வெள்ளி, 6 ஏப்ரல், 2018

1026. கல்கி - 15

அதிசய மனிதர் அழகப்பர்
கல்கி
[ 1948-இல் அழகப்பர் ]


ஏப்ரல் 6. அழகப்பச் செட்டியாரின் பிறந்த தினம்.  ஜூலை 25, 1948 -இல் 'கல்கி' எழுதிய கட்டுரை இதோ!
=====

டாக்டர் அழகப்பச் செட்டியார் ஒரு அதிசய மனிதர். அவர் பம்பாய்க்கு ஒரு தடவை போயிருந்தார். மேனாட்டு முறையில் நடத்தப்பட்ட ஹோட்டலுக்குச் சென்றார். “தங்குவதற்கு அறை வேண்டும்” என்று கேட்டார். அழகப்பச் செட்டியாரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு மேற்படி ஹோட்டல் மானேஜர், “அறை காலி இல்லை” என்றான், “நன்றாய்ப் பார்த்துச் சொல்!” என்றார் அழகப்பச் செட்டியார். “பார்த்துத்தான் சொல்கிறேன்” என்றான் மானேஜர். “இந்த ஹோட்டலில் எத்தனை அறைகள் இருக்கின்றன!” என்று அழகப்பச் செட்டியார் கேட்டார். “நீ என்ன ஹோட்டலை விலைக்கு வாங்கப் போகிறாரா?” என்று மானேஜர் கேட்டான். “ஆமாம், விலைக்கு வாங்கத்தான் போகிறேன்! என்ன விலை?” என்று அழகப்பச் செட்டியார் கேட்டார். லட்சக் கணக்கில் ஏதோ ஒரு தொகையை அவன் சொன்னான். “சரி; இப்போதே அட்வான்ஸ் வாங்கிக் கொள்!” என்றார் அழகப்பச் செட்டியார்.

மானேஜர் திகைத்துப் போனார். கடைசியில் அந்த ‘ரிட்ஸ்’ ஹோட்டலை டாக்டர் அழகப்பச் செட்டியார் விலைக்கு வாங்கியே விட்டார்!

வியாபார விஷயத்திலேதான் இப்படியென்றால். தர்மங்கள் செய்யும் விஷயத்தில் டாக்டர் அழகப்பரின் காரியம் ஒவ்வொன்றும் நம்மைத் தூக்கிவாரிப் போடுவதாகவே இருக்கிறது.

சென்ற வருஷத்தில் வைஸ் சான்ஸலர் லக்ஷ்மணசாமி முதலியார் “ஒரு லட்சம் ரூபாய் ரொக்க நிதி ஏற்படுத்தினால் ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் ஆரம்பிக்கலாம்!” என்று சொன்னார்.

“இந்தாருங்கள் ஒரு லட்சம்! காரைக்குடியில் ஒரு காலேஜ் ஆரம்பிக்கலாம்!” என்றார் அழகப்பர். சொல்லிச் சில நாளைக்கெல்லாம் காரைக்குடியில் காலேஜ் ஆரம்பமாகிவிட்டது.


“வாடகைக் கட்டடத்தில் எத்தனை நாள் காலேஜ் நடத்துவது? காலேஜுக்குச் சொந்தக் கட்டடம் வேண்டும்!” என்று அவர் எண்ணினார்.

காரைக்குடிக்குப் பக்கத்தில் அறுநூறு ஏக்கரா நிலத்தை வாங்கினார். அதில் 150 ஏக்கரா நிலத்தை மேற்படி காலேஜுக்கு என்று எழுதி வைத்தார்.

அவ்வளவு விஸ்தாரமான நிலம் வைத்திருக்கும்போது அதற்குத் தகுந்த விஸ்தாரமான கட்டடம் கட்டவேண்டாமா?

அழகப்பச் செட்டியார் காலேஜ் கேவலம் அற்ப சொற்பமாயிருக்கலாமா? வெறும் பி.ஏ. வகுப்பு மட்டும் போதுமா? பி.எஸ்.ஸி. பிகாம், பி.ஏ. ஆனர்ஸ் எல்லாம் வேண்டாமா? பெளதிகம், இரசாயனம், தாவர நூல் முதலிய எல்லா வகுப்புக்களும் வேண்டாமா?

கட்டாயம் வேண்டியதுதான். அதற்குப் பணம் எவ்வளவு ஆகும்? முதலில் மூன்று லட்சம் வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். மூன்று லட்சம் ஐந்து லட்சமாயிற்று. பிறகு ஒன்பது லட்சத்தில் வந்து நின்றது! அவ்வளவும் அழகப்பச் செட்டியார் கொடுத்தார். ரொக்கமாகவும் கொடுத்தார்; சொத்துக்களாகவும் கொடுத்தார்.

“வெறும் ஆர்ட்ஸ் காலேஜுகளைப் பெருக்கி பி.ஏ.க்களை உற்பத்தி செய்து தள்ளுவதில் என்ன பிரயோஜனம்?” என்று சிலர் சொன்ன வார்த்தைகள் டாக்டர் அழகப்பரின் காதில் விழுந்தன. இதே சமயத்தில் இந்தியாவில் சுதந்திர சர்க்கார் சென்னை மாகாணத்தில் ஒரு பெரிய மின்சார ரசாயன ஆராய்ச்சிக்கூடம் ஆரம்பிக்கப் போகிறார்கள் என்றும் தெரிந்தது.

“முந்நூறு ஏக்கரா நிலம் கொடுக்கிறேன். பதினைந்து லட்சம் நன்கொடையும் தருகின்றேன். காரைக்குடியில் ஆரம்பியுங்கள்!” என்று அழகப்பச் செட்டியார் சொன்னார்.

இந்தியச் சர்க்கரின் விஞ்ஞான இலாகா காரியதரிசி டாக்டர் பட்நகர் காரைக்குடிக்கு வந்து பார்த்தார். “நிலம் இருக்கிறது: சரிதான்! தண்ணீர் கதி இல்லையே?” என்றார்.

உடனே பூமிக்கு அடியிலே இருநூறு அடி முந்நூறு அடி ஆழம் போய்த் தண்ணீரை வெளியில் கொண்டு வரக்கூடிய போர் பம்பிங் இயந்திரத்தை அழகப்பச் செட்டியார் கொண்டு வந்தார். பூமிக்குள்ளே ஆழமாய்க் குடைந்ததும் தண்ணீர் பொங்கிக் கொண்டு வந்து வெள்ளமாய் பெருகிற்று!

ஆகவே டாக்டர் பட்நரின் ஆட்சேபணை அடிப்பட்டுப் போய்விட்டது. அறுநூறு ஏக்கரா நிலத்தில் நானூற்றைம்பது ஏக்கரா போகப் பாக்கி நூற்றைம்பது ஏக்கரா நிலம் இருக்கிறதே - அதை என்ன செய்கிறது என்ற கவலை அழகப்பரைத் தொல்லைப்படுத்தியது. அதற்கும் ஒரு வழி சீக்கிரத்திலேயே அவர் கண்டுபிடித்தார்.

நாட்டுக்கு இப்போது வேண்டிய முக்கியமான கல்வி என்ன? என்ஜினியரிங் கல்வி அல்லவா? மீதம் உள்ள நூற்றைம்பது ஏக்கரா நிலத்தில் ஒரு முதல்தர என்ஜினியரிங் காலேஜ் ஆரம்பித்துவிட வேண்டியதுதான். அதற்கு எத்தனை பணம் வேண்டும்? பத்து லட்சம் ரூபாய் தானே! இப்போது அழகப்பச் செட்டியார் காரைக்குடியில் என்ஜினியரிங் காலேஜ் ஆரம்பிப்பதற்காக பத்து லட்சம் ரூபாய் சேகரம் செய்து கொண்டிருக்கிறார்.

இப்படியெல்லாம் மூச்சுத் திணறிப் போகும் படியாகக் கல்வி தர்மம் செய்துவரும் டாக்டர் அழகப்பச் செட்டியார் தமிழ் நாட்டுக்கு இன்னொரு மகத்தான பேருபகாரம் புரிந்திருக்கிறார். காரைக்குடியில் ஸ்தாபனமாகிற மின்சார- ரசாயன ஆராய்ச்சிக்கூடத்துக்கு அஸ்திவாரக்கல் நாட்டப் பிரதம மந்திரி பண்டித ஜவஹர்லால் நேருவை அழைத்து வந்திருக்கிறார். எத்தனையோ முக்கியமான தேசீய, சர்வதேசீய வேலைகளில் மூழ்கிக் கிடக்கும் ஜவஹர்லால்ஜியைத் தில்லியிலிருந்து சென்னைக்கு வரழைப்பது என்பது இலேசான காரியமா? சாதாரணமாக, அசாத்தியமான காரியம் என்றே அதைச் சொல்லலாம்.

ஆனால் டாக்டர் அழகப்பாவுக்கு அது அசாத்தியமான காரியம் அன்று.
அழகப்பர் நேருஜியைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வருகிறார்.

சென்னையிலும் காரைக்குடியிலும் லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு ஜவஹர்லால்ஜியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கப் போகிறது. ஜவஹர்லாலின் பொன் மொழிகளைக் கேட்கும் பேறும் கிட்டப் போகிறது.

தமிழ் மக்களின் சார்பாக டாக்டர் அழகப்பச் செட்டியாருக்கு மனமார்ந்த நன்றியைச் செலுத்துகிறோம். இது போல் இன்னும் பல திடுக்கிடும் தர்மங்களையும் மனிதருக்கு உபகாரங்களையும் செய்யும் பேற்றை அவருக்கு அருள் புரியுமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

[ நன்றி: http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/02/24/?fn=f13022412  ]

தொடர்புள்ள பதிவுகள்:
ராம. அழகப்பச் செட்டியார் ; விக்கிப்பீடியா

'கல்கி’ கட்டுரைகள்

5 கருத்துகள்:

  1. திடுக்கிடும் தர்மங்கள்..அருமையான சொற்பயன்பாடு.

    பதிலளிநீக்கு
  2. உன்னத மனிதர்.
    கல்வி தர்மம் புண்ணியம்.
    புண்ணிய செயல் செய்த நல்ல மனிதர் போற்றபட வேண்டியவர்.
    போற்றுவோம், வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கட்டுரை எந்த வருடம் எழுதப் பட்டது என்ற தகவல்????

    - அழகப்ப கல்லூரி மாணவன்

    பதிலளிநீக்கு
  4. எப்போது நேரு அங்கே வந்தார் என்று எளிதாகக் கூகிளில் கண்டுபிடிக்கலாமே? முடியாவிட்டால் சொல்லுங்கள். நான் சொல்கிறேன்! :-)

    பதிலளிநீக்கு
  5. I have read from very reliable source that the land was donated by Shanmugaraja Zamindar of Sivaganga Samasthanam, free! When Alagappa chettiyar insisted on paying, Shanmuga Raaja took a token payment of just one rupee.
    Sivaganga Arts college also was started in the same year and initially is said to have functioned in the old palace.

    பதிலளிநீக்கு