சனி, 7 ஏப்ரல், 2018

1027. காந்தி - 21

15. இமாலயத் தவறு
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பகுதி-2) இன்  15-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

காந்திஜியும் போலீஸ் அதிகாரியும் ஏறியிருந்த ரயில் பம்பாயை நெருங்கியதும் போலீஸ் அதிகாரி, "உங்களை இப்போது விடுதலை செய்துவிடப் போகிறேன். ஆனால் மெரீன் லைன் ஸ்டே ஷனில் நீங்கள் இறங்கிவிட்டால் நலம். கொலாபா ஸ்டே ஷனில் பெரும் ஜனக்கூட்டம் சேர்ந்திருக்கிறதாம். உங்களைப் பார்த்தால் ஜனங்கள் அதிக ஆரவாரம் செய்யக் கூடும். அமைதிக்குப் பங்கம் ஏற்படலாம். உங்களுக்கு அதில் இஷ்டம் இல்லையே?" என்றார்.

மகாத்மாவுக்கோ ஆரவாரமும் பிடிப்பதில்லை; அமைதிக்குப் பங்கம் லவலேசமும் பிடிப்பதில்லை. ஆகையால் அவர், "சரி மெரீன் லைன் ஸ்டேஷனில் இறங்கி விடுகிறேன்" என்றார். போலீஸ் அதிகாரி மகாத்மாவுக்கு வந்தனம் அளித்தார். மகாத்மா மெரீன் லைன் ஸ்டே ஷனில் இறங்கினார். ஒரு நண்பரின் வண்டி அந்தப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தது. அதில் ஏறிக்கொண்டு ஸ்ரீ ரேவா சங்கர் ஜாவேரியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். அதே சமயத்தில் ஸ்ரீ உமார் சோபானியும் ஸ்ரீமதி அநசூயா பென்னும் அங்கு வந்து சேர்ந்தார்கள். "உங்களை டில்லிக்கருகில் கைது செய்து பம்பாய்க்குக் கொண்டு வரும் செய்தி பம்பாய் வாசிகளுக்கெல்லாம் தெரிந்துவிட்டது. பைதோனிக்கு அருகில் ஏராளமான ஜனக்கூட்டம் கூடியிருக்கிறது. ஜனங்களின் பரபரப்பு நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அவர்கள் கட்டுமீறிப் போனால் என்ன நடக்குமோ தெரியாது. அவர்களை எங்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. தங்களையே நேரில் பார்த்தால்தான் அவர்கள் அடங்குவார்கள். தாங்கள் உடனே புறப்பட்டு வரவேண்டும்!" என்று அந்த நண்பர்கள் சொன்னார்கள்.

பிறகு நடந்ததைப் பற்றிக் காந்தி மகாத்மா எழுதியிருப்பதாவது:-- "மறுபடியும் வண்டியில் ஏறிச் சென்றேன். பைதோனிக்கருகில் பெருங்கூட்டம் சேர்ந்திருப்பதைக் கண்டேன். என்னைப் பார்த்ததும் ஜனங்கள் மகிழ்ச்சிப் பெருக்கினால் பைத்தியங் கொண்டவர்களானார்கள். அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து ஊர்வலம் போல வரத் தொடங்கினார்கள். 'வந்தேமாதரம்' 'அல்லாஹோ அக்பர்' என்ற கோஷங்கள் ஆகாயத்தை அளாவின. மேலிருந்து கற்கள் சரமாரியாகப் பொழிந்து கொண்டிருந்தன. அமைதியா யிருக்கும்படி கூட்டத்தை வேண்டிக் கொண்டேன். ஆனால் அந்தக் கல்மாரியிலிருந்து தப்ப முடியாதென்றே தோன்றிற்று. ஊர்வலம் அப்துர் ரஹ்மான் வீதியைத் தாண்டி, கிராபோர்டு மார்க்கெட் பக்கம் போகத் திரும்பியபோது, திடீரென்று குதிரைப்போலீஸ் படையொன்று எதிர்ப்பட்டது. ஊர்வலம் மேலே கோட்டைப் பத்தம் போகாமல் தடுப்பதற்காகக் குதிரைப் போலீஸார் வந்திருந்தனர். ஜனக்கூட்டமோ மிக நெருக்கமாயிருந்தது.

ஆகவே போலீஸ் படையைப் பிளந்துகொண்டு கூட்டம் மேலே செல்லத் தொடங்கிவிட்டது. அப் பிரம்மாமாண்டமான கூட்டத்தில் என்னுடைய குரல் கேட்பதே இயலாத காரியம். இத்தகைய நிலைமையில், குதிரைப் படைக்குத் தலைமை வகித்த உத்தியோகஸ்தர், கூட்டத்தைக் கலைக்கும்படி தம்முடைய வீரர்களுக்கு உத்தரவிட்டார்.அவ்வளவு தான்! குதிரை வீரர்கள் தங்களுடைய ஈட்டிகளை வீசிக்கொண்டு கூட்டத்தில் புகுந்தார்கள். ஒரு நிமிஷம் நானும் காயமடைவேன் என்று தோன்றியது. ஆனால் ஈட்டிகள் எங்கள் மோட்டார் வண்டியை உராய்ந்ததுடன் நாங்கள் தப்பினோம். அந்தக் குதிரை வீரர்கள் அதிவேகமாக எங்களைத் தாண்டிச் சென்றார்கள். பொதுக்கூட்டம் சின்னா பின்னமாயிற்று. ஜனங்கள் ஒரே குழப்பத்திற் குள்ளாயினர். பின்னர் ஓடத்தொடங்கினார்கள். சிலர் குதிரைகளின் காலடியினால் மிதிபட்டார்கள். வேறு சிலர் உடம்பெல்லாம் காய மடைந்தார்கள். இன்னும் சிலர் கீழே தள்ளி நசுக்கப்பட்டார்கள். எள் விழுவதற்கும் இடமில்லாமல் நெருங்கி அப்பெருங்கூட்டத்தில் குதிரைகள் போவதற்கு இடமே கிடையாது. ஜனங்கள் கலைந்து போவதற்கு வழியும் இல்லை. ஆதலின் குதிரை வீரர்கள் குருட்டுத்தனமாகக் கூட்டத்திற்குள் புகுந்து இடித்து மிதித்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் செய்தது என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை யென்று தோன்றியது. மொத்தத்தில், அது ஒரு பயங்கரக் காட்சியா யிருந்தது.

இந்தச் சம்பவம் மகாத்மாவின் மனதில் பெரும் துயரத்தை உண்டாக்கியது. அதிகாரிகளிடம் தம் கண்டனத்தை தெரியப்படுத்த விரும்பினார். மோட்டார் வண்டியை நேரே பம்பாய்ப் போலீஸ் கமிஷனரின் காரியாலையத்துக்கு விடச் சொன்னார். அக் காரியாலயத்தில் போலீஸ் ஆர்ப்பாட்டம் பலமாயிருந்தது. ஆயினும் மகாத்மாவை உள்ளே போக விட்டார்கள். கமிஷ்னர் துரையிடமும் அழைத்துப் போனார்கள். கமிஷ்னர் மிஸ்டர் கிரிப்பித் என்பவருக்கு அருகில் பஞ்சாப்பிலிருந்து வந்த மிஸ்டர் பெளரிங் அமர்ந்திருப்பதை காந்திஜி கண்டார்.

காந்திமகான் பைதோனியில் நடந்த சம்பவங்களை எடுத்துச் சொல்லி, "ஜனங்களின் மீது குதிரைப் படையை ஏவியது அனாவசியம்; அநியாயம்!" என்று தம்முடைய கருத்தைத் தெரிவித்தார்.

"அதைப் பற்றித் தீர்மானிக்க வேண்டியது பொறுப்பு எங்களுடையது. ஜனங்களுக்கு நீங்கள் செய்யும் போதனையினால் என்ன நேரும் என்பது உங்களுக்கு தெரியாது. உங்களுடைய நோக்கம் என்னவோ நல்லதுதான். அனால் அதை ஜனங்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள். விரைவில் கட்டுகடங்காமல் போய்விடுவார்கள். பிறகு பெரும் விபரீதங்கள் நிகழும். ஆகையால் ஆரம்பத்திலேயே கண்டிப்பான நடவடிக்கை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்" என்றார் கமிஷ்னர் கிரிப்பித் துரை.

காந்திஜி அதை ஒப்புக் கொள்ளாமல் மறுத்துப் பேசினார். "ஜனங்கள் மீது வீண் பழி சொல்கிறீர்கள். ஜனங்கள் இயற்கையிலேயே அமைதியை விரும்புகிறவர்கள். போலீஸார் தலையிடாதிருந்தால் ஒரு விபரீதமும் நேராது! அதற்கு நான் பொறுப்பு!" என்று சொன்னார்.

"ஜனங்கள் உங்களுடைய அஹிம்ஸா தர்ம போதனையை ஏற்றுக் கொள்ளவில்லை யென்று நிச்சயமாகத் தெரிந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கிரிப்பித் துரை கேட்டார். "உடனே சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தி விடுவேன்!' என்றார் மகாத்மா.

"அப்படியானால் கேளுங்கள். அமிருத சரஸிலும் ஆமதாபத்திலும் இந்த நிமிஷத்தில் ஜனங்கள் கட்டுமீறிப் போய்ப் பயங்கரமான கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லா விவரங்களும் எனக்கே இன்னும் வந்து சேரவில்லை. சில இடங்களில் தந்திக் கம்பங்கள் அறுக்கப் பட்டிருக்கின்றன. இந்த விபத்துக் கெல்லாம் நீங்கள்தான் பொறுப்பாளி என்று ஏன் சொல்லக்கூடாது?" என்றார் கமிஷனர் துரை.

"நீங்கள் சொல்வது உண்மை என்று நிச்சயமானால் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டேன். அமிருதசரஸைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அங்கே போனதேயில்லை. என்னை அங்கே போகவொட்டாமல் பஞ்சாப் சர்க்கார் தடுத்திராவிட்டால் அவ்விடத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உதவி செய்திருப்பேன். ஆனால், ஆமதாபாத் விஷயம் வேறு. அது நான் வசித்த ஊர். அங்கே ஜனங்கள் பலாத்காரத்தில் இறங்கியிருந்தால் அதைக் காட்டிலும் எனக்கு வருத்தமளிப்பது வேறொன்றுமிராது!" என்றார் காந்திஜி.

இவ்வாறு போலீஸ் கமிஷனருக்கும் காந்தி மகானுக்கும் நெடுநேரம் வாதம் நடந்தது. கடைசியாக மகாத்மா அன்று மாலையில் சௌபாத்தி கடற்கரையில் பொதுக் கூட்டம் போட்டு ஜனங்களுக்கு அஹிம்சையின் அவசியத்தைப் போதிக்கப் போவதாகச் சொன்னார். கமிஷனரும் அதற்கு இணங்கினார்.

அவ்வாறே செளபாத்தி கடற்கரையில் அன்று மாலை பொதுக் கூட்டம் நடந்தது. "சத்தியாக்கிரஹ இயக்கத்தின் அடிப்படை சத்தியமும் அஹிம்சையுந்தான். ஜனங்கள் மனோவாக்குக் காயங்களினால் அஹிம்சையைக் கடைப்பிடித்தாலன்றிப் பொது ஜன சத்தியாக்கிரஹ இயக்கத்தை என்னால் நடத்த முடியாது" என்று மகாத்மா வற்புறுத்தினார்.

அன்றிரவு ஆமதாபாத்தில் நடந்த பயங்கர நிகழ்ச்சிகளைப் பற்றிச் செய்தி வந்துவிட்டது. ஸ்ரீமதி அனுசுயாபென் அப்போது பம்பாயில் இருந்தார். அவர் ஆமதாபாத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அல்லவா? காந்திஜியோடு ஸ்ரீமதி அனுசுயா பென்னையும் சர்க்கார் கைது செய்துவிட்டதாக ஆமதாபாத்தில் வதந்தி பரவியது. இதனால் தொழிலாளர் ஆவேச வெறிகொண்டு பலாத்காரச் செயல்களில் இறங்கி விட்டார்கள். ஒரு போலீஸ் சார்ஜண்ட் ஜனங்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்தச் செய்திகளை கேள்விபட்டதும் மகாத்மா ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். வழியெல்லாம் துயரம் தரும் செய்திகளே கிடைத்துக் கொண்டிருந்தன. நதியாத் ரயில்வே ஸ்டே ஷனுக் கருகில் ரயில் தண்டவாளங்களைப் பெயர்க்க ஜனங்கள் முயன்றதாகவும் வீரம்காம் பட்டிணத்தில் ஓர் அரசாங்க உத்தியோகிஸ்தர் கொல்லப்பட்டதாகவும் ஆமதாபாத்தில் ராணுவச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதாகவும் தெரிய வந்தன. எல்லா இடங்களிலும் இப்பொழுது உத்தியோகிஸ்தர்கள் பழிக்கு பழி வாங்கி வருவதாகவும் அதனால் ஜனங்கள் பயப்பிராந்தி கொண்டிருப்பதாகவும் வழியில் காந்திஜி கேள்விப்பட்டார்.

இத்தகைய செய்திகளினால் ஏற்பட்ட மனக் கலக்கத்துடன் மகாத்மா ஆமதாபாத் ரயில் நிலையத்தில் இறங்கினார். அங்கே அவரை வரவேற்பதற்கு ஒரு போலீஸ் உத்தியோகிஸ்தர் காத்துக் கொண்டிருந்தார். அவர் மகாத்மாவை ஆமதாபாத் கமிஷனர் மிஸ்டர் பிராட் என்பவரிடம் அழைத்துப் போனார். மிஸ்டர் பிராட் கோபத்தினால் துடி துடித்துக் கொண்டிருந்தார். ஆமதாபாத்தில் நடந்த கலவரங்களுக்கெல்லாம் காந்திஜியின்மேல் பொறுப்பைச் சுமத்தினார். மகாத்மா சாந்தமாக மறுமொழி சொன்னார். கலவரங்கள் நடந்துவிட்டதற்காகக் தம் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளில் தாம் ஒத்துழைப்பதாக வாக்களித்தார். இராணுவச் சட்டம் அமுல் அனாவசியம் என்று தம்முடைய கருத்தைத் தெரிவித்து, சபர்மதி நதிக்கரையில் ஒரு பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். அந்த யோசனை கமிஷனருக்குப் பிடித்திருந்தது. பொதுக் கூட்டம் நடத்த அனுமதித்தார். அவ்வாறே ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடந்தது. கூடியிருந்த ஜனங்களுக்கு மகாத்மா அவர்களுடைய தவறை உணர்த்த முயன்றார். பலாத்காரத்தின் தீமைகளையும் அஹிம்சையின் உயர்வையும் எடுத்து உரைத்தார். ஜனங்கள் அஹிம்சா தர்மத்தை உறுதியாகக் கடைப்பிடிக்காவிட்டால் தாம் சத்தியாக்கிரஹ இயக்கத்தை நடத்த முடியாது என்றும் எச்சரிக்கை செய்தார். கடைசியாக, மகாத்மா கூறியதாவது:-

"உங்களிடையே நான் அதிக காலம் வாழ்ந்திருக்கிறேன். உங்களுக்கு என்னால் இயன்ற ஊழியம் செய்திருக்கிறேன். ஆயினும் நீங்கள் என்னுடைய அஹிம்சா தர்ம போதனையை அறிந்து கொள்ளாமல் பலாத்காரச் செயல்களில் இறங்கியது என் மனதைப் புண்படுத்தி விட்டது. உங்களுடைய குற்றத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று கருதுகிறேன். அதற்குப் பிராயச்சித்தமாக மூன்று நாள் உண்ணாவிரதம் இருப்பது என்று தீர்மானித்து விட்டேன். என்னிடம் உங்களுக்கு அன்பு இருந்தால் நீங்களும் ஒரு நாள் உண்ணாவிரதம் அனுசரியுங்கள். ஆனால் அதுமட்டும் போதாது. பலாத்காரக் குற்றம் செய்தவர்கள் எல்லாம் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்!"

இந்தப் பொதுக் கூட்டத்தில் காந்தி மகாத்மா பேசியதன் பலனாக நல்ல பலன் ஏற்பட்டது. மறுநாள் இராணுவச் சட்ட அமுல் நீக்கப்பட்டது. ஆனால் மகாத்மா கூறியபடி பலாத்காரக் குற்றம் செய்தவர்கள் முன்வந்து தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. சர்க்கார் அதிகாரிகளும், ஏதோ திடீரென்று ஏற்பட்ட வெறியினால் குற்றம் செய்த ஜனங்களை மன்னித்து விடுதலை செய்ய முன் வரவில்லை. இதனால் ஏற்பட்ட மனச் சோர்வுடனே மகாத்மா கெயிரா ஜில்லாவின் முக்கிய பட்டணமான நதியாத் நகருக்குச் சென்றார். அங்கே அவர் அறிந்த செய்திகள் அவருடைய துயரத்தை அதிகமாக்கின. கெயிரா வரிகொடா இயக்கத்தின் போது மகாத்மா அந்த ஜில்லாவில் தங்கிப் பிரயாணம் செய்ததுண்டு. ஆயினும் அந்த ஜில்லா ஜனங்கள் கூடக் கட்டுமீறிப் பலவித பலாத்காரச் செயல்களில் இறங்கினார்கள் என்பது மகாத்மாவின் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி விட்டது. பொது ஜனங்கள் அஹிம்சா தர்மத்தை நன்குணர்ந்து தகுதி பெறுவதற்கு முன்னால் சட்டமறுப்பு இயக்கத்தைத் தாம் தொடங்கியது பெருந் தவறு என்று மகாத்மாவுக்குத் தோன்றியது. சத்திய சந்தராகிய மகாத்மா தாம் செய்தது தவறு என்று அறிந்ததால், அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வதற்கு என்றும் தயங்கியதில்லை. அன்று மாலையில் நதியாத் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாத்மா தம் மனவருத்தத்தை வெளியிட்டார். "நான் 'இமாலயத் தவறு' செய்து விட்டேன்! ஜனங்கள் தகுதியாவதற்கு முன்னால் சத்தியாக்கிரஹம் ஆரம்பித்து விட்டேன்! இதற்காக மிகவும் வருந்துகிறேன்" என்று பகிரங்கமாகக் கூறினார். அதோடு சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைக்கத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நதியாத் கூட்டத்தில் மகாத்மா உபயோகப்படுத்திய 'இமாலயத் தவறு' என்னும் சொற்றொடர் பிறகு வெகு காலம் அடிபட்டுக் கொண்டிருந்தது. காந்திஜி அவ்விதம் பட்ட வர்த்தனமாகச் சொல்லி விட்டதற்காக நண்பர்கள் பலர் வருத்தப்பட்டார்கள். மகாத்மாவின் எதிரிகளோ அதை அடிக்கடி குறிப்பிட்டு இடித்துக் காட்டி வந்தார்கள்.

"தேசம் முழுவதிலும் அமைதி நிலவினால் தான் இயக்கம் நடத்த முடியும் என்றால், ஒரு நாளும் அது சாத்தியமாகப் போவதில்லை" என்று நண்பர்கள் சொல்லி வருத்தப்பட்டார்கள்; மகாத்மாவிடம் கோபமும் கொண்டார்கள்.

ஆயினும் இதனாலெல்லாம் காந்திஜியின் உறுதி எள்ளளவும் மாறவில்லை. அஹிம்சா தர்ம நிபந்தனையை அவர் கைவிடவும் இல்லை; சத்தியாக்கிரஹ ஆயுதத்தில் நம்பிக்கை இழந்துவிடவும் இல்லை. பொது ஜனங்களைச் சத்தியாக்கிரஹ இயக்கத்துக்குத் தகுதி செய்வதற்காகத் தக்க முறையில் தீவிரமான பிரசாரம் செய்யவேண்டும் என்னும் நோக்கத்துடன் மீண்டும் பம்பாய்க்குச் சென்றார்.
-----------------------------------------------------------

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி

'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக