சனி, 28 ஜூலை, 2018

1128. காந்தி - 37

31. பூஜை வேளையில் கரடி
கல்கி 

கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( தொகுதி 2 )என்ற நூலின்  31-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
"பண்டித மோதிலால் நேருவை எப்போது கைது செய்து விட்டார்களோ, அப்போது தேசபந்து தாஸையும் சீக்கிரத்தில் கைது செய்து விடுவார்கள். பிறகு என்னையும் அதிக காலம் வெளியில் விட்டு வைத்திருக்க மாட்டார்கள்!" என்று மகாத்மா ஆசிரம வாசிகளிடம் உற்சாகத்துடன் கூறினார். "அப்படி எங்களையெல்லாம் கைது செய்து விட்டாலும் ஆமதாபாத் காங்கிரஸை நிறுத்திவிடக் கூடாது. எப்படியும் காங்கிரஸ் நடந்தே தீரவேண்டும்" என்றும் தெரிவித்தார்.

மகாத்மா அப்பொழுது உற்சாகத்தின் சிகரத்தில் இருந்தார். இது ஆசிரம வாசிகளிடம் அவர் அவ்வப்போது குதூகலமாகப் பேசியதிலிருந்தும் உரக்கச் சிரித்ததிலிருந்தும் வெளியாயிற்று. பண்டித நேரு முதலியவர் கைது செய்யப்பட்டதனால் அலகாபாத்துக்கு யாரையாவது அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அலகபாத்தில் அப்போது "இன்டிபென்டெண்ட்" என்னும் தினப்பத்திரிக்கை பிரபலமாயிருந்தது. நேரு குடும்பத்தினர் அதை நடத்தினார்கள். அதன் ஆசிரியர் ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப் மதுரையைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளர். (தற்சமயம் பிரபல எழுத்தாளராயிருக்கும் ஸ்ரீ போத்தன் ஜோசப்பின் சகோதரர்.) அதோடு, மகாத்மாவிடம் மிக்க பக்தி கொண்டவர். அவர் ஆசிரியராயிருந்த "இன்டிபென்டெண்ட்" மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரமாக ஆதரித்தது. எனவே, நேரு குடும்பத்தாருடன், ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பும் கைது செய்யப் பட்டார். பண்டித மோதிலால் நேருவுக்கு ஆறு மாதமும் ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்புக்கு இரண்டு வருஷமும் சிறைவாசம் விதிக்கப்பட்டதாக மறு நாளே செய்தி வந்தது. (அப்போதெல்லாம் அரசியல் வழக்குகள் சட் பட்டென்று தீர்ந்து போயின. ஏனெனில் ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ் கோர்ட்டுகளில் வக்கீல் வைத்து வழக்காட மறுத்தனர். ஆகவே மாஜிஸ்ட்ரேட்டுகள் உடனுக்குடன் தீர்ப்புக்கூறித் தண்டனை விதித்தார்கள்.)

"இண்டிபெண்டெண்ட்" பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவதில் உதவி செய்வதற்காக யாரையாவது அனுப்பும்படி ஸ்ரீ மகாதேவ தேஸாய் மகாத்மாவுக்குத் தந்தி யடித்திருந்தார். அதற்கிணங்க மகாத்மா ஸ்ரீ பியாரிலாலையும் ஸ்ரீ தேவதாஸையும் அலகாபாத்துக்கு உடனே புறப்படச் சொன்னார். ஸ்ரீ தேவதாஸ் அலகாபாத்தில் கைது செய்யப்படக் கூடும் என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஸ்ரீ தேவதாஸ் மகாத்மாவிடம் விடை பெற்றுக் கொள்வதற்காக வந்து நமஸ்காரம் செய்தார். அப்போது மகாத்மா உரக்கச் சிரித்த வண்ணம் ஸ்ரீ தேவ தாஸுக்கு ஆசி கூறியதுடன் அவர் நமஸ்கரித்து எழுந்ததும் அவர் முதுகில் பலமாக ஒரு 'ஷொட்டு'க் கொடுத்தார். அதன் சத்தம் ஆசிரமம் முழுவதும் கேட்டது! அதிலிருந்து ஆசிரம வாசிகள் அனைவரும் மகாத்மா எவ்வளவு குதூகலமாயிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

உண்மையிலேயே மகாத்மா குதூகல மடையக்கூடிய முறையில் தேசமெங்கும் அப்போது நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. லார்ட் ரெடிங்கின் சர்க்கார் கையாண்ட முறைகள் மகாத்மாவின் மனதுக்கு உகந்த முறையில் தேசமெங்கும் சாத்வீகச் சட்டமறுப்பு இயக்கம் நடப்பதற்குச் சாதனமாயிருந்தன.

"தேசீயத் தொண்டர்படை திரட்டுவது சட்ட விரோதம்" என்று அதிகார வர்க்கத்தார் உத்தரவிட்டனர். உடனே ஒவ்வொரு முக்கியமான நகரத்திலும் பிரபல தலைவர்கள் தொண்டர் படையில் சேர்ந்து கையொப்பம் இட்டார்கள். சேர்ந்தவர்களின் பெயர்கள் பத்திரிகையில் உடனுக்குடன் பிரசுரிக்கப்பட்டன; அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டன.

சிற்சில நகரங்களின் காங்கிரஸ் ஆதரவில் பொதுக் கூட்டங்கள் கூட்டக் கூடாதென்று அதிகாரிகள் உத்திர விட்டனர். உடனே அந்த நகரங்களில் குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். வேறு சில இடங்களில் 144-வது பிரிவின் பிரகாரம் பேசக் கூடாது என்று அதிகாரிகள் சில பிரபல தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு உத்திரவு போட்டார்கள். அத்தனைய உத்திரவை மீறிப் பேசப் போவதாக மேற்படி தலைவர்கள் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள்.

இவ்வாறு தேசமெங்கும் பிரபல காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களும் சட்டமறுப்புச் செய்து சிறை புகுவதற்குச் சர்க்கார் நடவடிக்கைகளே வசதி செய்து கொடுத்தன. அந்த வசதிகளைத் தலைவர்களும் ஊழியர்களும் நன்றாகப் பயன் படுத்திக் கொண்டார்கள். ஆனால் எங்கேயும் கலகம், கலவரம் எதுவும் நிகழவில்லை. பொது மக்களின் உள்ளத்தின் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆயினும் அவர்கள் பெரிய பெரிய சமூகத் தலைவர்களும் பிரமுகர்களும் சிறைபுகும் அதிசயத்தைக் கண்டு திகைத்துப்போயிருந்தார்கள். அவர்களுடைய உற்சாகத்தை வேண்டாத வழிகளில் பிரயோகிக்கவில்லை.-இந்த நிலைமை காந்திஜிக்கு எல்லையற்ற உற்சாகம் அளித்ததில் வியப்பில்லை அல்லவா?

மேலும் மேலும் நாலா பக்கங்களிலிருந்தும் பலர் கைதியான செய்திகள் வந்துகொண்டே யிருந்தன. பண்டித நேரு கைதியானதற்கு மறுநாள் கல்கத்தாவில் தேசபந்துதாஸின் தர்மபத்தினி ஸ்ரீ வஸந்தி தேவியும் அவருடைய சகோதரி ஸ்ரீமதி ஊர்மிளா தேவியும் கைதியானார்கள்! இவ்விதம் இரண்டு பெண்மணிகள்!-அதிலும் எத்தகைய பெண்மணிகள்,-சிறைப்பட்ட செய்தி இந்தியா தேசத்தையே ஒரு குலுக்கு குலுக்கிப் போட்டது.


மகாத்மா சந்தோஷத்தினால் குதித்தார். ஆசிரமத்துப் பெண்மணிகளைப் பார்த்து "உங்களில் யார் யார் சர்க்கார் விருந்தாளிகளாகத் தயார்?" என்று கேட்டார். எல்லாரும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். அவர்களில் சிலர் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் சிறை அநுபவம் பெற்றவர்கள். அவர்களைப் பார்த்து மகாத்மா, "இந்தத் தடவை வங்காளத்துச் சகோதரிகள் உங்களை முந்திக் கொண்டு விட்டார்களே!" என்று பரிகாசம் செய்தார்.

பத்தாந்தேதி இரவு பத்து மணிக்குமேல் மகாத்மா படுத்துத் தூங்கிய பிறகு, "தந்தி! தந்தி!" என்ற குரல் கேட்டது. மகாத்மா விழித்து எழுந்தார். மற்றவர்களை முந்திக்கொண்டு அவரே வாசலில் போய்க் கையெழுத்துப் போட்டுத் தந்தியைப் பிரித்துப் படித்தார். எதிர்பார்த்தபடியே தந்தியில் மிக மிக முக்கியமான செய்தி இருந்தது.

தேசபந்து தாஸ், மௌலானா ஆஸாத் ஸஸ்மால், பத்மராஜ் அக்ரம்கான் ஆகியவர்கள் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டதாகச் செய்தி கூறியது. தேசபந்து தாஸ் அந்த மாதக் கடைசியில் ஆமாதாபாத்தில் நடப்பதற்கிருந்த காங்கிரஸ் மகாசபையில் தலைமை வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே; இது மிக முக்கியமான செய்தி அல்லவா? அந்தச் செய்தியைக் கேட்டு விட்டு ஆமதாபாத்திலிருந்து தலைவர்கள் வந்தார்கள். (காங்கிரஸை முன்னிட்டு அப்போது குஜராத் தலைவர்கள் அனைவரும் ஆமதா பாத்தில் தங்கியிருந்தார்கள்.) ஸ்ரீ வல்லபாய், ஸ்ரீ மாவ்லங்கர், தயால்ஜி, கல்யாண்ஜி முதலியவர்கள் வந்தார்கள். மேலே நடக்கக்கூடிய சம்பவங்களைப் பற்றியும் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியும் அவர்கள் மகாத்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்றிரவு ஆசிரமத்தில் 'சிவராத்திரி' கொண்டாடப் பட்டது. மறுநாளும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தலைவர்கள் சிறை புகுந்த செய்திகள் வந்து கொண்டிருந்தன. சென்னையிலிருந்து ராஜாஜி தாம் வேலூரில் 144-வது பிரிவை மீறியதாகத் தந்தி அனுப்பினார். "மிகவும் சந்தோஷம். உங்களுக்குப் பூரண தண்டனை கிடைக்குமாக!" என்று மகாத்மா பதில் தந்தி அடித்தார். அடுத்த சில நாளைக்குள் கல்கத்தாவில் இரண்டாயிரம் தொண்டர்கள் சிறைப்பட்டார்கள். டில்லியில் ஜனாப் ஆசப் அலி முதலியவர்கள் சிறை புகுந்தார்கள். பஞ்சாப்பில் மிச்சமிருந்த ஆகா ஸப்தார், ஸத்தியபால் முதலிய வர்களும் சிறைப்பட்டார்கள். தேசமெங்கும் சிறைப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரம், இரண்டாயிரம், பதினாயிரம், இருபதினாயிரம், என்று போய்க் கொண்டிருந்தது.

இந்த நிலைமையைக் கண்டு வைஸ்ராய் லார்டு ரெடிங் திகைத்தார்; திணறினார். தம்முடைய திகைப்பையும் திணறலை யும் வெளியிட்டுச் சொன்னார். கல்கத்தாவில் டிசம்பர் 14-ஆம் தேதி லார்டு ரெடிங்குக்கு ஐரோப்பிய வர்த்தக சங்கத்தார் உபசாரம் அளித்தனர். அதற்குப் பதில் சொல்லும்போது லார்ட் ரெடிங் தமது திகைப்பைப் பின்வரும் வார்த்தைகளில் வெளியிட்டார்:-

"சமூகத்தில் ஒரு பகுதியாரின் காரியங்கள் எனக்கு அர்த்தமாகவில்லை யென்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் இந்தியாவுக்கு வந்ததிலிருந்து இதைப்பற்றி யோசித்தும் எனக்கு அது விளங்கவில்லை. சர்க்காரைச் சண்டைக்கு இழுக்கும்படியாக, வேண்டுமென்று சிலர் சட்டங்களை மீறுகிறார்கள்; தங்களைக் கைது செய்யும்படி சர்க்காரைக் கட்டாயப் படுத்துகிறார்கள். இதில் அவர்களுக்கு என்ன லாபம் கிட்டப் போகிறது என்று யோசித்துப் பார்க்கிறேன். இன்னமும் எனக்குத் திகைப்பாக வும் குழப்பமாகவுமே இருக்கிறது!"

இவ்விதம் லார்ட் ரெடிங் பகிரங்கமாகச் சொன்னார். அவர் தமது ஆங்கிலப் பேச்சில் Puzzled and Perplexed என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். இந்த வார்த்தைகள் ஒத்துழையாமை இயக்கத்தின் சரித்திரத்தில் மிகப் பிரபலமாயின. "மகாத்மாவின் இயக்கம் லார்ட் ரெடிங்கைத் திகைத்துத் திண்டாடிப் போகும்படிச் செய்தது" என்று ஆயிரக் கணக்கான மேடைகளில் காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களும் பெருமிதத்தோடு எடுத்துச் சொன்னார்கள்.

இப்படி லார்ட் ரெடிங் திகைத்துத் திணறி நின்ற வேளையில் பூஜை வேளையில் கரடியை விட்டு அடித்ததுபோன்ற ஒரு முயற்சி நடைபெற்றது. இந்தியாவின் அரசியலில் "மிதவாதிகள்" என்ற ஒரு பிரிவினர் இருந்தனர். கொஞ்ச காலமாக அவர்கள் இருந்த இடம் தெரியாமலிருந்தது. இப்போது அவர்கள் "நாங்களும் இருக்கிறோம்" என்று முன் வந்தார்கள். "நிலைமை மிஞ்சி விட்டது. இதை இப்படியே விட்டிருந்தால் வெள்ளம் தலைக்கு மேலே போய்விடும். உடனே ராஜிப் பேச்சுத் தொடங்கவேண்டும். நாங்கள் ராஜி செய்து வைக்கிறோம். இருதரப்பினரும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!" என்று கூறிக்கொண்டு மிதவாதப் பிரமுகர்கள் ராஜி செய்து வைப்பதற்கு முன் வந்தார்கள். இவ்விதம் பூஜைவேளையில் புகுந்த கரடியின் கதி என்ன ஆயிற்று என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக