுரை ஸ்டே ஷனை யடைந்தபோது மகாத்மாவின் பிரயாணம் தடை செய்யப்படலாம் என்ற வதந்தி அவருடைய காதில் எட்டியது. டில்லிக்கு முன்னால் உள்ள பால்வல் ஸ்டே ஷனை ரயில் அடைந்ததும் ஒரு போலீஸ் உத்தியோகிஸ்தர் மகாத்மா ஏறியிருந்த வண்டியில் ஏறினார். அவரிடம் ஒரு உத்தரவை சாதரா செய்தார். காந்திஜி பஞ்சாப்புக்கு வருவதால் அமைதிக்குப் பங்கம் நேரம் கூடுமாததால் அவர் அந்த மாகாணத்துக்குள் நுழையக்கூடாது என்று உத்தரவில் கண்டிருந்தது. முன்னொரு தடவை சம்பரானில் கொடுக்கப்பட்டது போன்ற உத்தரவுதான். ஆனால் சூழ்நிலையில் மிகவும் வித்தியாசம் இருந்தது. முன்னர் ஒரு குறிப்பிட்ட சிறு பிரதேசத்தின் புகாரைப் பற்றி விசாரிப்பதில் மகாத்மா ஈடுபட்டிருந்தார். இப்போதோ இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியையே எதிர்த்து ஒரு பெரிய அகில இந்திய இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். அதிகார வர்கத்தினர் முன்னைப்போல இந்தத் தடவை இலகுவாக விட்டுவிடுவார்களா?

காந்திஜி தாம் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியப் போவதில்லை யென்றும், பஞ்சாப்பில் அமைதியைக் காப்பதற்காகவே தாம் போகவதாகவும் அந்த உத்தியோகிஸ்தரிடம் தெரிவித்தார். "அப்படியானால் உம்மைக் கைது செய்கிறோம்" என்று சொல்லி ரயிலிலிருந்து இறக்கி விட்டார்கள். காந்திஜி தம்முடன் வந்த ஸ்ரீ மகாதேவ தேஸாய்க்கு நேரே டில்லிக்குப் போய்ச் சுவாமி சிரத்தானந்தரிடம் எல்லா விஷயங்களையும் தெரிவிக்கும்படிகட்டளையிட்டார்.

சிறிது நேரம் காந்திஜியும் போலீஸ் அதிகாரிகளும் பால்வால் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காத்திருந்தார்கள். டில்லியிலிருந்து ஒரு வண்டி வந்ததும் அதில் ஏற்றி அழைத்துப் போனார்கள். மறுநாள் உச்சிப் பொழுதில் மாதோபூர் என்னும் ஸ்டேஷனில் மீண்டும் இறக்கினார்கள். அங்கே லாகூரிலிருந்து வந்த மிஸ்டர் பௌரிங் என்னும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாத்மாவைத் தம் வசப்படுத்திக் கொண்டார். மெயில் வண்டியில் முதல் வகுப்பில் அவரும் மிஸ்டர் பௌரிங்கும் ஏறினார்கள். மிஸ்டர் பௌரிங் மகாத்மாவுக்கு ஹிதோபதேசம் செய்தார். "பஞ்சாப் லெப்டினண்ட் கவர்னர் ஸர் மைக்கேல் ஓட்வயருக்கு உங்கள் பேரில் விரோதபாவம் ஒன்றும் இல்லை. பஞ்சாபில் ஏற்கனவே அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் வந்தால் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிவிடும் என்று பயப்படுகிறார். அவ்வளவுதான். நீங்களே அமைதியாகப் பம்பாய்க்குத் திரும்பிப் போய்விடுவதாக ஒப்புக் கொண்டு விடுங்கள். நாங்கள் நடவடிக்கை ஒன்றும் எடுக்க அவசியம் இல்லாமற் போய்விடும்!" என்று பௌரிங் சொன்னார். அதற்கு மகாத்மா இணங்கவில்லை. "நானாகப் பம்பாய்க்குத் திரும்பிப் போகும் உத்தேசம் இல்லை. உங்கள் இஷ்டம்போல் செய்யலாம்!" என்றார் மகாத்மா. சூரத் ஸ்டே ஷன் வரையில் மிஸ்டர் பௌரிங் மகாத்மாவோடு வந்து அங்கே இன்னொரு போலீஸ் அதிகாரியிடம் ஒப்புவித்துவிட்டுப் போனார்.
-----------------------------------------------------------
( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி

'கல்கி’ கட்டுரைகள்
[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக