வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

1464. காதல்: கவிதை

 காதல் 
பசுபதி

[ ஓவியம்:ம.செ.]


பாரிலே பழசான நோவு -- பாட்டில் 
பாரதி ராதையைத் தேடிய தீவு. 

அகமென்னும்  திணையினை ஆய்ந்து -- காமன்
. . . அத்திரப் புண்களின் அவலங்கள் வேய்ந்து 
அகவற்பா செய்ததும் அழகே -- வருடம்
. . . ஆயிரம் ஆயினும் இன்னுமக் கதையே.  (1) 

கரையிலும் தரையிலும் காதல் -- மீசை
. . . நரைத்தவர் மனதிலும் நப்பாசை மோதல் 
திரையிலும் மரஞ்சுற்றி ஓடல் -- எட்டுத் 
. . . திசையிலும் மாரனின் திரிகால ஆடல்.  (2)

வள்ளிமேல் முருகனுக்கு நாட்டம் --இன்றும்
. . . மங்கைமுன் வாலிபர் கண்களின் ஓட்டம்
பள்ளத்தில் பாய்வெள்ள வேகம் -- வெறும்
. . . பௌதீக அல்பமிக்  காதலெனுந் தாகம். (3)

பாங்கான பெயருள்ள நோவு -- இன்று 
. . . பட்டணப் பேச்சிலே மாய்ந்தவோர் காவு 
ஆங்கிலப் பிணியான "லவ்வு" -- இந்த 
. . . அந்நியச் சொல்லிலே கிட்டுமோ நவ்வு?  (4) 

அம்பிகா பதியின் தவிப்பு  -- பின்பு 
. . . ஆங்கில ரோமியோ எனவோர் பிறப்பு 
உம்பருக் குண்டேயித்  தகிப்பு -- இந்த 
. . . உடலிலே உயிரினை  ஊட்டும் நெருப்பு     (5)

கண்மணி தேனென்று பேசல் -- பின்பு
. . . கல்யாணம் என்றாலோ மனதிலே ஊசல் 
நொண்டியான சாக்குகள் சொல்லல் -- பிறகு
. . . நோட்டமிட் டின்னொரு பேதையை வெல்லல்.  (6)

உள்ளங் குலுக்கிடும் வேட்டல் -- ஒன்று
. . . ஒன்றோடு சேர்ந்தால் ஒன்றாகும் கூட்டல்
மொள்ளமொள்ளக் குறைவற்ற ஊற்று -- காதல்
. . . முன்பெந்த சக்தியும் போய்விடும் தோற்று !  (7) 
  
காவு=பலி; நவ்வு=நன்மை 

( இது ‘திண்ணை’ மின்னிதழில் பிப்ரவரி 11, 2001 -இல்  வெளியானது )

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக